Monday, March 30, 2009

கடும் சரிவுடன் முடிந்தது பங்கு சந்தை

இன்றைய பங்கு சந்தை கடும் சரிவுடன் முடிந்திருக்கிறது. கடந்த 5 வர்த்தக நாட்களில் பெற்றிருந்த புள்ளிகளை இன்று இழந்து விட்டது. சர்வதேச அளவில் பங்கு சந்தைகளில் ஏற்பட்ட சரிவின் காரணமாக இந்திய பங்கு சந்தையிலும் இன்று பங்குகளை விற்கும் போக்கு அதிகமாக காணப்பட்டது. சென்செக்ஸ் 9,600 புள்ளிகளுக்கும் கீழேயும், நிப்டி 3,000 புள்ளிகளுக்கும் கீழேயும் சென்று முடிந்திருக்கிறது. பேங்கிங், ரியல் எஸ்டேட், மெட்டல், டெக்னாலஜி, மற்றும் இன்ப்ராஸ்டரச்சர் துறை பங்குகள் கடும் சரிவை சந்தித்தன. இன்று நாள் முழுவதும் சரிவுடன் இருந்த மும்பை பங்கு சந்தையில், வர்த்தக முடிவில் சென்செக்ஸ் 480.35 புள்ளிகள் ( 4.78 சதவீதம் ) குறைந்து 9,568.14 புள்ளிகளில் முடிந்திருக்கிறது. தேசிய பங்கு சந்தையல் நிப்டி 130.50 புள்ளிகள் ( 4.2 சதவீதம் ) குறைந்து 2,978.15 புள்ளிகளில் முடிந்திருக்கிறது. இன்றைய வர்த்தகத்தில் அதிகம் பாதிப்படைந்த நிறுவனங்கள் எஸ்.பி.ஐ., ஓ.என்.ஜி.சி., ஐசிஐசிஐ பேங்க், ரிலையன்ஸ் இன்டஸ்டிரீஸ், டிசிஎஸ், ஹெச்டிஎஃப்சி, செய்ல், பெல், ரிலையன்ஸ் கம்யூனிகேஷன், டிஎல்எஃப், ஹெச்டிஎஃப்சி பேங்க், மற்றும் டாடா ஸ்டீல் ஆகியவைதான். சன் பார்மா, பிபிசிஎல், என்டிபிசி ஆகிய மூன்று நிறுவன பங்குகள் மட்டுமே விலை உயர்ந்திருந்தது.
நன்றி : தினமலர்


கச்சா எண்ணெய் விலை குறைந்திருக்கிறது

கச்சா எண்ணெய் விலை இன்று பேரலுக்கு 1.13 டாலர் குறைந்திருக்கிறது. அமெரிக்காவின் யு.எஸ்.லைட் ஸ்வீட் குரூட் ஆயில் விலை ( மே டெலிவரிக்கானது ) இன்று பேரலுக்கு 1.13 டாலர் குறைந்து 51.25 டாலராக இருக்கிறது. லண்டனின் பிரன்ட் நார்த் ஸீ குரூட் ஆயில் விலை 92 சென்ட் குறைந்து 51.06 டாலராக இருக்கிறது. அமெரிக்காவின் பொருளாதாரம் தொடர்ந்து மந்த நிலையிலேயே இருப்பதால், அங்கு வேலை இல்லாதோர் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே இருப்பதாலும், அமெரிக்கா சேமித்து வைக்கும் கச்சா எண்ணெய்யின் அளவு குறைந்து வருவதாலும் கச்சா எண்ணெய் விலை குறைந்திருப்பதாக சொல்கிறார்கள். மார்ச் மாதத்தில் மட்டும் அமெரிக்காவில் 6,60,000 பேர் வேலையை இழந்திருக்கிறார்கள். இதன்படி பார்த்தால் கடந்த செப்டம்பரில் இருந்து இதுவரை அங்கு 33 லட்சம் பேர் வேலையை இழந்திருக்கிறார்கள்.
நன்றி : தினமலர்


யூனியன் பேங்க் ஆஃப் இந்தியாவுடன் டாடா மோட்டார்ஸ் உடன்பாடு

டாடா மோட்டார்ஸின் வாகனங்களுக்கு கடன் கொடுப்பதற்காக, யூனியன் பேங்க் ஆஃப் இந்தியாவுக்கும் டாடா மோட்டார்ஸூக்குமிடையே உடன்பாடு ஏற்பட்டிருக்கிறது. இதனை டாடா மோட்டார்ஸ் அதிகாரிகள் தெரிவித்தனர். யூனியன் பேங்க் ஆஃப் இந்தியாவின் 1,450 கிளைகளிலும், டாடா மோட்டார்ஸின் 470 விற்பனை நிலையங்களிலும் இந்த வங்கி மூலம் வாடன கடன் பெற முடியும். டாடாவின் மலிவு விலை காரான நானோவை புக் செய்வதற்கும் யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா அங்கீகாரம் பெற்றிருக்கிறது. காரின் விலையில் ( ஆன் ரோடு ) 90 சதவீதம் வரை கடனான யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா கொடுக்கிறது. அதிக பட்சமாக ஆறு வருடங்கள் வரை திருப்பி செலுத்தும் வசதியுடன் வாகன கடன் பெற்றுக்கொள்ளலாம்.
நன்றி : தினமலர்


ஒபாமாவின் திட்டப்படிஜெனரல் மோட்டர்ஸின் தலைமை நிர்வாக அதிகாரி பதவி விலகினார்

வெள்ளை மாளிகை கேட்டுக்கொண்டதற்கு இணங்க, கடும் நிதி சிக்கலில் இருக்கும் ஜெனரல் மோட்டார்ஸின் தலைமை நிர்வாக அதிகாரி ரிக் வேகனர் பதவியில் இருந்து விலகினார். கடும் நிதி நெருக்கடியில் சிக்கியிருக்கும் உலகின் மிகப்பெரிய கார் கம்பெனியான ஜெனரல் மோட்டார்ஸூம், இன்னொரு கார் கம்பெனியான கிரைஸ்லருக்கும் அமெரிக்க அரசிடம் இருந்து 17.4 பில்லியன் டாலர்களை ( சுமார் ரூ. 87,000 கோடி ) ஏற்கனவே நிதி உதவியாக பெற்றிருக்கின்றன. இது போதாது என்று இன்னும் 5 பில்லியன் டாலர்களை ( சுமார் ரூ.25,000 கோடி ) கிரைஸ்லரும், 16.7 பில்லியன் டாலர்களை ( சுமார் ரூ.83,500 கோடி ) ஜெனரல் மோட்டார்ஸூம் கேட்கின்றன. இது குறித்து பாரக் ஒபாமா, சி.பி.எஸ். தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், அரசிடம் இருந்து மேலும் உதவி பெற வேண்டும் என்றால் அவைகள், தங்களது நிர்வாகத்தில் பல மாறுதல்களை செய்ய வேண்டியதிருக்கிறது என்றார். ஆனால் இன்னும் அந்த மாறுதல்களை அவைகள் செய்யவில்லை என்றும் நாங்கள் ஒரு வெற்றிகரமான ஆட்டோ இன்டஸ்டிரியை மீண்டும் உருவாக்க எண்ணியிருக்கிறோம் என்றும் சொன்னார் ஒபாமா. இவைகளுக்கு மேலும் நிதி உதவி அளிப்பது தொடர்பாக மேற்கொள்ள இருக்கும் திட்டங்கள் குறித்து அவர் தீவிரமாக பரிசீலித்தும் வருகிறார்.இதன் தொடர்ச்சியாக ஜெனரல் மோட்டார்ஸின் தலைமை நிர்வாக அதிகாரியாக இருக்கும் ரிக் வேகனரை அந்த பதவியில் இருந்து விலகுமாறு வெள்ளை மாளிகை கேட்டுக்கொண்டது. அதனை ஏற்றுக்கொண்ட வேகனர் பதவி விலகி விட்டார்.56 வயதாகும் வேகனர், அந்த பதவியில் கடந்த ஆறு ஆண்டுகளாக இருந்து வந்தவர். 1977 ம் ஆண்டில் இருந்தே ஜெனரல் மோட்டார்ஸில் பணியாற்றி வருபவர். கடும் நிதி சிக்கலில் இருக்கும் ஜெனரல் மோட்டார்ஸ், 47,000 ஊழியர்களை வேலை நீக்கம் செய்யவும், கிரைஸ்லர் 3,000 ஊழியர்களை வேலை நீக்கம் செய்யவும் திட்டமிட்டிருக்கின்றன. மேலும் விற்பனையாகாமல் இருக்கும் பல மாடல்களை தயாரிக்காமல் நிறுத்தி வைக்கவும் இரு நிறுவனங்களும் திட்டமிட்டிருக்கின்றன. ஊழியர்கள் வேலை நீக்கம் 2009 இறுதிக்கும் இருக்கும் என்றும், அவ்வாறு வேலை நீக்கம் செய்யப்பட்டால், அதுதான் அமெரிக்க வரலாற்றில் முன் எப்போதும் இல்லாத மிகப்பெரிய ஜாப்கட் ஆக இருக்கும் என்றும் சொல்லப்படுகிறது. மேலும் ஜெனரல் மோட்டார்ஸூக்கு இப்போது இருக்கும் 47 தொழிற்சாலையை 2012 க்குள் 33 ஆக குறைத்து விடவும் அது தீர்மானித்திருக்கிறது. மேலும் அது தயாரித்து வரும் 8 மாடல் கார்களை இனிமேல் 4 ஆகவும் குறைக்கப்போகிறது, செவர்லே, புய்க், கெடில்லாக் மற்றும் ஜிஎம்சி ஆகிய நான்கு மாடல் கார்களை மட்டுமே இனிமேல் ஜெனரல் மோட்டார்ஸ் தயாரிக்க இருக்கிறது.
நன்றி : தினமலர்


எந்த வங்கி ஏ.டி.எம்.,மில் பணம் எடுத்தாலும் 'ப்ரீ'

ஒரு குறிப்பிட்ட வங்கியின் வாடிக்கையாளர் மற்றொரு வங்கியின் ஏ.டி.எம்., மூலமாக பணம் எடுத்தால் அதற்கு இனிமேல் கட்டணம் செலுத்த வேண்டிய அவசியம் இல்லை. வருகிற 1ம் தேதி முதல் இந்த சலுகை அமலுக்கு வருகிறது.தற்போது, ஒரு குறிப் பிட்ட வங்கியின் வாடிக் கையாளர், மற்றொரு வங்கியின் ஏ.டி.எம்., (தானியங்கி பணப்பட்டுவாடா இயந்திரம்) மூலமாக பணம் எடுத்தால் அதற்காக சேவைக் கட்டணம் செலுத்த வேண்டும். ஒரு பணப் பரிமாற்றத் துக்கு 20 ரூபாய் என கட்டணம் நிர்ணயிக்கப் பட்டுள்ளது. இதனால், சாதாரண மக்கள் அவதிப்பட்டு வந்தனர்.இந்த விஷயத்தில் ரிசர்வ் வங்கி அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. இதன்படி, குறிப்பிட்ட வங்கியின் வாடிக்கையாளர்கள் மற்றொரு வங்கிக்குச் சொந்தமான ஏ.டி.எம்.,மில் பணம் எடுத்தால் அதற்காக கட்டணம் எதுவும் செலுத்த தேவை இல்லை. எந்த வங்கியைச் சேர்ந்த வாடிக்கையாளர்களாக இருந்தாலும், நாட்டில் உள்ள பிற வங்கிகளின் ஏ.டி.எம்., மையத்தை பணம் எடுப்பதற்காக பயன்படுத்திக் கொள்ளலாம். ஏப்ரல் 1ம் தேதி முதல் இந்த நடைமுறை அமலுக்கு வருகிறது.நாடு முழுவதும் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏ.டி.எம் (தானியங்கி பணப்பட்டுவாடா இயந்திரங்கள்) அமைப்புகள் உள்ளன. சில வங்கிகள் தங்களுக்குள் பணப்பரிவர்த்தனை மேற்கொள்ள தற்போது அனுமதித்திருக்கிறது.
நன்றி : தினமலர்