Wednesday, November 26, 2008

மும்பையில் குண்டுவெடிப்பு : 10 பேர் பலி

மும்பையில் இன்று நடந்த குண்டுவெடிப்பு 10 பேர் பலியாயினர். மும்பையில் இன்றிரவு தொடர் குண்டுவெடிப்பு நிகழ்ந்தது. மும்பை கார்பரேஷன் அலுவலகம், விக்டோரியா டெர்மினல் ரயில் நிலையம் ஆகிய இடங்களில் இச்சம்பவம் நடந்துள்ளது. இதில் 10 பேர் பலியாயினர். 25க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
நன்றி : தினமலர்

பங்கு சந்தை உயர்ந்தது ; சென்செக்ஸ் 9,000 புள்ளிகளை எட்டியது

மும்பை பங்கு சந்தையில் காலை வர்த்தகம் ஆரம்பித்ததில் இருந்து மாலை 3 மணி வரை சரசரி அளவில் உயர்ந்திருந்த சென்செக்ஸ், கடைசி ஒரு மணி நேர வர்த்தகத்தில் வேகமாக உயர துவங்கியது. சென்செக்ஸ் 9,000 புள்ளிகளுக்கு மேலும் நிப்டி 2,700 புள்ளிகளுக்கு மேலும் சென்றுள்ளது. சீனாவை போலவே இந்திய ரிசர்வ் வங்கியும் வட்டியை குறைக்கும் என்ற எதிர்பார்ப்பு இன்று பலமாக இருந்தது. சீனாவில் சி.ஆர்.ஆர்.,மற்றும் மற்ற வட்டி ஒரு சதவீதம் குறைக்கப்பட்டிருக்கிறது. பெட்ரோலிய பொருட்களுக்கான விலையை குறைக்கப்போவதாக பெட்ரோலிய அமைச்சர் முரளி தியோரா நேற்று அறிவித்திருந்ததை அடுத்து, விரைவில் பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படும் என்ற எதிர்பார்ப்பும் இருந்தது. இந்த இரண்டு நல்ல செய்திகளும் இன்று சந்தையை மேலே இழுத்து சென்றது. ஆயில், பேங்கிங், பவர், கேப்பிடல் குட்ஸ், மெட்டல் மற்றும் டெலிகாம் பங்குகள் அதிகம் வாங்கப்பட்டன. மாலை வர்த்தக முடிவில் சென்செக்ஸ் 331.19 புள்ளிகள் ( 3.81 சதவீதம் ) உயர்ந்து 9,026.72 புள்ளிகளில் முடிந்திருக்கிறது. தேசிய பங்கு சந்தையில் நிப்டி 98.25 புள்ளிகள் ( 3.7 சதவீதம் ) உயர்ந்து 2,752.25 புள்ளிகளில் முடிந்திருக்கிறது. ரிலையன்ஸ் இன்டஸ்டிரீஸ், ஐசிஐசிஐ பேங்க், ஹெச்.டி.எஃப்.சி.பேங்க், பார்தி ஏர்டெல், ஹெச்.டி.எஃப்.சி., என்.டி.பி.சி., ஐ.டி.சி., எஸ்.பி.ஐ., எல் அண்ட் டி, ஸ்டெர்லைட் இன்டஸ்டிரீஸ், ஓ.என்.ஜி.சி., டி.சி.எஸ்., விப்ரோ, ரிலையன்ஸ் இன்ஃரா, இன்போசிஸ் டெக்னாலஜிஸ், பெல் ஆகிய பங்குகள் அதிகம் லாபம் பார்த்தன. ஆசிய பங்கு சந்தைகள் எல்லாவற்றிலுமே இன்று ஏற்ற நிலைதான் காணப்பட்டது.
நன்றி : தினமலர்


அவுட்சோர்ஸிங் வேலைகளுக்கு இந்தியாதான் இன்னமும் முதலிடத்தில் இருக்கிறது

அவுட்சோர்ஸிங்/ ஆஃப்ஸோரிங் வேலைகளுக்கு உலகிலேயே இன்னமும் இந்தியாதான் சிறந்த இடமாக இருக்கிறது என்று டன் அண்ட் பிராட்ஸ்டிரீட் ( டி அண்ட் பி ) என்ற அமைப்பு வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்திருக்கிறது. குறைவான சம்பளம் என்பதால் மட்டுமில்லாமல், மற்ற நாடுகளை விட இந்திய நிறுவனங்கள் இந்த துறையில் நல்ல தேர்ச்சி பெற்றிருப்பதால் அவர்களால் சிறந்த சேவை அளிக்க முடிகிறது என்பதால்தான் இந்தியா முதலிடத்தில் இருக்கிறது. 'இந்தியாவின் மிகப்பெரிய ஐடிஇஎஸ் மற்றும் பிபிஓ கம்பெனிகள் 2008' என்ற வெளியீட்டின் நான்காவது பதிப்பை வெளியிட்ட டி அண்ட் பி நிறுவனம், சீனா, பிலிப்பைன்ஸ், மெக்ஸிகோ, மலேஷியா, பிரேசில், செக் குடியரசு, சிலி ஆகிய நாடுகளுடன் இந்தியாவை ஒப்பிட்டு அறிக்கை வெளியிட்டிருக்கிறது. அதில் இந்தியாவில் தான் குறைந்த கட்டணத்தில் சிறந்த சேவை கிடைக்கிறது என்று சொல்லியிருக்கிறது. ஐடிஇஎஸ்/பிபிஓ க்கான சம்பள விஷயத்தில், இந்தியாதான் இரண்டாவது குறைந்த சம்பளம் கேட்கும் நாடாக இருக்கிறது என்கிறது. சீனாதானா உலகிலேயே குறைந்த சம்பளத்தில் ஐடிஇஎஸ்/பிபிஓ வேலைகளை செய்து கொடுக்கும் நாடாக இருக்கிறது. சீனாவில் சம்பளம் 7,00 - 8,000 டாலராக இருக்கிறது. இந்தியாவிலோ அது 7,500 - 8,500 டாலராக இருக்கிறது. பிலிப்பைன்ஸ் இல் சம்பளம் 9,000 - 10,000 டாலராக இருந்தாலும் அங்கு மற்ற நாடுகளை விட டெக்னிக்கல் பட்டதாரிகள் அதிகம் இருப்பதாக சொல்கிறது. ஆனால் இவை எல்லாவற்றையும் விட இந்தியா முதலிடத்தில் இருப்பதற்கு, இங்கு இங்கிலீஷ் பேசும் இஞ்சினியரிங் மற்றும் மேனேஜ்மென்ட் பட்டதாரிகள் அதிகம் இருப்பதால்தானாம். இதனால்தான் இந்திய நிறுவனங்களால் இந்த துறையில் நல்ல சேவை அளிக்க முடிகிறது என்கிறது டி அண்ட் பி.
நன்றி : தினமலர்


அமெரிக்க பொருளாதாரத்தை சரிசெய்ய இன்னும் ஒரு 800 பில்லியன் டாலர்களை கொடுக்கிறது அமெரிக்க அரசு

சீரழிந்திருக்கும் அமெரிக்க பொருளாதாரத்தை சரி செய்ய இன்னும் ஒரு 800 பில்லியன் டாலர்களை அமெரிக்க ரிசர்வ் வங்கி கடனாக கொடுக்க முன்வந்திருக்கிறது. ஏற்கனவே 700 பில்லியன் டாலர்கள் போக இது இரண்டாவது கடன் திட்டம். இது குறித்து பேசிய அமெரிக்க நிதி அமைச்சர் ஹென்றி பால்சன், இதன் மூலம் மக்கள், அவர்களுக்கு வேண்டிய கடன்களை மீண்டும்எளிதாக பெற வாய்ப்பு ஏற்படும் என்றார். இதில் 600 பில்லியன் டாலர்களை அடமான கடன்களை ஏற்றுக்கொள்வதற்காகவும், 200 பில்லியன் டாலர்களை கன்சூமர் கிரிடிட் மார்க்கெட்டை எளிதாக்கி விடுவதற்காகவும் கொடுக்கப்படுகிறது என்றார் பால்சல். பொருளாதாரம் சீர்குழைந்திருப்பதால் நிதி நிறுவனங்கள், கடன் கொடுப்பதற்கு தயக்கம் காட்டி வந்தன. அது மேலும் மோசமாக மோசமாக கடன் கொடுப்பது இன்னும் கடினமானது. அக்டோபர் மாதத்தில் அங்கு கிரிடிட் கார்டு லோன், கார் லோன், மாணவர்களுக்கான கல்வி கடன் போன்றவைகள் அடியோடு நிறுத்தப்பட்டு விட்டன. இப்போது அறிவித்திருக்கும் கடன் திட்டத்தால் நிறுத்தி வைத்திருக்கும் கடன்கள் மீண்டும் கொடுக்கப்படும் என்றார் பால்சன். அமெரிக்க வர்த்தக அமைச்சகம் சமீபத்தில் வெளியிட்ட அறிக்கையில், அந்நாட்டின் ' மொத்த உள்நாட்டு உற்பத்தி' ( ஜி.டி.பி ) மூன்றாவது காலாண்டில் 0.5 சதவீதமாக குறைந்திருப்பதாக தெரிவித்திருந்தது. மக்களின் வாங்கும் சக்தியும் கடந்த 28 வருடங்களில் இல்லாத அளவாக குறைந்து விட்டதாக தெரிவித்திருந்தது. இதனால்தான் அவசரமாக 800 பில்லியன் கடன் திட்டத்தை அறிவித்ததாக வெள்ளை மாளிகை தெரிவித்திருக்கிறது. இப்போது அறிவித்திருக்கும் 800 பில்லியன் டாலர்களை, நிதி நிறுவனங்களின் வராக்கடன்களை ஏற்றுக்கொள்வதற்கும், அடமான திட்டத்தின்படி உள்ள செக்யூரிட்டிகளை ஏற்றுக்கொள்வதற்கும் கொடுக்க இருக்கிறது.
நன்றி : தினமலர்


650 மேனேஜர் லெவல் ஊழியர்களை வேலைக்கு எடுக்கிறது ஐ.டி.பி.ஐ பேங்க்

சர்வதேச அளவில் நிதித்துறையில் கடும் குழப்பம் ஏற்பட்டு, அதனால் நிறைய வங்கிகளை மூடக்கூடிய நிலைக்கு வந்திருந்தும்; இன்னும் பல வங்கிகள் செலவை குறைக்கும் விதமாக ஊழியர்கள் எண்ணிக்கையை குறைத்துக்கொண்டிருந்தாலும் இந்தியாவின் ஐ.டி.பி.ஐ.வங்கி புதிதாக 650 பேரை மேனேஜர் லெவல் வேலைக்கு எடுக்க திட்டமிட்டிருக்கிறது. இன்டஸ்டிரியல் டெவலப்மென்ட் பேங்க் ஆப் இந்தியா ( ஐ.டி.பி.ஐ.), அதவன் ரீடெய்ல் பேங்கிங் வேலைக்காக 256 பேரை மேனேஜர் வேலைக்கும், இன்னொரு 220 பேரை அதன் நிதித்துறைக்கு மேனேஜர் வேலைக்கும் எடுக்க இருக்கிறது. இன்னொரு 176 பேரை நிதித்துறையில் உதவி ஜெனரல் மேனேஜர் வேலைக்கு எடுக்கவும் அந்த வங்கி திட்டமிட்டிருக்கிறது. மார்ச் 2008 வரை அந்த வங்கியின் அக்கவுன்டன்ஸி, மேனேஜ்மென்ட், இஞ்சினியரிங், சட்டம், கம்ப்யூட்டர் டெக்னாலஜி, பேங்கிங், மற்றும் பொருளாதாரத்துறையில் மொத்தம் 8,989 பேர் பணியாற்றி வருகிறார்கள். இந்த எண்ணிக்கைதான் இனிமேல் கூட்டப்படுகிறது. இவர்கள் தவிர இந்தியாவின் மிகப்பெரிய வங்கியான ஸ்டேட் பாங்க், இந்த நிதி ஆண்டுக்குள் 25,000 புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவதாக சொல்லியிருக்கிறது. கடந்த பல வருடங்களாகவே இந்திய வங்கிகள் யாரையும் புதிதாக வேலைக்கு எடுக்கவில்லை. இந்த வருடத்தில் நாங்கள் கிரிக்கள் லெவலில் 20,000 பேரையும் சூப்பர்வைசர் லெவலில் 5,000 பேரையும் வேலைக்கு எடுக்க திட்டமிட்டிருக்கிறோம் என்று ஸ்டேட் பாங்க் கின் சேர்மன் ஓ.பி.பாத் தெரிவித்தார்.

போராட்டக்காரர்களின் திடீர் முற்றுகையால் பாங்காக் விமான நிலையம் மூடல் ; விமானங்கள் ரத்து

ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்கள் இன்று அதிகாலை திடீரென்று பாங்காக் விமான நிலையத்திற்குள் நுழைந்து முற்றுகையிட்டதால், விமானங்கள் எதையும் இயக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. விமான நிலையம் இயங்காததால் அங்கிருந்த ஆயிரக்கணக்கான பயணிகள் செய்வதறியாமல் திணறிப்போய் இருக்கிறார்கள். அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தி வரும் பீப்பில்ஸ் அலையன்ஸ் ஃபார் டெமாகிரசி ( பிஏடி ) என்ற அமைப்பினர் இன்று அதிகாலை வேளையில் திடீரென பாங்காங் சுவர்னபூமி சர்வதேச விமான நிலையத்திற்குள் நுழைந்து விட்டனர். விமானம் புறப்படுகிற இடம் வரை வந்து விட்ட அவர்கள் அங்கேயே அமர்ந்து விட்டனர். இதனால் நிலைகுழைந்து போன விமான நிலைய அதிகாரிகள், விமானங்களை நிறுத்த வேண்டியதாகி விட்டது. எங்களால் வேறொன்றும் செய்ய முடியவில்லை. எனவே காலை 4.00 மணியில் இருந்து ( தாய்லாந்து நேரம் ) விமானங்கள் இறங்குவதையும் புறப்படுவதையும் முற்றிலுமாக நிறுத்தி விட்டோம். இதனால் 78 விமானங்கள் நிறுத்தப்பட்டு விட்டது என்று பாங்காக் விமான நிலைய இயக்குனர் செரிராத் பிரசுதனன் தெரிவித்தார். விமான நிலையம் முற்றுகையிடப்பட்டுள்ளதால் அங்கிருந்த சுமார் 3,000 பயணிகள் அங்கேயே இருக்க வேண்டீயதாகி விட்டது. பயணிகளால் விமான நிலையத்தில் இருந்து வெளியேறி ஊருக்குள்ளும் போக முடியவில்லை. ஏனென்றால் அங்கேயும் போராட்டக்காரர்கள் அமர்ந்து ரோட்டை மறித்துக்கொண்டிருக்கிறார்கள். ஆசிய பசிபிக் பொருளாதார கூட்டமைப்பு கூட்டத்தில் கலந்து கொள்ள பெரு நாட்டுக்கு சென்றிருக்கும் தாய்லாந்து பிரதமர் சொம்சாய் வோங்சவாத்தை, தாய்லாந்து திரும்ப விடாமல் தடுக்கும் நோக்கத்தில்தான் இவர்கள் விமான நிலையத்தை முற்றுகையிட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

நன்றி : தினமலர்