* ஏ.டி.எம்., கார்டு மூலம் ஒரு முறை மட்டும் பணம் எடுத்தேன். ஆனால், இரண்டு, மூன்று தடவை பணம் எடுத்திருப்பதாக ரசீதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
* ஏ.டி.எம்.,ல் பணம் எடுக்காமலேயே ரசீதில் பற்று வைக்கப்பட்டுள்ளது.
* பரிவர்த்தனையை ரத்து செய்திருந்தும், ரசீதில் பணம் எடுக்கப்பட்டதாக பற்று வைக்கப்பட்டுள்ளது.
* குறைவான தொகையை ஏ.டி.எம்.,ல் எடுத்திருந்து, ரசீதில் அதிகமான தொகை வரவு வைக்கப்பட்டிருந்தால்...
* ஏ.டி.எம்., கார்டை பயன்படுத்தவே இல்லை. ஆனால், ஏ.டி.எம்., கார்டை பயன்படுத்தி பணம் எடுத்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது. மேற்கண்ட பிரச்னைகளில் ஏதாவது ஒன்று ஏ.டி.எம்., கார்டை பயன்படுத்தும் போது ஏற்பட்டிருந்தால், உடனே சம்பந்தப்பட்ட வங்கியில் தெரிவித்து, குறிப்பிட்ட புகார் படிவத்தை பூர்த்தி செய்து கொடுக்க வேண்டும்.
சமீபத்தில் ஏ.டி.எம்., கார்டைப் பயன்படுத்தி, இதுபோன்றதொரு பிரச்னையில் சிக்கிய ஒருவர் கூறியதாவது: என் வங்கிக் கணக்கில் இருந்து பணம் எடுக்க வேறொரு வங்கியின் ஏ.டி.எம்., மையத்தில் கார்டை செருகி, தொகையை டைப் செய்தேன். பணம் வரவில்லை. ஆனால், என் கணக்கில் 15 ஆயிரம் ரூபாய் பற்று வைக்கப்பட்டுவிட்டது. இது பற்றி கணக்கு இருக்கும் வங்கியில் புகார் கொடுத்தேன். அடுத்த இரண்டு நாட்கள் கழித்து, 'டெபிட் கார்டை' பயன்படுத்தி ஓட்டலில் குடும்பத்துடன் சாப்பிடச் சென்றேன். பில்லுக்கு டெபிட் கார்டை கொடுத்தபோது, வங்கிக் கணக்கில் பணம் இல்லை என்று திருப்பித் தந்துவிட்டனர். அப்போது என்னிடம் பணமும் இல்லை. பெரும் அவமானத்தோடு, ஒருவழியாக பணம் ஏற்பாடு செய்து ஓட்டலுக்கு பில் செலுத்தினேன். இது பற்றியும் குறிப்பிட்ட தனியார் வங்கியில் புகார் கொடுத்தேன். 15 நாட்களில் சரி செய்யப்படும் என்கின்றனர். அந்த இடைவெளியில் என் செலவுகளுக்கும், இ.சி.எஸ்.,களுக்கும் எங்கிருந்து பணம் புரட்டுவது? வங்கியின் குற்றத்துக்கு நான் தண்டனை அனுபவிக்க வேண்டுமா?
இவ்வாறு அவர் குமுறினார்.
இத்தகைய குற்றச்சாட்டுகள் குறித்து, தனியார் வங்கி மேலாளர் ஒருவர் கூறியதாவது: இதுபோல் ஏராளமான குற்றச்சாட்டுகள் வருகின்றன. இதற்கு முக்கிய காரணம், தற்போது ஏ.டி.எம்., மையங்களை மக்கள் அதிகளவில் பயன்படுத்த ஆரம்பித்துள்ளனர். எந்த வங்கி ஏ.டி.எம்., மையத்தையும் பயன்படுத்தலாம் என்ற அறிவிப்பு வெளியான பிறகு, இந்த எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்துவிட்டது. வாடிக்கையாளர்களின் அதிகளவு பயன்பாட்டுக்கு தகுந்த மாதிரி, ஏ.டி.எம்., மையங்களின் தொழில்நுட்பம் மேம்படுத்தப்படவில்லை. இதனால் தான் தவறுகள் ஏற்படுகின்றன. ஏ.டி.எம்., கார்டை பயன்படுத்தும்போது எவ்விதமான தவறு ஏற்பட்டாலும், உடனே சம்பந்தப்பட்ட வங்கியில் புகார் செய்துவிட வேண்டும். 'புகார் விண்ணப்பங்கள் பெறப்பட்ட நாளில் இருந்து 12 முதல் 15 நாட்களுக்குள் சரிசெய்து கொடுத்துவிட வேண்டும்' என்று ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியுள்ளது. மேலும், வங்கி கணக்கில் மாத சம்பளமோ அல்லது வேறு ஏதாவது வகையில் பணமோ பற்று, வரவு வைக்கப்பட்டால், அது குறித்து மொபைல் போனுக்கு எஸ்.எம்.எஸ்., அல்லது இ-மெயில் தகவல் வருவதற்கான வசதியை பயன்படுத்துவது நல்லது. பெரும்பாலான வாடிக்கையாளர்கள் இந்த வசதியை பயன்படுத்துவதே இல்லை. இந்த வசதியைப் பயன்படுத்தினால் நம் கணக்கில் பணம் இருக்கிறதா, எவ்வளவு இருக்கிறது என்பது பற்றிய விவரங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம். இதனால், வெளி இடங்களில் டெபிட் கார்டை பயன்படுத்தும்போது பிரச்னைகள் ஏற்படுவதைத் தவிர்க்கலாம். இவ்வாறு அவர் கூறினார்.
ஏ.டி.எம்., கார்டை பாதுகாப்பாக பயன்படுத்துவது எப்படி?
* வங்கியில் ஏ.டி.எம்., கார்டு பெற்றவுடனே, உங்களது 'பின்' எண்ணை மாற்றிக்கொள்ளுங்கள்.
* உங்களது 'பின்' எண்ணை யாருக்கும் தெரியப்படுத்தாதீர்கள்.
* 'பின்' எண்ணையும், ஏ.டி.எம்., கார்டையும் ஒரு சேர வைக்காதீர்கள். முடிந்தளவு 'பின்' எண்ணை, எங்கேயும் எழுதி வைக்காமல், மனப்பாடம் செய்து கொள்ளுங்கள்.
* ஏ.டி.எம்., மையத்தில் பணம் எடுக்கும்போது தொகையையோ அல்லது பின் எண்ணையோ தவறுதலாக 'டைப்' செய்திருந்தால், முற்றிலுமாக, 'கேன்சல்' கொடுத்துவிடுங்கள். பின்னர், திரும்பவும் ஏ.டி.எம்., கார்டை செருகி புதிதாக, 'டைப்' செய்யுங்கள்.
* ஏ.டி.எம்., கார்டை தவறுதலாக மூன்று முறை செயல்படுத்திவிட்டால், அதன் பின்னர் உங்களது கார்டு முடக்கப்பட்டுவிடும்.
* ஏ.டி.எம்., கார்டு தொலைந்துபோனால், உடனே சம்பந்தப்பட்ட வங்கிக்கு அல்லது வங்கியின் வாடிக்கையாளர் சேவை மையத்தில் புகார் செய்துவிட வேண்டும். அப்போது தான், காணாமல் போன ஏ.டி.எம்., கார்டை பிறர் பயன்படுத்துவதைத் தடுக்க முடியும்.
* ஏ.டி.எம்., கார்டின் பின்புறம் கையெழுத்து போடுவதற்கான பகுதியில், அவசியம் கார்டின் உரிமையாளர் கையொப்பம் போட வேண்டும். இதனால், கார்டை வேறு யாரும் பயன்படுத்த முடியாது.
* ஏ.டி.எம்., மையத்தில் பணம் எடுக்கும்போது தவறுதலாக கள்ளநோட்டு வந்துவிட்டால், உடனே சம்பந்தப்பட்ட வங்கியில் புகார் கொடுத்துவிடுவது நல்லது.
நன்றி : தினமலர்