Showing posts with label இலங்கை. Show all posts
Showing posts with label இலங்கை. Show all posts

Saturday, January 2, 2010

இலங்கைத் தமிழர் பிரச்னை தமிழகக் கட்சி அரசியலா?

இலங்கையில் நடந்து முடிவுக்கு வந்துவிட்டதாகக் கூறப்படும் போர், இரண்டு நாடுகளுக்கிடையில் நடந்த போர் அல்ல. முழுக்குடியுரிமை பெற்ற தமிழ்மொழி பேசும் மக்களுக்கு எதிராக, பல நாட்டுப் படை, போர்க்கருவிகள், அரசியல், நிதியுதவியுடன், அரசு அதிகாரத்தை கையில் வைத்துள்ள இலங்கை அரசு நடத்திய கொடூரமான போர் என்பதை - மீண்டும் நினைவுறுத்தும் அவசியம் எழுந்துள்ளது.

2009-மே மாதத்தில் தமிழ்ப் போராளிகளை முற்றாக அழித்து ஒழித்துவிட்டதாக இலங்கை அரசு அறிவித்தது. அதன் மகிழ்ச்சிக்காக விழாவையும் கொண்டாடிக் கொண்டது. இந்திய அரசும் இதைப் பாராட்டி, போரினால் ஏற்பட்ட சேதங்களை ஈடுசெய்து கொள்ள நிதியுதவி செய்வதாக அறிவித்தது. தொடர்ந்தும் பல்வேறு உதவிகளைச் செய்து வருகிறது. லட்சக்கணக்கான இலங்கைத் தமிழர்கள் சித்திரவதைக் கூடங்களில் சிக்குண்டு கிடக்கிறார்கள்.

இந்தக் காலத்தில்தான், தமிழக முதல்வர் கருணாநிதி, நம் மெüனம் யாருக்குத் தெரியப் போகிறது என்ற தலைப்பிட்டு, கட்டுரையை எழுதி வெளியிட்டிருந்தார். அதில் ""நான் யார் மீதும் குற்றம், குறை சொல்வதற்காக இதையெல்லாம் எழுதவில்லை'' என்று எழுதியுள்ளார். நானும் அவரிடம் குற்றம் காணவோ, அவர் மீது குறை கூறவோ இதை இங்கு குறிப்பிடவில்லை. ஆனாலும் இதனை ஆராய்ந்து கவனிக்க வேண்டிய அவசியம் நமக்கு எழுந்துள்ளது.

தமிழர்களின் உயர்வுக்காகப் பாடுபட வேண்டியவர்கள் தங்கள் உயிரை அற்ப ஆயுளில் முடித்துக் கொண்டு போய்விட்டார்களே, என்ற ஆதங்கத்தில்தான் எழுதுகிறேன். ""வாழவேண்டிய ஆயிரக்கணக்கான இளந்தளிர்கள் வாடி வதங்கி விட்டார்களே என்ற வேதனையில் எழுதுகிறேன்'' என்று முதல்வர் குறிப்பிட்டுள்ளார்.

நம்முடைய பலத்தையும், மாற்றார் பலத்தையும் துல்லியமாகக் கணிக்காத காரணத்தால், நம்முடைய தமிழ்மக்கள் எத்தனை பேர் மாற்றாரின் தாக்குதலுக்கு ஆளாகித் தங்கள் உயிரை இழக்க நேரிட்டது? ரணில் கூறியிருப்பதைக் கூர்ந்து, விடுதலைப்புலிகள் போர்த் தந்திரத்தை எதிர்காலக் கணிப்போடு கடைப்பிடிக்காதது தான் காரணம் என்பதைப் புரிந்து கொள்ள முடியும் என்றும் கருணாநிதி எழுதியுள்ளார். விடுதலைப்புலிகளுக்கும் இலங்கை அரசுக்கும் இடையில் மட்டும் நடந்த போராக மட்டும் கருணாநிதி இதைக் கூறுகிறார். இந்தியப் பேரரசும் இலங்கைப் போரில் பங்கெடுத்தது. இந்த உண்மையை யாராலும் மறைக்க முடியுமா? தமிழக முதல்வர் இலங்கைத் தமிழர்களின் பிரச்னைக்காக 1956 முதல் ஈழத் தந்தை செல்வாவின் குரலோடு இணைந்து போராடியதையும் பதிவு செய்து, அன்று முதல் இன்று வரை தனது கட்சி நடத்திய போராட்டங்கள், சட்டமன்றப் பதவிகளைத் துறந்தது, இருமுறை ஆட்சியை இழந்தது, தி.மு.க திரட்டிய நிதி, அது மதிக்கப்படாதது, மதுரையில் பழ.நெடுமாறனால் கூட்டப்பட்ட டெசோ மாநாடு, இந்தியா திரும்பிய அமைதிப்படையை வரவேற்க மறுத்தது என நீண்ட பட்டியலையும் வெளியிட்டுள்ளார். ஜனநாயக ரீதியாகக் கடைப்பிடிக்க வேண்டிய ஒரு வாய்ப்பு வாசற்படி வந்த போதுகூட, அதை எட்டி உதைத்து விட்ட தவறான காரியத்தையும் சுட்டிக்காட்டியுள்ளார். இதற்கு ரணில் விக்கிரமசிங்க தந்த பேட்டியையும் ஆதாரம் காட்டியுள்ளார்.

இதற்குப் பின் இவர் குறிப்பிட்டுச் சொல்வதுதான் மிகவும் முக்கியமானதாகும். என்னையும், தம்பி மாறனையும் 1989-ம் ஆண்டு பிப்ரவரி 9-ம் தேதி, அன்றைய பிரதமர் ராஜீவ் காந்தி தில்லிக்கு அழைத்து - விடுதலைப் புலிகள் இயக்கத்தைப் பற்றியும், ஈழப்பிரச்னை குறித்தும், இரண்டு நாள் உரையாடி - அது பற்றிய விவரங்களை சுமார் இரண்டு அல்லது மூன்று மணி நேரம் தமிழ்நாடு மாளிகையில் வெளியுறவுத்துறை இணை அமைச்சர் நட்வர்சிங் மூலமாக எங்களுக்குத் தெரிவித்து - நீங்களும், மாறனும், வைகோவும் இலங்கை சென்று கொழும்பிலோ அல்லது உங்களுக்கு விருப்பமான இடத்திலோ முகாமிட்டு, பிரபாகரனுடன் இந்தப் பிரச்னை குறித்து விரிவாகப் பேசுங்கள். எத்தனை நாள் வேண்டுமானாலும் அதற்காக நேரம் ஒதுக்கிக் கொள்ளுங்கள். இலங்கையில் நீங்கள் அவர்களைச் சந்திக்கவோ, அல்லது அவர்கள் நீங்கள் தங்கியிருக்கும் இடத்துக்கு வந்து சந்திக்கவோ தேவையான ஏற்பாடுகளை இங்கிருந்து செய்து தருகிறேன்.

அதிகபட்சம் அவர்களது கோரிக்கை என்னவென்று தெரிந்து கொள்ளுங்கள் - இலங்கையில் தமிழ் மக்களின் உரிமைகளை நிறைவேற்ற நான் தயாராக இருக்கிறேன். என்று கூறி உறுதியளித்த அந்த இளந்தலைவர் ராஜீவ் காந்தி, இந்திய மண்ணில், அதுவும் தமிழ் மண்ணிலேயே கொலையுண்டார் என்பது ஒரு மாபெரும் சோகச் சம்பவம். இதனால், ஈழ விடுதலைப் போராட்டத்தீயில் தண்ணீர் விட்டு அணைத்தது போல் ஆயிற்று என்றும் எழுதியுள்ளார். அந்தப் படுகொலைக்குப் பின்னர் பொங்கு தமிழர்க்கு இன்னல் விளைவித்தால் சங்காரம் நிஜம் என்று சங்கே முழங்கு என பொங்கியெழுந்த ஆதரவு வெள்ளம் வற்றிய ஓடையாகியது என்பதும் உண்மை தான்.

நம்முடைய கேள்வி என்னவென்றால் இன்று தமிழக முதல்வர் தெரிவித்துள்ள இந்த முக்கியத் தகவல்கள், இதற்கு முன்னர், இவரால் தமிழக மக்களுக்குத் தெரிவிக்கப்பட்டதா என்பதுதான். பிரதமர் ராஜீவ் காந்தி, கருணாநிதியுடனும் முரசொலி மாறனுடனும் தில்லியில், பேசியது 1989-ம் ஆண்டில். ù காலையுண்டது 1991 மே 21-ம் நாளன்று. கொல்லப்பட்ட போது இவர் முன்னாள் பிரதமர். காங்கிரஸ் கட்சியின் தலைவர் மட்டும்தான். 1989-க்கும் 1991,மே மாதத்துக்கும் இடையிலான காலத்தில், ராஜீவ் காந்தி கேட்டுக் கொண்டபடி, கருணாநிதி பிரபாகரனைச் சந்தித்தாரா? ராஜீவ் காந்தி உறுதியளித்த உதவி பற்றி பிரபாகரனுக்குக் கூறப்பட்டதா? இந்தியப் பேரரசு உதவிக்கரம் நீட்டியதை பிரபாகரன் உதறித் தள்ளினாரா? தமிழ்நாட்டு மக்களுக்கு உண்மைச் செய்திகளைக் கூறி விளக்கம் தர வேண்டிய அவசியம் கருணாநிதிக்கு இருக்கிறது.

ஏனெனில், 1989 பிப்ரவரியில் தில்லியில் பிரதமர் ராஜீவ் காந்தி, முதல்வர் கருணாநிதியை அழைத்துப் பேசியபோது உடனிருந்தவர் முரசொலி மாறன் மட்டுமே. உறுதிமொழி தந்த ராஜீவ் காந்தியும் இப்போது இல்லை, உடனிருந்து கேட்ட மாறனும் இல்லை. எனவே, தமிழ்நாட்டு மக்களுக்கு உண்மையைக் கூற, ஒரே ஒருவர் மட்டும் தான் உள்ளார். அவர் தான் கருணாநிதி. ராஜீவ் காந்தி, காங்கிரஸ் கட்சித் தலைவர்களாக இருந்த பெரியவர் மூப்பனாரிடமோ, வாழப்பாடி ராமமூர்த்தியிடமோ இந்தப் பணியை ஒப்படைக்காமல், கருணாநிதியை அழைத்துச் சொன்னது ஏன்? இவர் கூறினால் தான் பிரபாகரனும், போராளிகளும் கேட்பார்கள் என்ற நம்பிக்கையில் தான். இந்தப் பணி நிறைவேற்றப்பட்டதா? கிடைத்த பதில் ராஜீவ் காந்திக்குத் தெரிவிக்கப்பட்டதா? இவை எல்லாம் இதில் தொடரும் கேள்விகள். 1989 முதல் 1991 மே வரை இந்தச் செய்தியைத் தமிழ் மக்களுக்கு ஏன் தெரிவிக்காமல், அதன் பிறகும் 2009 வரை இது குறித்து மெüனமாக இருந்து இன்று முரசொலியில் கடிதம் ஏன் எழுத வேண்டும்? ராஜீவ் காந்தி கருணாநிதியிடம் தந்த வாக்குறுதி, பிரபாகரனை எட்டியதாகவும் தெரியவில்லை.

பிரபாகரன், ராஜீவ் காந்தி தந்த வாக்குறுதியை நம்பவும் இல்லை, ஏற்கவும் இல்லை இதில் வேறு சந்தேகம் கலைஞருக்கு இருக்கிறது என்றால், 1991-ல் அமைந்த, தி.மு.க. ஆதரவு வி.பி.சிங் அரசிடம் அதைக் கூறி, ராஜீவ் காந்திக்குப் பாதுகாப்பு ஏற்பாட்டை இவர் செய்திருக்க வேண்டும். ஆனால், அப்படி எதுவும் நடந்ததாகத் தெரியவில்லை. ஆனால் ராஜீவ் காந்தி படுகொலை தான் நடந்தது. இன்னொரு முக்கிய அரசியல் விளக்கத்தையும் தர வேண்டுகிறேன். 1956 முதல் தந்தை செல்வாவின் குரலோடு சேர்ந்து முழங்கத் தொடங்கிய அந்த இனச்சிக்கல் 2009 வரை தீர்க்கப்படவே இல்லை. இதற்கு யார் காரணம் விடுதலைப்புலிகள் இயக்கம் தொடங்கப்படுவதற்கு முன்பே இலங்கைத் தமிழ் மக்கள் அகதிகளாகி, புலம் பெயர்ந்து ஓடுவது தொடங்கி விட்டது.

இந்திய அரசு, தொடக்க காலத்தில், இலங்கைத் தமிழர்களுக்கு இடம் தந்து உதவியது. இலங்கை அரசைக் கண்டித்தது. தீர்வு காண வற்புறுத்தியது. 1956-ம் ஆண்டிலேயே கருணாநிதி தி.மு.க. வின் முன்னணித் தலைவர்களில் ஒருவர். அவர் தான் இன்று ஆட்சிக்கும் தலைவர். கட்சிக்கும் தலைவர். பா.ஜ.க.வுடனும் தி.மு.க. கூட்டாட்சி நடத்தியது. காங்கிரசுடனும் கூட்டாட்சி நடத்துகிறது. கடந்த 15 ஆண்டுகளாக மத்திய கூட்டாட்சியில் பங்கேற்று வருகிறது. தி.மு.க. மத்திய ஆட்சியில் பங்கு பெறாமல் இருந்த போது, காங்கிரஸ் ஆட்சி, இலங்கைத் தமிழர்க்கு ஆதரவு நிலையை எடுத்தது. ஆனால், தி.மு.க. மத்திய மந்திரி சபையில் சேர்ந்த பின்னர், மத்திய காங்கிரஸ் ஆட்சி இலங்கை அரசுக்கு ஆதரவு நிலையையும், போராளிகளை ஒழிக்க ஆயுத உதவி செய்வதும் ஏன்? இந்தக் கொள்கை நிலை - மாற்றத்துக்குக் காரணம் என்ன?

÷விடுதலைப்புலிகள் தந்த ஆலோசனைகளையும், உதவிகளையும் நிராகரித்தனர் எனக் குறை சொல்லப்படுகிறது. இருக்கலாம். ஆனால், தி.மு.க. பங்கேற்றுள்ள மத்திய அரசு, தமிழ்நாட்டிலுள்ள அத்தனை கட்சிகளும் முதலமைச்சர் தலைமையில் கூடி நிறைவேற்றிய தீர்மானம், சட்டசபைத் தீர்மானம். பிரதமரை நேரில் சந்தித்துத் தந்த வேண்டுகோள் - ஆகியவை பயனற்று குப்பைக் கூடை காகிதமாகிவிட்டதே ஏன்? அது பற்றிய சுய விமர்சனம் இல்லாமல், போராளிகள் தவறாக மதிப்பிட்டுச் செயல்பட்டதை மட்டும் பட்டிலிட்டுள்ளது ஏன்?

1990 முதல் 1996 வரை நாடாளுமன்ற உறுப்பினராக இருந்ததாலும், 1991 மே மாதம் 21-ம் நாளன்று ராஜீவ் காந்தி வெடிகுண்டுக்கு ஆளான போது அதே இடத்தில் நானும் ரத்தம் சிந்தியவன் என்பதாலும், தமிழ் மக்களை மிகவும் நேசித்தவர், அவர்களது உரிமைகளை ஈட்டித்தர உறுதியுடன் முயன்றவர் ராஜீவ் காந்தி என்பதைத் தெரிந்தவன் நான். அவர் மீது சுமத்தப்பட்டுவரும் களங்கத்தைத் துடைக்க வேண்டியோர் துடைக்கவில்லை. அவருடைய இந்த உள்ளுணர்வைத் தெரிவிக்க விரும்புகிறேன். ÷நானறிந்த வரையில், இலங்கைத் தமிழர்களுக்கு ஏற்பட்டுள்ள இன்னல்களுக்கு எல்லாம் பல காரணங்கள் உண்டு. தமிழகத்தின் அரசியல் கட்சிகள் குழப்பியதும் காரணமாகும்.

ஆனால் இலங்கைத் தமிழர்கள் தன்னம்பிக்கையை இன்னமும் இழக்கவில்லை, இலங்கைத் தமிழரின் அரசியல் மனித உரிமைகளை மீட்டு நிலை நாட்டப்பட வேண்டுமெனில், இலங்கை ஒரு ஜனநாயக நாடு அல்ல என்பதை நாம் உணர வேண்டும். அது நட்புக்குரிய நாடு அல்ல என்பதை இந்தியா உணர வேண்டும்.

இலங்கைத் தமிழர்களே அவர்களது எதிர்காலத்தைத் தீர்மானிக்க வேண்டும். இறுதி அரசியல் தீர்வு இலங்கைத் தமிழர்களால் ஏற்கப்படதக்கதாக அமைய வேண்டும். இதைத் தவிர்த்து தமிழக அரசியலுக்காக இலங்கைத் தமிழர்களின் உயிரைப் பணயம் வைத்து விளையாடுவ தை நிறுத்திக் கொள்ள வேண்டும். இறுதியில் அறம் வெல்லும், நம்புவோம்.
கட்டுரையாளர் :தா. பாண்டியன்
நன்றி : தினமணி


Wednesday, December 23, 2009

சூழல் மாறும்; செயல்படுவோம்!

இனவிடுதலைக்காகவும் அடக்குமுறைக்கும் எதிராகப் போராடியவர்கள் எல்லோரும் அவர்களது வாழ்நாளிலேயே வெற்றி பெற்றுவிடவில்லை. உண்மையான போராளிகள் அதை எதிர்பார்க்கவும் முடியாது. அதுவும் ஆயுதப் போராட்டம் என்றால், வாழும் காலத்தில் இலக்கை எட்டும் வாய்ப்பு மிகவும் அரிது. அப்படிப்பட்டதொரு நிலைதான் ஈழத்துக்காகப் போராடியவர்களுக்கு ஏற்பட்டிருக்கிறது. இது போராட்டம் முடிந்து போனதற்கான அடையாளம் இல்லை. சமகால ஆயுதக் குழுக்களின் எழுச்சியும் வீழ்ச்சியும் ஈழ விடுதலைப் போராட்டத்தின் ஓர் அத்தியாயம் அவ்வளவுதான்.

÷விடுதலைப் புலிகள் யுத்த ரீதியாக ஒடுக்கப்பட்டு விட்டதால், ஏற்பட்டிருக்கும் வெற்றிடத்தைக் காட்டி, போராட்டம் முடிவுக்கு வந்துவிட்டதாக இலங்கை அரசு அறிவித்திருக்கிறது. இந்த வெற்றிடம் நிரந்தரமானதல்ல என்பதைத் தமிழர்கள் அறிவார்கள். ஏன் இலங்கை அரசுக்கே கூட அந்த அச்ச உணர்வு உண்டு. ஆனால் எந்த வகையான போராட்டம் இனி தொடரப்போகிறது? போராட்டத்துக்கு தலைமை ஏற்கப்போவது யார்? என்பன போன்ற கேள்விகளும் எதிர்பார்ப்புகளும் தமிழ் பேசும் அனைவரிடமும் இருக்கிறது.

÷எப்படியும் விடிவு ஏற்படும் என்கிற நம்பிக்கையைப் பற்றிக் கொண்டு ஓர் இனம் காத்திருக்கிறது. ஈழப்போராட்டத்தை அடுத்த கட்டத்துக்கு நகர்த்த வேண்டுமானால், இந்த நம்பிக்கையை வலுப்படுத்தியாக வேண்டும். குறைந்தபட்சம் இந்த நம்பிக்கையைத் தகர்க்காமலிருக்கலாம்.

÷விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரின் உச்ச நாள்களில் நடந்த மர்மங்களே இன்று வரைக்கும் விலகாத நிலையில், நாள்தோறும் புதிய கதைகள் புனையப்படுகின்றன. இவற்றில் பெரும்பாலான கதைகள் தார்மிக ரீதியாகத் தமிழர்களுக்கு ஆதரவானவை போன்று தோன்றினாலும், இன விடுதலைக்கான நம்பிக்கையை அசைத்துப் பார்க்கும் பணியைத்தான் அவை செய்கின்றன. தமிழர்களிடையே அச்சத்தையும் அவநம்பிக்கையையும் ஏற்படுத்துகின்றன.

÷போராட்டக்காரர்கள் பிரிந்து கிடப்பதாகவும், சுயநலமாகச் செயல்பட்டு வருவதாகவும் தகவல்கள் கசியவிடப்படுகின்றன. இந்தத் தகவல்கள் ஊடகங்களால் ஊதிப் பெரிதாக்கப்படுகின்றன. போராட்டக்காரர்கள் என்று கூறி வருபவர்களை யாரும் நம்ப வேண்டாம் அவர்களுக்கு நிதியுதவி செய்ய வேண்டாம் என்பன போன்ற அறிவுரைகளும் நடமாடுகின்றன. சில ஊடகங்கள் ஒரு தரப்பை நல்லவர்களாகவும், மற்றவர்களை மோசக்காரர்களாகவும் காட்டுகின்றன.

÷ஒரு கட்டத்தில் இலங்கை ராணுவத்துக்கு எதிரான ஆயுதப் போராட்டத்தில் தீவிரமாக ஈடுபட்டு வந்தவர்கள், இன்று துரோகிகளாகவும், இலங்கை அரசின் கைப்பாவைகளாகவும் மாறி இருக்கிறார்கள். ராணுவத்துக்குத் தலைமையேற்று பயங்கரமான சித்திரவதைக் கொலைகளை அரங்கேற்றியவர்கள் ஆபத்பாந்தவர்களாக உருமாற்றம் பெற்றிருக்கிறார்கள். மக்களைக் குழப்புவதற்காக நடத்தப்படும் இந்த ராஜதந்திர விளையாட்டில், தமிழ் அரசியல் கட்சிகளும் சிலரின் பேனாக்களும்கூட சிக்கிக் கொண்டிருக்கின்றன.

÷இந்தக் குழப்பமான சூழலைக் கண்டு தமிழர்கள் யாரும் நம்பிக்கை இழந்துவிட வேண்டிய அவசியமேயில்லை. உலகின் எல்லா வகையான விடுதலைப் போராட்டங்களிலும் வெவ்வேறு கட்டங்களில் இதுபோன்ற குழப்பமான நிலை ஏற்பட்டிருக்கத்தான் செய்கிறது. இந்திய விடுதலைப் போராட்டத்துக்குக்கூட இது பொருந்தும். ஈழத் தமிழர் போராட்டம் அடுத்த நிலைக்கு உருமாற வேண்டிய நேரம் இது. அரசியல் ரீதியாகவோ வேறு வழியிலோ ஒரு சீரிய தலைமையின்கீழ் தமிழர்கள் ஒன்றுபடும்வரை இந்தக் குழப்பம் நீடிக்கத்தான் செய்யும்.

÷ஆனால், ஈழத்திலும் அது தொடர்பாக உலகமெங்கும் உள்ள போராட்டக்காரர்கள் மத்தியிலும் நடக்கும் ஒவ்வொரு நிகழ்வையும் சிறுசிறு கருத்து மோதல்களையும் அலசி ஆராய்ந்து, அவசரப்பட்டு ஒவ்வொருவரையும் துரோகிகளாகவும் சண்டைக்காரர்களாகவும் முத்திரை குத்துவது, புதிய தலைமை உருவாவதைத் தாமதப்படுத்துவதற்குத்தான் உதவும். இந்த விஷயத்தில் புலனாய்வு செய்வது இப்போதைக்கு அவசியமே இல்லை. ஊகங்களை வெளியிடுவதையும், கண்மூடித்தனமாகக் குற்றம்சாட்டுவதையும், தவிர்த்தாலே, போராட்டம் அடுத்தகட்டத்துக்கு விரைவாக முன்னேறும்.

÷அதிபர் தேர்தல் சமீபித்திருக்கும் இந்த வேளையில், பொன்சேகாவுக்கு சில தமிழ்க் கட்சிகள் ஆதரவு தெரிவித்திருக்கின்றன. சில கட்சிகள் தனித்து தேர்தலைச் சந்திக்கின்றன. வேறு சில கட்சிகள் தேர்தலைப் புறக்கணிக்கின்றன. இதில் எது தவறு, எது சரியென்று கூறுவதற்கில்லை.

÷தமிழ்க் கட்சிகளின் நடவடிக்கைகளால் என்ன விளைவுகள் ஏற்படும் என்றும் இப்போது நமக்குத் தெரியாது. நல்லதும் நடக்கலாம், தீயதும் நடக்கலாம். இந்தச் சூழலில் தமிழ்க்கட்சிகளை தமிழர் ஆதரவு ஊடகங்களும் உலகெங்கும் வசிக்கும் போராட்டக்காரர்களும் விமர்சிப்பது, தமிழர்களுக்குள் பிளவைத்தான் ஏற்படுத்தும். ஒன்றுபடுவதைத் தாமதப்படுத்தும். எல்லோரும் தங்களது பொறுப்புணர்ந்து இதுபோன்ற விமர்சனங்களை இப்போது தவிர்க்கலாம்.

÷சொந்த மண்ணில் முள்கம்பி வேலிகளுக்குள் சிறை வைக்கப்பட்டிருக்கும் மக்களை, மறு குடியமர்த்தும் பணிகளை வலியுறுத்துவது ஒன்றே தமிழ் அரசியல்கட்சிகளும் போராட்டக்காரர்களாக அடையாளப்படுத்திக் கொள்வோரும் இப்போதைக்குச் செய்ய வேண்டிய முதல் பணியாக இருக்க வேண்டும். மற்ற வேலைகளைப் பிறகு பார்க்கலாம். சூழல் மாறும்.
கட்டுரையாளர் : எம்.மணிகண்டன்
நன்றி : தினமணி

Wednesday, December 2, 2009

தனிமைப்பட்டது இலங்கை மட்டுமல்ல - இந்தியாவும்

டிரினிடாட் தீவில் நடைபெற்ற காமன்வெல்த் பிரதமர்கள் மாநாட்டில் அடுத்த மாநாட்டினை 2011-ம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடத்துவது என முடிவு செய்யப்பட்டுள்ளது.

இரு ஆண்டுகளுக்கு ஒருமுறை காமன்வெல்த் அமைப்பைச் சேர்ந்த 53 நாடுகளின் பிரதமர்களும் அதிபர்களும் கூடி உலக அரசியல் நிலைமை குறித்து விவாதித்து முக்கிய முடிவுகள் எடுப்பது வழக்கமாகும். அந்த வகையில் அடுத்த மாநாட்டினை எங்கு நடத்துவது என்பது குறித்துக் கடும் போட்டியிருந்தது.

பிரதமர்கள் மாநாட்டுக்கு முன்பாக நடைபெற்ற வெளியுறவுத் துறை அமைச்சர்கள் கூட்டத்தில் இந்தியா உள்பட 45 நாடுகள் இலங்கையில் அடுத்த மாநாட்டினை நடத்துவதற்கு ஆதரவு தெரிவித்திருந்தன என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

போரில் வெற்றி பெற்ற கையோடு இலங்கையில் இம்மாநாட்டினை நடத்துவதன் மூலம் உலக நாடுகளில் தனக்கு எதிராக எழுந்திருக்கும் கடும் கண்டனத்தைத் திசைதிருப்புவதற்கு இலங்கை அதிபர் ராஜபட்ச திட்டமிட்டார். போர்க் குற்றவாளியாகவும் அப்பட்டமான மனித உரிமை மீறல்களை ஈவு இரக்கமின்றி நடத்தியவர் என்ற குற்றச்சாட்டுகளுக்கும் ஆளாகியிருந்த ராஜபட்ச அதிலிருந்து தப்புவதற்கு ஒரு வழியாக காமன்வெல்த் மாநாட்டினை நடத்த பெருமுயற்சி செய்தார்.

÷ஏற்கெனவே ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில் இலங்கை மீது கொண்டு வரப்பட்ட கண்டனத் தீர்மானத்தை இந்தியா, சீனா ஆகிய நாடுகளின் உதவியோடு தோற்கடித்ததைப்போல இப்போதும் இந்தியாவின் உதவியை ராஜபட்ச நாடினார். இந்தியா கொஞ்சமும் தயங்காமல் உதவ முன்வந்தது. வெளியுறவுத்துறை அமைச்சர்கள் மாநாட்டில் இந்தியாவின் உதவியால் 45 நாடுகள் இலங்கையில் மாநாடு நடத்துவதற்கு ஆதரவு தெரிவித்தன.

÷பிரதமர்கள் மாநாட்டில் வழக்கமாக வெளியுறவுத் துறை அமைச்சர்களின் முடிவு ஏற்றுக்கொள்ளப்படுவது வழக்கம். ஆனால் இம்முறை அவ்வாறு செய்யப்படவில்லை. பிரிட்டிஷ் பிரதமர் கார்டன் பிரவுன் இலங்கையில் மாநாடு நடத்துவதற்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்தார். அவரைத் தொடர்ந்து கனடா, நியூசிலாந்து போன்ற நாடுகளின் பிரதமர்களும் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர். போர்க் குற்றம் மனித உரிமை மீறல்கள் போன்றவற்றில் ஈடுபட்ட இலங்கை அரசின் அழைப்பை ஏற்று அங்கு மாநாடு நடத்துவது சரியல்ல என பெரும்பாலான பிரதமர்கள் முடிவு செய்தனர். சர்வதேச அரங்கில் ராஜபட்சவுக்கு ஏற்பட்டுள்ள மிகப்பெரிய பின்னடைவு இதுவாகும்.÷

÷பிரிட்டிஷ் பிரதமர் முன்நின்று இலங்கைக்குக் கடும் எதிர்ப்புத் தெரிவித்ததற்குப் பதில் நியாயமாக இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்தான் இவ்வாறு செய்திருக்க வேண்டும். ஆனால் அவர் இலங்கைக்கு ஆதரவாக நடந்து கொண்டதன் மூலம் காமன்வெல்த் அமைப்பில் உள்ள பெரும்பாலான நாடுகளின் மதிப்பிலிருந்து தாழ்ந்துவிட்டார். காமன்வெல்த் அமைப்பிலேயே மிகப்பெரிய நாடு இந்தியாதான். ஆனால் அதனுடைய முயற்சிக்கு இத்தகைய அவமதிப்பு நேர்ந்திருப்பது மன்மோகன் சிங்கின் தவறான அணுகுமுறையின் விளைவாக என்பதை நாம் உணர வேண்டும்.

÷இதே காமன்வெல்த் அமைப்பின் கூட்டத்தில் 1961-ம் ஆண்டு மார்ச் மாதம் 14-ம் தேதி இந்தியாவின் முதல் பிரதமர் ஜவாஹர்லால் நேரு ஒரு தீர்மானம் கொண்டு வந்தார். தென்னாப்பிரிக்க அரசு நிறவெறிக் கொள்கையைக் கைவிட வேண்டும் அல்லது காமன்வெல்த்திலிருந்து வெளியேற்றப்பட வேண்டும் என பிரதமர் நேரு கொண்டு வந்த

தீர்மானம் பெரும்பாலான நாடுகளின் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டது. அதன் விளைவாக தென்னாப்பிரிக்கப் பிரதமர் காமன்வெல்த் அமைப்பில் மட்டுமல்ல, உலக அரங்கில் தலைகுனிந்து நிற்க வேண்டிய சூழ்நிலை உருவாயிற்று.

÷தென்னாப்பிரிக்காவில் மொத்த மக்கள்தொகையில் 79 சதவீதத்துக்கு மேல் உள்ள கருப்பின மக்கள் (இந்தியர்கள் உள்பட) சுமார் 2 கோடி பேர் வெள்ளை அரசின் நிறவெறிக் கொள்கையின் விளைவாக பல்வேறு இழிவுகளுக்கு ஆளாக்கப்பட்டார்கள். நாட்டின் மொத்த நிலப்பரப்பில் 2 கோடி கருப்பின மக்களுக்கு 13 சதவீத இடம் மட்டுமே ஒதுக்கப்பட்டது. 50 லட்சம் வெள்ளையர்களுக்கு 87 சதவீத இடப்பகுதி ஒதுக்கப்பட்டது. வெள்ளையர்களின் வாழ்விடங்களுக்கு வெளியே ஒதுக்குப்புறங்களில் அவர்கள் வாழ வேண்டுமென ஆணையிடப்பட்டது. பொது இடங்களிலும் அவர்களுக்கு அனுமதி இல்லை. எல்லாவற்றுக்கும் மேலாக 2 லட்சத்துக்கும் மேற்பட்ட கருப்பர்கள் பல்வேறு பொய்யான குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் சிறைகளில் அடைக்கப்பட்டு சித்திரவதைகளுக்கு ஆளாகினர். மகத்தான தலைவரான நெல்சன் மண்டேலா 27 ஆண்டுகாலம் சிறையில் வாட நேர்ந்தது.

÷இந்திய மக்களுக்காக மட்டுமல்ல, கருப்பின மக்கள் அனைவருக்காகவும் இந்தியா போராடியது. நிறவெறியின் காரணமாக கொடுமைகளுக்கு ஆளான அனைத்து மக்களுக்காகவும் காமன்வெல்த் அமைப்பில் பிரதமர் நேரு நெஞ்சு நிமிர்த்தி நின்று தென்னாப்பிரிக்காவை வெளியேற்ற வேண்டுமென்று போராடினார். வெற்றியும் பெற்றார்.

÷ஆனால் நேருவின் குடும்பத்தைச் சேர்ந்தவர்களால் வழிநடத்தப்படும் மன்மோகன் சிங் நிறவெறியைவிட மோசமான இனவெறியர் ராஜபட்சவுக்கு ஆதரவாக காமன்வெல்த் மாநாட்டில் நடந்துகொண்டது இந்தியாவுக்கே தலைகுனிவை ஏற்படுத்திவிட்டது.

மன்மோகன் சிங் செய்யத் தவறியதை பிரிட்டிஷ் பிரதமர் கார்டன் பிரவுன் துணிந்து செயல்பட்டு இலங்கையில் மாநாடு நடத்தப்படுவதற்குக் கடும் எதிர்ப்புத் தெரிவித்திருக்கிறார். அவரும் மற்ற நாடுகளைச் சேர்ந்த பிரதமர்களும் இலங்கையில் காமன்வெல்த் மாநாடு நடத்தும் திட்டத்தைத் தடுக்காமல் போயிருந்தால் உலக அரங்கில் தன்மீது சாற்றப்படும் குற்றச்சாட்டுகளிலிருந்து ராஜபட்ச சுலபமாகத் தப்பிக்க வழிபிறந்திருக்கும்.

÷மன்மோகன் சிங் செய்த மற்றொரு முக்கியமான தவறையும் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். மே மாதத்தில் இலங்கைப் போரின் இறுதிக் கட்டத்தில் முள்ளிவாய்க்கால் பகுதியில் சிக்கிக்கொண்ட சுமார் 4 லட்சத்துக்கும் மேற்பட்ட அப்பாவித் தமிழர்களைக் காப்பாற்றும் வகையில் தாற்காலிகப் போர் நிறுத்தம் செய்ய இலங்கை அரசை வற்புறுத்திச் செய்ய வைத்து அதைத் தொடர்ந்து அந்த மக்களை தமிழ்நாட்டுக்குக் கொண்டு வந்து சேர்க்க கப்பல்களை அனுப்பி உதவியிருக்க வேண்டும். ஆனால் அந்த மனித நேயம் மன்மோகனுக்கு இருக்கவில்லை.

÷1983-ம் ஆண்டு கொழும்பில் தமிழர்களுக்கு எதிரான இனக்கலவரம் மூண்டு 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டபோது, பிரதமராக இருந்த இந்திரா காந்தி உடனடியாகத் தலையிட்டார். வெளியுறவுத் துறை அமைச்சர் பி.வி. நரசிம்மராவை அனுப்பி இலங்கை அரசை எச்சரிக்கச் செய்தார். அத்துடன் அவர் நிற்கவில்லை.

இரு கப்பல்களை கொழும்புவுக்கு அனுப்பி எஞ்சிய பல்லாயிரக்கணக்கான தமிழர்களை யாழ்ப்பாணம் பகுதியில் உள்ள காங்கேசன் துறைக்குப் பத்திரமாகக் கொண்டுவந்து சேர்க்க உதவினார்.

÷பிரதமர் இந்திராவைப்போல செயல்பட்டு முள்ளிவாய்க்கால் பகுதியில் சிக்கிக்கொண்ட மக்களைப் பத்திரமாக மீட்க மன்மோகன் சிங் எதுவும் செய்யவில்லை என்பது மட்டுமல்ல. இதற்கு நேர்மாறாக வரக, விக்கிரகா என்ற இரு இந்திய கடலோரக் காவல்படைக்குச் சொந்தமான போர்க்கப்பல்களை இலங்கை அரசுக்குத் தந்து அந்தக் கப்பல்கள் கரையோரத்தில் தஞ்சமடைந்து தவித்த தமிழர்கள் மீது ஏவுகணைகளை ஏவின. இதன் விளைவாகவும் சிங்கள விமானத் தாக்குதல்கள் விளைவாகவும் 30,000-க்கும் மேற்பட்ட மக்கள் படுகொலை செய்யப்பட்டார்கள். இதற்குக் காரணமான மன்மோகன் சிங்குக்கு எல்லாவகையிலும் துணை நின்றவர் முதல்வர் கருணாநிதி. அந்த மக்களைக் காப்பாற்றுவதற்கு எதுவும் செய்ய முன்வரவில்லை. இவருடைய தயவில்தான் அப்போதைய மத்திய ஆட்சி பதவியில் இருந்தது. ஆதரவைத் திரும்பப் பெறுவோம் என்று இவர் மிரட்டியிருந்தால், இந்திய அரசு பணிந்திருக்கும். ஈழத் தமிழர் மக்கள் அழிவிலிருந்து காப்பாற்றப்பட்டிருப்பார்கள். ஆனால் முதல்வர் கருணாநிதியோ உண்ணாவிரத நாடகம் நடத்தி மக்களை ஏமாற்றிக் கொண்டிருந்தார் அவருடைய விவேகம் அதற்குத்தான் பயன்பட்டது.

÷விடுதலைப் புலிகளுக்கு வீரம் இருந்த அளவுக்கு விவேகம் இல்லையென இப்போது நீட்டி முழக்குகிற கருணாநிதி பதைக்கப் பதைக்க ஈழத் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டபோது அவருக்கு மட்டுமே சொந்தமான விவேகத்தை கொஞ்சமும் பயன்படுத்தவில்லையே ஏன்? தில்லியில் மகனுக்கும், பேரனுக்கும் பணம் கொழிக்கும் துறைகளைப் பெற்றுத் தருவதில் அவரது விவேகம் செலவழிந்துவிட்டதோ என்னவோ?

ஆயுதங்களை ஒப்படைத்துவிட்டுச் சரணடையுமாறு கருணாநிதி கூறிய யோசனைக்கு புலிகள் செவிசாய்க்கவில்லை என அங்கலாய்க்கிறார். இவர் இந்த யோசனையைக் கூறுவதற்கு முன்பாக ஐ.நா.வின் பொதுச் செயலாளரின் ஆலோசகரான விஜய நம்பியார் அளித்த ஆலோசனையின்படிதானே விடுதலைப் புலிகளின் தலைவர்கள் நடேசன் புலித்தேவன் ஆகியோர் ஆயிரக்கணக்கான மக்களுடன் ஆயுதங்கள் இல்லாமல் வெள்ளைக்கொடியேந்திச் சென்ற வேளையில் சிங்கள ராணுவ வெறியர்கள் அவர்களை ஈவுஇரக்கமின்றி சுட்டுக்கொன்ற மாபாதகம் நிகழ்ந்தபோது கருணாநிதி எங்கே போயிருந்தார்? மனித தர்மத்துக்கே எதிராக நடைபெற்ற இந்தக் கொடுமையைக் கண்டித்து ஒரு வார்த்தை கூட சொல்ல அவர் முன்வரவில்லையே? விவேகத்துக்கு மொத்தக் குத்தகைதாரரான அவர் வாய்மூடி மௌனம் சாதித்தது ஏன்?

÷இந்தியாவின் பிரதமர்களாக நேரு, இந்திரா ஆகியோர் இருந்தபோது உலகப் பிரச்னைகளில் மனிதநேயத்தோடும் துணிவோடும் செயல்பட்டு உலக அரங்கில் இந்தியாவுக்குப் பெருமை தேடித் தந்தார்கள். இதன் விளைவாக உலகில் மிகப்பெரும்பான்மையான நாடுகளின் இயற்கையான தலைமை இந்தியாவுக்குக் கிடைத்தது. வல்லரசுகளுக்குக் கூட கிடைக்காத இந்தப் பெருமை இந்தியாவைத் தேடி வந்தது.

÷ஆனால் பிரதமர் மன்மோகன் சிங் காலத்தில் நேரு, இந்திரா ஆகியோர் வகுத்த பாதையிலிருந்து விலகிச் சென்றதோடு மட்டுமல்ல, போர்க்குற்றத்துக்கும் மனித உரிமையை மீறிய செயல்களுக்கும் ஆளான ராஜபட்ச போன்றோருக்கு உலக அரங்கில் ஆதரவு தேடும் முயற்சியில் இந்தியா ஈடுபட்டுத் தனது மரியாதையை இழந்து இன்று தனித்து நிற்கிறது.
கட்டுரையாளர் : பழ. நெடுமாறன்
நன்றி : தினமணி

Thursday, November 19, 2009

பொன்சேகாவை நம்பலாமா?

இலங்கை அதிபர் ராஜபட்சவும், விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரை முன்னின்று நடத்திய சரத் பொன்சேகாவும் முட்டிக் கொள்வதால், தமிழ்ச் சமூகத்துக்கு நியாயம் கிடைக்க வாய்ப்பிருப்பது போன்ற நம்பிக்கை உருவாக்கப்பட்டிருக்கிறது.

இந்த மோதலால் தமிழர்களுக்கு முழு உரிமைகள் கிடைக்காவிட்டாலும், குறைந்தபட்சம் போர் உச்சத்தில் இருந்தபோது நிகழ்த்தப்பட்ட படுகொலைகள் தொடர்பான உண்மைகளாவது வெளிவரக்கூடும். அந்த வகையில் ராஜபட்ச - பொன்சேகா மோதல் மீது வைக்கப்பட்டிருக்கும் நம்பிக்கை நியாயமானதுதான். ஆனால், இதே நம்பிக்கையை பொன்சேகா மீது வைப்பது ஈழத் தமிழர்களுக்கு பெரிய ஆபத்தாக முடியலாம்.

போருக்குப் பிந்தைய நிவாரணப் பணிகளைத் துரிதமாக மேற்கொண்டு, தமிழர்களின் மனதில் இடம்பிடிக்க ராஜபட்ச அரசு தவறிவிட்டது என பொன்சேகா தனது பதவி விலகல் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். இந்த ஒற்றை வரியைக் கொண்டு, தம்மீது இருக்கும் “தமிழின அழிப்பு’ பாவத்தைக் கழுவ அவர் முயன்றிருக்கிறார் என்பது தெரிகிறது. ஆனால் இதற்கு முந்தைய காலங்களில், அவரது பேச்சுகள் எதுவும் தமிழினத்துக்கு ஆதரவாக இருந்ததில்லை. சிறுபான்மையினத்தவர்கள் பெரும்பான்மை மக்களிடம் கெஞ்சிப் பிழைக்க வேண்டும் என்பதுதான் இவரது எண்ணமாக இருந்திருக்கிறது. ராணுவத் தளபதி என்கிற முறையில் சாதாரணமான யுத்த விதிகளைக்கூட மதிக்காமல், இன அழிப்பை நடத்தியதில் மற்றவர்களைக் காட்டிலும் இவருக்குத்தான் அதிகப் பங்கு இருந்திருக்க வேண்டும். இப்படிச் சில நாள்களுக்கு முன்பு வரை ராஜபட்ச சகோதரர்களுடன் கைகோர்த்து, ராணுவ அத்துமீறல்களுக்கு ஆதரவாக இருந்த பொன்சேகாவுக்கு, திடீரென தமிழர்கள் மீது பாசம் பொங்குவதற்கு பொதுநலக் காரணம் ஏதும் இருக்க முடியாது என்றே தோன்றுகிறது.

தமிழ் மக்கள் மத்தியில் அமைதியை உருவாக்காவிட்டால், மீண்டும் அவர்கள் கிளர்ந்து எழக்கூடும் என ராஜிநாமா கடிதத்தில் பொன்சேகா எச்சரித்துள்ளார். விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரை தீவிரப்படுத்தியது தாமே என்பதால், ஓய்வுக்குப் பிறகு தமக்குக் குண்டுதுளைக்காத கார், கவச வாகனங்கள் என பாதுகாப்பைப் பலப்படுத்த வேண்டும் எனவும் அவர் கோரியிருக்கிறார். விடுதலைப் புலிகள் பெரும் தாக்குதல் நடத்தும் அளவுக்கு இன்னமும் பலமாக இருக்கிறார்கள் என்பதற்கும், தமிழினத்தை இலங்கை ராணுவம் பெருமளவு சேதப்படுத்தியிருக்கிறது என்பதற்கும் அவரே அளித்திருக்கும் ஒப்புதல் வாக்குமூலங்கள் இவை.

ராஜபட்ச மற்றும் அவரது சகாக்களின் போர் உத்திகளும் ராஜதந்திர உத்திகளும் உலகத் தமிழ் சமூகம் எதிர்பார்க்காத அளவுக்கு வலுவானவையாக இருந்திருக்கின்றன என்பதை கடந்த சில மாத நிகழ்வுகள் உணர்த்தியிருக்கின்றன. அவர்களது வெளிப்படையான ஒவ்வொரு நடவடிக்கைகளுக்கும் பின்னால் மறைமுகக் காரணம் ஏதும் இருக்கலாம். இப்படியொரு சூழலில் பொன்சேகாவும் ராஜபட்சவும் அடித்துக் கொண்டு மாய்ந்து போவார்கள், அதனால் தமிழ்ச்சமூகத்துக்கு நீதிகிடைத்துவிடும் எனக் கருதுவது மிகத் தவறான கண்ணோட்டத்தின் வெளிப்பாடாகத்தான் இருக்க முடியும்.

அதிகாரமற்ற பதவி வழங்கப்பட்டது என்பதைத் தவிர, பதவியில் இருந்து விலகுவதற்காக பொன்சேகா தெரிவித்திருக்கும் வேறு காரணங்கள் எவையும் நம்பும்படியாக இல்லை. ராணுவப் புரட்சி ஏற்படும் என அஞ்சி இந்தியாவின் தயவை நாடியதாகக் கூறப்படுவது உண்மையாகவே இருந்தாலும், அதை ராஜிநாமா கடிதத்தில் தெரிவிக்க வேண்டிய அவசியமில்லை. “ராஜபட்ச என்னைக் கண்டு அஞ்சினார்’ என்ற கருத்தை ஏற்படுத்துவதற்கான உத்தியாகத்தான் இது கவனிக்கப்படுகிறது. மறுகுடியமர்த்தலில் அரசு மெத்தனம் காட்டுவதாகக் கூறுவதும் அப்பட்டமான அரசியல்தான்.

உண்மையில், தமிழர்களுக்கு மறுவாழ்வு அளிக்கப் போகிறேன் என்று கூறும் எந்த அரசியல்வாதியையும் சிங்கள மக்கள் ஆதரிக்கப் போவதில்லை. தமிழர்கள் மீது அதிக விரோதப் போக்கைக் கொண்டிருப்பவருக்குத்தான் சிங்களர்களிடையே அதிக ஆதரவு இருக்கும். அந்த அளவுக்கு இரு இனங்களிடையே கசப்புணர்வு உருவாக்கப்பட்டிருக்கிறது. இதெல்லாம் சிங்கள் அரசியல்வாதிகளுக்கு நன்றாகவே தெரியும். இப்போது ஆட்சியிலிருப்போரும், இதற்கு முன்பு ஆட்சியில் இருந்தவர்களும் இந்த வெறுப்பைத்தான் சிங்கள வாக்குகளைக் கவரும் முக்கியக் கருவியாகப் பயன்படுத்தினர். இனியொரு தேர்தல் வரும்போதுகூட, ராஜபட்ச, பொன்சேகா உள்ளிட்ட என யாராக இருந்தாலும் தமிழ் மக்களின் வாக்கு வங்கி என்பது அவர்களுக்கு இரண்டாம்பட்சமாகத்தான் இருக்கும். அந்த அளவுக்குத் தமிழ் மக்களின் வாக்குகள் அதிபரைத் தேர்ந்தெடுப்பதில் குறைந்தபட்ச செல்வாக்குக்கூடச் செலுத்த முடியாத நிலைதான் இன்றைக்கு இருக்கிறது.

பொன்சேகா ராஜிநாமாவால் தமிழர்களுக்கு ஓரளவு கிடைக்க வேண்டிய ஆதரவும் இல்லாமல் போகும் அபாயமும் ஏற்பட்டிருக்கிறது. அதிபர் தேர்தலில் ராஜபட்சவுக்கு எதிரான பொது வேட்பாளராக பொன்சேகா எதிர்க்கட்சிகள் சார்பில் நிறுத்தப்பட்டால், மேற்கத்திய நாடுகளுடன் நட்புறவை வளர்த்துக் கொண்டிருக்கும் ரணில் விக்கிரமசிங்க போட்டியிலிருந்து விலகிக் கொள்ள நேரிடும். ராஜபட்ச, பொன்சேகா ஆகிய இருவரில் ஒருவரைத்தான் தமிழர்கள் ஆதரிக்க வேண்டியிருக்கும். இந்த இருவரும் சீனா, இந்தியா போன்ற பிராந்தியப் பெருந்தலைகளுடன் மிக நெருக்கமாக இருப்பதால், தமிழர்கள் இன்னமும் நம்பிக்கொண்டிருக்கும் அமெரிக்கா போன்ற நாடுகள் ஈழ விவகாரத்தில் செல்வாக்குச் செலுத்த முடியாமல் போகும்.

ஒருவேளை ராஜபட்ச, பொன்சேகா தவிர ரணில் போன்ற வேறொருவர் களத்தில் இறங்கி மும்முனைப் போட்டியை ஏற்படுத்தினால் தமிழர்கள் வாக்களிப்பதில் ஒரு அர்த்தமிருக்கும். மற்ற நாடுகளில் இருப்பதைப் போன்று சிறுபான்மை வாக்கு வங்கியை ஜனநாயக ஆயுதமாகப் பயன்படுத்தவும் முடியும்.

இதற்கெல்லாம் ஈழத் தமிழர்கள் இன்னும் காத்திருக்க வேண்டும் என்றே தோன்றுகிறது. புலிகளுடனான போரில் கிடைத்த வெற்றியின் மூலம் ஏகத்துக்கும் உயர்ந்துபோன தனது செல்வாக்கைக் கொண்டு தேர்தலைச் சந்திப்பதற்கு ராஜபட்ச திட்டமிட்டது என்னவோ உண்மைதான். ஆனால், பொன்சேகா தனது அரசியல் ஆசைகளை அவசரப்பட்டு வெளியிட்டிருப்பதால், இப்போதைய சூழலில் பதவிக்காலம் முடிவதற்கு முன்பே தேர்தலை நடத்துவது தேவையற்றது என ராஜபட்ச உணர்ந்திருப்பார். ராஜபட்ச-பொன்சேகா மோதலால் இன்னும் சில உண்மைகள் வெளிவரலாம். ஆனால், நீதி கிடைத்துவிடும் என அப்பாவித்தனமாகக் கூறிக் கொண்டிருக்க முடியாது.
கட்டுரையாளர் :எம் . மணிகண்டன்
நன்றி : தினமணி

Tuesday, November 3, 2009

இனப்படுகொலையாவது ஒன்றாவது...

சுமார் பத்து ஆண்டுகளுக்கு முன்பு, இலங்கையின் தென்பகுதியிலிருந்து ஓர் இளம்வயது நாடாளுமன்ற உறுப்பினர், மக்களை அரசு கொடுமைப்படுத்துவதைப் பார்த்துப் பொறுக்க முடியாமல், ஐ.நா.வில் புகார் கொடுக்க ஜெனீவாவுக்குக் கிளம்பினார். அந்த நாடாளுமன்ற உறுப்பினரிடம் ஜெனீவாவுக்குச் செல்ல விமானச் செலவுக்குக்கூட பணம் கிடையாது.

சிங்கள இளைஞர்களை டயரால் எரித்துக் கொன்று ஆறுகளில் வீசிய இலங்கை அரசை எதிர்த்து, உண்மையான கோபத்தில், ஐ.நா. சபையின் மக்கள் உரிமைக் கமிஷனிடம் புகார் செய்யக் கிளம்பிய அந்த நாடாளுமன்ற உறுப்பினருக்கு ஒரு நண்பர் பண உதவி செய்ய முன்வந்தார்.

அந்தப் பணத்தை வைத்து ஜெனீவாவுக்குச் சென்று, மக்கள் உரிமைக் கமிஷன் கட்டடத்தின் முன்வாயிலில் நின்றுகொண்டு அந்த வழியாகச் செல்லும் ஒவ்வொருவரிடமும் இலங்கையில் நடக்கும் அநியாயத்தைக் கூறினார். யாரும் முதலில் செவிமடுக்கவில்லை. அந்த இளம் எம்.பி.யின் பிடிவாதத்தால் கடைசியில் மக்கள் உரிமைக் கமிஷன் ஒரு சிறப்புக் கூட்டத்தைக் கூட்டி அந்த எம்.பி.யின் கருத்துகளைக் கேட்டது.

அப்படி லட்சியத்துடன் செயல்பட்ட எம்.பி. யார் தெரியுமா? இன்று இலங்கையின் அதிபராக ஐ.நா. மக்கள் உரிமைக் கமிஷனால் கண்டிக்கப்படுகிற சாட்சாத் மகிந்த ராஜபட்சதான். அவருடைய நண்பர்கள், இன்று மகிந்தாவிடம் எல்லா பழைய லட்சியங்களும் போய்விட்டன, அவருடைய மீசையையும் அவருடைய கழுத்தைச் சுற்றிய அங்கவஸ்திரத்தையும் தவிர என்கின்றனர்.

சில நாள்களுக்கு முன் வந்துள்ள செய்தியில் யுத்தத்திற்கான எல்லா சட்டதிட்டங்களையும் புறக்கணித்ததோடு தன் சொந்த நாட்டு மக்கள் போர் அபாயத்திலிருந்து ஒதுங்கி இருந்த இடங்களில்கூட தாக்குதல் நடத்திக் கொலை பாதகச் செயல்புரிந்த இலங்கை அரசு தண்டனைக்குரியதாக பல மேற்கத்திய நாடுகளாலும் கருதப்படுகிறதென்ற செய்தி வந்துள்ளது. யுத்தத்தால் படுகாயமுற்ற மக்களுக்குச் சிகிச்சை அளித்த மருத்துவமனைகளில் இலங்கை அரசு சுமார் 30 முறை தாக்குதல் தொடுத்தது என்று புள்ளிவிவரம் கூறுகிறது.

யுத்தம் நடந்த இடத்தில் தன் சொந்த நாட்டு நிருபர்களையோ வெளிநாட்டு நிருபர்களையோ இலங்கை அனுமதிக்காததால் சாட்சிகள் இல்லாத யுத்தமாக இது நடந்தது. இலங்கை அரசு கொடுக்கும் செய்தி மட்டும் தான் வெளியில் வந்தது. ஐ.நா.வின் பிரதிநிதிகளையோ, செஞ்சிலுவை சங்கப் பிரதிநிதிகளையோ, யுத்தம் நடந்த இடத்தில் அனுமதிக்கவில்லை என்பது அகில உலகத்திற்கும் இன்று தெரிந்துவிட்டது என்று துணிந்து எழுதியவர் "ஸன்டேலீடர்' என்ற ஆங்கிலப் பத்திரிகையின் ஆசிரியரான லசந்த விக்கிரமதுங்க என்ற சிங்களவர். தனது அரசு தவறு செய்கிறது என்று கூறியதால் அவர் கொல்லப்பட்டார். உலகம் முழுவதும் திரண்டு இதற்குக் கண்டனம் தெரிவித்தது.

சமீபத்தில் திசைநாயகம் என்பவர் இலங்கை அரசின் நீதித்துறையால் 20 ஆண்டுகள் சிறை வைக்கப்பட்டுள்ளார். இதற்கு அமெரிக்க அதிபர் ஒபாமாவிலிருந்து அனைத்து உலகினரும் கண்டனம் தெரிவித்திருக்கிறார்கள்.
பத்து ஆண்டுகளுக்கு முன்பு லட்சியவாதியாக இருந்த மகிந்த தான் இவ்வளவு கொடுமைகளுக்கும் தலைமை தாங்குபவர். அன்று அரசு ராட்சசனாக மாறிவிட்டது என அறிந்து நியாயம் கேட்கப் போன ஒரு மனிதர்தான் இன்று ராட்சசனாக மாறி தமிழ் மக்கள் என்ற ஒரே காரணத்துக்காக தனது நாட்டின் ஒரு பகுதியினரின் இனப்படுகொலைக்குக் காரணமானவர் என்று உலக நாடுகளால் குற்றம்சாட்டப்படுகிறார்.

எல்லாவற்றுக்கும் மேலாக சுமார் இரண்டரை லட்சம் மக்கள் தனிமைச்சிறையில் தனது குடும்பத்திலிருந்தும், பிள்ளைகள், ஊரார் உற்றாரிடமிருந்தும் பிரிக்கப்பட்டுக் கம்பி வேலிகள் இட்ட சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர்.

ஏன் அவர்களை முகாம்களிலிருந்து விடுதலை செய்யவில்லை என்று உலகினர் கேட்டபோது, யுத்தம் நடந்ததால் பூமி எங்கும் கண்ணி வெடிகள் உள்ளன என்ற பதிலைக் கொடுத்த இலங்கை அரசு, சமீபத்தில் 50 ஆயிரம் மக்களை விடுதலை செய்யப் போகிறோம் என்றது. அப்படி என்றால் கண்ணி வெடிகளால் தான் தமிழ் மக்களைச் சிறை வைத்துள்ளோம் என்ற வாதம் தவறுதானே! பொய்தானே! உலகையும் உலகத் தமிழ் மக்களையும் ஏமாற்றுவதற்காகக் கூறிய பொய்க்காரணம் தானே!

இலங்கையின் அரசியலோடு இந்தியாவின் ஒரு பகுதியின் அரசியல் பின்னிப் பிணைந்தது தமிழ்மொழியால். இந்த அடையாளம் இன்றைய தமிழ்ச் சந்ததியினரின் மூதாதையரால் கட்டமைக்கப்பட்டது.

தமிழர்கள் ஒரு வரலாற்று நியதியின் பாற்பட்டவர்கள். இந்த வரலாற்று நியதி இன்று சிதற ஆரம்பித்துள்ளது. பாரதி, பிஜி தமிழர்களுக்காகப் புலம்பியதும், பாரதிதாசன், தென்னாசியத் தமிழர்களுக்காகப் புலம்பித் தீர்த்ததும் இந்த நியதியில் விழுந்த அடியை உணர்ந்ததால்தான்.

சமீபத்தில் தமிழ் மக்களில் சுமார் 50,000 பேர் நம் எல்லோரின் கண்முன் செத்து மடிந்தது வரலாறு. இது சாதாரணம் என இன்று நினைத்துள்ளவர்கள் கணிப்பு தவறு. சுமார் 20 பேர் புரிந்த தற்கொலை ஏதோ ஒன்றுக்கான அறிகுறி. தமிழ் மக்களை இனி இந்தியா கவனிக்காது என்ற உற்பாதங்கள் தோன்றத் தொடங்கிவிட்டன.

இலங்கையில் நடந்த இன அழிப்பு, மேற்கத்திய நாடுகளை உலுக்கிய அளவுக்கு இந்தியாவை உலுக்கவில்லை. மேற்கத்திய நாடுகளை உலுக்கியதால் இலங்கையில் மனித உரிமை மீறல் நடக்கிறது என்று கூறி அனைத்துலக நிதியம், இலங்கை கேட்ட சுமார் 2.6 பில்லியன் டாலர் பணத்தை உடனே கொடுக்கவில்லை.

ஜெர்மனியும் ஆர்ஜென்டினாவும் இலங்கை அரசின் செயல்பாடுகள் சரியில்லை என்று கூறி பணம் கொடுக்கும் முடிவை எடுக்கும் கூட்டத்தில் பங்கெடுக்கவில்லை. சில மாதங்களுக்குப் பிறகுதான் 2009 ஜூன் மாதம் இப் பணம் இலங்கை அரசுக்குக் கொடுக்கப்பட்டது.

இந்தியாவும் சீனாவும் எதிரி நாடுகளானாலும் இரண்டையும் நடத்த வேண்டிய முறையில் நடத்த இலங்கைக்குத் தெரிகிறது. இலங்கை அரசுக்கு இந்தியாவும் சீனாவும் வேண்டிய அளவு உதவி செய்ததுபோலவே பாகிஸ்தான் (நூறு மில்லியன் டாலர்) ஈரான் (450 மில்லியன் டாலர்) லிபியா (500 மில்லியன் டாலர்) மனித உரிமையற்ற ராணுவ ஆட்சி நடைபெறும் பர்மா (50,000 டாலர்) ஆகியன பல்வேறு முறையில் உதவுகின்றன; அல்லது உதவ முன்வந்துள்ளன.

மலேசியாபோல எந்த இன அடையாளத்தையும் அங்கீகரிக்காத நாடாக இலங்கை தன்னை உருவமைக்க நினைக்கிற சூழலில் ஒரு பெரிய அடி சமீபத்தில் இலங்கைக்கு விழுந்திருக்கிறது. தமிழர்களைச் சித்திரவதை செய்து வருகிற இலங்கைக்கு ஜி.எஸ்.பி. பிளஸ் என்று அழைக்கப்படும் வியாபார ஒப்பந்தம் மூலம் இந்தப் பேரிடி விழுந்துள்ளது. அதாவது 2005-ம் ஆண்டிலிருந்து சுங்கவரி இல்லாமல் ஐரோப்பிய ஒன்றியத்துக்கு இலங்கை, துணிகளை ஏற்றுமதி செய்து வந்தது. சுமார் ஒரு லட்சம் இலங்கை மக்கள் ஈடுபட்டிருக்கும் இந்த துணி ஏற்றுமதியில் சுமார் ஆயிரம் மில்லியன் யூரோ அளவு வியாபாரம் நடக்கிறது. இலங்கையின் கைகளில் தமிழ் மக்களின் ரத்தம் தோய்ந்திருப்பதால் இந்த வியாபார உடன்படிக்கையைப் பற்றி யோசிக்க வேண்டும் என்று ஐரோப்பிய ஒன்றியம் கூறுகிறது.

இதற்காக ஐ.நா.வின் மக்கள் உரிமைக் கமிஷனர் நவநீதம்பிள்ளை இலங்கை அரசு ஓர் உண்மையறியும் குழுவை நியமித்தால் போதும் எனக் கூறுகிறார். ஆனால் அதற்கு உடன்பட இலங்கை மறுக்கிறது. இந்தியா இலங்கையை அது எது செய்தாலும் ஆதரிப்பது என்று கங்கணம் கட்டிக்கொண்டு நிற்கிறதுபோலும்.

அதாவது ஐ.எம்.எப். நிறுவனம் 2.6 பில்லியன் டாலர் பணத்தைக் கொடுக்காவிடில் இந்தியா அந்தப் பணத்தை இலங்கைக்குக் கொடுக்கும் என்று இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் கூறியுள்ளார். இச்செய்தி ஓர் ஆங்கில நாளிதழில் (அக்.22. 2009) வந்துள்ளது. இலங்கையின் துணை நிதியமைச்சர் சரத் அமுனுகாமா என்பவர் இலங்கை நாடாளுமன்றத்தில் இச்செய்தியை உறுதியும் செய்திருக்கிறார்.

இப்போது நமக்குத் தெரிகிறது, நமது இந்தியா ஒரு பணக்கார நாடு என்று. நம் அரசு பணத்தில் மிதக்கிறது என்று. நம் நாட்டில் ஏழை விவசாயிகள் வாழ வழியின்றி தற்கொலை செய்வதில்லை என்பதெல்லாம் இப்போதுதான் தெரிகிறது.

இனி தமிழர்களை வதைக்காதே என்று எங்கோ இருக்கிற வெள்ளைக்கார ஐரோப்பிய நாடுகள் எச்சரிக்கையாகக்கூட வியாபாரத் தடையை ஏற்படுத்த முடியாது. பணக்கார இந்தியா இருக்கவே இருக்கிறது, பண உதவி செய்ய!

இலங்கை அரசு இனி யாருக்கும் பயப்படத் தேவையில்லை. முள்கம்பிவேலி முகாம்களில் மக்கள் அடைக்கப்பட்ட செயல் இலங்கைக்கு ஏற்படுத்திய அபகீர்த்தியைப் போக்க ராஜபட்ச அவருடைய தமிழக நண்பருக்குக் கடிதம் எழுதித் தீர்த்துக் கொண்டார். தமிழக நண்பர், பத்துப் பேர் அடங்கிய எம்.பி.க்கள் குழுவை அனுப்பி ஐரோப்பியர்களின் கவனத்தைச் சின்னாபின்னப்படுத்தியுள்ளனர். நாங்களே குறை சொல்லாதபோது ஐரோப்பியனே உனக்கென்ன கவலை?

மக்கள் உரிமை, "ஜீனோûஸட்' என்னும் இனப்படுகொலை, தமிழ் மக்களின் உரிமை என்பதெல்லாம் ஐரோப்பியர்கள் நேரம் போகாததால் கண்டுபிடித்த விஷயங்கள்!

நெஞ்சு பொறுக்குதில்லையே...!

(கட்டுரையாளர்:தமிழவன்
போலந்து நாட்டு வார்ஸô பல்கலைக்கழக ஓய்வுபெற்ற தமிழ்ப் பேராசிரியர்).
நன்றி : தினமணி


Wednesday, October 21, 2009

அடிவயிற்றை முறுக்கவில்லையா?

ஒரு தமிழ்ப் பெண் தன் தோளைத் தழுவச் சம்மதிக்காமல் தனித்தே வாழும் திருமாவளவன், ராஜபட்சவுக்குச் சால்வை போர்த்தித் தழுவியிருக்கிறாரே! தழுவும்போது கம்பளிப்பூச்சி ஊர்வது போல் உணரவில்லையா?

கட்சிகளெல்லாம் கிடக்கட்டும்! எழுபதாயிரம் ஈழத்தமிழர்கள் சாகவும், ஐந்து லட்சம் தமிழர்கள் புலம் பெயரவும், மூன்று லட்சம் தமிழர்கள் சிங்கள அரசின் முள்வேலிகளில் சிறைவைக்கப்படவும், இரண்டு லட்சம் தமிழர்கள் அகதிகளாய்த் தமிழ்நாட்டில் கதி கெட்டு அலையவும் காரணமான ராஜபட்ச வைத்த விருந்தை உண்ணவும், அவரோடு மனங்கொள்ளாமல் சிரித்துப்பேசி மகிழவும் டி.ஆர். பாலுவாலும், கனிமொழியாலும், திருமாவளவனாலும் எப்படி முடிந்தது?

""ஏன்டி... உன் புருசனைக் கொன்னவனோட உனக்கென்னடி சிரிப்பு வேண்டிக்கிடக்கு'' என்று தாய் மகளிடம் சினந்து கேட்டாளாம். ""போனவன் போயிட்டான்; நான் இருக்கேனே'' என்று மகள் புன்முறுவலோடு விடை இறுத்தாளாம்!

""கடைசி நேரத்தில் நீங்களும் பிரபாகரனுடன் இருந்திருந்தால் உங்கள் கதையையும் முடித்திருப்பேன்'' என்று இலங்கை அதிபர் ராஜபட்ச தமிழ்நாட்டில் இருந்து சென்ற நாடாளுமன்ற உறுப்பினர் திருமாவளவனிடம் நேருக்குநேர் நின்று சொல்லியிருக்கிறார்!

நாடாளுமன்ற உறுப்பினர் என்றால் ஏதோ வாழைக்காய் பஜ்ஜி, வெங்காய பஜ்ஜி போல ராஜபட்சவுக்கு அவ்வளவு சாதாரணமாகத் தெரிகிறது. பஜ்ஜி மாவுக்குத் தனித்து எந்த மதிப்புமில்லை! அது வெங்காயத்தோடோ, வாழைக்காயோடோ சேரும்போதுதான் அதற்குப் பெயரும் கிடைக்கிறது; வடிவமும் கிடைக்கிறது!

இந்தப் பஜ்ஜி மாவுக்கெல்லாம் வடிவம் கொடுப்பவர் கருணாநிதி என்பது ராஜபட்சவின் எண்ணமாக இருக்கலாம்! அப்படிப்பட்ட கருணாநிதியின் உயிர்நாடியோ, சென்னைக் கோட்டையில் இருக்கிறது. சென்னைக் கோட்டையில் கருணாநிதி நீடிப்பதோ, சோனியாவின் தயவில் இருக்கிறது. சோனியாவோ சிங்களவர்களின் உற்ற நண்பர். ஆகவே, சோனியாவின் தோழமை இருக்கும்வரை இவர்களை எல்லாம் ஒரு பொருட்டாக நினைக்கத் தேவையில்லை என்பது ராஜபட்சவின் எண்ணம்!

ஆனாலும் விடுதலைப் புலிகளைப் பார்த்து விடுதலைச் சிறுத்தைகள் என்னும் அமைப்பைத் தோற்றுவித்துக் கொண்ட திருமாவளவன், ராஜபட்ச "உன் கதையையும் முடித்திருப்பேன்' என்று சொன்னதைக் கேட்டுத் திகைத்துப்போய்த் திரும்பி வந்திருக்கலாமா? திருப்பிக் கொடுத்திருக்க வேண்டாமா?

""ராஜபட்ச! உன் கதையை முடிப்பதற்குப் பதிலாகப் புத்திகெட்டுப்போய் இந்தியா ஈழத்தின் கதையை முடித்துவிட்ட காரணத்தால், உன்னால் இவ்வளவு எக்காளமாகப் பேச முடிகிறது. எந்த விடுதலை இயக்கத்துக்கும் பின்னடைவுகள் வருவது இயற்கை; ஆனால், ஒரு விடுதலை இயக்கம் என்றாவது ஒரு நாள் தன்னுடைய இலக்கை அடையாமல் முடிந்ததாக வரலாறு இல்லை''-என்று ஒரு வார்த்தை சொல்லிவிட்டு வந்திருந்தால் திருமாவளவன் உலகத் தமிழினத்துக்கே தலைவராகி இருப்பாரே!

ராஜபட்சவின் நாட்டுக்கே போயும் ராஜபட்சவை நேருக்குநேர் நின்று உலுக்குகிற வாய்ப்பைத் தவற விட்டுவிட்டாரே! அதுவும் ராஜபட்ச, "ஈழத்துக்கு நீ வந்திருந்தால் உன்னையும் சுட்டிருப்பேன்' என்று சொல்லி அசிங்கப்படுத்திய பிறகும், அங்கு வாயை மூடிக் கொண்டிருந்துவிட்டு, இங்கே நம்முடைய மூலக்கடை முச்சந்தியில் நின்று கொண்டு, "இரத்தம் கொதிக்கிறது' என்று திருமாவளவன் முழங்குவதை, இனி யார் நம்புவார்கள்?

அப்படி நேருக்குநேர் கேட்டிருந்தால் என்ன செய்திருப்பார் ராஜபட்ச? கொழும்புச் சிறைக் கொட்டடியில் அடைத்திருப்பாரா? அடைத்திருந்தால் திருமாவளவனை விடுவிப்பது ஆறு கோடித் தமிழர்களின் கடமையாகி இருந்திருக்குமே!

இப்போது முகத்தை அழுத்தித் துடைத்துக் கொண்டு, தலையைக் கவிழ்ந்து கொண்டு, ராஜபட்ச அசிங்கப்படுத்தியதற்கு என்னென்னவோ அமைவுகளைத் திருமாவளவன் சொன்னாலும், யார் கேட்பதற்குத் தயாராக இருக்கிறார்கள்?

போன இடத்தில் அப்படியெல்லாம் பேசினால், "நன்றாக இருக்குமா?' என்று திருமாவளவனாகச் சொல்லிக் கொண்டிருக்க வேண்டியதுதான்! தன்னுடைய நாட்டுக்கு வந்த விருந்தாளியிடம் அப்படிப் பேசியிருக்கலாமா என்று ராஜபட்ச கவலைப்படவில்லையே!

இகழ்பவனின் பின்னால் போய்ப் பெறப் போவதென்ன என்று நம்முடைய அப்பன் வள்ளுவன் கேட்பான்! ""என்மற்று இகழ்வார் பின்சென்று நிலை'' (966).

முன்பொருமுறை தமிழ்நாட்டில் இந்தி எதிர்ப்பு உச்சத்திலிருந்தபோது மாநிலங்களின் அமைச்சர்களெல்லாம் பங்கேற்ற கூட்டத்தில், செல்வாக்குமிக்க மத்திய அமைச்சர் மொரார்ஜி தேசாய், "இந்தி இல்லாமல் இந்தியா இல்லை' என்று பேச, "இந்தி இருக்குமானால், இந்தியாவே இருக்காது' என்று அன்றைய தமிழக அமைச்சர் செ. மாதவன் பேசிவிட்டார் என்பதற்காக, ஊர்ஊராக நான்கு குதிரைகள் பூட்டிய சாரட் வண்டியில் செ. மாதவனை உட்காரவைத்து ஊர்வலம் விட்டு, ஐந்து ஆண்டு அரசியலை இதைச் சொல்லியே ஓட்டினார்களே தி.மு.க.வினர்!

அன்று மாமன்னன் அசோகன் இலங்கைக்குத் தன் மகள் சங்கமித்திரையை அனுப்பிப் பௌத்தத்தை வளர்த்ததுபோல, இன்று தன் மகள் கனிமொழியை அனுப்பிச் சிங்களவர்களோடு நேசத்தை வளர்க்கும் கருணாநிதி, ராஜபட்சவை எதிர்த்துத் திருமாவளவன் பேசுவதை ரசிக்க மாட்டார் என்றாலும், கருணாநிதி ரசிக்காததை எல்லாம் செய்யாமலிருப்பதற்குத் திருமாவளவன் என்ன தி.மு.க.வின் ஆயிரம் விளக்குப் பகுதிச் செயலாளரா?

தமிழுக்கும், தமிழனுக்கும் கேடு என்றால் சீறிவரும் சிறுத்தையாக இருந்தவரை, நாடாளுமன்றப் பதவியைக் கொடுத்து அடங்கிப் போகும் நிலைக்கு ஆளாக்கிவிட்டாரே கருணாநிதி!

முள்வேலி முகாம்களைப் பார்வையிட, அவற்றின் உண்மை நிலையைக் கண்டறிய மனித உரிமைப் பாதுகாப்புக் கழகத்தினரையும், செய்தியாளர்களையும் அனுமதிக்காத ராஜபட்ச, காங்கிரûஸயும் தி.மு.க.வையும் மட்டும் அழைத்தாராம்! ஈழத்தைச் சுடுகாடாக்கிய ராஜபட்ச, சோனியா, கருணாநிதி என்னும் முக்கூட்டணி தங்களின் சிதைந்துபோன முகங்களைச் சீர்படுத்திக் கொள்ளும் முயற்சிதானே இது? பொத்துக்கிழிந்துபோன பெயரை இழுத்துவைத்துத் தைத்துக் கொள்ளும் முயற்சி அல்லாமல் வேறென்ன? முள்வேலி முகாம்களில் ஈழத் தமிழர்களை ஆடுமாடுகளைப் போல் அடைத்துவைத்துக் கொடுமைப்படுத்துவதை ஓர் அமெரிக்கப் பெண்மணி சத்தம்போட்டு உலகுக்குச் சொல்லிக் கொண்டிருப்பதைத் தமிழ்நாட்டுக்கும் வந்து சொல்ல விரும்பியபோது, அவருக்கு "விசா' வழங்கவிடாமல் தடுத்து நிறுத்தியவர்தானே இந்தக் கருணாநிதி! அந்தப் பெண்மணியின் வருகை தன்னுடைய சாயத்தை வெளுக்கச் செய்துவிடும் என்னும் அச்சம்தானே காரணம்!

இந்தப் பத்து நாடாளுமன்ற உறுப்பினர்களின் "உல்லாசப் பயணத்தில்' இங்கிருந்தே இலங்கை அதிகாரிகள் உடன்வந்தார்களாம். கொழும்பில் சிவப்புக் கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டதாம்; ஹெலிகாப்டர்களில் பறந்தார்களாம்; ஐந்து நட்சத்திர விடுதிகளில் தங்கினார்களாம்; முப்பொழுதும் முப்பழங்களோடும் விருந்துகளாம்; வேதமே பாராட்டிய சோமபானங்களுக்கும் குறைவில்லையாம்! அரசியல் நெறியற்ற டக்ளஸ் தேவானந்தா கூட்டிவைத்த கூட்டத்தில் கலந்துரையாடினார்களாம்! இதற்குச் சிங்களவர்களோடேயே உரையாடியிருக்கலாமே!

ஈழத்துக்கான போர் சிங்களக்காடையர்களோடு மூன்றுமுறை நடந்தது; முப்பதாண்டுக் காலம் நடந்தது; அப்போதெல்லாம் இடையிடையே போர் நடக்கும்; சிங்களக்காடையர்கள் முண்டிப் பார்ப்பார்கள்; பின்பு பின்வாங்கி ஓடிப்போவார்கள்.

ஈழத்தில் வரிவசூல் நடந்தது; காவல் நிலையங்கள் இருந்தன; நீதிமன்றம் நடந்தது; பராமரிப்புப் பணிகளும், நிர்வாகப் பணிகளும் செவ்வனே நடந்தன. அந்தக் காலகட்டம் முழுவதும் அறிவிக்கப்படாத சுதந்திர நாடாகவே ஈழம் இயங்கியது!

நான்காம் ஈழப் போர் ஈழத்தைச் சுடுகாடாக்கியது. சிங்களக்காடையர்கள் ஒன்றும் ஓரிரவில் வீரர்களாய் மாறிவிடவில்லை. இந்தியப் பெருநாடு சிங்களவர்களை முன்னிறுத்தி அந்தப் போரை நடத்தி இந்தக் கொடுமையை அரங்கேற்றியது!

பாரதி சொன்னதுபோல எல்லாமே "பொய்யாய்க் கனவாய்ப் பழங்கதையாய்ப் போனதுவே!'

நேற்றுவரை சிங்களத்துக்கு நிகராகத் தமிழுக்கு ஆட்சிமொழி உரிமை வேண்டும்; அரசு வேலைகளில் உரிய பங்கு வேண்டும்; இலங்கையின் வடக்கு - கிழக்கு மாகாணங்களை உள்ளடக்கிய ஈழத்துக்குச் சுயநிர்ணய உரிமை வேண்டும் என்றெல்லாம் போராடியவர்கள், இன்று முள்வேலிச் சிறைகளில் இருந்துகொண்டு குடிக்கவும், குளிக்கவும் தண்ணீர் வேண்டும் என்று கண்ணீர்விடும் நிலைக்கு ஆளாகி விட்டார்களே! பிள்ளைக்குப் பாலில்லை; முதியோருக்கு மருந்தில்லை; கர்ப்பிணிப் பெண்கள் பிள்ளை பெற வசதியில்லை.

ஈழத்துக்கு முற்றாக விடுதலை கேட்டவர்கள் இன்று முள்வேலிச் சிறை முகாம்களிலிருந்து வீட்டுக்குப் போக மட்டும் விடுதலை கொடுத்தால் போதும் என்று கேட்கிறார்கள்; இந்த நிலைக்கு இவர்களை ஆளாக்கிய சோனியா காந்தி, கருணாநிதி கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ராஜபட்சவைச் சந்தித்து,""நாட்டுக்கு விடுதலை கேட்கவில்லையே; வீட்டுக்குப் போகத்தானே விடுதலை கேட்கிறார்கள்; கொடுத்துவிட்டுப் போங்களேன்'' என்று எடுத்துச் சொல்லப் போய் இருக்கிறார்கள்! தமிழனின் தலைவிதியைப் பார்த்தீர்களா?

இவர்கள் போனதன் விளைவாக 50,000 தமிழர்கள் முள்வேலி முகாம்களிலிருந்து மறுநாளே விடுவிக்கப்படுவார்கள் என்னும் அறிவிப்பு இலங்கையில் வெளியாகவில்லை; கோபாலபுரத்தில் வெளியாகிறது; ராஜபட்சவும் கருணாநிதியும் வேறுவேறல்லவே; யார் வெளியிட்டால் என்ன? ஆனால், வெளிவிடப்பட்டவர்கள் ஐம்பதாயிரம் பேரா? ஐயாயிரம் பேரா? அல்லது வெறும் அறிவிப்போடு முடிந்துவிட்டதா என்பதெல்லாம் யாருக்குத் தெரியும்? யார் இதை அந்த அரக்கர் நாட்டில் சரிபார்க்க முடியும்?

இப்படிக் கருணாநிதி அறிவித்த மறுநாளே சிங்காரச் சென்னையில் சுவரொட்டிகள் மின்னின. ""நான்கே நாளில் ஈழத் தமிழர்களுக்கு விடுதலை வாங்கிக் கொடுத்த கலைஞரை வணங்குகிறோம்.''

அண்ணா விடுதலை இயக்கமாகத் தோற்றுவித்த ஒரு கட்சியில் விடுதலை என்பதை எவ்வளவு கொச்சையாகப் புரிந்து கொண்டிருக்கிறார்கள் என்பதுதான் இதிலுள்ள அவலம்; அதையும் ரசிக்கிறார் கருணாநிதி என்பதுதான் அதைவிடப் பேரவலம்!

உலகத் தமிழ் மாநாடு நடத்த முற்பட்டிருக்கிறார் முதலமைச்சர் கருணாநிதி. ஈழப் பேரழிவுகளுக்குப் பிறகு உலகத் தமிழர்கள் இந்த மாநாட்டைக் கருணாநிதி நடத்துவதை ஏற்கவில்லை! சில மாதங்களுக்கு இந்த மாநாட்டைத் தள்ளிவைத்து அவர்களை அமைதிப்படுத்தலாம் என்னும் கருணாநிதியின் எந்த முயற்சியும் எடுபடவில்லை. இப்போது உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு என்று பெயரை மாற்றி நடத்தப் போகிறார்கள். உலகத் தமிழர்களின் சினம் நியாயமானதுதானே!

உலகத் தமிழ் மாநாட்டை அண்ணா நடத்தினார்; எம்ஜிஆர் நடத்தினார்; ஜெயலலிதா நடத்தினார்; ஆனால், கருணாநிதியால் நடத்தவே முடியால் போய்விட்டதே!

தமிழைத் தாயாக உருவகிப்பது தமிழர்களின் வழக்கம். தாய் ஒருத்தி; பிள்ளைகள் இருவர்! இரண்டு பிள்ளைகளுக்கும் இரண்டு மார்பிலும் தமிழ்ப்பால் சுரந்தாள் அவள்! அவர்கள் இனத்தால், நிறத்தால், ரத்தத்தால், பழக்கவழக்கங்களால், பண்பாட்டால் அனைத்தாலும் ஒன்று; நிலத்தால் மட்டுமே வேறு, வேறு!

அண்மையில் அவளுடைய சிறிய பிள்ளைக்கு ஊறு நேர்ந்துவிட்டது; பொறுப்பாளா அவள்? அந்தப் பிள்ளைக்கு ஊறு விளைவித்த அரக்கன் அழிந்து, அந்தப் பிள்ளை தன்னுடைய மண்ணில் காலூன்றும் வரை உறக்கம் வருமா அவளுக்கு?

அந்தச் சிறிய பிள்ளையின் மண்ணைப்பிடுங்கிக் கொள்ள ஓர் அரக்கன் முயன்றான் என்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது. அந்த அரக்கனுக்குத் துணைபுரிய தில்லிவாசிகள் விரும்பியதையும் புரிந்துகொள்ள முடிகிறது! ஆனால், மூத்த பிள்ளையின் மண்ணிலிருந்தே சிலர் தில்லியின் விருப்பத்தின்பேரில் அரக்கனுக்கு உதவியாக இருந்ததைத்தான் தாயால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை! கண்ணகி அழுததைப் போல் அரற்றி அழுகிறாள் தாய்! தன் இளைய மகனின் வம்சத்தில் எண்பதாயிரம் பேர் மண்ணைச் சிவப்பாக்கி விட்டு மாண்டுமடிந்ததை எண்ணி அழுகிறாள். இளைஞர்களெல்லாம் செத்து, இளம்பெண்களே விஞ்சி நிற்கும் கொடுமையை எண்ணி அழுகிறாள். அறத்தை "மடவோய்' என்று வாயாற வைகிறாள். நான் உயிர் பிழைத்திருப்பேனோ என்று அரற்றுகிறாள்!மறனோடு திரியும் கோல் ""மன்மோகன்'' தவறு இழைப்பஅறன் எனும் மடவோய் யான் அவலம் கொண்டு அழிவலோ?''(-சிலம்பு, துன்பமாலை 40).

இளைய பிள்ளையின் வம்சத்தை அழிக்க மூத்தபிள்ளையின் வழியினரில் சிலரே மாற்றானுக்கு உதவிவிட்டு, தன்னுடைய வெக்கை தணியத் தனக்கே விழா எடுக்க நினைக்கிறார்கள் என்பதை அறிந்து, அவர்களின் விழாவினைப் புறந்தள்ளி விட்டாள் தாய்! உலகத் தமிழ் மாநாட்டை அவள் ஏற்கவில்லை! தாயல்லளோ அவள்!

அது மட்டுமன்று; தமிழ் மாநாட்டில் அகதிகளாய் வாழும் ஈழத் தமிழர்களுக்கு இந்தியக் குடியுரிமை அளிக்கப்பட வேண்டும் எனக் காஞ்சிபுரத்தில் தீர்மானம் போட்டிருக்கிறார் கருணாநிதி!

சென்ற மத்திய ஆட்சிக் காலகட்டத்தில் சோனியாவோடு சேர்ந்துகொண்டு ஈழத்தைச் சுடுகாடாக்கியதை இது போன்ற தீர்மானங்களால் ஈடுகட்டிவிட முடியும் என்று கருதுகிறார் கருணாநிதி!

""ஈழத் தமிழர்களுக்கு எந்தச் சலுகைகள், உரிமைகள் அளித்தாலும் எனக்கு உடன்பாடே! ஆனால், இங்கே ஈழத் தமிழர்கள் மட்டும் அகதிகளாய் இல்லை. திபெத்தியர்கள், பர்மியர்கள், வங்கதேசத்தினர் என்று ஏராளமானோர் அகதிகளாய் இருக்கிறார்கள். ஈழத் தமிழர்களை மட்டும் மத்திய அரசு தனித்துப் பிரித்துப் பார்க்குமாறு கருணாநிதியால் செய்ய முடியுமா?

ஈழத் தமிழர்களுக்குக் குடியுரிமை என்றால் அவர்களுக்கு உயர்கல்வி, அரசு வேலைவாய்ப்புப் போன்ற எல்லாம் உண்டா? அப்போது தானே அது முற்றான குடியுரிமையாய் இருக்க முடியும்!'' என்றெல்லாம் அடுக்கி அடுக்கி எதிர்க்கட்சித் தலைவர் ஜெயலலிதா கேட்டாரே! ஒன்றுக்காவது விடை சொன்னாரா முதலமைச்சர் கருணாநிதி?

கருணாநிதி தான் அங்கம் வகிக்கும் மத்திய அரசை ஏற்கும்படி செய்ய வேண்டும்; அல்லது அரசை விட்டு வெளியே வந்து அதற்காகப் போராட வேண்டும்! அப்படியெல்லாம் இல்லாமல் ஏதோ ஒரு பேச்சுக்குப் போட்டு வைப்போம் என்று, தான் நம்பாததையே தீர்மானமாக்குவது முழு மோசடி இல்லையா?

ஈழத் தமிழர்களுக்கு மத்திய அரசிலிருந்து என்ன உரிமைகள் பெற்றுக் கொடுத்தாலும் அனைவருக்கும் இசைவே!

கருணாநிதியும், சோனியாவும் அந்த இனத்துக்குச் செய்த கொடுமைகளுக்கு ஈடுகட்டவும், பாவங்களுக்குக் கழுவாய் தேடவும், எந்தச் சலுகை வேண்டுமானாலும் அளிக்கட்டும்; அளிக்க வேண்டும்! வெறும் 500 கோடி ரூபாயை அளித்துக் கைகழுவி விடும் ஏமாற்று வேலை வேண்டாம்!

ஆனால் அவர்கள் பிறப்பால் ஈழத் தமிழர்கள்; ஈழம் அவர்களின் தாயகம்! அங்கே அவர்களுக்கு வீடு வாசல், நிலம் கரை அனைத்தும் உண்டு. அவர்களுக்குச் சொத்துகளும் அங்கேதான்; சொந்தங்களும் அங்கேதான்!

ராஜபட்ச, சோனியா, கருணாநிதி என்னும் முக்கூட்டணி அரசியலில் ஆக்கம் இழந்த பிறகு.... அது நடக்காதா என்ன? முன்பு தெருவிலிருந்தவர்கள் இப்போது திருவை அடைந்திருக்கிறார்கள்; மீண்டும் திருவை இழந்து தெருவுக்குப் போக எவ்வளவு நேரமாகும்?

அப்போது தாங்கள் விரும்பும்வண்ணம் தங்கள் தாயகத்தை ஈழத் தமிழர்கள் உருவாக்கிக் கொள்வார்கள்!

தமிழர்களுக்கு இரண்டு தாயகங்கள் உண்டு. ஒன்று தமிழ்நாடு; இன்னொன்று ஈழம்!

போர்த் தோல்வி காரணமாகச் சோர்வுற்றிருக்கும் தமிழர்களை விரட்டிவிட்டால், இலங்கை முற்றாகச் சிங்களவர்களின் நாடாகிவிடும் என்பது ராஜபட்சவின் எண்ணம்! கனடா, அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி, நார்வே, தமிழ்நாடு என்று போனபோன இடங்களில் ஏதாவதொரு உரிமை பெற்று அவர்கள் ஆங்காங்கே இருந்துவிட வேண்டும் என்பதுதான் ராஜபட்சவின் விருப்பம்! அவர்கள் ஈழத்துக்குத் திரும்பிவிடும் எண்ணத்தைக் கைவிடச் செய்வதற்காகத்தான் கொடுமைகள் மிகுந்த முள்வேலிச் சிறை முகாம்களின் காலத்தை நீட்டித்துக் கொண்டே போகிறார் ராஜபட்ச!

இறைமகன் ஏசுவை சிலுவையில் அறையக் காரணமான யூத மத போதகர்கள் யாரையாவது ஏசுவின் உண்மைச் சீடர்கள் பதினோரு பேரில் எவனாவது கட்டிப்பிடித்ததுண்டா?

யூத இனத்தையே கருவறுத்த மன நோயாளி ஹிட்லருக்கு எந்த யூதனாவது பட்டாடை போர்த்திப் பாராட்டியதுண்டா?

கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தில், முன் தோன்றிய மூத்த தமிழினத்தைக் கருவறுத்த ராஜபட்சவுடன் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பத்துப் பேரும் சிரித்து மகிழ்வதையும் சிலர் கட்டித் தழுவிக் கொள்வதையும் நிழற்படங்களில் பாருங்கள்!

அடிவயிற்றை முறுக்கவில்லையா?

கட்டுரையாளர் : பழ . கருப்பையா
நன்றி : தினமணி