சென்னை மெரினா கடற்கரையில் பிளாஸ்டிக் பைகள் மற்றும் பொருள்கள் தடை செய்யப்பட்டு 40 தினங்களாகிவிட்டன. மாநகராட்சியின் இந்த முயற்சி ஓரளவுக்கு வெற்றி அடைந்திருக்கிறது என்று சொல்லலாம். இந்த விஷயத்தில் நீலகிரி மாவட்டம்தான் தமிழகத்துக்கே முன்னோடியாக இருக்கிறது. சுப்ரியா சாஹு மாவட்ட ஆட்சித் தலைவராக இருந்தபோது பிளாஸ்டிக்கின் கோரப் பிடியிலிருந்து சுற்றுலாத் தலமான ஊட்டியை முற்றிலுமாக விடுவித்து, தமிழகத்துக்கே அவர் வழிகாட்டினார் என்பதைப் பதிவு செய்யாமல் இருக்க முடியவில்லை.
சென்னையில் மட்டும் நாள்தோறும் 30 முதல் 40 டன்கள் பிளாஸ்டிக் கழிவுகள் சேருகின்றன. உலக அளவில் எடுத்துக்கொண்டால் நூறாயிரம் கோடி டன் எடையுள்ள பிளாஸ்டிக் பைகள் ஆண்டுதோறும் பயன்படுத்தப்படுவதாக ஒரு புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. அதாவது, ஒவ்வொரு நிமிடமும் பத்து லட்சம் டன் பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்தப்படுகின்றன. இந்த பிளாஸ்டிக் பைகள் அடுத்த சில நிமிடங்களிலோ, மணித்துளிகளிலோ குப்பைத் தொட்டியில் வீசி எறியப்படும் என்பது தெளிவு.
சென்னையை எடுத்துக்கொண்டால், மாநகரத்தின் மொத்த கழிவுப் பொருள்களில் 8 சதவீதம் முதல் 15 சதவீதம் குப்பை பிளாஸ்டிக் பைகள். சட்டப்படி, 20 மைக்ரான்களுக்குக் குறைவான பிளாஸ்டிக் பைகளைத் தயாரிப்பதேகூட குற்றம். ஆனால், இந்தச் சட்டத்தை யாரும் பின்பற்றுவதாகவும் தெரியவில்லை. நடைமுறைப்படுத்துவதாகவும் தெரியவில்லை.
ஒரு பலசரக்குக் கடையிலோ, காய்கறிக் கடையிலோ, வெற்றிலை பாக்குக் கடையிலோ இதுபோன்ற 20 மைக்ரானுக்குக் குறைவான பிளாஸ்டிக் பைகள் தரப்பட்டால், பொதுமக்கள் யாரிடம் போய் புகார் செய்வது என்று யாருக்காவது தெரியுமா? அந்தப் புகாரை காவல்துறை நிச்சயமாக ஏற்றுக்கொள்ளாது. அரசாவது இதைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துகிறதா, மக்களுக்குத் தெளிவான வழிமுறைகளை முன்வைக்கிறதா என்றால் கிடையாது.
பெட்ரோலியக் கச்சா எண்ணையிலிருந்து தயாரிக்கப்படும் பல உப பொருள்களில் ஒன்றுதான் பிளாஸ்டிக் என்பதுகூட நம்மில் பலருக்கும் தெரியாத விஷயம். இந்த பிளாஸ்டிக் கண்டுபிடித்தபோது, மனிதன் இயற்கையை வென்றுவிட்டான் என்றும், பிளாஸ்டிக் கண்டுபிடிக்கப்பட்டதால் இயற்கை நமக்கு அளிக்கும் தாதுப் பொருள்களான இரும்பு, செம்பு, தகரம், அலுமினியம் போன்றவை மேலும் பல காலத்துக்குக் கிடைக்கும் என்றும் மனித இனமே பெருமைப்பட்டது. சணலுக்கும் காகிதப் பைகளுக்கும் வேலை இல்லாமல் போவதால், காடுகள் அழிக்கப்படுவது தடுக்கப்படும் என்று மகிழ்ந்தவர்களும் ஏராளம்.
இந்த மகிழ்ச்சி எல்லாம் அரை நூற்றாண்டு காலத்தில் மறைந்து, பிளாஸ்டிக் மனித இனத்துக்கு மட்டுமன்றி, உலகில் வாழும் உயிரினங்களுக்கும் ஏன் உலகத்துக்கே மிகப்பெரிய அச்சுறுத்தலாக மாறிவிட்டிருக்கிறது. இறைவனின் படைப்பில் உலகிலுள்ள அத்தனை பொருள்களுமே மண்ணில் மக்கிவிடும் தன்மையன. அதனால் கழிவுகள் மலைபோலக் குவிந்துவிடாமல் உலகம் காப்பாற்றப்படுகிறது.
பிளாஸ்டிக் பொருள்கள் மக்கும் தன்மை இல்லாதவையாய் இருப்பதுடன், நிலத்தடி நீர் முறையாகச் சேகரிக்கப்பட முடியாமல் தடுக்கவும் செய்கின்றன. சராசரியாக ஒரு பிளாஸ்டிக் பை மக்குவதற்குக் குறைந்தது 1000 ஆண்டுகள்கூட ஆகலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் பயமுறுத்துகிறார்கள். இந்த பிளாஸ்டிக் எரிக்கப்பட்டால் அதிலிருந்து வெளிவரும் வாயு புற்றுநோய்க்குக் காரணமாக இருக்கிறது எனகிறார்கள்.
பிளாஸ்டிக்கால் மிகப்பெரிய பாதிப்புக்கு உள்ளாகி இருப்பது கடல்வாழ் உயிரினங்கள்தான். நீர்நிலைகள், கழிவுநீர் ஓடைகள், ஆற்றுப்படுகைகள், கடற்கரைகள் என்று எங்கு பார்த்தாலும் நீக்கமற நிறைந்து நிற்கும் பிளாஸ்டிக்கினால், உலகம் முழுவதுமே பாலைவனமாக மாறிவிடும் அபாயமும் இருப்பதாக விஞ்ஞானிகளே எச்சரிக்கை விடுக்கத் தொடங்கி இருக்கிறார்கள். வளர்ச்சி பெற்ற நாடுகளில் பிளாஸ்டிக் பற்றிய விழிப்புணர்வு ஏற்பட்டு வருகிறது என்பதுடன் பலரும் தனிப்பட்ட முறையில் பிளாஸ்டிக் உபயோகிப்பதைத் தவிர்க்கவும் தொடங்கி இருக்கிறார்கள்.
இந்தியாவைப் பொறுத்தவரை, தில்லி, சண்டிகர், ஹைதராபாத் போன்ற நகரங்களில் ஓரளவுக்கு விழிப்புணர்வு ஏற்பட்டிருக்கிறது. தமிழகத்தில் உதகமண்டலத்தைத் தொடர்ந்து கோயம்புத்தூரிலும் பிளாஸ்டிக் பைகளுக்குத் தடை விதிக்கப்பட்டு முழுமூச்சாக பிளாஸ்டிக் தவிர்ப்பு மக்கள் இயக்கமாக்கப்படுகிறது. சமீபத்தில், சென்னை உயர் நீதிமன்றமேகூட 60 மைக்ரானுக்கும் கீழேயுள்ள பிளாஸ்டிக் பைகள் தடை செய்யப்பட வேண்டும் என்று பரிந்துரைந்திருக்கிறது.
பிளாஸ்டிக்கை முழுமையாகத் தவிர்த்து விடுவதோ தடை செய்வதோ சாத்தியமானதல்ல. மனித இனத்துக்குக் கேடு விளைவிக்கும் என்று தெரிந்தே இன்னும் பல பொருள்கள் பயன்பாட்டில் இருக்கத்தான் செய்கின்றன. ஆனால் பிளாஸ்டிக், கழிவுநீர் ஓடைகளை அடைக்காமல், கண்ட இடங்களில் வீசி எறியப்பட்டு நிலத்தடி நீருக்குத் தடையாக இருக்காமல், கடலில் கலந்துவிடாமல் பாதுகாக்க முடியும். மக்கள் மனது வைத்தால், பிளாஸ்டிக் உபயோகத்தைக் குறைப்பதுடன், பிளாஸ்டிக் கழிவுகளைத் தனிமைப்படுத்தி நகராட்சி அமைப்புகளுக்கு உதவ முடியும்.
இந்த விழிப்புணர்வை அரசுதான் செய்ய வேண்டும் என்பது இல்லை. நமக்கும் சமுதாயக் கடமை இருக்கிறது என்று நாம் ஒவ்வொருவரும் முயன்றால்... ஏன் முடியாது?
நன்றி : தினமணி
Sunday, October 11, 2009
களங்கம் களையப்படட்டும்!
பழிக்குப் பழி என்பது எப்படி பழிக்கப்படும் செயலோ அதேபோல கொலைக்குக் கொலை என்பதும் ஏற்புடையதாக இருக்க முடியாது. கற்கால மனிதன் கடைப்பிடித்த இதயமற்ற சட்டம் மரண தண்டனையாகத்தான் இருக்கும். கல்வி அறிவு, நாகரிகம் என்றெல்லாம் மனித சமுதாயம் பல முன்னேற்றங்களை அடைந்த பிறகும் மரண தண்டனை என்பதை ஒரு சட்டமாக, அதுவும் அரசே நடைமுறைப்படுத்தும் தண்டனையாக ஏற்றுக்கொள்வது என்பது என்ன நியாயம்?
அமெரிக்கா, சீனா, ஜப்பான், சிங்கப்பூர், இந்தியா உள்ளிட்ட 58 நாடுகளைத் தவிர ஏனைய உலக நாடுகள் பலவும் மரண தண்டனை என்பதை ஒழித்துவிட்டன. குறிப்பாக ஐரோப்பிய நாடுகளில் ஒன்றிரண்டைத் தவிர ஏனைய நாடுகளில் இந்தக் காட்டுமிராண்டித்தனமான சட்டம் நடைமுறையில் கிடையாது.
அப்படியே மரண தண்டனை என்பதை சட்டத்தில் வைத்துக் கொண்டிருக்கும் பல நாடுகளிலும் மரண தண்டனை வழங்குவது என்பது அரிதிலும் அரிதான வழக்குகளில் மட்டுமே.
இந்திய உச்ச நீதிமன்றம் மரண தண்டனை என்பது மிகவும் அவசியம் என்று கருதப்பட்டால் மட்டுமே வழங்கப்பட வேண்டும் என்று பல வழக்குகளில் அறிவுரை வழங்கி இருக்கிறது என்றாலும், இன்னும் நாம் இந்த மனிதாபிமானமே இல்லாத சட்டப் பிரிவை இந்தியக் குற்றவியல் சட்டத்திலிருந்து அகற்ற மனமில்லாமல் தொடர்வதுதான் வேடிக்கையாக இருக்கிறது.
18-ம் நூற்றாண்டின் இடைப் பகுதியில் இத்தாலிய வழக்கறிஞர் சிகாரே பெக்காரியா, பிரெஞ்சு தத்துவ மேதை வால்டேர், ஆங்கிலேய சீர்திருத்தவாதி ஜெரிமி பென்தாம் போன்றவர்கள் மரண தண்டனை என்பது மனித சமுதாயத்துக்கும், மனிதாபிமானத்துக்கும் களங்கம் ஏற்படுத்தும் சட்டப் பிரிவு என்று கூறி இதற்கு எதிராகக் குரலெழுப்பினர். இவர்கள் குரலெழுப்பி ஒரு நூற்றாண்டு காலம் கடந்த பிறகு 1853-ல் வெனிசுலாவும், 1867-ல் போர்ச்சுக்கலும் மரண தண்டனையைத் தங்களது நாட்டுச் சட்டத்திலிருந்தே அகற்றுவதாக அறிவித்தன.
இப்போது அநேகமாக மேற்கு ஐரோப்பா மற்றும் லத்தீன் அமெரிக்க நாடுகளில் மரண தண்டனை முற்றிலுமாக ஒழிக்கப்பட்டுவிட்டது. 1965-ல் இங்கிலாந்தும் மரண தண்டனையை ரத்து செய்து தீர்மானம் நிறைவேற்றியபோது, உலகம் முழுவதும் மரண தண்டனைக்கு எதிரான குரல்கள் ஓங்கி ஒலிக்கத் தொடங்கியது.
2007-ம் ஆண்டில் சீனா, ஈரான், பாகிஸ்தான், சவூதி அரேபியா, அமெரிக்கா ஆகிய நாடுகளில் மட்டுமாக 1252 பேர் மரண தண்டனைக்கு உள்படுத்தப்பட்டனர். ஏனைய 51 நாடுகளில் 3,350 பேர் தூக்கில் இடப்பட்டனர். உலகளாவிய நிலையில், சுமார் 20,000 பேர் மரணத்தையும் எதிர்நோக்கி சிறைச்சாலைகளில் கழிக்கின்றனர்.
கொலைக் குற்றம் சாட்டப்பட்டு தண்டனை பெறும் நபர், உண்மையிலேயே குற்றவாளியாக இல்லாமல்கூட இருப்பதற்கான சாத்தியங்கள் உண்டு. சட்டத்தின் பார்வையில் பல சந்தர்ப்ப சாட்சியங்கள் குற்றம்சாட்டப்பட்டவருக்கு எதிராக மாறி இருக்காது என்பது என்ன நிச்சயம்? மேலும், கொலை செய்த ஒருவர் தண்டனைக்குரியவர் என்றால் அவரை மரண தண்டனை என்கிற பெயரில் அரசே கொலை செய்வது மட்டும் எந்தவிதத்தில் தர்ம நியாயத்துக்கு உள்பட்டது?
மரண தண்டனையை சர்வசாதாரணமாகவும், மிகவும் விரைவாகவும் நடைமுறைப்படுத்தும் கடுமையான சட்டங்களைக் கொண்ட சிங்கப்பூரில் இரண்டு 18 வயதுப் பருவப் பெண்களுக்கு போதை மருந்து வைத்திருந்ததற்காக மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. திருடிடும் கையை வெட்டுவது, சவுக்கால் அடிப்பது, மரண தண்டனை போன்ற கடுமையான சட்டங்கள் இருப்பதால் தவறுகள் குறைவாக நடக்கிறது என்பது சிங்கப்பூர் அரசின் வாதம்.
இப்படிப்பட்ட கடுமையான சட்டங்கள் மூலமாக சமூகத்தை ஆடு, மாடுகளை மேய்ப்பதுபோல நடத்திய ஆட்சி முறைகளுக்கு எதிராக உருவாக்கப்பட்டதுதானே மக்களாட்சி முறை என்பது? ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை மீறலுக்கு எதிரான முயற்சிகளின் முதல் கோஷமே மரண தண்டனையை ஒட்டுமொத்தமாக ஒழிப்பது என்பதாகத்தானே இருக்க முடியும்?
கடுமையான தண்டனைகளாலும், மரண தண்டனையைக் காட்டி பயமுறுத்துவதாலும் மட்டும் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டிவிட முடியாது என்பதை சரித்திரம் நாளும்பொழுதும் தெளிவுபடுத்திக் கொண்டு வருகிறது. உலகளாவிய பயங்கரவாதம் அரசியல் ரீதியாக எதிர்கொள்ளப்பட வேண்டும் என்றும், தீவிரவாதக் குழுக்களுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்றும் கூறுபவர்கள், தனிமனிதனின் வாழும் உரிமையைப் பறிக்கும் மரண தண்டனையை ஒழிக்க மட்டும் தயங்குவது ஏன் என்று புரியவில்லை.
மனித மனம் ஆன்மிக நெறிகளாலும், தனி மனித ஒழுக்கங்களாலும், சமரச சன்மார்க்க சிந்தனைகளாலும், மனிதாபிமான உணர்வாலும் பண்படுத்தப்பட வேண்டுமே தவிர, மரண தண்டனை போன்ற கடுமையான சட்டங்களால் வழிநடத்தப்படவும், பயமுறுத்தப்படவும் கூடாது. கடுமையான சட்டங்களால் மட்டுமே குற்றங்கள் குறைந்துவிடாது.
தூக்குக் கயிறோ, மின்சார நாற்காலியோ, வலியில்லாத உயிர்கொல்லி ஊசியோ எதுவாக இருந்தாலும் "மரண தண்டனை' மனித இனத்துக்கே களங்கம். அமெரிக்காவுக்காகக் காத்திருக்காமல் இந்தியா உடனடியாக இந்தக் களங்கத்தைத் துடைத்தெறிய வேண்டும்!
நன்றி ; தினமணி

Labels:
தலையங்கம்
Subscribe to:
Posts (Atom)