Monday, November 9, 2009

சமச்சீர் கல்வித் திட்டத்தில் தமிழின் நிலை

தமிழக அரசின் திடீர் அறிவிப்புகளுள் ஒன்று சமச்சீர் கல்வித் திட்டம் நடைமுறைப்படுத்துவது பற்றியது. 2006-ல் பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் முத்துக்குமரன் தலைமையில் அமைக்கப்பட்ட சமச்சீர் கல்விக்குழு, 2007-ல் தனது அறிக்கையை அரசிடம் அளித்தது.

இக்குழுவில் அவருடன் தமிழ்நாடு மெட்ரிக் பள்ளிகளின் நிர்வாகிகள் சங்கத் தலைவர், பள்ளித் தலைமையாசிரியர்கள், கல்வியாளர்கள் ஆகியோருடன் தமிழகப் பள்ளிக் கல்வித்துறையில் உள்ள இயக்குநர் சிலரும் இடம்பெற்றிருந்தனர்.

தமிழகத்தில் தற்போது நடைமுறையில் உள்ள மாநிலக் கல்வி முறை, மெட்ரிகுலேஷன், ஆங்கிலோ - இந்தியன், ஓரியண்டல் பாடத்திட்டம், நர்சரிப் பள்ளிக் கல்வி முறை என ஐந்தினையும் நன்கு ஆராய்ந்து, குறைகளைக் களைந்து, நிறைகளை எல்லாப் பள்ளிகளுக்கும் ஒரே சீராக வழங்கும்வகையில் பொதுவானதொரு கல்விமுறையை உருவாக்குவது இக்குழுவின் நோக்கமாகும்.

எனவே எல்லாநிலைப் பள்ளிகளிலும் ஒரே மாதிரியான பாடத்திட்டம், தேர்வுமுறைகள் மூலம் மாணவர்களை உருவாக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அதற்காக சமச்சீர் கல்வித் திட்டமானது, தரம் உயர்ந்த கல்வியைக் கீழே தாழ்த்திச் சமப்படுத்துவது என்று பொருள் கொள்ளக் கூடாது. பொதுப்பாடத் திட்டத்தால் புளியம்பட்டி மாணவனும் பூந்தமல்லி மாணவனும் ஒரே பாடத்தைப் படிக்க வேண்டும், அதற்குரிய அறிவைப் பெற வேண்டும் என்பதுதான் இத்திட்டத்தின் குறிக்கோளாகும்.

தமிழகத்தில் மாநிலக் கல்வி முறையில் 44,241 தொடக்க நடுநிலைப் பள்ளிகளும், 5,908 உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளும் உள்ளன. அத்துடன் 41 ஆங்கிலோ - இந்தியன் பள்ளிகள், 25 ஓரியண்டல் பள்ளிகளும் இருக்கின்றன. இவற்றுக்காக அரசுத் தேர்வுத்துறை நான்குவிதமான அரசுத் தேர்வுகளை நடத்தி வருகிறது. இவற்றின் மதிப்பீட்டு முறையும் வேறுபட்டுள்ளன. இந்த வேறுபாடுகளை மாற்றியமைப்பதற்காக, இப்பள்ளிகளின் பாடத்திட்டம், செயல்முறைகள், தேர்வு முறை, பள்ளி ஆய்வு, கல்வி விதிமுறைகள் ஆகிய அனைத்தையும் ஒரே நிலைப்படுத்த சமச்சீர் கல்விக்குழு ஆய்வை மேற்கொண்டது.

இக்குழு பல மாவட்டங்களிலும் ஆசிரியர்கள், கல்வியாளர்கள், பொதுமக்கள் ஆகியோரைச் சந்தித்துக் கருத்துகளைக் கேட்டறிந்தது. பலவகைப் பள்ளி நிறுவனங்களும் தத்தம் கருத்துகளைக் குழுவின் பரிசீலனைக்கு வைத்தன. பல உள்குழுக்கள் பாடத்திட்டங்களை ஆராய்ந்து அறிக்கை தந்தன. இவற்றோடு தேசிய கலைத்திட்டம் - 2005-ன் நோக்கங்களையும் உள்வாங்கிக்கொண்டு குழு ஆய்வு செய்தது.

சமச்சீர் கல்விக் குழு பள்ளி சம்பந்தப்பட்ட அனைத்தையும் ஆராய்ந்து, தரமான கல்வித் திட்டத்தை உருவாக்கும் வகையில் அறிக்கையைத் தயார் செய்தது. இதில் கலைத்திட்ட நோக்கம், பள்ளிகளின் உள்கட்டமைப்பு, பள்ளிகளை ஆய்வு செய்தல், தேர்வு முறைகள், பள்ளிசாரா செயல்முறைகள், ஆசிரியர்களுக்கான பயிற்சி ஆகியவையும் விரிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளன. பல இயக்குநர்களைக் கொண்டு தனித்தனியாகச் செயல்படும் பள்ளிக் கல்வி நிர்வாக முறையை மாற்றவும் இக்குழு பரிந்துரை செய்துள்ளது. தன்னாட்சி பெற்ற மாநிலக் கல்வி வாரியம் அமைக்கப்பட வேண்டும் என்றும், இதில் பாடவாரியாகக் குழுமங்கள் அமைத்து பல்கலைக்கழகக் கல்விக்குழுவுக்கு இணையாகச் செயல்பட வேண்டும் என்றும் கூறியுள்ளது. முத்துக்குமரன் குழு அறிக்கையில் உள்ள எக்கருத்துகள் கொள்ளப்பட்டன, எவையெவை தள்ளப்பட்டன என்ற விவரம் தெரியவில்லை.

இந்த நிலையில் தமிழக அரசு, 2010 - 2011-ம் கல்வியாண்டு முதல் சமச்சீர் கல்வித் திட்டத்தை நடைமுறைப்படுத்தப்போவதாக அறிவித்து, கல்வியாளர்களையும் ஆசிரியர்களையும் கொண்டு, ஒன்றாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்புவரை பொதுப்பாடத் திட்ட வரைவை உருவாக்கியுள்ளது. பொதுமக்களும் கல்வியாளர்களும் அதைப்பற்றித் தெரிந்து, கருத்துகளைக் கூறும் வகையில் இணையதளத்தில் அப் பாடத்திட்டத்தை வெளியிட்டுள்ளது. வரும் கல்வி ஆண்டில் முதல் வகுப்பு, ஆறாம் வகுப்புகளுக்குப் புதிய பாடநூல்களைத் தயாரிக்கும் பணியையும் முடுக்கிவிட்டுள்ளது.

சமச்சீர் கல்வி எனும் நோக்கில் இப்பாடத்திட்டத்தை ஆய்வு செய்தபோது சில தகவல்கள் தெரியவந்துள்ளன. மாநிலக் கல்வி முறையில் அமைந்த முந்தைய பாடத்திட்டத்துக்கும் புதிய பாடத்திட்டத்துக்கும் ஆங்காங்கே வேறுபாடுகள் காணப்படுகின்றன.

மொழிப்பாடத்தைப் பொறுத்தமட்டில், முதல் மொழி தமிழ், இரண்டாவது மொழி ஆங்கிலத்துடன், மூன்றாவது மொழியாக ஓர் ஓரியண்டல் மொழி, சிறப்புத் தமிழ், சிறப்பு ஆங்கிலம் அல்லது தாய்மொழி இவற்றுள் ஏதேனும் ஒன்று கற்கலாம் என இக்குழு பரிந்துரைக்கிறது. இதன் அடிப்படையிலேயே தேர்வுமுறைக்கும் இரண்டு மாதிரிகளைத் தந்துள்ளது. மூன்று மொழிகள் கணிதம், அறிவியல் (செய்முறையுடன்), சமூக அறிவியல் ஆகியவற்றுக்கு மொத்தமாக 600 மதிப்பெண் அடிப்படையில் தேர்வை நடத்தவும் வழிகாட்டியுள்ளது.

ஏற்கெனவே குறிப்பிட்டவாறு தமிழகத்தில் உள்ள ஐந்து வகைப் பள்ளிகளும், தமிழ்நாட்டுப் பாடநூல் கழகம் வெளியிட்டுள்ள தமிழ்ப் பாடநூல்களையே எல்லா வகுப்புகளிலும் பயன்படுத்தி வருகின்றன. ஆனால் தேர்வு முறைகள் மாறியுள்ளன. எனவே சமச்சீர் கல்வி நடைமுறைக்காக வடிவமைக்கப்பட்டுள்ள தமிழ்மொழிக்கான பொதுப் பாடத்திட்ட வரைவில் மிகப்பெரிய மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை. பாடத்திட்ட அமைப்பில் வழக்கம்போல் சில குறைபாடுகள் காணப்படுகின்றன.

ஒன்றுமுதல் பத்தாம் வகுப்பு வரையிலான தமிழ்ப் பாடத்திட்டத்தில் எந்த வகுப்பிலும் கடவுள் வாழ்த்துப் பகுதி இல்லை. தமிழ்மொழி வாழ்த்து மட்டுமே இடம்பெற்றுள்ளது. அத்துடன் இந்திய விடுதலைப் போராட்டம், நாட்டுப்பற்று, தேசிய ஒருமைப்பாடு, மத நல்லிணக்கம் போன்றவற்றை விவரிக்கும் உரைநடைப்பாடம் எந்த வகுப்பிலும் அமைந்திருக்கவில்லை. வகுப்புகள்தோறும் இடம்பெற வேண்டிய சமூக மேம்பாட்டுக்காக உழைத்த மகளிர், மொழித் தொண்டாற்றிய மகளிர் பற்றிய பாடம் ஒன்றிரண்டு தவிர, பிற வகுப்புகளில் காணப்படவில்லை. மகளிர்தம் முன்னேற்றம் பற்றிய பகுதிகளே இல்லாத வகுப்புப் பாடத்திட்டங்களும் உள்ளன.

அனைத்து வகுப்புகளின் செய்யுள் பகுதிகளில் செயற்கையான வறட்சி காணப்படுகிறது. காப்பிய வரிசையில் கம்பராமாயணம், சீறாப்புராணம், தேம்பாவணி, திருவிளையாடல் புராணம், ராவண காவியம், காந்தி மகான் கதை போன்றவை எதுவும் பாடநூலில் இடம்பெறவில்லை. இவையனைத்தும் முந்தைய பாடத்திட்டத்தில் வகுப்பிற்கேற்ப அமைந்திருந்தன. தற்போது சிலப்பதிகாரம், மணிமேகலை தவிர காப்பியப் பஞ்சம் பாடத்திட்டத்தில் காணப்படுகிறது. கம்பன் என்னும் சொல்லை உச்சரிக்காமலேயே ஒரு மாணவன் தமிழ்நாட்டில் பத்தாம் வகுப்பை முடித்துச் சான்றிதழ் பெற்றுச் சென்றுவிடுகிற சூழலைப் பாடத்திட்டக் குழுவினர் உருவாக்கியுள்ளனர். சில இலக்கணத் தலைப்புகள் வகுப்புக்கு வகுப்பு இடம்மாறியும் ஒரே வகுப்பில் பல அலகுகளை அடைத்துக்கொண்டும் தாறுமாறாகக் கொடுக்கப்பட்டுள்ளன. எடுத்துக்காட்டாக அறுவகைப் பெயர்கள் எனும் சிறு இலக்கணப் பகுதி பல வகுப்புகளில் பல அலகுகளில் கொடுக்கப்பட்டுள்ளது. இதனை வளர்ச்சிநிலையெனக் காரணம் கூறித் தட்டிக் கழிக்க முடியாது.

"உழைப்பால் உயர்ந்த உத்தமர்' எனும் தலைப்பிலான உரைநடைப் பகுதிக்கு பரோட்டா கடையில் வேலை பார்த்து ஐஏஎஸ் ஆன ஒருவர், களஞ்சியம் சின்னத்தாய் போன்றவர்கள் எடுத்துக்காட்டுகளாகக் கொடுக்கப்பட்டுள்ளனர். இவர்களின் உழைப்பும் உயர்வும் பாராட்டுதற்குரியவைதான். ஆனால் இவர்கள் வாழுநர்கள். இவர்களின் எதிர்காலம் எப்படியிருக்கும் என்று உறுதிபடக் கூற முடியாது. இதைத் தொலைநோக்குப் பார்வையில் ஆய்வு செய்து வாழுநர்களைப் பாடப்பொருளாக்குவதைத் தவிர்க்கலாம்.

ஒரு வகுப்பின் செய்யுள்கதைப் பகுதிக்காக தேசிங்குராஜன் கதையைப் பாடத்திட்டம் பரிந்துரைத்துள்ளது. இது பல தலைமுறைகளைக் கடந்த கதை. செல்போனையும் கணினித் தகவல்களையும் பாடமாக வைக்க வேண்டும் என வலியுறுத்துகிற மொழிப்பாடத்திட்டம் மிகப்பழமையான இந்தக் கதையையே பிடித்துத் தொங்கிக் கொண்டிருப்பது வியப்பாக உள்ளது. பாடத்திட்ட வல்லுநர்கள் கவிமணி, நாமக்கல் கவிஞர், அழ. வள்ளியப்பா, பெருஞ்சித்திரனார் போன்றோரின் படைப்புகளைப் பார்க்கவில்லை போலத் தோன்றுகிறது.

துணைப்பாடப் பகுதிக்காக எடிசன் இரண்டு வகுப்புகளில் குறிப்பிடப்பட்டுடுள்ளார். பிற அறிவியல் அறிஞர்களோ நோபல் பரிசு பெற்றவர்களோ அவர்கள் கண்ணில்படவில்லையா? உலகத் தமிழ் மாநாடுகள் உணர்த்தும் செய்திகள் எனும் தலைப்பில் பத்தாம் வகுப்பில் உரைநடைப்பகுதி உள்ளது. கருத்து முரண்பாடு இல்லாத வகையில் இப்பாடத்தை எவ்வாறு அமைக்கப் போகிறார்கள் என்பதும் தெரியவில்லை.

அதுபோதாதென்று தமிழில் நாற்பது அடிகளில் செய்யுள்களையும் உரைடை, துணைப்பாடப் பகுதிகளையும் வேண்டாம் என்று வெட்டித் தள்ளியுள்ளது யாருக்குச் சுமை என்பது இன்றுவரை யாருக்கும் தெரியவில்லை.

தமிழைத்தவிர பிற பாடங்களில் இத்தகைய குளறுபடிகள் இல்லை. அவை கருத்துப் பாடங்களாதலால் சில பாடப்பகுதிகள் முன்னும் பின்னுமாக மாற்றப்பட்டுள்ளன. பாடத்திட்டக் குறைபாடுகளை நீக்க வேண்டியது முதன்மையான வேலை. எனவே கல்வித்துறை பல முனைகளிலுமிருந்து வரும் கருத்துகளுக்கும் மதிப்பளித்து ஆய்வு செய்து ஏற்பன ஏற்று, செம்மையான பாடத்திட்டத்தை உருவாக்க வேண்டும். அதன் அடிப்படையில் அமையும் பாடநூலே மிகச் சிறந்ததாக அமையும் என்பது உறுதி.

இம்மாதிரியான முன்திட்டமிடாத பணிகளைத் தவிர்த்து உயர்ந்த குறிக்கோளுடன் பாடத்திட்டத்தையும் செம்மையான பாடநூல்களையும் வழங்க வேண்டியது கல்வித்துறையின் தலையாய கடமை.

(கட்டுரையாளர்: தமிழ்ப் பெரியசாமி ஓய்வுபெற்ற தமிழாசிரியர்)
நன்றி : தினமணி

340 புள்ளிகள் உயர்வுடன் முடிந்தது சென்செக்ஸ்

சென்செக்ஸ் இன்று 340 புள்ளிகள் உயர்வுடன் முடிந்தது. இந்திய பங்குச்சந்தையில் இன்று முழுவதும் ஏறுமுகம் காணப் பட்டது. காலையில் வர்த்தக நேரம் தொடங்கிய போது, மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 107.95 புள்ளிகள் உயர்ந்து 16268.23 புள்ளிகளாக தொடங்கியது. தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் 31.95 புள்ளிகள் உயர்ந்து 4828.10 புள்ளிகளோடு தொடங்கியது. பொருளாதார வளர்ச்சிக்கு வழி காணும் நிதி ஊக்குவிப்பு தொடரும் என்ற பிரதமர் மன்மோகன்சிங் உரை காரணமாக இன்றைய பங்குச்சந்தையில் ஏறுமுகம் காணப்பட்டதாக நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். காலையில் பங்குச்சந்தை தொடங்கிய போது, அதிகமாக ரிலையன்ஸ் இன்டஸ்டிரி 1.61 சதவீதமும், இன்போசிஸ் டெக்னாலஜி 0.46 சதவீதமும், டாடா கன்சல்டன்சி 0.28 சதவீதமும் உயர்ந்தன.
இந்திய பங்குச் சந்தை வர்த்தக நேர முடிவில், மும்பை பங்குச் சந்தை குறியீட்டு‌ எண் சென்செக்ஸ் 340.44 புள்ளிகள் உயர்ந்து 16498.72 புள்ளிகளோடு நிலைபெற்றது. தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 102.25 4898.40 புள்ளி‌களோடு நிலைப்பெற்றது.
நன்றி : தினமலர்


இழப்புக்கு ஈடு!

தமிழர்கள் பெருமையாக சொல்லிக் கொள்வதற்கும், தமிழர்களின் நிர்வாகத் திறமைக்குச் சான்றாக வெளிமாநிலத்தவர் பாராட்டுவதற்கும் ஒரு துறை உண்டென்றால் அது தமிழ்நாட்டின் அரசு போக்குவரத்துத்துறைதான்.

ஆனால் அந்தத் துறையின் இன்னொரு முகமோ, மனிதாபிமானமே இல்லாமல் கொடூரமாக இருப்பதை அறியும்போது பதறித் துடிக்காத நல்ல உள்ளங்களே இருக்க முடியாது. ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகளும், முதல்வர்களுக்கு நெருக்கமான அமைச்சர்களும் அடுத்தடுத்து பதவியில் இருந்தும் இத்துறையில் இப்படி ஒரு அவலமா என்று அரற்றாமல் இருக்க முடியாது. அந்த அவலத்தை வெளிக்கொண்டு வந்திருக்கிறார் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.கே. கார்வேந்தன்.

சாலை விபத்தில் அரசு பஸ்களால் உயிரிழந்தவர்கள், காயம் அடைந்தவர்கள் எண்ணிக்கையும் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு அரசு போக்குவரத்துக் கழகங்கள் அளித்த தொகைகளையும் அளிக்க வேண்டிய இழப்பீட்டுத் தொகையையும் கேட்டு, தகவல் அறியும் சட்டப்படி அவர் மனுச் செய்திருக்கிறார். அவருக்குக் கிடைத்திருக்கும் பதில் அவரை மட்டும் அல்ல நம்மையுமே அதிர்ச்சியில் உறையவைக்கின்றன.

"தமிழ்நாட்டில் உள்ள அரசு போக்குவரத்துக் கழகங்கள் அனைத்தும் விபத்துகளில் இறந்தவர்களின் குடும்பங்கள் மற்றும் காயம் அடைந்தவர்களுக்குத் தர வேண்டிய இழப்பீட்டுத் தொகை மொத்தம் ரூ.323.96 கோடி. 11,233 பேர் இந்தத் தொகை பெற காத்துக் கொண்டிருக்கிறார்கள். இவர்களில் 28 ஆண்டுகளாகியும் நயா பைசா கூடப் பெற முடியாமல் தவித்துக்கொண்டிருப்பவர்களும் உண்டு.

"சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு நடந்து, தீர்ப்பு கூறப்பட்ட பிறகும் ரூ.18.61 கோடி தொகை வழங்கப்படவே இல்லை; சாலை விபத்து வழக்குகளை விசாரிக்கும் நடுவர் மன்றங்களில் வழங்கப்பட்ட தீர்ப்புகளின் அடிப்படையில் தரப்பட வேண்டிய ரூ.305.14 கோடியும் தரப்படவே இல்லை.

தீர்ப்பு கூறிய பிறகும் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் அளிப்பதில் அரசு போக்குவரத்துக் கழகங்கள் காட்டும் மெத்தனத்தைப் பொறுக்க முடியாமல், பயணிகளுடன் சென்று கொண்டிருக்கும் அரசு பஸ்களை நடுவழியில் நிறுத்தி ஜப்தி செய்ய நீதிமன்றங்கள் உத்தரவிடும் சம்பவங்களும் பத்திரிகைகளில் புகைப்படங்களுடன் அடிக்கடி பிரசுரமாகிறது.

போக்குவரத்துத்துறை செயலரிடம் இந்த நிலுவை குறித்து கேட்டபோது, ""எவ்வளவு சீக்கிரம் பைசல் செய்ய முடியுமோ அவ்வளவு சீக்கிரத்தில் பைசல் செய்யவே பார்க்கிறோம்'' என்று கூறியிருக்கிறார்.

"ஸ்டேண்டிங்' என்ற பெயரில் பயணிகளை நிற்க வைத்துக்கொண்டு போகக்கூடாது, அதிக வேகம் செல்லக்கூடாது, போக்குவரத்து விதிகளை மீறக்கூடாது, நல்ல நிலையில் இல்லாத பஸ்களை ஓட்டக்கூடாது என்றெல்லாம் தனியார்துறையில் போக்குவரத்து இருந்தபோது தமிழ்நாட்டில் கட்டுப்பாட்டுடன் கண்காணித்தார்கள். அப்போதெல்லாம் இந்த அளவுக்கு விபத்துகளும் நடக்கவில்லை. அனுபவம் உள்ள டிரைவர்கள் பொறுப்போடு வண்டிகளை ஓட்டினார்கள்.

இப்போது அரசு பஸ்களின் பராமரிப்பு சொல்லும் தரம் அன்று. அதற்குத் தொழிலாளர்களைவிட நிர்வாகமே முக்கிய காரணம். அரசு பஸ் டிரைவர்களின் அனுபவம், பயிற்சி எல்லாம் திருப்திகரமாக இல்லை. இளம் டிரைவர்களைக் குறிப்பிட்ட நேரத்துக்கு மேல் நெரிசலான நேரங்களிலும் மோசமான பாதைகளிலும் ஓட்டச் சொல்வதும் அதிகரித்து வருகிறது. எனவே விபத்து இல்லாமல் பஸ் ஓட்டும் டிரைவர்கள் எண்ணிக்கை குறைந்துகொண்டே வருகிறது.

தனியார் துறையில் பஸ்கள் இருந்தபோது அவற்றை அவர்கள் நன்கு பராமரித்தார்கள். அந்த பஸ்களை அதிகாரிகளும் அதிக அக்கறையோடு அடிக்கடி சோதித்து நல்ல நிலைமையில் ஓட்டவைத்தனர். அரசு பஸ்கள் அடிக்கடி பழுதாகி வழியில் நின்றாலும், கரும்புகையைக் கக்கிக் கொண்டு, தெருவே அலறும் அளவுக்கு ஓசை எழுப்பிச் சென்றாலும் அதைத் தடுக்கவோ, கேட்கவோ பிற துறை அதிகாரிகளுக்கு அதிகாரமே இல்லை என்ற மனோபாவமே நிலவுகிறது. வெள்ளைக் கோட்டைத் தாண்டக்கூடாது, மஞ்சள் சிக்னல் இருந்தால் போகக்கூடாது என்ற சாதாரண விதியைக் கூட அப்பட்டமாக மீறுவதே அதிகமாக அரசு பஸ்கள்தான் என்பது அனைவரும் அறிந்த உண்மை.

இன்சூரன்ஸ் செய்யாமல் தனியார் யாரும் எந்த வாகனத்தையும் தெருவில் ஓட்ட முடியாது. ஆனால் அரசு பஸ் போக்குவரத்துக் கழகங்கள் அனைத்துமே தங்களுடைய வாகனங்களை இன்சூர் செய்வதில்லை. கேட்டால், விபத்து நடந்தால் நாங்கள் உடனே இழப்பீட்டுத் தொகையை வழங்கிவிடுவோம், அதற்காக கோடிக்கணக்கான ரூபாயை இன்சூரன்ஸ் பிரிமீயமாக வீணாக்க விரும்பவில்லை என்று பதில் சொன்னார்கள். இவர்கள் நஷ்ட ஈடு வழங்கிய லட்சணத்தை கார்வேந்தன் அம்பலப்படுத்திவிட்டார். இப்போதுதான் மீண்டும் இன்சூர் செய்ய முன்வந்திருக்கிறார்கள்.

அரசு பஸ்களால் ஏற்பட்ட விபத்துகளில் பாதிக்கப்பட்ட அனைத்துக் குடும்பங்களுக்கும் போர்க்கால அடிப்படையில் முழுத் தொகையையும் வட்டியுடன் செலுத்த முதல்வர் கருணாநிதி உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும். இத்தனை ஆண்டுகள் தாமதப்படுத்தியதே கொடுஞ்செயல் என்பதை அதிகாரிகளுக்கு அவர் உணர்த்த வேண்டும். அதுவே அவர்களுடைய மனப்புண்களை ஆற்றும் மருந்து. அத்துடன் பாதிக்கப்பட்ட குடும்பத்தைச் சேர்ந்த வாரிசுகளுக்கு அரசு போக்குவரத்துத்துறையிலேயே வேலையும் தர வேண்டும். அப்போதுதான் நஷ்டஈடு முழுமையானதாக இருக்கும்.
நன்றி : தினமணி

ஆன்லைன் சாப்ட்வேர் சேவையை அறிமுகப்படுத்தியது மைக்ரோசாப்ட்

ஆன்லைன் சாப்ட்வேர் சேவையை மைக்ரோசாப்ட் அறிமுகப் படுத்தி உள்ளது. சாப்ட்வேர் துறையில் முன்னணியில் இருந்து வரும் நிறுவனம் மைக்ரோசாப்ட், தற்போது இந்தியாவில் ஆன்லைன் சாப்ட்வேர் சேவையை அறிமுகப் படுத்தி உள்ளது. இதற்கு மாத கட்டணம் ரூ. 100 முதல் ஆரம்பமாகிறது. இந்த சேவையை அதற்குரிய சாப்ட்வேரை கணினியில் ‌டவுன்லோடு செய்யாமலேயே, மைக்ரோசாப்ட் இணையத்தளத்தின் உதவியுடன் பெற்று கொள்ளலாம். இதன் மூலம் தகவல் தொழில்நுட்ப செலவில் 10 முதல் 50 சதவீதம் வரை சேமிக்கலாம். ஒவ்வொரு சேவைக்கும், அதன் சேவைக்கேற்ப குறைந்த பட்ச கட்டணம் வசூலிக்கப் படுகிறது. தனி நபர்கள், சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் வசதிக்காக இந்த சேவை வழங்கப் படுகிறது. இமெயில் பரிமாற்றம், ஆபிஸ் ஷேர் பாயின்ட் உள்ளிட்ட பல்வேறு சேவைகள் ஆன்லைனில் வழங்க இந்த சேவை அறிமுகப் படுத்தப் பட்டுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
நன்றி : தினமலர்


எந்த சேவையும் கிடைக்காத பொதுச்சேவை மையங்கள்: பாதிக்கப்பட்ட முகவர்கள் கோர்ட்டுக்கு செல்ல முடிவு

'நீங்கள் இருக்கும் இடத்திற்கே அனைத்து சேவைகளும் கிடைக்கும்' என்ற நம்பமுடியாத அறிவிப்புகளோடு, ஊராட்சி பகுதிகளில் திறக்கப்பட்ட பொதுச்சேவை மையங்களில், ஓராண்டாகியும் பொதுமக்களுக்கு எந்த சேவையும் கிடைக்கவில்லை. இதனால், இரண்டு லட்சம் ரூபாய் வரை முதலீடு செய்து முகவர்களானவர்கள், நீதி கேட்டு, கோர்ட்டுக்கு செல்ல முடிவு செய்துள்ளனர். கிராமப் பகுதிகளில் வசிக்கும் மக்கள், இனி எந்த தேவைக்காகவும் நகர பகுதி அலுவலகங்களுக்கோ, வங்கிகளுக்கோ சென்று அலைய வேண்டிய அவசியமில்லை. கட்டணம் செலுத்துவது முதல், சான்றிதழ் பெறுவது வரை, அத்தனை சேவைகளும் உங்களைத் தேடி கிடைக்கும் என்ற அறிவிப்புகளோடு, மும்பையைத் தலைமையிடமாக கொண்ட, '3 ஐ இன்போடெக்' நிறுவனம், மார்ச் 2008ல், அரசுடன் ஒப்பந்தம் போட்டு, பொதுச்சேவை மையங்களை நாடு முழுவதும் துவக்கியது. உத்தரபிரதேசம், குஜராத், கோவா, மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம், ஆந்திரா, தமிழகம், அரியானா, டில்லி மாநிலங்களில், இந்நிறுவனம் துவக்கப்பட்டு இயங்கி வருகிறது. தமிழகத்தில் 2,000த்திற்கும் மேற்பட்ட மையங்கள் துவக்கப்பட்டன.

கடலூர் மாவட்டத்தில் 274 மையங்கள் துவக்க முடிவு செய்யப்பட்டு, 135 மையங்கள், கடந்த ஒரு ஆண்டாக இயங்கி வருகிறது. இன்சூரன்ஸ் பிரிமியம், தொலைபேசி, மொபைல் கட்டணம், ரீ சார்ஜ், மின் கட்டணம் செலுத்துதல், ரயில், பஸ், விமான பயணச்சீட்டு முன்பதிவு, அரசின் திட்டங்கள், ஆணைகள் பிரின்ட் அவுட், தேர்வு முடிவுகள். வங்கிச் சேவைகள், கம்ப்யூட்டர் கல்வி, விவசாயிகளுக்கு சிட்டா வழங்குதல், பாஸ்போர்ட் விண்ணப்பிப்பது, ஓட்டுனர் பழகுனர் உரிமம் பெறுதல், ஜோதிடம் பார்த்தல் உள்ளிட்ட, பல சேவைகள் கிடைப்பதாக அறிவிப்பு செய்யப்பட்டது. 'பொதுச் சேவை மையங்களில், வசூல் செய்யப்படும் கட்டணத் தொகைக்கு ஏற்பட்ட கமிஷன் கொடுக்கப்படும்' என கூறப்பட்டதால், போட்டி, போட்டு பலர் முகவர்களாக இணைந்தனர். ஒரு லட்சத்து 25 ஆயிரம் முன்பணம், மையத்திற்கான இடம், அதற்கு முன்பணம் என குறைந்தது, இரண்டு லட்சம் ரூபாய் வரை செலவு செய்து, முகவர்களாக சேர்ந்தனர். முகவர்களானவர்களுக்கு நிறுவனம் சார்பில், விளம்பரப் பலகை, மையத்திற்கு கம்ப்யூட்டர், நெட் வசதி, பிரின்டர், ஜெராக்ஸ், ஸ்கேனர் உள்ள ஒரு இயந்திரம், லாக்கர், டேபிள், சேர், மின்விசிறி போன்ற வசதிகள் செய்து கொடுக்கப்பட்டது. மாவட்ட அதிகாரிகள், அரசியல் தலைவர்களை கொண்டு மையங்கள் திறக்கப்பட்டன. மிகுந்த எதிர்பார்ப்புகளோடு திறக்கப்பட்ட பொதுச்சேவை மையங்களில், இதுவரை அரசின் முக்கிய சேவைகள், எதுவும் வழங்கவில்லை. தற்போது, மொபைல் ரீ சார்ஜ் செய்யும் பணிகள் மட்டுமே நடந்து வருகிறது. தனியார் இன்சூரன்ஸ் திட்டத்தில், உறுப்பினர்கள் சேர்க்கப்படுகிறது.


வங்கிச் சேவையும் இல்லை. ஒரு சில மையங்களில் மட்டும், ஸ்டேட் பாங்க் கணக்கு துவக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இரண்டு லட்சம் ரூபாய் வரை செலவு செய்து முகவர்களானவர்கள், மையம் இயங்கும் இடத்திற்கு வாடகை, மின் கட்டணம், வேலை பார்ப்பவர்களுக்கு சம்பளம், வாங்கிய பணத்திற்கு வட்டி என, மாதம் 5,000 முதல் 10,000 ரூபாய் வரை செலவாகிறது. ரீசார்ஜ் செய்வதன் மூலம், மாதம் 200 முதல் 300 வரை, வருமானம் கிடைப்பதாக கூறுகின்றனர். வருமானமின்றி பாதிக்கப்பட்டு வரும் முகவர்கள், நிறுவனத்தை தொடர்பு கொண்டால்,'விரைவில் அனைத்து சேவைகளும் கிடைத்துவிடும்' என்ற பதிலை, ஒரு ஆண்டாக கூறி வருவதாக புலம்புகின்றனர். பொறுத்துப் பார்த்த முகவர்கள் பலர், 'முன்பணத்தில் கொடுப்பதை கொடுங்கள்' என வாங்கி விலகியுள்ளனர்; பல மையங்கள் திறக்கப்படாமல், பூட்டியே கிடக்கிறது. இதனால், பாதிக்கப்பட்ட கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த முகவர்கள், கடந்த இரண்டு நாட்களுக்கு முன், ஸ்ரீமுஷ்ணத்தில் கூடி ஆலோசனை நடத்தினர். ஒரு ஆண்டாக ஏற்பட்டுள்ள இழப்புக்கு, '3 ஐ இன்போடெக்' நிறுவனம் நஷ்ட ஈடு வழங்கக் கேட்பது, அரசு பெயரைச் சொல்லி மோசடி செய்துள்ள நிறுவனத்தின் மீது, சென்னை பொருளாதார குற்றவியல் டி.ஜி.பி.,யிடம் மனு கொடுப்பது, ஐகோர்ட்டில் வழக்கு தொடர்வது என முடிவு செய்துள்ளனர். 'ஐ- சர்வ் எங்கே இருக்கோ, அங்கு சந்தோஷமும், சவுகரியமும் இருக்கும்' என்ற வாசகம் மட்டும் தான், நல்லா இருக்கே தவிர, மையங்களை நடத்தி வரும் முகவர்கள் தான் சந்தோஷமாக இல்லை.
நன்றி : தினமலர்