Wednesday, August 6, 2008

காலையில் வேகமாக உயர்ந்த பங்கு சந்தை மாலையில் சிறிது உயர்ந்ததுடன் முடிந்தது


இன்றைய பங்கு சந்தையில் காலையில் பெரும் மாற்றம் ஏற்பட்டது. காலை வர்த்தகம் ஆரம்பித்ததில் இருந்தே சென்செக்ஸ் வேகமாக உயர ஆரம்பித்தது. சென்செக்ஸ் 15 ஆயிரம் புள்ளிகளுக்கு மேலும் நிப்டி 4600 புள்ளிகளுக்கு மேலும் ஏறியது. அமெரிக்க ஃபெடரல் ரிசர்வ் வங்கி, வட்டி விகிதத்தை இப்போதிருக்கும் 2 சதவீதத்தில் இருந்து எந்த மாற்றத்தையும் செய்யாமல் இருந்ததாலும், கச்சா எண்ணெய் விலை பேரலுக்கு 118 டாலரை ஒட்டியே இருந்ததாலும், சர்வதேச அளவில் பங்கு சந்தையில் நல்ல ஏற்ற நிலை காணப்பட்டதாலும் இந்திய பங்கு சந்தையிலும் நல்ல ஏற்ற நிலை காணப்பட்டது. காலை வர்த்தகம் ஆரம்பித்த இரண்டு நிமிடங்களிலேயே சென்செக்ஸ் 2.41 சதவீதமும் ( 360.82 புள்ளிகள் ) நிப்டி 1.95 சதவீதமும் ( 89.15 புள்ளிகள் ) உயர்ந்திருந்தது. அதன் பின்னரும் தொடர்ந்து ஏறி வந்த சென்செக்ஸ், காலை 10.21 க்கு 451.73 புள்ளிகள் உயர்ந்து 15,412.80 புள்ளிகளாகவும், நிப்டி 111.70 புள்ளிகள் உயர்ந்து 4,614.55 புள்ளிகளாகவும் இருந்தது. இன்றைய பங்கு சந்தையில் கரடியின் ஆதிக்கம்தான் அதிகமாக இருந்தது. வேகமாக உயர்ந்து வந்த சென்செக்ஸ் மற்றும் நிப்டி, பகல் ஒரு மணிக்கு மேல் கொஞ்சம் கொஞ்சமாக குறைய ஆரம்பித்தது. தொடர்ந்து குறைந்து கொண்டே வந்த சென்செக்ஸ், மாலை வர்த்தக முடிவில், நேற்றைய நிலையில் இருந்து 112.47 புள்ளிகள் மட்டும் ( 0.75 சதவீதம் ) உயர்ந்து 15,073.54 புள்ளிகளில் முடிந்தது. தேசிய பங்கு சந்தையில் நிப்டி 14.70 புள்ளிகள் மட்டும் ( 0.33 சதவீதம் ) உயர்ந்து 4,517.55 புள்ளிகளில் முடிந்தது. இன்றைய வர்த்தகத்தில் சென்செக்ஸ் அதிகபட்சமாக 15,422.82 புள்ளிகள் வரையிலும், நிப்டி 4,615.90 புள்ளிகள் வரையிலும் உயர்ந்திருந்தது. இன்று மாருதி சுசுகி 6.25 சதவீதம், டாடா மோட்டார்ஸ் 4.31 சதவீதம், பார்தி ஏர்டெல் 3.59 சதவீதம், ஏசிசி 3.48 சதவீதம், டிசிஎஸ் 3.32 சதவீதம் உயர்ந்திருந்தது. நால்கோ - 5.24 சதவீதம், ஹெச் சி எல் டெக் - 4.73 சதவீதம், டாடா ஸ்டீல் - 4.44 சதவீதம், எஸ் பி ஐ - 3.79 சதவீதம், டாடா பவர் - 3.65 சதவீதம், சீமென்ஸ் - 3.64 சதவீதம், ரிலையன்ஸ் இன்ஃப்ரா - 3.11 சதவீதம், ஹெச் டி எஃப் சி - 2.82 சதவீதம் குறைந்திருந்தது.
நன்றி : தினமலர்


No comments: