
ஏறுமுகமாகவே இருந்த தங்கத்தின் விலை, 10 நாட்களில் சவரனுக்கு 650 முதல் 700 ரூபாய் வரை குறைந்ததால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.தங்கத்தை சாமானிய மக்களால் எட்டிப் பிடிக்க முடியாத அளவிற்கு, ஓராண்டாகவே விலை ஏறுமுகமாகவே இருந்து வந்தது. அதிகபட்சமாக ஆபரணத் தங்கம் ஒரு கிராம் 1,435 ரூபாய் வரை தொட்டது. சவரன் 11 ஆயிரத்து 480 ரூபாய்க்கு விற்றது.கடந்த ஜனவரி 10ம் தேதி 1,312 ரூபாய்க்கும், ஒரு சவரன் 10 ஆயிரத்து 496 ரூபாய்க்கும் விற்றது. பிப்ரவரி 10ம் தேதி ஒரு கிராம் 1,316 ரூபாய்க்கும், ஒரு சவரன் 10 ஆயிரத்து 528 ரூபாய்க்கும் விற்றது. மார்ச் 10ம் தேதி 1,421 ரூபாய்க்கும், ஒரு சவரன் 11 ஆயிரத்து 368 ரூபாய்க்கும் விற்றது.ஆபரணத் தங்கத்தின் விலை ஒரே சீராக இல்லாமல், ஏறுவதும் இறங்குவதுமாக இருந்த தங்கத்தின் விலை, நேற்று ஒரு கிராம் 1,344 ரூபாய்க்கும், சவரன் 10 ஆயிரத்து 752 ரூபாய்க்கும் விற்றது.கடந்த ஏப்ரல் 1ம் தேதி ஆபரணத் தங்கம் கிராம் 1,418 ரூபாய்க்கும், சவரன் 11 ஆயிரத்து 344 ரூபாய்க்கும் விற்றது. இது படிப்படியாகக் குறைந்து 10 நாட்களில் சவரனுக்கு 650 முதல் 700 ரூபாய் வரை குறைந்துள்ளதாக பாரிமுனை தங்க நகை வியாபாரிகள் கூறுகின்றனர்.அட்சய திருதியை நெருங்கும் சமயத்தில் தங்கத்தின் விலை மளமளவென உயர்ந்துவிடும் என வியாபாரிகள் தரப்பில் எதிர்பார்க்கப்படுகிறது.இது குறித்து சென்னை தங்க நகை மொத்த வியாபாரி சங்கத் துணைத் தலைவர் உதயகுமார் கூறுகையில், ''சமீபத்தில் லண்டனில் நடந்த 'ஜி-20' மாநாட்டில், நிலையில்லாமல் இருந்த பங்கு வர்த்தகத்தை நிலை நிறுத்துவது, கச்சா எண்ணெய் விலையேற்றம் சீராக வைத்திருப்பது உள்ளிட் டவை விவாதிக்கப்பட்டன.''அதேபோல், உலக நாடுகளுக்கு கடன் கொடுக்கும் (ஐ.எம்.எப்.,) திட்டத்தில், 400 டன் தங்கத்தை நாடுகளின் வளர்ச்சித் திட்டங்களுக்கு அளிப்பதாக முடிவு செய்யப் பட்டது. ''இதனால், தற்போது பங்கு வர்த்தகம் நிலையாக இருக்கிறது. இதன் காரணமாகவும் சில நாட்களாக தங்கத்தின் விலை குறைந்து வருகிறது. அட்சய திருதியை நெருங்குவதால் தங்கத்தின் விலை ஒரே சீராக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது,'' என்றார்.
நன்றி : தினமலர்