'ஆட்டோமேட்டட் டெல்லர் மிஷின்' என்று அழைக்கப்படும் ஏ.டி.எம்., மிஷின்களை பற்றி சொல்ல வேண்டியதில்லை. வங்கிகள் சார்பில் வைக்கப்பட்டுள்ள இந்த மையங்களில் ஏ.டி.எம்., கார்டை பயன்படுத்தி, நம் வங்கிக் கணக்கில் இருந்து பணம் எடுக்கலாம்; பணத்தை டிபாசிட் செய்யவும் செய்யலாம். ஆனால், ஏ.டி.எம்., கார்டை போலியாக தயாரித்து அப்பாவிகள் பணத்தை சூறையாடும் கும்பல்கள் அதிகரித்து விட்டன. சர்வதேச அளவில் உலவும் இந்த கும்பல் களை ஒடுக்க ஏ.டி.எம்., தொழில் நுட்பத்தில் பல மாற்றங்களை கொண்டு வர தொழில்நுட்ப வல்லுனர்கள் தீவிரமாக உள்ளனர். சர்வதேச அளவில் ஏ.டி.எம்., மிஷின்களில் சில மாற்றங்கள் அமல்படுத்தப்பட்டுள்ளன. அவற்றில் ஒரு சில மாற்றம் மட்டும், இந்தியாவில் அமல் படுத்தப்பட்டுள்ளன. அடுத்த சில மாதங்களில், நான்கு முக்கிய வசதிகளை ஏ.டி.எம்., மிஷின்களில் தர வங்கிகள் திட்டமிட்டுள்ளன. அதற்கான தொழில்நுட்ப வசதிகள் அமலாக உள்ளதால், ஏ.டி.எம்., மிஷின்கள், பணம் எடுக்க உதவும் இயந்திரமாக மட்டுமின்றி, பல வகையில் வாடிக்கையாளருக்கு உதவுவதாகவும், பணத்துக்கு 100 சதவீத பாதுகாப்பாகவும் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. செக் டிபாசிட்: ஏ.டி.எம்., மிஷினில் 'செக்'கை டிபாசிட் செய்ய முடியாது. ஆனால், டில்லியில் இப்போது சில வங்கிகள் இந்த வசதியை அறிமுகம் செய்துள்ளன. மிஷினில் உள்ள ஸ்கேன் தொழில்நுட்பம், வாடிக்கையாளர் 'செக்'கை வைத்ததும் 'ஸ்கேன்' செய்து கொள்ளும். அதில் உள்ள தொகையை வாடிக்கையாளர் கணக்கில் வரவு வைக்கும். அதே நேரத்தில், செக் ஜெராக்ஸ் நகலும் வெளித்தள்ளும். வழக்கமான ஏ.டி.எம்., மிஷன் தயாரிப்பு விலை எட்டரை லட்சம் ரூபாய். இந்த புதிய மிஷின் விலை 13 லட்சத்தை தொடுகிறது. ரொக்கம் டிபாசிட்: பல நாடுகளில் ஏ.டி.எம்.,மில் ரொக்கப்பணத்தை டிபாசிட் செய்யும் வசதி உள்ளது. இந்தியாவில் உள்ள சில வெளிநாட்டு வங்கி ஏ.டி.எம்., களில் ரொக்கத்தை டிபாசிட் செய்ய முடியும். அதை மிஷின் தானியங்கி எண்ணி, அதை கணக்கில் வரவு வைத்து, ரசீதும் தரும். சில வங்கிகளில், கவரில் பணத்தை போட்டு, எவ்வளவு தொகை என்று குறிப்பிட்டு விட்டால், அதை மறுநாள் ஊழியர்கள் எண்ணி, வாடிக்கையாளர் கணக்கில் வரவு வைப்பர். அதற்கும் மிஷின் ரசீது தரும். ஒரு சில வங்கிகளில் உள்ள ரொக்கம் எண்ணும் முறை, இனி பல வங்கிகளில் அமலாக உள்ளது. இதனால், அப்போதே டிபாசிட் செய்த பணம் வரவு வைக்கப்பட்டு விடும். மொபைல் போனில் செக்: மொபைல் போன் மூலம் யாருக்காவது 'செக்' அனுப்ப முடியுமா? ஏன் முடியாது... அதற்கும் தொழில் நுட்ப வசதி வந்து விட்டது. அமெரிக்கா உட்பட சில நாடுகளில் இந்த வசதி உள்ளது. மொபைல் போனில் வாடிக்கையாளர் தன் கணக்கில் இருந்து குறிப்பிட்ட பணத்தை மற்றவருக்கு அனுப்ப முடியும். மொபைலில் தகவல் அனுப்பி விட்டால், அடுத்தவர், தன் மொபைல் மூலம், எலக்ட்ரானிக் செக் பெற்றுக்கொள்ள முடியும். அதுபோல, மற்றவரிடம் இருந்தும் மொபைல் மூலம் எலக்ட்ரானிக் செக் பெற்றுக் கொள்ள முடியும். கைரேகை பதிவு: போலி ஏ.டி.எம்., கார்டை பயன்படுத்தி அப்பாவிகளின் பணத்தை 'லவட்'டும் கும்பல்களை ஒடுக்க, ஏ.டி.எம்., வாடிக்கையாளர்களின் விரல் ரேகை பதிவு முறையை அமல்படுத்தும் முயற்சி நடந்து வருகிறது. ஜப்பானில் இந்த முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஏ.டி.எம்., மிஷினில் கார்டை செருகி, 'பின்' நம்பரை பதிவு செய்வதற்கு பதில், ஒரு செ.மி., உயரத்துக்குள் கைரேகையை காட் டினால், ஸ்கேன் செய்யப் பட்டு, உடனே ஏ.டி.எம்.,மில் உங்கள் கணக்கு திறந்து கொள்ளும். நீங்கள் பணம் எடுக்கலாம். கைரேகை பதிவு சரியாக பதிவாகாத நிலையில் மட்டும் 'பின்' நம்பரை பயன்படுத்தி பணம் எடுக்கலாம்.
நன்றி : தினமலர்