Friday, October 9, 2009

தாயில்லாப் பிள்ளை

இலங்கைப் பத்திரிகையாளர் ஜெயபிரகாஷ் சிற்றம்பலம் திசைநாயகம் என்பவருக்கு இலங்கை உச்ச நீதிமன்றத்தில் 20 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டு, அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.

இதற்கு, ஆசிய மனித உரிமைக் கழகம் கண்டனம் தெரிவித்தது. உலகப் பத்திரிகை தினத்தன்று பேசிய அமெரிக்க அதிபர் ஒபாமா, இந்த இலங்கைத் தமிழரின் பெயரையும் குறிப்பிட்டு, உலகம் முழுவதும் பத்திரிகைகளின் வாய்மூட நடத்தப்படும் அத்துமீறல்கள் குறித்துப் பேசினார். இந்தியாவில் சில பத்திரிகைகள் தலையங்கம் எழுதின. அத்தோடு முடிந்துபோனது.

அவர் செய்த குற்றம் என்ன? இலங்கை அரசைக் கண்டித்து "நார்த் ஈஸ்டர்ன் ஹெரால்டு' என்ற ஆங்கில இதழில், அவர் கட்டுரை எழுதியதுதான் மிகப் பெரிய குற்றம். இதற்காக 2008 மார்ச் மாதம் கைது செய்யப்பட்டு, தற்போது தீவிரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் 20 ஆண்டுகளுக்குத் தண்டிக்கப்பட்டுள்ளார்.

இந்த வழக்கில் அவர் மீது இன்னொரு குற்றச்சாட்டும் பதிவு செய்யப்பட்டது. இலங்கை அரசு 2006-ம் ஆண்டு கொண்டுவந்த நெருக்கடி கால ஒழுங்காற்றுச் சட்டத்தை மீறி நடந்துகொண்டதுடன் தீவிரவாத அமைப்புகளுக்குத் தனது பத்திரிகை மூலமாக ஆதரித்து நிதியுதவி திரட்டியும் தந்தார் என்பதுதான் இந்தக் குற்றச்சாட்டு.

அவர்கள் தீவிரவாத அமைப்பு என்று குறிப்பிடுவது விடுதலைப் புலிகளைத்தான். ஆனால் விடுதலைப் புலிகளுக்கு ஒரு பத்திரிகை மூலம் நிதிதிரட்டும் அவசியம் இருந்ததேயில்லை என்பதை உலகம் அறியும். இலங்கை அரசும் அறிந்ததுதான். இருந்தும் ஏன் இந்த இட்டுக்கட்டுதல்?

ஆசிய மனித உரிமைக் கழகம் தெரிவித்துள்ள கருத்தை எண்ணிப் பார்த்தால், அது மிகச் சரியானது என்பதை எவரும் ஒப்புக்கொள்வர். அந்த அமைப்பு தெரிவித்துள்ள கருத்து இதுதான்:

""இந்தத் தீர்ப்பு எங்களுக்கு ஆச்சரியம் தரவில்லை. அவர் கைது செய்யப்பட்டு வழக்குப் பதிவு செய்யப்பட்ட நாள் முதலாகவே நாங்கள் இதனை அரசியல் உள்நோக்கம் கொண்ட வழக்கு என்று சொல்லி வருகிறோம். திசைநாயகம் எழுதிய கட்டுரையோ அவர் மீது சுமத்தப்பட்ட குற்றமோ இலங்கை அரசுக்கு ஒரு பொருட்டே அல்ல. ஆனால், இலங்கை அரசு இதனை ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்திக் கொண்டு, இதே கதிதான் உங்களுக்கும் என்று இலங்கையில் விடுதலைப் புலிகளை வெற்றி கொண்டுவிட்டோம் என்று சொல்லும் புதிய சூழ்நிலையில், அங்கு உள்ள அனைத்துப் பத்திரிகையாளர்களுக்கும் சமிக்ஞை தந்துள்ளது. அதுதான் இந்த வழக்கு மற்றும் தண்டனையின் முக்கிய நோக்கம்''.

இதுதான் உண்மை. இலங்கையில் உள்ள எல்லா பத்திரிகைகளும் அரசின் அடிவருடிகள் அல்ல. சிங்களர்கள் நடத்துகிற பத்திரிகைகளும், சிங்களப் பத்திரிகையாளர்களும் இலங்கைத் தமிழர்கள் மீதான அத்துமீறல்கள் குறித்து எழுதி வருகின்றனர். அவர்களும்கூட அச்சத்தில் வாய்மூடிக் கிடக்க வேண்டும் என்ற நோக்கத்தைத் தவிர, வேறு எந்த நோக்கமும் இல்லை என்பதுதான் இந்த வழக்கு மற்றும் தீர்ப்பு சொல்லும் சேதி.

இலங்கைத் தமிழர்கள் அடைக்கப்பட்டுள்ள முகாம்களுக்குச் செல்வதற்கும் வாய்ப்புகள் மறுக்கப்படுகின்றன அல்லது சாதகமாகச் சொல்லக்கூடியவர்கள் மட்டுமே அனுப்பப்படுகிறார்கள். இலங்கைத் தமிழ்ப் பத்திரிகையாளர்களும் தட்டிக் கேட்கிற தலைவன் இல்லாத வீட்டில் பதறிக்கிடக்கும் பிள்ளைகளாக இருக்கிறார்கள். அங்கே நடக்கும் பிரச்னைகளை வெளியுலகுக்குக் கொண்டுவரக்கூடிய வாய்ப்பு உள்ளவை சிங்கள ஊடகங்கள் மட்டுமே. இனி அவர்களும் இலங்கைத் தமிழர் விஷயத்தில் அடக்கிவாசிக்கவேண்டிய நிர்பந்தத்தை இலங்கை அரசு ஏற்படுத்தியுள்ளது.

ஒரு பத்திரிகையாளர் என்பவர் எழுத்துப் போராளி. அவர் ஆயுதமே எழுத்துதான். "ஒரு கருத்தை என் மனம் ஏற்றது என்றால் அதை எடுத்துரைப்பேன்; எதிர்த்து எவர் வரினும் அஞ்சேன்' என்பதுதான் ஒரு பத்திரிகையாளரின் அறம். அதைச் செய்யத் தவறிய பத்திரிகையாளர்தான் சமூகத்தில் தார்மிகக் குற்றவாளி. ஆனால், இலங்கையில் தன் எழுத்துக்கடமையைச் செய்த ஒரு பத்திரிகையாளருக்கு, இவ்வளவு பெரிய தண்டனை அநியாயமானது. ஆனால், தமிழகத்தில் இந்த இலங்கைத் தமிழனுக்காக, அட! ஒரு சக பத்திரிகையாளருக்காக, எந்தவொரு பெருங்குரலும் எழவில்லை. இந்தத் தீர்ப்பைக் கண்டிக்கவில்லை. இலங்கை அதிபர் ராஜபட்ச பொதுமன்னிப்பு வழங்க முடியும், அவரை விடுவிக்க முடியும். இங்குள்ள ஊடகங்கள் அவரை விடுவிக்க வேண்டும் என்று கோரவில்லை. பாவம் அவர், தாயகம் இல்லாப் பிள்ளை தாயில்லாப் பிள்ளைதானே!

இது அந்த நாட்டு விவகாரம் என்று சொல்வது கேட்கிறது. ஆனாலும், ஒரு சிறு அச்சம். இலங்கைத் தமிழர் பிரச்னையை ஆதரித்தும், ராஜபட்சவைக் கடுமையாக எதிர்த்தும் எழுதுகிற பத்திரிகையாளர்களை, தங்கள் நாட்டுத் தீவிரவாதிகளுக்கு உடந்தை என்று இலங்கை அரசு வழக்குப் பதிவு செய்து, சர்வதேசக் குற்றவாளியை எங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று இந்திய அரசிடம் கேட்கத் துணிந்தாலும் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை.

இந்தக் கற்பனை "ரொம்ப ஓவர்' என்று சொல்லலாம். ஆனாலும், யானை உறங்கினால் பூனைகளும் ஏறிவிளையாடும் கரும்பாறையென்றே!
நன்றி : தினமணி

இது மட்டுமே போதாது!

எந்தவொரு உணவுக்கூடமும்-நட்சத்திர ஓட்டல்கள் முதல் சாலையோர கையேந்தி பவன் வரை-உண்பவர் உடல்நலன் கெடும் எனத் தெரிந்தே உணவுப்பொருள்களை வழங்குவதில்லை. அவர்கள் தரும் உணவுப்பொருள் உடலுக்குக் கேடாக மாறிப்போவது நான்கு காரணங்களால்தான். அவை-உணவு வழங்குவோர், கையாள்பவர், சமையலரிடம் சுகாதாரமின்மை, வழங்கப்படும் குடிநீர், காற்றில் மிதந்து உணவில் கலக்கும் தூசி, பொட்டலம் கட்டப் பயன்படும் பொருள்கள்.

நோய் ஏற்படுவதைத் தடுக்க இந்த நான்கு விஷயங்களில் சுகாதாரம் மிக அவசியமான முதன்மை இடத்தில் இருக்கிறது. ஓட்டல்களில் உணவு வழங்குபவரின் அழுக்கு உடை, அவர் கைகளைத் துடைக்கும் (ஏற்கெனவே அழுக்கடைந்த) துணி, குடிநீர் ஊற்றப்படும் டம்ளர் அனைத்தும் கிருமிகளின் உறைவிடமாக இருக்கின்றன. பொட்டலம் கட்டப்பயன்படுத்தும் நாளிதழ்களின் அச்சு மையில் உள்ள காரீயம், உணவை விஷமாகச் செய்துவிடுகிறது. இந்தச் சிறிய விஷயங்களில் ஒழுங்குமுறையை, சுகாதார விழிப்புணர்வை உணவுத் தொழில் புரிவோரிடம் ஏற்படுத்த முடிந்தால், மருத்துவமனைகளைத் தேடும் நோயாளிகள் எண்ணிக்கையைப் பாதியாகக் குறைத்துவிட முடியும்.

இந்த விஷயத்தில் சென்னை மாநகராட்சி மேற்கொண்டுள்ள முயற்சி பாராட்டுக்குரியது. ஒவ்வோர் ஓட்டலும் உணவு வழங்குவோர், கையாள்வோருக்கு உரிமம் (Food Handlers' Licence) வழங்கும் திட்டத்தை இந்தியாவிலேயே முதன்முறையாக அறிமுகப்படுத்தியுள்ளது. சென்னை மாநகராட்சியில் மட்டும் சுமார் 60,000 தொழிலாளர்கள் உணவுக்கூடங்களில் பணியாற்றுகின்றனர். ஆனால், இத்திட்டத்தை மாநகராட்சி கட்டாயமாக்கவில்லை என்பதாலும், இதற்கான கட்டணம் ரூ.500 என்பதாலும் இதுவரை சுமார் 3500 பேர் மட்டுமே உரிமம் பெற்றுள்ளனர். கட்டணம் அதிகமாக இருப்பதற்குக் காரணம், உணவு கையாளுதல், வழங்கல் பணியில் உள்ளவர்களுக்குத் தொற்று நோய்கள் இருக்கிறதா என்று மருத்துவப் பரிசோதனை செய்வதும், அடிப்படைச் சுகாதாரம் குறித்த சிறு பயிற்சியை அளிப்பதுமான செலவை உள்ளடக்கி இருப்பதுதான். ஓட்டல் உரிமையாளர் சங்கத்தினர் அரசுடன் பேச்சு நடத்தி, கட்டணத்தைக் குறைக்க கோரிக்கை வைத்தால் அது நியாயமாக இருக்குமே தவிர, இத்திட்டத்தைப் புறக்கணிப்பதுபோல நடந்துகொள்வது சரியானதாக இருக்காது.

சென்னை மாநகராட்சி அறிமுகம் செய்துள்ள ஓட்டலில் உணவு வழங்குவோர், கையாள்வோர், சமையலர்களுக்கான உரிமம் வழங்கும் திட்டத்தைக் கடுமையாகவும், கட்டாயமாகவும் முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என்பதுடன், இத்திட்டத்தை தமிழகம் முழுவதிலும் அனைத்து மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகளில் அறிமுகம் செய்வதற்கும் உள்ளாட்சித் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏனென்றால் அதற்கான தேவை இன்று மேலதிகமாக இருக்கிறது.

இதில் தமிழக அரசு இதோடு நின்றுவிடக்கூடாது. நிலையான ஓட்டல்களில் பணிபுரிபவர்களுக்கு மட்டுமே இந்த உரிமம், பயிற்சி என்பது போதாது. ஏனென்றால், இன்றைய நாளில் தமிழகம் முழுவதும் கையேந்தி பவன்கள் ஆயிரக்கணக்கில் அதிகரித்துவிட்டன. முன்பெல்லாம் வெறும் கூலித் தொழிலாளிகள் மட்டுமே சாப்பிடுவார்கள் என்ற நிலைமை மாறி, தற்போது நடுத்தர வருவாய்ப் பிரிவினர்கூட கையேந்தி பவன்களில் சாப்பிடுவது சர்வ சாதாரணமாகிவிட்டது. இங்கே சாப்பிடத் தயங்குவோர் பொட்டலம் கட்டிக்கொண்டு வீடுபோய்ச் சாப்பிடுவதும் அதிகரித்து வருகிறது.

இதற்குக் காரணம், ஒரு சாதாரண ஓட்டலில் விற்கப்படும் உணவுப் பொருள் விலைக்கும், கையேந்தி பவனில் கிடைக்கும் உணவுப் பொருள் விலைக்கும் மிகப்பெரிய இடைவெளி இருப்பதுதான். இதற்குத் தொழில்ரீதியாகவும், முதலீடு ரீதியாகவும் ஆயிரம் காரணங்கள் இருக்கலாம். ஆனால் யார் எங்கு சாப்பிட்டாலும் அவரது உடல்நலன் கெடாதபடி சுகாதார உணவாக இருக்க வேண்டும் என்பதுதான் முக்கியம். இதை நிறைவேற்றும் பொறுப்பும் கடமையும் அரசுக்கு இருக்கிறது.

கையேந்தி பவன்கள் இன்றைய காலத்தின் கட்டாயம். அவற்றுக்கு அதிகாரிகள் மூலம் நெருக்கடி கொடுப்பதைக் காட்டிலும், அவை முறையாகவும் சுகாதாரமாகவும் செயல்படும் வகையில் ஒழுங்குபடுத்துவதும், இதில் ஈடுபட்டு இருப்போருக்கு சுகாதாரம் குறித்த முறையான பயிற்சி அளிப்பதும்தான் அரசு இன்று செய்ய வேண்டியது.

ஓட்டல்களைக் கண்காணிக்க உணவு ஆய்வாளர் எல்லா உள்ளாட்சி அமைப்புகளிலும் இருக்கிறார் என்றாலும் இற்றைநாளில் அவரது தீவிரக் கண்காணிப்பு மற்றும் வழிகாட்டுதலில், முன்னெப்போதையும்விட மிக முக்கிய சமூகப் பொறுப்பு அவருக்கு இப்போது உள்ளது. இது வெறும் பதவி என்பதைக் காட்டிலும் மேலான சமூகக் கடமை என்பதைப் புரிந்துகொண்டு செயல்பட்டால், நோய்த்தொற்றுகள் பலவற்றைத் தொடக்க நிலையிலேயே கட்டுப்படுத்திவிட முடியும்.

கையேந்தி பவன்களுக்கான நல்ல குடிநீரை உள்ளாட்சி அமைப்புகளே கட்டணம் பெற்று லாரிகள் மூலமாக வழங்குதல், உணவுக் குப்பைகளை இரவோடு இரவாக வாரிச்செல்லுதல் போன்றவை நகரச் சுகாதாரத்துக்கு மட்டுமன்றி, கையேந்தி பவன் நடத்துவோர் மற்றும் அங்கே உணவு உண்போருக்கும் நன்மை தரும்.

உணவின் சுவை, உணவின் வகை, அவை சமைக்கப் பயன்படும் உணவுப்பொருள், உண்ணும் சூழல், மின்விசிறி அல்லது குளிரூட்டு வசதி, பொருளின் விலை இவை அனைத்தும் இடத்திற்கேற்ப மாறுபடலாம். ஆனால், எல்லா நிலைகளிலும் சுகாதாரமான உணவு என்பதில் மாறுபாடு இல்லாதபடி பார்த்துக் கொள்வது அரசு மனது வைத்தால் நிச்சயம் சாத்தியமான ஒன்று.
நன்றி : தினமணி

இலங்கையின் சதிவலை!

கடந்த புதன்கிழமை ஆழ்கடலில் மீன் பிடிக்கக் கிளம்பிய 543 மீன்பிடிக்கும் விசைப் படகுகளில் 538-தான் வியாழனன்று ராமேஸ்வரம் திரும்பி இருக்கிறது. ஐந்து படகுகளை இலங்கையில் கடற்படையினர் சுற்றி வளைத்துப் பிடித்ததுடன் நில்லாமல் அதிலிருந்த மீனவர்களையும் பிடித்துச் சென்றிருக்கிறார்கள்.

தனுஷ்கோடிக்கும் தலைமன்னாருக்கும் இடையில் மீன் பிடித்துக் கொண்டிருந்த அப்பாவி மீனவர்களைத் தாக்குவதும், தங்களது எல்லைக்குள் நுழைந்துவிட்டதாகக் கூறிக் கைது செய்வதும் இலங்கைக் கடற்படையினருக்குப் புதிய விஷயமொன்றும் அல்ல. கைது செய்யப்பட்ட 21 மீனவர்களில் நான்கு பேர் மட்டுமே மன்னாரிலுள்ள நீதிமன்றத்தில் ஆஜராக்கப்பட்டுள்ளனர். ஏனைய 17 பேரின் கதி என்ன என்பது ராஜபட்ச அரசுக்குத்தான் வெளிச்சம்.

இலங்கைக் கடற்படையின் அட்டூழியத்தை எதிர்த்து மீன்பிடிப்பதை நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்ட மீனவர்கள் கடந்த செப்டம்பர் 12-ம் தேதிதான் மீண்டும் கடலுக்குச் செல்லத் தொடங்கி இருக்கிறார்கள். அவர்களது 22 நாள் போராட்டம் இலங்கை அரசு தந்த உறுதிமொழியைத் தொடர்ந்து மத்திய, மாநில அரசுகளின் வழிகாட்டுதலின் பேரில் முடிவுக்கு வந்தது. நான்கே நாள்களில் மீண்டும் தாக்குதல் நடைபெற்றிருக்கிறது.

தூத்துக்குடி பகுதிகளில் மீனவர்கள் அநேகமாகத் தங்களது தொழிலை நிரந்தரமாக விட்டுவிட்ட நிலைமை. ராமேஸ்வரத்திலோ, நித்திய கண்டம் பூரண ஆயுசாகக் கடலுக்குள் சென்று வந்து கொண்டிருக்கிறார்கள். இதற்கு முன்பு இந்த மீனவர்கள்மீது தாக்குதல் நடத்துவதும், இவர்களைப் பிடித்து வைப்பதும் விடுதலைப்புலிகள்தான் என்று குற்றம்சாட்டித் தப்பித்து வந்தது இலங்கை அரசு. தங்கள்மீது பழி போடுவதற்காக மீனவர்கள் விடுதலைப் புலிகளால் தாக்கப்படுவதாக நீலிக்கண்ணீர் வடித்த நிகழ்வுகள் ஏராளம், ஏராளம்.

போதாக்குறைக்கு, இந்திய அரசும் இந்த அப்பாவி மீனவர்கள் விடுதலைப்புலிகளுக்கு ஆயுதம் கடத்த உதவி செய்கிறார்கள் என்றும், அவர்களுக்கு இந்தியாவிலிருந்து உணவுப்பொருள்களைக் கடத்திச் சென்று கொடுக்கிறார்கள் என்றும் சந்தேகப்பட்டது. இப்போதுதான், இலங்கையில் அமைதி ஏற்பட்டு விட்டது என்று பெருமை பாராட்டிக் கொள்கிறார்களே... விடுதலைப்புலிகளை அழித்து விட்டோம் என்று எக்காளமிடுகிறார்களே... அப்படியானால், இந்த அப்பாவி மீனவர்கள் ஏன் தாக்கப்படுகிறார்கள்? வேண்டுமென்றே இம்சிக்கப்படுகிறார்கள்?

""மீனவர்கள் கச்சத்தீவு அருகே ஆழ்கடலில் வலைகளை விரித்து மீன்களுக்காகக் காத்திருந்தனர். அப்போது இலங்கைக் கடற்படையினர் சிறிய கப்பல்களில் அணிஅணியாக வந்துள்ளனர். இதைக் கண்டு அச்சமுற்ற தமிழக மீனவர்கள் தங்களது படகுகளை அவசர அவசரமாகக் கரைக்குத் திருப்பும் முயற்சியில் ஈடுபட்டனர்.

அப்போது, தமிழக மீனவர்களின் படகுகளைச் சுற்றி வளைத்து, கடலில் விரித்திருந்த வலைகளை அறுத்து, டீசல் கேன்களையும், மீன்பிடி சாதனங்களையும் கடலில் தூக்கி வீசியுள்ளனர். மீனவர்களைத் துப்பாக்கிக் கட்டையால் தாக்கி, படகுகளைச் சேதப்படுத்தி இறுதியாக 5 படகுகளையும், 21 மீனவர்களையும் கடத்திச் சென்றுள்ளனர்.

இலங்கைக் கடற்படையினரால் அத்துமீறி நடத்தப்படும் முதல் வன்முறைச் சம்பவம் அல்ல இது. இதுவரை ஏராளமான நிகழ்வுகள் நடந்து, தமிழக மீனவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இலங்கை அரசின் தரப்பில் தரப்பட்ட உறுதிமொழிகள் அனைத்தும் காற்றில் பறக்கவிடப்படுகின்றன~இது தமிழக அரசின் சார்பில் வெளியிடப்பட்டிருக்கும் செய்திக் குறிப்பு. அதாவது, அரசே ஒத்துக்கொண்டிருக்கும் விஷயம்.

தூத்துக்குடி துறைமுகம், சேது சமுத்திரத் திட்டம் போன்ற வளர்ச்சிப் பணிகளின் விளைவாக இந்தியக் கடற்கரை ஓரமாக மீன்கள் கிடைப்பது அரிதாகிவிட்ட நிலைமை. ஆழ்கடலில் நள்ளிரவில், இது எங்கள் எல்லைக்கு உள்பட்டது என்று இலங்கைக் கடற்படை கூறும்போது அப்பாவி மீனவர்கள் என்னதான் செய்ய முடியும்? கச்சத்தீவில் வலைகளை உலர்த்தும் உரிமை தமிழக மீனவர்களுக்கு இருக்குமானால், அந்தப் பகுதியில் மீன் பிடிக்கும் உரிமையும் உண்டு என்பதுதானே பொருள்?

இலங்கைக் கடற்படையின் உண்மையான நோக்கம் மீனவர்களைத் தாக்குவது அல்ல. இந்த மீனவர்களைத் தாக்கும்போது, தமிழகம் கோபத்தில் கொந்தளிக்க வேண்டும். அப்போது மத்திய அரசு, அண்டை நாடான இலங்கையைப் பகைத்துக் கொள்ளக்கூடாது என்று கண்டும் காணாமலும் இருந்து தனது கையாலாகாத்தனத்தை வெளிப்படுத்த வேண்டும். இதில் இலங்கை அரசுக்கு ஒரு குரூர சந்தோஷம்.

"உறுதியான நடவடிக்கை எடுங்கள்' என்று முதல்வர் கருணாநிதி மத்திய அரசுக்கு மீண்டும் மீண்டும் கோரிக்கை விடுப்பதை நிறுத்திவிட்டு, கச்சத்தீவை மீட்டெடுக்க, நமது மீனவர்களின் உரிமையை நிலைநிறுத்த, எல்லாவற்றிற்கும் மேலாக, இந்து மகா சமுத்திரப் பகுதிகளில் இந்தியாவின் மேலாண்மையை நிலைநாட்டக் குரல் எழுப்ப வேண்டிய நேரமல்லவா இது?

இது மீன்பிடிப்பதற்குப் போடப்படும் தடை அல்ல. இந்தியாவுக்கு எதிராக இலங்கை அரசால் வீசப்படும் சதி வலை!
நன்றி : தினமணி

உயிர் கொடுக்க ஒரு வழி

தற்போது தமிழகம் முழுவதும் 108 எனப்படும் அவசரகால சிகிச்சை வாகனங்கள் அறிமுகம் செய்யப்பட்டு வருகின்றன. இந்த வாகனத்தின் சேவை பாராட்டுக்குரியதாக இருக்கிறது. இருப்பினும், விபத்தில் சிக்கியவரை, உயிர்காக்கும் "பொன்னான நேரத்துக்குள்' மருத்துவமனைக்குக் கொண்டுவந்தாலும், நரம்பியல் மருத்துவர் அல்லது சிறப்பு மருத்துவர் இல்லாத காரணத்தாலேயே பல இறப்புகள் நேர்கின்றன என்பது கசப்பான உண்மை.

தமிழ்நாட்டில், 2008-ம் ஆண்டில் நடந்த சாலை விபத்துகளில் இறந்தவர்கள் எண்ணிக்கை 12,784. இறந்தவர்களில் பெரும்பாலோரின் மரணத்துக்குக் காரணம் தலைக்காயம். தலையில் பலத்த அதிர்ச்சியால் மூளையில் ரத்தக்கசிவு ஏற்பட்டு, மண்டைக்குள் அழுத்தம் ஏற்படுவதால் மூளையின் மற்ற திசுக்களும் செயலிழந்து மரணம் நிகழ்கிறது.

நரம்பியல் மருத்துவர் டாக்டர் பி. ராமமூர்த்தி, விபத்து சிகிச்சை பற்றி பயிற்சி மருத்துவர்களுக்குப் பாடம் நடத்தும்போது, எப்போதும் குறிப்பிடும் விஷயம் என்று அவரிடம் பயின்றவர்கள் நினைவுகூரும் அறிவுரை ஒன்று உண்டு: ""ஒரு பற்பசை குப்பியை அதன் நடுப்பகுதி, முனைப்பகுதி அல்லது வால்பகுதி என எங்கே அழுத்தினாலும் அதன் வாய்ப்புறத்தில் மட்டுமே பற்பசை வெளியேறும். அதேபோன்று மூளையில் எங்கே அழுத்தம் ஏற்பட்டாலும் அதனால் அதுசார்ந்த உடலின் பாகங்கள் செயலிழக்கும். ஆகவே, விபத்து காலத்தில் மூளையின் ரத்தக்கசிவால் ஏற்படும் மண்டைக்குள் அழுத்தத்தைக் குறைப்பதுதான் ஒரு மருத்துவரின் முதல் கடமை''.

இதற்காக, அன்றைய நாளில், பயிற்சி மருத்துவர்கள்கூட, விபத்தினால் செயலிழந்த நிலையில் மருத்துவமனைக்குக் கொண்டுவரப்படும் நோயாளிக்கு, முதல்கட்டமாக பர்ஹோல் (ஆன்ழ்ழ் ட்ர்ப்ங்) எனப்படும் மிகச் சிறிய துவாரத்தை, மண்டையின் நான்கு புறமும் தேவைக்கு ஏற்ப போட்டு, ரத்தக்கசிவு எந்தப் பக்கம் என்பதைக் கண்டறியவும், மண்டைக்குள் ஏற்படுத்தும் அழுத்தத்தைக் குறைக்கவும் பயிற்சி பெற்றனர்.

இப்போது மருத்துவமனைக்குத் தலைக்காயங்களுடன் செயலிழந்து மயக்கநிலையில் வரும் நோயாளிகளுக்கு இத்தகைய பர்ஹோல் சிகிச்சை அளிக்கப்படுவதில்லை. சிடி ஸ்கேன் எடுத்து ரத்தக்கசிவை உறுதிப்படுத்தினாலும்கூட, சிறப்பு மருத்துவர் இல்லாமல் செய்வதற்கு ஏதுமில்லை என்ற நிலைதான் அதிகமான மரணங்களுக்கு முக்கிய காரணம்.

எல்லா மருத்துவமனைகளிலும் எல்லா நேரங்களிலும் நரம்பியல் சிறப்பு மருத்துவர் இருப்பது சாத்தியமில்லை. சென்னை-பெங்களூர் நாற்கரச் சாலையில் கடந்த 7 மாதங்களில் 650 பேர் இறந்துள்ளனர். இந்த நெடுஞ்சாலையில் நரம்பியல் சிறப்பு மருத்துவர்கள் உள்ள மருத்துவமனைகள் அதிகபட்சம் 10 இருக்கக்கூடும். நரம்பியல் சிறப்பு மருத்துவர் அந்த மருத்துவமனைகளில் பணிபுரிந்தாலும்கூட, அந்த நேரத்தில் அவர் மருத்துவமனையில் இருப்பார் என்பதும் அரிது. பல நேரங்களில் மருத்துவமனைகளில் பயிற்சி மருத்துவர்களும், பொது மருத்துவர்களும் மட்டுமே இருக்கும் நிலை உள்ளது.

அப்படிப்பட்ட சூழ்நிலைகளில் பணியில் இருக்கும் பொது மருத்துவர், இன்றியமையாத இப்படிப்பட்ட அடிப்படைச் சிகிச்சைகளை அளித்தால் என்ன?
இதற்கு அவர்கள் சொல்லும் காரணம்- ""இதைச் செய்ய சிறப்பு மருத்துவர்தான் வர வேண்டும். இதை நாங்கள் செய்கிறபோது மரணம் ஏற்பட்டால், சிறப்பு மருத்துவப் பட்டம் பெறாத நீங்கள் ஏன் இதில் ஈடுபட்டீர்கள் என்ற கேள்விக்கு ஆளாக நேரிடும். வழக்குகளில் சிக்கிக் கொள்வோம். மேலும், இப்போதெல்லாம் பொதுமருத்துவர் பார்த்த பிறகுதான் சிறப்பு மருத்துவர் பார்ப்பது என்கிற வழக்கமே பொதுமக்களிடம் இல்லாமல் ஆகிவிட்டது'' என்பதுதான் பொது மருத்துவர்களின் பதிலாக இருக்கிறது.

இங்கிலாந்து நாட்டிலும் பிற மேலை நாடுகளிலும் எந்தவொரு நோயாளியும் தனது குடும்ப மருத்துவர் எனப்படும் பொதுமருத்துவர் பரிந்துரைக் கடிதம் இல்லாமல், சிறப்பு மருத்துவரை அணுகவே முடியாது. இந்தியாவில் மட்டுமே, எடுத்தஎடுப்பில் ஒரு நோயாளியே சிறப்பு மருத்துவரை அணுகுவதும், அவரும் விருப்புடன் சிகிச்சை அளிப்பதும் நடந்துகொண்டிருக்கிறது. இதில் விதிவிலக்காக, மிகச் சில சிறப்பு மருத்துவர்கள் இருக்கிறார்கள் என்பதையும் மறுப்பதற்கில்லை.

எம்பிபிஎஸ் படித்த மருத்துவர் இத்தகைய அடிப்படையான சிகிச்சைகளைக் கூட அளிக்க முடியாமல் சட்டம் அல்லது சமூகச் சிந்தனை தடையாக இருக்கும் என்றால், நஷ்டம் சமூகத்துக்குத்தான்!

இதில் எத்தகைய நடைமுறைகள் இக்காலத்திற்குப் பொருந்தும் என்பதையும், தலைக்காயம் அடைந்தவர்களுக்கு அடிப்படை சிகிச்சையை ஒரு எம்பிபிஎஸ் படித்த டாக்டரே அளிக்கவும், பின்னர் நிதானமாக அவரைச் சிறப்பு மருத்துவர் சிகிச்சையைத் தொடரவும் வழிவகை செய்வது பற்றி மருத்துவ உலகமும், அரசும் யோசிக்க வேண்டிய அவசியம் உள்ளது.
நன்றி : தினமணி