இந்திய உணவுக் கழகக் கிடங்குகளில் வீணாகும் தானியங்களை வறுமைக் கோட்டிற்கு கீழே வாழ்பவர்களுக்கு இலவசமாக அளித்துவிடலாம் என்று நீதிமன்றம் ஆலோசனை வழங்குகிறது. அதற்கு மத்திய அமைச்சர் சரத் பவார் மறுப்புத் தெரிவிக்கிறார். மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைவர் யெச்சூரி காரசாரமாகப் பேட்டி கொடுக்கிறார். இதையெல்லாம் பார்க்கும்போது, இதை மனிதர்களுக்குக் கொடுக்காவிட்டாலும் பரவாயில்லை, கொஞ்சம் கறவை மாடுகளுக்காவது கொடுத்துவிடுங்களேன் என்று சொல்லத் தோன்றுகிறது.
ஏனென்றால், வைக்கோல் போன்ற உலர் தீவனங்களில் 40 விழுக்காடும், புல் போன்ற பசுந்தீவன வகைகளில் 36 விழுக்காடும், பிண்ணாக்கு போன்ற தீவன வகைகளில் 57 சதவீத விழுக்காடும் பற்றாக்குறை நிலவுகிறது என்று கால்நடைத் துறை தரும் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
பஞ்சாப் வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் உணவுப் பதப்படுத்தும் தொழில்நுட்பவியல் துறை ஆராய்ச்சியாளர்கள் அண்மையில் ஒரு கருத்தை வெளியிட்டனர். இந்தியாவில் உள்ள கறவை மாடுகளுக்குக் கிடைக்கும் தீவனம் போதுமானதாக இல்லை. மேலும், இவை தரமானதாகவும் இல்லை. ஆகவே, கறவைமாடுகள் குறைவாகப் பால் தருகின்றன என்பதுதான் அந்தக் கருத்து.
இந்தியாவில் பால் உற்பத்தி தற்போது ஆண்டுக்கு 10 கோடி டன்னாக உள்ளது. இந்த அளவினை 2022-ம் ஆண்டில் 17.2 கோடி டன்னாக உயர்த்த வேண்டும் என்று (அதாவது ஆண்டுதோறும் 4 விழுக்காடு வளர்ச்சி) மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. ஆனால் தீவனம் தொடர்பான எந்தவிதமான அக்கறையும் இல்லாததால், கறவை மாடுகள் பால் குறைவாக கொடுக்கும் நிலைதான் நீடிக்கிறது.
பால் விற்பனையில் கிடைக்கும் பணத்தில் 70 சதவீதம் தீவனத்துக்கே சென்றுவிடுகிறது என்றும் இந்த ஆய்வுகள் கூறுகின்றன. ஆனால், தீவனத்தின் விலையோ அதிகரித்துக்கொண்டே செல்கிறது. அண்மையில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் ஈரோடு பகுதியில் ஆர்ப்பாட்டம் நடத்தி, தீவனத்தின் விலை உயர்ந்துவிட்டதால், போதுமான தீவனம் வழங்குவதுடன் பால் விலையை உயர்த்தித் தர வேண்டும் என்று போராட்டம் நடத்தினர்.
பால் ஒரு வணிகப் பொருளாக உருமாறும் முன்பு, வயல்களில் அறுவடை செய்தால், அடி காட்டுக்கு, நடு மாட்டுக்கு, நுனி வீட்டுக்கு என்பதாக இருந்தது. அதாவது தானியம் வீட்டுக்கு வரும். வைக்கோல் மாட்டுக்குப் போய், சாணமாக மீண்டும் உரமாகும். அறுப்புக்குப் பிறகு காட்டிலேயே இருக்கும் அடிப்பகுதி அடுத்த சாகுபடிக்கு மடக்கிப்போட்டு உழப்படும். இதனால் விவசாயிக்கு தீவனம் வாங்க வேண்டிய செலவு இல்லை. சாண உரமும் கிடைத்தது. வீட்டுக்குப் பாலும் கிடைத்தது.
பால் எப்போது வணிகப் பொருளாக மாறியதோ அப்போது செலவுகளும் அதிகரிக்கத் தொடங்கிவிட்டன. பணம் செலவிட்டு தீவனம் வாங்க வேண்டிய நிலைமை ஏற்பட்டது. ஆனால் தீவனம் விலை உயர்ந்துவிட்டதோடு, போதுமான அளவு கிடைப்பதும் இல்லை. இதற்கு அரசின் வர்த்தகக் கொள்கைகளும் காரணம்.
எண்ணெய் எடுக்கப்பட்ட பிண்ணாக்கில் 30 விழுக்காடு புரதம் இருக்கிறது. பசுக்களுக்கு இது போதுமானது. ஆனால், மத்திய அரசு எண்ணெய் பிழியப்பட்ட பிண்ணாக்கு ஏற்றுமதிக்கு 7 சதவீதம் ஊக்கத்தொகை கொடுத்து ஊக்குவிக்கிறது. 2009-ம் ஆண்டில் ஏறக்குறைய 5,000 கோடிக்கு பிண்ணாக்கு ஏற்றுமதி நடந்துள்ளது. பிறகு மாடுகளுக்கு பிண்ணாக்கு எப்படி கிடைக்கும்?
மாட்டுக்கு ஏற்ற உணவுதான் தவிடு. ஆனால், தவிட்டு எண்ணெய்க்காக அரிசி ஆலைகளிலிருந்து நேரடியாக எண்ணெய் பிழிவுக் கூடங்களுக்குக் கொண்டுசெல்லப்படுகின்றன தவிடு மூட்டைகள். தவிட்டு எண்ணெய்க்கு மேற்கு வங்கம், சீனா, இந்திய தொழிற்சாலைகளில் வரவேற்பு அதிகம். ஆகவே, தவிடும் கிடைப்பதில்லை.
வைக்கோலை ஓர் இடத்திலிருந்து இன்னோர் இடத்துக்கு ஏற்றிச் செல்வதற்கான கூலியே இதன் விலையை உயர்த்திவிடுகிறது. ஒரு லாரியில் 4 டன்னுக்கு மேலாக ஏற்ற முடிவதில்லை. இதை தொழில்நுட்பத் திறனுடன் செங்கல்போன்ற வில்லைகளாக அழுத்தி ஏற்றினால் 10 டன் வரை லாரியில் ஏற்ற முடியும். ஆனால், இதெல்லாம் கட்டுப்படியாகவில்லை.
ஒவ்வொரு மாநில அரசும் பசுக்களின் தீவனத்துக்கான தனி நிதிஒதுக்கீடு செய்து, இதில் அக்கறை காட்ட வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது. கறவை மாடுகளுக்குப் போதுமான தீவனம் கிடைக்கிறதா என்பதை அறியவும், அதற்கு எந்தச் சத்து குறைவாக இருக்கிறது என்பதைக் கண்டறிந்து அதற்கேற்ப தீவனத்தைப் பரிந்துரை செய்யவும் பால்வளத் துறையில் ஊட்டச்சத்து அலுவலர்கள் இல்லை.
தமிழ்நாட்டில் ஆவின் நிறுவனம், தனது உறுப்பினர்களுக்காக தீவன உற்பத்தியைச் செய்கிறது என்றாலும் அது போதுமானதாக இல்லை. சுமார் 8000-க்கும் மேற்பட்ட கூட்டுறவு பால் சங்கங்கள் இருக்கின்றன. அதன் தேவைக்கும், தீவன உற்பத்திக்கும் பெரும் இடைவெளி தமிழ்நாட்டிலும் இருக்கவே செய்கிறது. தமிழ்நாட்டில் கூட்டுறவுப் பால் உற்பத்திச் சங்கங்கள் மூலமாக நாளொன்றுக்கு 22.5 லட்சம் லிட்டர் பால் கிடைக்கிறது. இதுவே நல்ல தீவனம் கிடைக்கச் செய்தால், இதே எண்ணிக்கை கறவை மாடுகளிடம் இன்னும் கூடுதலாக பால் கிடைக்கும்.
இந்தியாவில் பால் தேவைக்கும் உற்பத்திக்குமான இடைவெளி அதிகரித்துக்கொண்டே செல்கிறது. தீவனப் பற்றாக்குறையைப் போக்கி, குறைந்த விலையில் தீவனம் கிடைக்கச் செய்தால், இந்தப் பற்றாக்குறையைப் போக்குவதுடன் அதிகமாகவே பால் உற்பத்தி பெருகிட வழியுண்டு. விவசாயிகளுக்கும் பலன் கிடைக்கும். ஆனால், அரசு இந்தப் பற்றாக்குறையை ஈடுசெய்ய 30 ஆயிரம் டன் பால் பவுடரை சுங்கவரி விலக்கு அளித்து இறக்குமதி செய்கிறது. அதேநேரத்தில், பிண்ணாக்குக்கு ஊக்கத்தொகை அளிப்பதோடு, எருமை மாட்டிறைச்சி ஏற்றுமதிக்கும் 4 விழுக்காடு ஊக்கத்தொகை தருகிறது.
என்னத்த சொல்ல! "மாட்டைக் கடிச்சி மனுஷனையும் கடித்த கதை' என்கிற பழமொழியைக் கொஞ்சம் மாற்றிப் போடத்தான் வேண்டியிருக்கிறது.
நன்றி : தினமணி
Thursday, August 26, 2010
Subscribe to:
Posts (Atom)