Wednesday, December 23, 2009

தொல்பொருள் தொலைநோக்கு!

சென்னை அண்ணா சாலையில் உள்ள கார்டைல் பில்டிங் ​(இப்போது பாரத் இன்சூரன்ஸ் பில்டிங்)​ ​ என்ற பழைமையான கட்டடத்தை இடிக்கக் கூடாது என்று ""பண்பாடு கலாசாரம் கட்டடங்கள் பாதுகாப்புக்கான இந்திய தேசிய அறநிலை ​(இன்டாக்)'' தொடர்ந்த வழக்கில்,​​ மூன்று மாதத்திற்குள் பண்பாட்டுச் சின்னங்கள் பாதுகாப்பு குழு ஒன்றை அமைக்குமாறு தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.​ இதுவரையிலும் தமிழ்நாட்டில் பண்பாட்டுச் சின்னப் ​ பாதுகாப்புக் ​ குழு இல்லை என்பதே வியப்பான விஷயம்.

நாட்டில் முக்கியமான பண்பாட்டுச் சின்னங்கள் இந்தியத் தொல்பொருள் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளன.​ அதற்கு அடுத்த நிலையில் உள்ள சின்னங்கள் மாநில அரசின் தொல்பொருள் துறை பராமரிப்பில் உள்ளன.​ இவை நீங்கலாக,​​ தனியாரிடத்திலும் அரசின் சொத்தாகவும் நிறைய பண்பாட்டுச் சின்னங்கள் பட்டியலில் இடம்பெறாததால் அவரவர் பராமரிப்பில் நீடித்து வருகின்றன.​ ​ இதற்கு உதாரணமாக நிறைய சொல்ல முடியும்.​ சென்னையில் அண்ணா சாலையில் உள்ள மன்றோ சிலை போன்ற அக்காலத்துச் சிலைகள்,​​ சென்னை மாநகராட்சி இயங்கும் ரிப்பன் பில்டிங்,​​ சென்னை மாநிலக் கல்லூரியின் செனட் ஹால்,​​ சென்ட்ரல் ரயில்நிலையம் மற்றும் எழும்பூர் ரயில்நிலையக் கட்டடங்கள்,​​ பல ஊர்களிலும் காணப்படும் மணிக்கூண்டுகள்,​​ டவுன்ஹால் கட்டடங்கள் என பலவற்றைப் பட்டியலிட்டுக் கொண்டே போகலாம்.

சென்னை ஸ்பென்சரும்,​​ மூர் மார்க்கெட்டும்கூட அற்புதமான பண்பாட்டுச் சின்னங்கள்தான்.​ ஆனால் அந்தக் கட்டடங்கள் இரண்டுமே-​ மாய யதார்த்த கதைகளில் வரும் குணச்சித்திரங்கள் போல-​ ஏதோ ஓர் ஏக்கத்தில் யாருமே அறியாத காரணங்களுக்காக தங்களைத் தாங்களே தீயிட்டுத் தற்கொலை செய்துகொண்டன.​ ​(அதை வேறு எப்படிச் சொல்வது?)

தனியார் உடைமை என்றாலும் அரசின் சொத்து என்றாலும் சுமார் நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த சிலைகளை வெளிநாட்டினருக்கு விற்க முடியாது.​ ஏனென்றால்,​​ அவை பழமைப்பொருள் சட்ட திட்டங்களுக்குள் வந்து விடுவதால்,​​ சொந்த உடைமை என்று உரிமை கோரலாமே தவிர,​​ அதை வேறு யாருக்கும் விற்க முடியாது.​ இதேபோன்று நூறு ஆண்டு பழமை வாய்ந்த கட்டடங்களை இடிக்கும் முன்பாக தொல்பொருள் துறையின் தடையில்லாச் சான்று பெற வேண்டும்.​ ​ இத்தகைய கட்டடங்கள் தனித்தன்மை வாய்ந்தவை அல்ல,​​ அதேபோன்ற,​​ அதைவிடவும் சிறப்பான கட்டடங்கள் நாட்டில் இருக்கின்றன என்று தொல்பொருள் துறை கருதினால் மட்டுமே,​​ அந்தக் கட்டடம் இடிக்கப்படுவதில் ஆட்சேபணை இல்லை என்று சான்று தரப்படுகிறது என தொல்பொருள் துறையினர் கூறினாலும்,​​ நடைமுறையில் இது ​ இல்லை.​ ​

ஒரு கட்டடத்தின் அமைப்பும்,​​ கலையுணர்வும்,​​ தொழில்நுட்பமும் காலத்தைப் பிரதிபலிப்பவை.​ ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒரு பாணி ​(ஸ்டைல்)​ அல்லது மோஸ்தர் இருக்கிறது.​ அதைக் கொண்டு அது எந்த ஆண்டுக்குரியது என்பதை எளிதில் காணவும்,​​ அதன் கலை நுட்பத்தை ரசிக்கவும் முடியும்.​ ஆனால்,​​ அந்த கட்டடங்களை இடித்துவிட்டு,​​ நவீன காலத்துக்கேற்ப புதிய பல அடுக்கு மாடிக் கட்டடத்தை உருவாக்கி,​​ நிறைய லாபம் சம்பாதிக்கலாம் என்பதே பிரதான நோக்கமாக மாறும்போது,​​ பண்பாட்டுச் சின்னம் என்ற உணர்வே இல்லாமல் போகிறது.​ பழைய கட்டடங்கள் நகரின் மையப்பகுதியில் இடத்தை அடைத்துக்கொண்டு நிற்பதாக நினைக்கிறார்கள்.​ வாதிடுகிறார்கள்.​ இடித்துவிடத் துடிக்கிறார்கள்.​ மற்ற நாடுகளிலோ பண்பாட்டுச் சின்னங்களைப் பாதுகாப்பதில் அதிக அக்கறை எடுத்துக் கொள்கிறார்கள்.​ அதற்காக நிதி ஒதுக்குகிறார்கள்.

தொல்பொருள் துறையின் கட்டுப்பாட்டில் இருக்கும் பண்பாட்டுச் சின்னங்களைக்கூட நம்மைப்போல அலட்சியமாகப் பராமரிப்போர் வேறு யாரும் இருக்க முடியாது.​ தொல்பொருள் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள தஞ்சை பெரியகோயில்,​​ கங்கைகொண்ட சோழபுரம்,​​ தாராசுரம் போன்ற கோயில்கள் வேண்டுமானால் அதிக அக்கறையுடன் நன்கு பராமரிக்கப்படலாம்.​ அரியலூர் மாவட்டத்தில் உள்ள கல்மரம் எந்த அளவுக்குப் பாதுகாக்கப்படுகிறது?​ அல்லது,​​ திருச்சி நகரின் நடுவே இருக்கும் மெயின்கார்டு கேட் எந்த அளவுக்குப் பராமரிக்கப்படுகிறது?

ஒரு பண்பாட்டுச் சின்னத்தைச் சுற்றிலும் இருக்கும் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட வேண்டும்.​ 200 மீட்டர் தொலைவுக்குத் தேவையில்லாமல் ஆக்கிரமிப்புகள் இருக்கக்கூடாது என்று சட்டம் சொன்னாலும்,​​ மெயின் கார்டு கேட் பகுதியில் உள்ள கடைகளை அகற்றவே முடியவில்லை.​ இன்றுவரையிலும்.​ அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் இத்தகைய நினைவுச் சின்னங்களுக்கே இந்த நிலைமை என்றால் பட்டியலில் இடம்பெறாத பண்பாட்டு நினைவுச் சின்னங்கள் குறித்து சொல்லவே வேண்டியதில்லை.​ ​

அண்ணா,​​ பெரியார்,​​ ராஜாஜி போன்ற தலைவர்கள் மற்றும் மகாகவி பாரதியார்,​​ வஉசி போன்றோர் வாழ்ந்த இல்லங்களும்,​​ சிறையில் வஉசி இழுத்த செக்கும்,​​ ​ காந்தியின் கடிதங்களும் அவர்களின் ஆளுமையை மீட்டெடுக்க உதவுவதைப் போலவே,​​ கட்டடங்களும் சிலைகளும் சிற்பங்களும் அவை உருவான காலத்தையும் கலையையும் மீட்டெடுக்க உதவுகின்றன.​ ​

தமிழக அரசு அமைக்கவுள்ள பண்பாட்டுச் சின்னங்கள் பாதுகாப்புக் குழு,​​ மத்திய மாநில அரசின் கட்டுப்பாட்டில் வராத,​​ ஆனால் பழமை மற்றும் பண்பாட்டுச் சின்னமாக விளங்கும் கட்டடங்கள்,​​ ஓவியங்கள்,​​ சிலைகள்,​​ மரச்சிற்பங்கள்,​​ தேர்கள் போன்ற எவையெல்லாம் இருக்கின்றன என்பதைப் பட்டியலிடவும்,​​ இவற்றை இடித்தல் அல்லது விற்பனை செய்தல் போன்றவை பண்பாட்டுச் சின்னங்கள் பாதுகாப்புக் குழுவின் தடையில்லாச் சான்று பெறாமல் நடத்த முடியாது என்ற நிலைமையும் தமிழ்நாட்டில் ஏற்பட வேண்டும்.

இதுபோன்ற குழுக்களில் பண்பாட்டுச் சின்னங்களின் பாதுகாப்பைப் பற்றிய அக்கறையே இல்லாத அதிகாரிகளும்,​​ ஆளும் கட்சிக்கு வேண்டிய அல்லது சார்ந்தவர்களும் மட்டுமே இடம்பெறுவார்களேயானால்,​​ அப்படி ஒரு குழு அமைத்தும் பயனில்லை.​ தகுதியானவர்களைத் தரம் கண்டு தேர்ந்தெடுத்து குழு அமைக்கப்பட்டால் மட்டுமே பண்பாட்டுச் சின்னப் பாதுகாப்புக் குழுவுக்கு அர்த்தமிருக்கும்!
நன்றி : தினமணி

No comments: