Wednesday, December 23, 2009

தொல்பொருள் தொலைநோக்கு!

சென்னை அண்ணா சாலையில் உள்ள கார்டைல் பில்டிங் ​(இப்போது பாரத் இன்சூரன்ஸ் பில்டிங்)​ ​ என்ற பழைமையான கட்டடத்தை இடிக்கக் கூடாது என்று ""பண்பாடு கலாசாரம் கட்டடங்கள் பாதுகாப்புக்கான இந்திய தேசிய அறநிலை ​(இன்டாக்)'' தொடர்ந்த வழக்கில்,​​ மூன்று மாதத்திற்குள் பண்பாட்டுச் சின்னங்கள் பாதுகாப்பு குழு ஒன்றை அமைக்குமாறு தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.​ இதுவரையிலும் தமிழ்நாட்டில் பண்பாட்டுச் சின்னப் ​ பாதுகாப்புக் ​ குழு இல்லை என்பதே வியப்பான விஷயம்.

நாட்டில் முக்கியமான பண்பாட்டுச் சின்னங்கள் இந்தியத் தொல்பொருள் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளன.​ அதற்கு அடுத்த நிலையில் உள்ள சின்னங்கள் மாநில அரசின் தொல்பொருள் துறை பராமரிப்பில் உள்ளன.​ இவை நீங்கலாக,​​ தனியாரிடத்திலும் அரசின் சொத்தாகவும் நிறைய பண்பாட்டுச் சின்னங்கள் பட்டியலில் இடம்பெறாததால் அவரவர் பராமரிப்பில் நீடித்து வருகின்றன.​ ​ இதற்கு உதாரணமாக நிறைய சொல்ல முடியும்.​ சென்னையில் அண்ணா சாலையில் உள்ள மன்றோ சிலை போன்ற அக்காலத்துச் சிலைகள்,​​ சென்னை மாநகராட்சி இயங்கும் ரிப்பன் பில்டிங்,​​ சென்னை மாநிலக் கல்லூரியின் செனட் ஹால்,​​ சென்ட்ரல் ரயில்நிலையம் மற்றும் எழும்பூர் ரயில்நிலையக் கட்டடங்கள்,​​ பல ஊர்களிலும் காணப்படும் மணிக்கூண்டுகள்,​​ டவுன்ஹால் கட்டடங்கள் என பலவற்றைப் பட்டியலிட்டுக் கொண்டே போகலாம்.

சென்னை ஸ்பென்சரும்,​​ மூர் மார்க்கெட்டும்கூட அற்புதமான பண்பாட்டுச் சின்னங்கள்தான்.​ ஆனால் அந்தக் கட்டடங்கள் இரண்டுமே-​ மாய யதார்த்த கதைகளில் வரும் குணச்சித்திரங்கள் போல-​ ஏதோ ஓர் ஏக்கத்தில் யாருமே அறியாத காரணங்களுக்காக தங்களைத் தாங்களே தீயிட்டுத் தற்கொலை செய்துகொண்டன.​ ​(அதை வேறு எப்படிச் சொல்வது?)

தனியார் உடைமை என்றாலும் அரசின் சொத்து என்றாலும் சுமார் நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த சிலைகளை வெளிநாட்டினருக்கு விற்க முடியாது.​ ஏனென்றால்,​​ அவை பழமைப்பொருள் சட்ட திட்டங்களுக்குள் வந்து விடுவதால்,​​ சொந்த உடைமை என்று உரிமை கோரலாமே தவிர,​​ அதை வேறு யாருக்கும் விற்க முடியாது.​ இதேபோன்று நூறு ஆண்டு பழமை வாய்ந்த கட்டடங்களை இடிக்கும் முன்பாக தொல்பொருள் துறையின் தடையில்லாச் சான்று பெற வேண்டும்.​ ​ இத்தகைய கட்டடங்கள் தனித்தன்மை வாய்ந்தவை அல்ல,​​ அதேபோன்ற,​​ அதைவிடவும் சிறப்பான கட்டடங்கள் நாட்டில் இருக்கின்றன என்று தொல்பொருள் துறை கருதினால் மட்டுமே,​​ அந்தக் கட்டடம் இடிக்கப்படுவதில் ஆட்சேபணை இல்லை என்று சான்று தரப்படுகிறது என தொல்பொருள் துறையினர் கூறினாலும்,​​ நடைமுறையில் இது ​ இல்லை.​ ​

ஒரு கட்டடத்தின் அமைப்பும்,​​ கலையுணர்வும்,​​ தொழில்நுட்பமும் காலத்தைப் பிரதிபலிப்பவை.​ ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒரு பாணி ​(ஸ்டைல்)​ அல்லது மோஸ்தர் இருக்கிறது.​ அதைக் கொண்டு அது எந்த ஆண்டுக்குரியது என்பதை எளிதில் காணவும்,​​ அதன் கலை நுட்பத்தை ரசிக்கவும் முடியும்.​ ஆனால்,​​ அந்த கட்டடங்களை இடித்துவிட்டு,​​ நவீன காலத்துக்கேற்ப புதிய பல அடுக்கு மாடிக் கட்டடத்தை உருவாக்கி,​​ நிறைய லாபம் சம்பாதிக்கலாம் என்பதே பிரதான நோக்கமாக மாறும்போது,​​ பண்பாட்டுச் சின்னம் என்ற உணர்வே இல்லாமல் போகிறது.​ பழைய கட்டடங்கள் நகரின் மையப்பகுதியில் இடத்தை அடைத்துக்கொண்டு நிற்பதாக நினைக்கிறார்கள்.​ வாதிடுகிறார்கள்.​ இடித்துவிடத் துடிக்கிறார்கள்.​ மற்ற நாடுகளிலோ பண்பாட்டுச் சின்னங்களைப் பாதுகாப்பதில் அதிக அக்கறை எடுத்துக் கொள்கிறார்கள்.​ அதற்காக நிதி ஒதுக்குகிறார்கள்.

தொல்பொருள் துறையின் கட்டுப்பாட்டில் இருக்கும் பண்பாட்டுச் சின்னங்களைக்கூட நம்மைப்போல அலட்சியமாகப் பராமரிப்போர் வேறு யாரும் இருக்க முடியாது.​ தொல்பொருள் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள தஞ்சை பெரியகோயில்,​​ கங்கைகொண்ட சோழபுரம்,​​ தாராசுரம் போன்ற கோயில்கள் வேண்டுமானால் அதிக அக்கறையுடன் நன்கு பராமரிக்கப்படலாம்.​ அரியலூர் மாவட்டத்தில் உள்ள கல்மரம் எந்த அளவுக்குப் பாதுகாக்கப்படுகிறது?​ அல்லது,​​ திருச்சி நகரின் நடுவே இருக்கும் மெயின்கார்டு கேட் எந்த அளவுக்குப் பராமரிக்கப்படுகிறது?

ஒரு பண்பாட்டுச் சின்னத்தைச் சுற்றிலும் இருக்கும் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட வேண்டும்.​ 200 மீட்டர் தொலைவுக்குத் தேவையில்லாமல் ஆக்கிரமிப்புகள் இருக்கக்கூடாது என்று சட்டம் சொன்னாலும்,​​ மெயின் கார்டு கேட் பகுதியில் உள்ள கடைகளை அகற்றவே முடியவில்லை.​ இன்றுவரையிலும்.​ அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் இத்தகைய நினைவுச் சின்னங்களுக்கே இந்த நிலைமை என்றால் பட்டியலில் இடம்பெறாத பண்பாட்டு நினைவுச் சின்னங்கள் குறித்து சொல்லவே வேண்டியதில்லை.​ ​

அண்ணா,​​ பெரியார்,​​ ராஜாஜி போன்ற தலைவர்கள் மற்றும் மகாகவி பாரதியார்,​​ வஉசி போன்றோர் வாழ்ந்த இல்லங்களும்,​​ சிறையில் வஉசி இழுத்த செக்கும்,​​ ​ காந்தியின் கடிதங்களும் அவர்களின் ஆளுமையை மீட்டெடுக்க உதவுவதைப் போலவே,​​ கட்டடங்களும் சிலைகளும் சிற்பங்களும் அவை உருவான காலத்தையும் கலையையும் மீட்டெடுக்க உதவுகின்றன.​ ​

தமிழக அரசு அமைக்கவுள்ள பண்பாட்டுச் சின்னங்கள் பாதுகாப்புக் குழு,​​ மத்திய மாநில அரசின் கட்டுப்பாட்டில் வராத,​​ ஆனால் பழமை மற்றும் பண்பாட்டுச் சின்னமாக விளங்கும் கட்டடங்கள்,​​ ஓவியங்கள்,​​ சிலைகள்,​​ மரச்சிற்பங்கள்,​​ தேர்கள் போன்ற எவையெல்லாம் இருக்கின்றன என்பதைப் பட்டியலிடவும்,​​ இவற்றை இடித்தல் அல்லது விற்பனை செய்தல் போன்றவை பண்பாட்டுச் சின்னங்கள் பாதுகாப்புக் குழுவின் தடையில்லாச் சான்று பெறாமல் நடத்த முடியாது என்ற நிலைமையும் தமிழ்நாட்டில் ஏற்பட வேண்டும்.

இதுபோன்ற குழுக்களில் பண்பாட்டுச் சின்னங்களின் பாதுகாப்பைப் பற்றிய அக்கறையே இல்லாத அதிகாரிகளும்,​​ ஆளும் கட்சிக்கு வேண்டிய அல்லது சார்ந்தவர்களும் மட்டுமே இடம்பெறுவார்களேயானால்,​​ அப்படி ஒரு குழு அமைத்தும் பயனில்லை.​ தகுதியானவர்களைத் தரம் கண்டு தேர்ந்தெடுத்து குழு அமைக்கப்பட்டால் மட்டுமே பண்பாட்டுச் சின்னப் பாதுகாப்புக் குழுவுக்கு அர்த்தமிருக்கும்!
நன்றி : தினமணி

சூழல் மாறும்; செயல்படுவோம்!

இனவிடுதலைக்காகவும் அடக்குமுறைக்கும் எதிராகப் போராடியவர்கள் எல்லோரும் அவர்களது வாழ்நாளிலேயே வெற்றி பெற்றுவிடவில்லை. உண்மையான போராளிகள் அதை எதிர்பார்க்கவும் முடியாது. அதுவும் ஆயுதப் போராட்டம் என்றால், வாழும் காலத்தில் இலக்கை எட்டும் வாய்ப்பு மிகவும் அரிது. அப்படிப்பட்டதொரு நிலைதான் ஈழத்துக்காகப் போராடியவர்களுக்கு ஏற்பட்டிருக்கிறது. இது போராட்டம் முடிந்து போனதற்கான அடையாளம் இல்லை. சமகால ஆயுதக் குழுக்களின் எழுச்சியும் வீழ்ச்சியும் ஈழ விடுதலைப் போராட்டத்தின் ஓர் அத்தியாயம் அவ்வளவுதான்.

÷விடுதலைப் புலிகள் யுத்த ரீதியாக ஒடுக்கப்பட்டு விட்டதால், ஏற்பட்டிருக்கும் வெற்றிடத்தைக் காட்டி, போராட்டம் முடிவுக்கு வந்துவிட்டதாக இலங்கை அரசு அறிவித்திருக்கிறது. இந்த வெற்றிடம் நிரந்தரமானதல்ல என்பதைத் தமிழர்கள் அறிவார்கள். ஏன் இலங்கை அரசுக்கே கூட அந்த அச்ச உணர்வு உண்டு. ஆனால் எந்த வகையான போராட்டம் இனி தொடரப்போகிறது? போராட்டத்துக்கு தலைமை ஏற்கப்போவது யார்? என்பன போன்ற கேள்விகளும் எதிர்பார்ப்புகளும் தமிழ் பேசும் அனைவரிடமும் இருக்கிறது.

÷எப்படியும் விடிவு ஏற்படும் என்கிற நம்பிக்கையைப் பற்றிக் கொண்டு ஓர் இனம் காத்திருக்கிறது. ஈழப்போராட்டத்தை அடுத்த கட்டத்துக்கு நகர்த்த வேண்டுமானால், இந்த நம்பிக்கையை வலுப்படுத்தியாக வேண்டும். குறைந்தபட்சம் இந்த நம்பிக்கையைத் தகர்க்காமலிருக்கலாம்.

÷விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரின் உச்ச நாள்களில் நடந்த மர்மங்களே இன்று வரைக்கும் விலகாத நிலையில், நாள்தோறும் புதிய கதைகள் புனையப்படுகின்றன. இவற்றில் பெரும்பாலான கதைகள் தார்மிக ரீதியாகத் தமிழர்களுக்கு ஆதரவானவை போன்று தோன்றினாலும், இன விடுதலைக்கான நம்பிக்கையை அசைத்துப் பார்க்கும் பணியைத்தான் அவை செய்கின்றன. தமிழர்களிடையே அச்சத்தையும் அவநம்பிக்கையையும் ஏற்படுத்துகின்றன.

÷போராட்டக்காரர்கள் பிரிந்து கிடப்பதாகவும், சுயநலமாகச் செயல்பட்டு வருவதாகவும் தகவல்கள் கசியவிடப்படுகின்றன. இந்தத் தகவல்கள் ஊடகங்களால் ஊதிப் பெரிதாக்கப்படுகின்றன. போராட்டக்காரர்கள் என்று கூறி வருபவர்களை யாரும் நம்ப வேண்டாம் அவர்களுக்கு நிதியுதவி செய்ய வேண்டாம் என்பன போன்ற அறிவுரைகளும் நடமாடுகின்றன. சில ஊடகங்கள் ஒரு தரப்பை நல்லவர்களாகவும், மற்றவர்களை மோசக்காரர்களாகவும் காட்டுகின்றன.

÷ஒரு கட்டத்தில் இலங்கை ராணுவத்துக்கு எதிரான ஆயுதப் போராட்டத்தில் தீவிரமாக ஈடுபட்டு வந்தவர்கள், இன்று துரோகிகளாகவும், இலங்கை அரசின் கைப்பாவைகளாகவும் மாறி இருக்கிறார்கள். ராணுவத்துக்குத் தலைமையேற்று பயங்கரமான சித்திரவதைக் கொலைகளை அரங்கேற்றியவர்கள் ஆபத்பாந்தவர்களாக உருமாற்றம் பெற்றிருக்கிறார்கள். மக்களைக் குழப்புவதற்காக நடத்தப்படும் இந்த ராஜதந்திர விளையாட்டில், தமிழ் அரசியல் கட்சிகளும் சிலரின் பேனாக்களும்கூட சிக்கிக் கொண்டிருக்கின்றன.

÷இந்தக் குழப்பமான சூழலைக் கண்டு தமிழர்கள் யாரும் நம்பிக்கை இழந்துவிட வேண்டிய அவசியமேயில்லை. உலகின் எல்லா வகையான விடுதலைப் போராட்டங்களிலும் வெவ்வேறு கட்டங்களில் இதுபோன்ற குழப்பமான நிலை ஏற்பட்டிருக்கத்தான் செய்கிறது. இந்திய விடுதலைப் போராட்டத்துக்குக்கூட இது பொருந்தும். ஈழத் தமிழர் போராட்டம் அடுத்த நிலைக்கு உருமாற வேண்டிய நேரம் இது. அரசியல் ரீதியாகவோ வேறு வழியிலோ ஒரு சீரிய தலைமையின்கீழ் தமிழர்கள் ஒன்றுபடும்வரை இந்தக் குழப்பம் நீடிக்கத்தான் செய்யும்.

÷ஆனால், ஈழத்திலும் அது தொடர்பாக உலகமெங்கும் உள்ள போராட்டக்காரர்கள் மத்தியிலும் நடக்கும் ஒவ்வொரு நிகழ்வையும் சிறுசிறு கருத்து மோதல்களையும் அலசி ஆராய்ந்து, அவசரப்பட்டு ஒவ்வொருவரையும் துரோகிகளாகவும் சண்டைக்காரர்களாகவும் முத்திரை குத்துவது, புதிய தலைமை உருவாவதைத் தாமதப்படுத்துவதற்குத்தான் உதவும். இந்த விஷயத்தில் புலனாய்வு செய்வது இப்போதைக்கு அவசியமே இல்லை. ஊகங்களை வெளியிடுவதையும், கண்மூடித்தனமாகக் குற்றம்சாட்டுவதையும், தவிர்த்தாலே, போராட்டம் அடுத்தகட்டத்துக்கு விரைவாக முன்னேறும்.

÷அதிபர் தேர்தல் சமீபித்திருக்கும் இந்த வேளையில், பொன்சேகாவுக்கு சில தமிழ்க் கட்சிகள் ஆதரவு தெரிவித்திருக்கின்றன. சில கட்சிகள் தனித்து தேர்தலைச் சந்திக்கின்றன. வேறு சில கட்சிகள் தேர்தலைப் புறக்கணிக்கின்றன. இதில் எது தவறு, எது சரியென்று கூறுவதற்கில்லை.

÷தமிழ்க் கட்சிகளின் நடவடிக்கைகளால் என்ன விளைவுகள் ஏற்படும் என்றும் இப்போது நமக்குத் தெரியாது. நல்லதும் நடக்கலாம், தீயதும் நடக்கலாம். இந்தச் சூழலில் தமிழ்க்கட்சிகளை தமிழர் ஆதரவு ஊடகங்களும் உலகெங்கும் வசிக்கும் போராட்டக்காரர்களும் விமர்சிப்பது, தமிழர்களுக்குள் பிளவைத்தான் ஏற்படுத்தும். ஒன்றுபடுவதைத் தாமதப்படுத்தும். எல்லோரும் தங்களது பொறுப்புணர்ந்து இதுபோன்ற விமர்சனங்களை இப்போது தவிர்க்கலாம்.

÷சொந்த மண்ணில் முள்கம்பி வேலிகளுக்குள் சிறை வைக்கப்பட்டிருக்கும் மக்களை, மறு குடியமர்த்தும் பணிகளை வலியுறுத்துவது ஒன்றே தமிழ் அரசியல்கட்சிகளும் போராட்டக்காரர்களாக அடையாளப்படுத்திக் கொள்வோரும் இப்போதைக்குச் செய்ய வேண்டிய முதல் பணியாக இருக்க வேண்டும். மற்ற வேலைகளைப் பிறகு பார்க்கலாம். சூழல் மாறும்.
கட்டுரையாளர் : எம்.மணிகண்டன்
நன்றி : தினமணி

புதிய வருமான வரி பூதம்: சம்பளத்தை தாண்டி பெறப்படும் எல்லாவற்றுக்கும் வரி; வாடகை முதல் குட்டீஸ் கல்விச் சலுகை வரை பிடிப்பு

மாதச் சம்பளம் வாங்குவோர் தலையில் இதுவரை இல்லாத அளவுக்கு புதிய வருமான வரி 'இடி' விழுந்துள்ளது. ஆம்! சம்பளத்தில் பெறும் வாடகைப்படி, கார், பைக் சலுகை போன்ற சலுகைகளுக்கும் வரி பிடித்தம் செய்ய அரசு உத்தரவிட்டுள்ளது. சம்பளத்தில், அடிப்படை சம் பளம் , அகவிலைப்படி மட்டும் அல்ல, உதிரிச் சலுகைகள் என்பது தகவல் தொழில்நுட்ப கம் பெனிகள் வருகைக்குப் பின் அதிகரித்தன. இம்மாதிரி சலுகைகள் தருவதற்கு வரிவிலக்கு இருந் தது. ஆனால், உடனடியாக இதன் மீதான நேரடி வரிவிதிப்பு அமலாக்கப்பட்டிருக்கிறது. அதுவும் அதிகபட்சம் சம்பளம் பெறுபவராக இருந்தால், சம்பளத்தில் 31 சதவீதம் வரை வரியாக கட்ட நேரிடும்.

இந்த புதிய வருமானவரி 'பூதம்' திடீரென இப்போது ஓசைப் படாமல் நுழைந்து விட்டது. கடந்த ஏப்ரல் முதல் தேதியில் இருந்தே முன்தேதியிட்டு வரி பிடித்தம் செய்ய, வருமான வரித் துறை உத்தரவிட்டு விட்டதால், ஒராண்டு முழுக்க போடப்படும் வரியை, வரும் மூன்றே மாதங்களில் பிடிக்க வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. கம்பெனிகளுக்கு இது தொடர்பாக வருமான வரித்துறை கடிதம் அனுப்பி விட் டது. மூன்று மாத சம்பளத்தொகையில் ஓராண்டு வரியை பிடித்து விடும் படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளன. இதனால், வரும் ஜனவரி ஒன்றாம் தேதி வாங்கும் சம்பளத்தில் இருந்தே, தனியார் கம்பெனி ஊழியர்கள் பலருக்கும் வரி பிடித்தம் செய்யப்பட்டு விடும்.
கடந்த பட்ஜெட்டை சமர்ப் பித்த நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி, ஒரு அதிரடி இன்ப அதிர்ச்சியை தந்தார். அதற்கு முன்பு நிதி அமைச்சராக இருந்த சிதம்பரம், 'உதிரி சலுகைகள் ஆதாய வரி' ( பிரிஞ்ச் பெனிபிட்டாக்ஸ்)என்று ஒரு வரியை போட்டிருந்தார். அதை பிரணாப் நீக்கினார். ஒருவர் பெறும் சம்பளத்தில் சேரும் இதர சலுகைகள் மீதான வரி. இதை பிரணாப் ரத்து செய்ததும், தனியார் நிறுவன ஊழியர் கள், அதிகாரிகள் பெரும் சந்தோஷப்பட்டனர். ஆனால், அது நிலைக்கவில்லை. இப்போது தான் அதன் உண்மையான சுயரூபம் தெரிந்துள்ளது. இது தொடர்பாக, வருமான வரித்துறை அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர். இதன் விளைவு என்ன தெரியுமா? மொத்த சம்பளத்தில் வாங்கும் சலுகைப் பணம் எல்லாவற்றுக்கும் வரி கட்ட வேண்டும் என்பது தான். தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கு தரப்படும் சில சலுகைகளை கம் பெனி ஏற்றுக்கொள்வதில்லை. தாங்கள் வரி கட்ட வேண்டும் என்பதால், அதில் இருந்து தப்பிக்க, ஊழியர்களிடமே வரி பிடித்தம் செய்கிறது. மாதச் சம்பளத்தில், டி.டி.எஸ்., பிடிக் கப்பட்டு விடுகிறது. ஆனால், வரி பிடித்தம் செய்ய வேண்டாம் என்று நினைத்து, தனியார் நிறுவனங்கள் தரும் இதர சலுகைகளுக்கு வரி பிடிப்பதில்லை. இனி அதற்கும் பிடிக்க வேண்டும் என்பது தான், வரி ஆணையத்தின் குறிக்கோள். அதை இப்போது நிறைவேற்றி உள்ளது. மத்திய நேரடி வரிகள் ஆணையம் (சி.டி.பி.டி.,) வெளியிட்டுள்ள அறிக்கையில், புதிய வரி விகிதங்கள் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது.

புதிய வரி விதிப்பின் சில அம்சங்கள்:

* கம்பெனி தரும் கார், அதை ஓட்ட நியமிக்கப்படும் டிரைவருக்கு தரும் சம்பளம் போன் றவை இதுவரை கம்பெனியே ஏற்று வந்தது; இனி இதற்கும் வரி உண்டு.

* சிறிய கார்கள் பயன்படுத்துவோரை விட, பெரிய கார்களை பயன்படுத்துவோருக்கு அதிக வரி பிடித்தம் செய்யப்படும்.

* வாடகைப்படியில் நகரங்களுக்கு ஏற்ப வரி பிடித்தம் செய்யப்படுகிறது. 7.5 சதவீதம் முதல் 15 சதவீதம் வரை சம்பளத்தில் கணக்கிட்டு அதற்கு வரி பிடிக்கப்படும்.

* கம்பெனி தரும் கிரெடிட் கார்டு சலுகை, கம்பெனி பங்குகளை ஊழியர்களுக்கு சலுகை விலையில் தரும் 'எஸாப்' சலுகைக்கும் கூட வரி உண்டு.

* குழந்தைகளுக்கு படிப்பு உட்பட கட்டண சலுகையை கம்பெனி தந்தால், அதற்கும் வரி உண்டு.

* விடுமுறை கால, சுற்றுலாச் செலவுகளை கம்பெனி ஏற்றாலும் அதற்கும் வரி பிடிக்கப் படும்.

* சென்னை உட்பட பெரிய நகரங்களில் வாடகைப்படி அதிகபட்சமாக 15சதவீத அடிப்படையில் தான் வரி வசூலிக்கப்படும்.

* கிளப்களில் உறுப்பினராக இருந்தாலும், அந்த கட்டணத் துக்கும் வரி பிடித்தம் உண்டு.

இந்த வரிப்பிடித்தம் பற்றி இப்போது தான் தெளிவுபடுத் தப்பட்டாலும், கடந்த ஏப்ரல் மாதம் முதல் அமலுக்கு வருவதாக அறிவித்து விட்டதால், இந்த மாதத்தில் இருந்து மார்ச் வரை மூன்று மாதங்களின் சம் பளத்தில், மற்ற எட்டு மாதங்களுக்கும் சேர்த்து வரி பிடிக்கப்படும்.அதேசமயம் கிராக்கிப்படி மற்றும் பிராவிடண்ட் பண்டுகளுக்கு கட்டப்படும் பணம் வரியில் இருந்து தப்பியது. ஏற்கனவே, எப்.பி.டி.,யில் வசூலிக்கப்பட்ட வரித்தொகையை விட, ஒருவர் இந்த புதிய வரி விதிப்பில் அதிகமாகவே செலுத்த வேண்டியிருக்கிறது. முன்பு சிதம்பரம் அமைச்சராக இருந்து அமல்படுத்தியதை விட, அதிக அளவு பிடித்தம் இந்த புது உத்தரவால் அமலாகிறது. கிட்டத்தட்ட 31 சதவீதம் வரை சம்பளத்தில் அதிகபட்சமாக இழக்க வேண்டியதிருக்கும் என்று கணக்கிடப்படுகிறது.
நன்றி : தினமலர்