Sunday, April 5, 2009

நிமிருமா நிற்குமா?

சென்ற ஆண்டு துவக்கத்திலெல் லாம் ஓடி ஓடி வந்த சந்தை 20,000ஐ கடந்தது. தற்போது நொண்டி, நொண்டி 10,000ஐ கடக்க முயலுகிறது, கீழே விழுகிறது. ஒவ்வொரு நாடும் தங்கள் நாட்டின் பொருளாதாரத்தை நிமிர்த்த, பங்குச் சந்தைகளை நிமிர்த்த சலுகைகளை அறிவித்து வந்தது. அதற்கு பிறகும் சந்தைகள் சாண் ஏறி, முழம் வழுக்கும் கதையாகத்தான் இருந்து வந்தது.ஆதலால், ஜி-20 மாநாட்டில் உலகளவில் பொருளாதாரத்தை நிமிர்த்த ஏதாவது வழி செய்ய வேண்டும் என்று உலகத் தலைவர்கள் முடிவு செய்து, பல ஆயிரம் கோடி டாலர் உதவிகள் அளித்து, உலகப் பொருளாதாரத்தை நிமிர்த்த முடிவு செய்துள்ளனர். ஊர் கூடி தேர் இழுக்கும் கதை தான். தேரும் நகரும் என்று தான் தோன்றுகிறது.இந்த செய்தி கேட்டவுடன் அமெரிக்க சந்தை 3.5 சதவீதத்திற்கு மேல் உயர்ந்தது. அமெரிக்காவில் மார்ச் மாதம் கார் விற்பனை குறைந்தது. கார் விற்பனை 27 ஆண்டுகளில் இவ்வளவு குறைந்தது இல்லை என்ற அளவில் இருந்தது. பிரிட்டனில் வீட்டு விலைகள் மார்ச் மாதம் நிலையாக இருந்தது.இது போல, பல நாடுகளில் மார்ச் மாதம் பொருளாதாரம் நிமிரும் என்ற அறிகுறிகளை விட்டுச் சென்றிருக்கிறது. அமெரிக்க சந்தை கூடினால் மற்ற சந்தைகளை கேட்கவா வேண்டும். ஊர் கூடி தேர் இழுக்கப் போகும் போது, ஊரில் உள்ள அனைவரும் மகிழ்ச்சி அடைவது போல, உலக நாடுகள் அனைத்திலும் சந்தைகள் ஏறின.ஆசிய சந்தைகள் 3 முதல் 7 சதவீதம் வரை மேலே சென்றன. இந்தியாவில் மும்பை பங்குச் சந்தை 447 புள்ளிகள் கூடி 10,349 புள்ளிகளுடனும், தேசிய பங்குச் சந்தை 151 புள்ளிகள் கூடி 3,211 புள்ளிகளுடனும் முடிவடைந்தது.இது, கடந்த ஐந்து மாதத்தில் அதிகபட்சம். எண்ணெய் மற்றும் எரிவாயு சம்பந்தப்பட்ட துறைகளின் பங்குகள் கூடி, புதிய ஆண்டில் சந்தையை கூட்ட உதவின. இது தவிர வங்கி, ஆட்டோ மற்றும் கட்டுமானத்துறை பங்குகளும் கூடின.ஒரு ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், வெளிநாட்டு முதலீட்டு நிறுவனங்கள் 692 கோடி ரூபாய்க்கு பங்குகளை சந்தையில் வாங்கின. அது போலவே உள்நாட்டு மியூச்சுவல் பண்டுகளும் 254 கோடி ரூபாய்க்கு பங்குகளை சந்தையில் வாங்கின.மக்கள் இன்னும் வட்டி விகிதங் கள் குறைய வேண்டும் என்று எதிர்பார்க்கின்றனர். ஐரோப்பிய சென்ட்ரல் பாங்க் தனது வட்டி விகிதங்களை 0.25 சதவீதம் மட்டுமே குறைத்து வட்டி விகிதத்தை 1.25 சதவீதமாக்கியது.ஆனால், அது போதாது, இன்னும் குறைக்கப்பட வேண்டும் என்று பலர் நினைக்கின்றனர். இது போல, ரிசர்வ் வங்கியும் வட்டி விகிதங்களை குறைக்கும் எனவும் எதிர்பார்க்கின்றனர்.ஜி-20 மாநாட்டில் ஒபாமா இந்தியாவையும், மன்மோகன் சிங்கையும் புகழ்ந்து தள்ளினார். இந்திய பாகிஸ்தான் உறவுகள் மேம்பட வேண்டும் என்றும் கூறினார்.ஜி-20 மாநாட்டுக்கு பிறகு, கட்டுமானத் துறையில் அதிகப் பணம் செலவழிக்கப்படும் என்ற நினைப் பில் மெட்டல் பங்குகள் எல்லாம் விலை கூடின. எல்லாம் எதிர்பார்ப்புகள் தான்.பணவீக்கம்கடந்த இரண்டு மாதங்களாக குறைந்து கொண்டே வந்தது பணவீக்கம். இந்த வாரம் 0.31 சதவீதமாக இருந்தது. இது சென்ற வாரத்தை விட சிறிது கூடுதல்.எதிர்பார்ப்புகள் என்னவென் றால், வரும் வாரங்களில் ஜீரோ சதவீதத்திற்கும் கீழேயும் வரும் என்றும், வரும் 21ம் தேதி ரிசர்வ் வங்கி அறிவிக்க உள்ள கிரெடிட் பாலிசியில், வட்டி விகிதங்கள் குறைக்கப்படும் என்பது தான்.தங்கம் கடைசியாக 15,000க்கும் கீழே வந்து நிற்கிறது. ஏன் குறைகிறது? எந்தப் பொருளும் விலை கூடிக் கொண்டே போகும் போது யாரும் வாங்க விரும்பமாட்டார்கள். சென்ற ஜனவரியில் தங்கம் இறக்குமதியே இல்லை என்ற அளவிற்கும் வந்தது (1.8 டன் மட்டுமே இறக்குமதி செய்யப்பட்டது).ஆதலால், யாரும் வாங்காத பட்சத்தில் என்ன ஆகும்? விலைகள் தானாகக் குறையும். இது தவிர, பங்குச் சந்தைகள் கூடும் போது தங்கம் விலையும் குறையும். பெரும் பாலும் பங்குச் சந்தை ஏறும் போது தங்கம் குறைவதும், சந்தை குறையும் போது தங்கம் ஏறுவதும் வாடிக்கை தான். தங்கத்தில் செய்திருந்த முதலீடுகளை விற்று விட்டு பங்குச் சந்தைக்கு வந்து விடுவர் பெரிய முதலீட்டாளர்கள்.அடுத்த வாரமும் ஏறுமுகமாகத் தான் இருக்கும். 8,000 புள்ளிகள் அளவில் சந்தைக்குள் நுழைந்தவர்கள் சந்தோஷமாக இருக்கின்றனர். அது தான் தேவை.சந்தை எப்போது கீழே போகிறதோ அப்போது சந்தைக்குள் வந்து லாபம் பார்க்க வேண்டும். நீண்ட காலம் என்று பங்குகளை வாங்கி வைத்து லாபம் பார்க்க வேண்டும். அதே சமயம், லாபநோக்கில் விற்பவர்கள் இருந்தால், சந்தை சில சமயம் பெரும் லாபத்தை இழக்கும்.

-சேதுராமன் சாத்தப்பன்
நன்றி : தினமலர்