Wednesday, August 6, 2008

லட்சம் வீட்டுக்கடனுக்கு வட்டியுடன் கட்டும் தொகை ரூ.1கோடி: மலைக்காதீங்க, உண்மை தான்



நீங்கள் வீடு வாங்க ரூ. 25 லட்சம் கடன் வாங்குகிறீர்கள் என்று வைத்துக் கொண்டால், வட்டியுடன் மாத தவணைகளை எல்லாம் சேர்த்து, உங்கள் கடன்பாக்கி காலத்தில் மொத்தம் எவ் வளவு கட்டுகிறீர்கள் தெரியுமா? ஒரு கோடி ரூபாய்! - என்னாது, வாங்கிய கடனுக்கு மூன்று மடங்கு அதிகமாக கட்டுகிறோமா என்று நம்பாமல் சந்தேக பார்வை பார்த்தால் படியுங்கள்:
* ஆறு மாதத்துக்கு முன்பு நீங்கள் வீட்டுக்கடன் வாங்கியிருந்தீர்களானால், பழைய வட்டிவீதத்தை மறந்து விட வேண்டும். இப்போது 11 சதவீதத்தை தாண்டி விட்டது.
* வீட்டுக்கடன் 25 லட்சம் ரூபாய் வாங்குகிறீர்கள். வட்டிவீதம் 11 சதவீதம். 20 ஆண்டுக்கு, அதாவது, 240 மாதங்களில் தவணையாக கட்ட ஒப்புக்கொள்கிறீர்கள்.
* புளோட்டிங் முறையில் வாங்கும் உங்களுக்கு மாத தவணை 25 ஆயிரத்து 805 ரூபாய் நிர்ணயிக்கப்படுகிறது.
* ஒரு மாதம் முன், வீட் டுக்கடன் வட்டிவீதம் 11.5 சதவீதமாக ஏறுகிறது. அரை சதவீதமானாலும், தவணைத் தொகையில் லேசாக கையை கடிக்கத்தானே செய்யும்.
* வட்டிவீதம் லேசாக உயர்ந்து விட்டாலும், மொத்த அசல் , வட்டித் தொகை மீதமுள்ள தவணைக் காலத்துக்கு பகிர்ந்து போட்டால், மாத சம்பளத் தில் பாதியை தாண்டி விடுகிறது என்றால், மேற்கண்டபடி தவணைக்காலம் அதிகப் படுத்தப்படுகிறது.
* இப்படி செய்தால், நீங்கள் வாங்கிய ரூ. 25 லட்சம் கடனுக்கு தவணைக்காலம் 240 ல் இருந்து 269 மாதங்களாக அதிகரிக்கப்படுகிறது. அதாவது, இரண்டு ஆண்டு, ஐந்து மாதம் அதிகமாக தவணை பாக்கி கட்டி வர வேண்டும்.
* ஆனால், இப்போது இன்னும் படு மோசமான நிலை. வீட்டுக்கடன் வட்டி சதவீதம் முக்கால் சதவீதம் அதிகரித்து 12.25 சதவீதமாகி விட்டது.
* மாத தவணையை அதிகமாக்கலாம் என்ற வசதியை வைத்து வங்கிகள் உங்கள் தவணை பாக்கியை இப்போதுள்ள வட்டியுடன் சேர்த்து போட்டால், 400 மாதங் களாக அதிகரிக்க வேண்டியிருக்கும்.
* அப்படியானால், 25 ஆயிரத்து 805 ரூபாயை நீங்கள் மொத்தம் 400 மாதங் கள் கட்டிவருவீர்கள்.
இப்ப புரிந்திருக்குமே, 400 மாதங்களுக்கு 25 ஆயிரத்தை பெருக்கி மொத்த தொகையை பாருங்கள், தலை சுற்றுகிறதா... ரிலாக்ஸ், உங்கள் வீட்டு மதிப்பு அப்போது ஒரு கோடியை தாண்டியிருக் குமே என்று ஆறுதல் பட்டுக் கொள்ளுங்களேன்.

நன்றி : தினமலர்


நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி ( ஜி.டி.பி.) 7.5 - 8 சதவீதமாக இருக்கும் : சி.ரங்கராஜன்


நடப்பு நிதி ஆண்டில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 7.5 சதவீதத்தில் இருந்து 8 சதவீதத்திற்குள் இருக்கும் என்று பிரதமரின் பொருளாதார ஆலோசனை கமிட்டி தலைவரர் சி.ரங்கராஜன் தெரிவித்தார். ஜி.டி.பி. குறைவுக்கு உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் இருந்து சில பிரச்னைகள் இருக்கின்றன. இருந்தாலும் இந்த நிதி ஆண்டில் அது 7.5 சதவீதத்தில் இருந்து 8 சதவீதத்திற்குள் இருக்கும் என்று அவர் தெரிவித்தார். விலைவாசியில் பெரிய மாற்றம் ஏதும் நிகழவில்லை என்றால் இப்போது இருக்கும் நிதி கொள்கையே தொடர்வது நல்லது என்றார் அவர். பணவீக்கம் குறித்து அவர் கருத்து தெரிவித்தபோது, பணவீக்கம் இந்த நிதி ஆண்டின் முடிவில் அதாவது மார்ச் 2009 ல் குறைந்து விடும் என்றும் அது அப்போது 8 சதவீதத்திற்கும் குறைவாகத்தான் இருக்கும் என்றார்.
நன்றி : தினமலர்


காலையில் வேகமாக உயர்ந்த பங்கு சந்தை மாலையில் சிறிது உயர்ந்ததுடன் முடிந்தது


இன்றைய பங்கு சந்தையில் காலையில் பெரும் மாற்றம் ஏற்பட்டது. காலை வர்த்தகம் ஆரம்பித்ததில் இருந்தே சென்செக்ஸ் வேகமாக உயர ஆரம்பித்தது. சென்செக்ஸ் 15 ஆயிரம் புள்ளிகளுக்கு மேலும் நிப்டி 4600 புள்ளிகளுக்கு மேலும் ஏறியது. அமெரிக்க ஃபெடரல் ரிசர்வ் வங்கி, வட்டி விகிதத்தை இப்போதிருக்கும் 2 சதவீதத்தில் இருந்து எந்த மாற்றத்தையும் செய்யாமல் இருந்ததாலும், கச்சா எண்ணெய் விலை பேரலுக்கு 118 டாலரை ஒட்டியே இருந்ததாலும், சர்வதேச அளவில் பங்கு சந்தையில் நல்ல ஏற்ற நிலை காணப்பட்டதாலும் இந்திய பங்கு சந்தையிலும் நல்ல ஏற்ற நிலை காணப்பட்டது. காலை வர்த்தகம் ஆரம்பித்த இரண்டு நிமிடங்களிலேயே சென்செக்ஸ் 2.41 சதவீதமும் ( 360.82 புள்ளிகள் ) நிப்டி 1.95 சதவீதமும் ( 89.15 புள்ளிகள் ) உயர்ந்திருந்தது. அதன் பின்னரும் தொடர்ந்து ஏறி வந்த சென்செக்ஸ், காலை 10.21 க்கு 451.73 புள்ளிகள் உயர்ந்து 15,412.80 புள்ளிகளாகவும், நிப்டி 111.70 புள்ளிகள் உயர்ந்து 4,614.55 புள்ளிகளாகவும் இருந்தது. இன்றைய பங்கு சந்தையில் கரடியின் ஆதிக்கம்தான் அதிகமாக இருந்தது. வேகமாக உயர்ந்து வந்த சென்செக்ஸ் மற்றும் நிப்டி, பகல் ஒரு மணிக்கு மேல் கொஞ்சம் கொஞ்சமாக குறைய ஆரம்பித்தது. தொடர்ந்து குறைந்து கொண்டே வந்த சென்செக்ஸ், மாலை வர்த்தக முடிவில், நேற்றைய நிலையில் இருந்து 112.47 புள்ளிகள் மட்டும் ( 0.75 சதவீதம் ) உயர்ந்து 15,073.54 புள்ளிகளில் முடிந்தது. தேசிய பங்கு சந்தையில் நிப்டி 14.70 புள்ளிகள் மட்டும் ( 0.33 சதவீதம் ) உயர்ந்து 4,517.55 புள்ளிகளில் முடிந்தது. இன்றைய வர்த்தகத்தில் சென்செக்ஸ் அதிகபட்சமாக 15,422.82 புள்ளிகள் வரையிலும், நிப்டி 4,615.90 புள்ளிகள் வரையிலும் உயர்ந்திருந்தது. இன்று மாருதி சுசுகி 6.25 சதவீதம், டாடா மோட்டார்ஸ் 4.31 சதவீதம், பார்தி ஏர்டெல் 3.59 சதவீதம், ஏசிசி 3.48 சதவீதம், டிசிஎஸ் 3.32 சதவீதம் உயர்ந்திருந்தது. நால்கோ - 5.24 சதவீதம், ஹெச் சி எல் டெக் - 4.73 சதவீதம், டாடா ஸ்டீல் - 4.44 சதவீதம், எஸ் பி ஐ - 3.79 சதவீதம், டாடா பவர் - 3.65 சதவீதம், சீமென்ஸ் - 3.64 சதவீதம், ரிலையன்ஸ் இன்ஃப்ரா - 3.11 சதவீதம், ஹெச் டி எஃப் சி - 2.82 சதவீதம் குறைந்திருந்தது.
நன்றி : தினமலர்


இந்திய ரியல் எஸ்டேட் தொழிலில் குவியும் அன்னிய நேரடி முதலீடு


வட்டி விகிதம் உயர்த்தப்பட்டிருப்பதை அடுத்து இந்தியாவில் இப்போது ரியல் எஸ்டேட் தொழில் நலிவடைந்து இருந்தாலும், அதில் அன்னிய நேரடி முதலீடு அதிகரித்துக்கொண்டுதான் இருக்கிறது. இப்போது அந்த தொழிலில் 4 பில்லியன் டாலர்களாக இருக்கும் அன்னிய நேரடி முதலீடு, இன்னும் 10 வருடங்களில் 25 பில்லியன் டாலராக உயர்ந்து விடும் அசோசெம் தெரிவித்திருக்கிறது. வட்டி விகிதம் 12 முதல் 16 சதவீதம் வரை இருப்பதால் இப்போது ரியல் எஸ்டேட் தொழில் கொஞ்சம் ஆட்டம் கண்டிருந்தாலும் அதில் முதலீடு செய்திருக்கும் மொத்த தொகையோ 15 பில்லியன் டாலர்கள். அதில் அன்னிய நேரடி முதலீடு 4 பில்லியன் டாலர்கள். இன்னும் பத்து வருடங்களில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி ( ஜி.டி.பி. ) 10 சதவீதத்திற்கும் மேல் இருக்கும் என்று எதிர்பார்ப்பதால், அப்போது வட்டி விகிதம் கூட இருந்தாலும் அது ஒன்றும் அவ்வளவாக பாதிப்பை ஏற்படுத்தாது என்று அசோசெம் அமைப்பின் தலைவர் ஷாஜன் ஜின்டால் தெரிவிக்கிறார். இந்தியாவில் ரியல் எஸ்டேட் தொழிலுக்கு நல்ல எதிர்காலம் இருப்பதாக கருதப்படுவதால் அதில் முதலீடு செய்தால் நல்ல லாபம் பார்க்கலாம் என்று நிறைய பேர் அதில் முதலீடு செய்ய வருகிறார்கள். இந்தியாவில் இன்னும் 2 கோடி பேருக்கு வீடு கிடைக்காமல் இருக்கிறது என்று சமீபத்தில் எடுத்த கணக்கெடுப்பில் தெரிய வந்துள்ளதாம்.
நன்றி : தினமலர்


கச்சா எண்ணெய் விலை சரிவால் மேலே போகிறது பங்குச் சந்தை


கச்சா எண்ணெய் பேரல் விலை 120 டாலருக்கும் குறைவாக சரிந்ததால், பங்குச் சந்தையில் நேற்று எழுச்சியைப் பார்க்க முடிந்தது. இனிவரும் நாட்களில் பங்குச் சந்தையில் ஏறுமுகத்தை காண வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. பங்குச் சந்தையில் நேற்றைய வர்த்தகம் சரிவில் தான் துவங்கியது. ஆசிய பங்குச் சந்தைகளில் நேற்று வர்த்தகம் இறங்கு முகத்தில் இருந்தாலும், நேற்று முன்தினம் அமெரிக்க பங்குச் சந்தை சரிவில் முடிந்து இருந்ததால், இந்திய பங்குச் சந்தையில் ஒரு வித இறுக்கம் காணப்பட்டது. சற்றே புள்ளிகள் இறங்குவதும், ஏறுவதுமாக சந்தை தள்ளாடி கொண்டு இருந்தது. அமெரிக்காவில் 'பெட் ரேட்' அதிகரிக்க வாய்ப்பு இல்லை என்ற செய்தியும், ஐரோப்பிய பங்குச் சந்தைகளில் ஏற்றம் காரணமாக நேற்று பிற்பகலுக்கு மேல் மும்பை மற்றும் தேசிய பங்குச் சந்தைகளில் ஸ்திரமான ஏற்றத்தை பார்க்க முடிந்தது. துவக்கத்தில் சந்தை சரிவை சந்திப்பதற்கு முக்கிய காரணமாக இருந்தது, உலோக பங்குகளின் விலை வீழ்ச்சி கண்டது தான். 'சேசா கோவா' மற்றும் ஸ்டெர்லைட் இண்டஸ்ட்ரீஸ் பங்குகள் கடும் வீழ்ச்சியை சந்தித்தன.ஆனால், பிற்பகலுக்கு பிறகு நிலைமை மாறியது. கச்சா எண்ணெய் விலை எப்போதும் இல்லாத வகையில், பேரல் ஒன்றின் விலை 120 டாலருக்கு குறைந்துள்ளது என்ற செய்தி வந்ததும் தான் தாமதம், நல்ல முன்னேற்றத்தைப் பார்க்க முடிந்தது.வங்கித்துறை பங்குகள் நல்ல ஏற்றத்தைப் பெற்றன. போதாக்குறைக்கு ரியல் எஸ்டேட், சிமென்ட் பங்குகள் திடீர் ஏற்றத்தைப் பெற்றன. சமீப நாட்களாக சர்க்கரை பங்குகள் இனிக்கத் துவங் கியுள்ளன. சந்தை அடிமட்டத்திற்கு சரிந்து இருந்த போது வாங்கியவர்கள் எல்லாம் ஒரு மடங்கு லாபத்தைப் பார்க்க துவங்கினர். இன்னும் சில நாட்களுக்கு சர்க்கரை பங்குகள் தித்திக்கும் வாய்ப்பு உள்ளது.நேற்று முன்தினம், வெளிநாட்டு முதலீட்டாளர்கள் 508 கோடிக்கும், மியூச்சுவல் பண்ட் நிறுவனங்கள் ரூ.47 கோடிக்கும் பங்குகளை விற்றன. இதனால், சரிவை சந்திக்க முடிந்தது.உலகிலேயே அமெரிக்காவில் தான் அதிகளவு பெட்ரோல் செலவிடப்படுகிறது. அங்கு இப்போது பெட்ரோல் தேவை குறைந்து இருக்கிறது. இதன் காரணமாக கச்சா எண்ணெய் ஏற்றுமதி செய்யும் நாடுகளுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், கச்சா எண்ணெய் விலை குறைந்து வருகிறது. இன்னும் விலை குறைய வாய்ப்பு இருக்கிறது. எனவே, 13 ஆயிரம் புள்ளிகளை சந்தை எட்டிய போது முதலீடு செய்தவர்களுக்கு இப்போது நல்ல லாபம் கிடைக்க துவங்கியுள்ளது.நேற்று ஒரு கட்டத்தில் மும்பை பங்குச் சந்தை 15 ஆயிரம் புள்ளிகளை தொடும் நிலை வரை வந்து, பின்னர் வர்த்தக முடிவில், 14,961 புள்ளிகளில் நிலை பெற்றது. இது முதல் நாளை விட 383 புள்ளிகள் அதிகம்.தேசிய பங்குச் சந்தையான 'நிப்டி' நேற்று 4,500 புள்ளிகளை கடந்துள்ளது. மேலும் வர்த்தக முடிவில் நான்காயிரத்து 503 புள்ளிகளில் நிலை பெற்றுள்ளது. இது பங்குச் சந்தை மேலே போகும் என்பதற்கு ஒரு நல்ல அறிகுறி என தொழில்நுட்ப பகுப்பாய் வாளர்கள் கூறுகின்றனர். ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கி, டி.எல்.எப்., ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா, ரேன்பாக்சி பங்குகள் கணிசமாக உயர்ந்தன. முதலீட்டாளர்கள் இப்போதெல்லாம் தாங்கள் வாங்கிய விலையில் இருந்து, 20 சதவீதம் பங்கு விலை உயர்ந்தாலே பங்குகளை விற்க வரிசை கட்டி நிற்கின்றனர். இதன் காரணமாக தள்ளாட்டம் காண முடிகிறது. இந்நிலை, இந்தாண்டு வரை இருக்கும் என பங்குச் சந்தை நிபுணர்கள் கூறுகின்றனர்.

நன்றி : தினமலர்