Tuesday, November 11, 2008

இப்போதைக்கு பெட்ரோல், டீசல் விலை குறைப்பு இல்லை : மன்மோகன்சிங்

இந்திய எண்ணெய் நிறுவனங்கள் நஷ்டமில்லாமல் இயங்கும் வரை பெட்ரோல்,டீசல் விலை குறைக்கப்பட மாட்டாது என்று பிரதமர் மன்மோகன் சிங்தெரிவித்தார். எந்த அரசாக இருந்தாலும், மானியம் கொடுப்பதற்கென்று ஒரு அளவு இருக்கிறது. அதனை கொடுத்துக்கொண்டே இருக்க முடியாது. எனவே நஷ்டமில்லாமல் எண்ணெய் நிறுவனங்கள் இயங்கும் வரை நாம் காத்திருக்க வேண்டியதுதான் என்றார். எப்போது இந்திய எண்ணெய் நிறுவனங்களால் மானியம் கொடுக்காமலும் இயங்க முடிகிறதோ, அது தான் பெட்ரோல், டீசல் விலையை குறைக்க சரியான நேரமாக இருக்கும். மூன்று நாள் பயணமாக அரபு நாடுகளுக்கு சென்றுவிட்டு புதுடில்லி கிளம்பி வந்து கொண்டிருந்தபோது விமானத்தில் பத்திரிக்கையாளர்களிடையே பேசிய சிங், இவ்வாறு தெரிவித்தார். இப்போது சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்திருப்பதால், இந்திய எண்ணெய் கம்பெனிகள் பெட்ரோல் விற்பனையின்போது லாபம் சம்பாதிக்கின்றன. ஆனால் டீசல் விற்பனையில் தொடர்ந்து நஷ்டம்தான் ஏற்பட்டுக் கொண்டிருக்கிறது. இதற்காக மத்திய அரசு அதிகப்படியான மானியத்தை எண்ணெய் நிறுவனங்களுக்கு கொடுத்துக்கொண்டுதான் இருக்கிறது. எனினும் எவ்வளவு காலத்திற்குதான் மானியம் கொடுப்பது என்பதற்கு ஒரு எல்லை இருக்கிறது என்றார். இப்போது இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம் மற்றும் ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் போன்ற எண்ணெய் நிறுவனங்கள் ஒவ்வொரு லிட்டர் பெட்ரோல் விற்கும் போதும் ரூ.4.12 லாபம் சம்பாதிக்கின்றன. ஆனால் டீசல் விற்கும்போது ரூ.0.96 நஷ்டமடைகின்றன.
நன்றி : தினமலர்


பங்கு சந்தையில் கடும் வீழ்ச்சி : நிப்டி 3000 புள்ளிகளுக்கும் கீழே போனது

கடந்த இரண்டு வர்த்தக நாட்களில் முன்னேறிய சென்செக்ஸ், இன்று கடும் வீழ்ச்சியை சந்தித்தது. சென்செக்ஸ் மற்றும் நிப்டி, நேற்று அடைந்த புள்ளிகளை இன்று இழந்தன. நிப்டி 2950 புள்ளிகளுக்கும் கீழும் சென்செக்ஸ் 9900 புள்ளிகளுக்கும் கீழும் போய்விட்டது. காலை வர்த்தகம் ஆரம்பித்ததில் இருந்தே குறைந்து கொண்டே வந்த சென்செக்ஸ், மாலை வர்த்தக முடிவில் 696.47 புள்ளிகள் ( 6.61 சதவீதம் ) குறைந்து 9,839.69 புள்ளிகளில் முடிந்திருக்கிறது. தேசிய பங்கு சந்தையிலும் நிப்டி 209.60 புள்ளிகள் ( 6.66 சதவீதம் ) குறைந்து 2938.65 புள்ளிகளில் முடிந்திருக்கிறது. ஓ.என்.ஜி.சி., ரிலையன்ஸ் இன்டஸ்டிரீஸ், என்.டி.பி.சி.,பார்தி ஏர்டெல், பெல், டி.எல்.எஃப், இன்ஃபோசிஸ், எஸ்.பி.ஐ., ஐசிஐசிஐ பேங்க், ஹெச்.டி.எஃப்.சி.,பேங்க், ஹெச்.டி.எஃப்.சி.,எல் அண்ட் டி, செய்ல் ஆகியவை கடும் சரிவை சந்தித்துள்ள நிறுவனங்கள். இருந்தாலும் ஐ.டி.சி.,மற்றும் சிப்லா பங்குகள் உயர்ந்திருந்தன.செய்ல், ஸ்டெர்லைட் இன்டஸ்டிரீஸ், டாடா ஸ்டீல் மற்றும் ஹின்டல்கோ பங்குகள் 10 - 18 சதவீதம் குறைந்திருந்தது. மெட்டல் இன்டக்ஸ் 8.42 சதவீதத்தை இழந்திருந்தது. உலக அளவில் பங்கு சந்தைகளில் ஏற்பட்ட வீழ்ச்சிதான் இங்கும் பாதிப்பை ஏற்படுத்தி இருக்கிறது என்கிறார்கள்.
நன்றி : தினமலர்