Friday, October 23, 2009

புலனாய்வுத் துறை பற்றிய புலனாய்வு!

இந்தியாவின் எந்த மாநிலத்திலும் ஒரு குற்றம் நிகழ்ந்து ஆளும்கட்சியின் அதிகாரத்துக்கு உள்பட்ட மாநில போலீஸ் நடுநிலையுடன் விசாரணை நடத்தாது எனும் எண்ணம் பொதுமக்களுக்கும், பிற கட்சியினருக்கும் ஏற்பட்டால் சிபிஐ விசாரணை தேவை என்ற கோரிக்கை வலுக்கும். சில சமயங்களில் குறிப்பிட்ட வழக்கு விசாரணையை சிபிஐதான் செய்ய வேண்டும் என உயர் நீதிமன்றங்களும், உச்ச நீதிமன்றமும் உத்தரவிடுவதையும் காண்கிறோம்.

இந்த ஆண்டு ஜூலை மாதம் ஆக்ட்டீ (ஏஐசிடிஇ) எனப்படும் அகில இந்திய பொறியியல் கல்விக் கவுன்சிலின் இரண்டு உயர் அதிகாரிகளின் வீட்டில் திடீர் சோதனையில் ஈடுபட்டு தங்கள் வருமானத்துக்கும் அதிகமாகச் சொத்து சேர்த்துள்ளனர் என்னும் குற்றச்சாட்டின் அடிப்படையில் அவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

கடந்த பல ஆண்டுகளாக இந்நிறுவனத்தின் மீது கட்டுக்கடங்காத குற்றச்சாட்டுகள் கூறப்பட்டன. பல தனியார் கல்வி நிறுவனங்கள் பல்கலைக்கழக அந்தஸ்து பெறவும், புதிய பொறியியல் கல்வி நிறுவனங்கள் ஆரம்பிக்கவும் இந்த ஆக்ட்டீ அனுமதி அளிக்க வேண்டும்.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் மனிதவள மேம்பாட்டுத் துறையின் இணை அமைச்சராக இருந்த புரந்தேஸ்வரி கேபினட் அமைச்சர் அர்ஜுன் சிங்குக்கு ஆக்ட்டீயின் ஊழல் பற்றி எழுதி, இந்த இரண்டு அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்குமாறு கேட்டிருந்தார். அதிகாரிகள் தனது ஊழல் கூட்டாளிகள் என்பதால் கேபினட் அமைச்சர் அர்ஜுன் சிங் அந்தக் கடிதம் சம்பந்தப்பட்ட கோப்பினைத் தனது மேஜையில் எந்த நடவடிக்கையுமின்றி கிடப்பில் போட்டு வைத்திருந்தார்.

இந்த ஆண்டு புதிய ஆட்சி அமைந்தபின், கபில் சிபல் மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சரானபின் சிபிஐ நடவடிக்கை முடுக்கிவிடப்பட்டதில் இரண்டு உயர் அதிகாரிகளும் கைதானார்கள்.
இதே ஜூலை மாதம் மத்திய தாழ்த்தப்பட்டோர் ஆணையத் தலைவர் பூட்டாசிங்கின் மகன் சரப்ஜித் சிங் தன் தந்தையின் ஆணையத்தின் ஒரு வழக்கில் சம்பந்தப்பட்ட ஒருவரை அவ்வழக்கிலிருந்து தப்பிக்க வைக்கிறேன் எனக் கூறி ஒரு கோடி ரூபாய் லஞ்சம் பெற்றதற்காக சிபிஐ-யால் கைது செய்யப்பட்டார்.

சென்ற நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரûஸ எதிர்த்து பூட்டாசிங் போட்டியிட்டதாலும், இந்த நாடாளுமன்றத் தேர்தலில் தனது வாரிசுகளுக்கு டிக்கெட் கிடைக்காததால் காங்கிரûஸ எதிர்த்து அர்ஜுன் சிங் உள்ளடி வேலைகள் செய்ததாலும் இந்த இரண்டு வழக்குகளையும் சிபிஐ கையிலெடுத்து தடாலடி கைதுகள் நடந்தேறின என்பதுதான் இங்கே கவனிக்க வேண்டிய விஷயம்.

ஆளும் கட்சியின் பலசாலிகள் நினைத்தால் சிபிஐ வழக்குகள் பாயும் அல்லது பாய்ந்த வழக்குகள் கிடப்பில் போடப்படும் எனும் பரிதாபமான நிலைமை நம் நாட்டில் உருவாகியுள்ளது. அரசியல் காற்று எத்திசையில் அடிக்கிறதோ அதன்படி கிடப்பில் போடப்படுவதும் முடுக்கிவிடப்படுவதும் நம் நாட்டின் குற்றவியல் நடைமுறையைக் கேலிக்கூத்து ஆக்கியுள்ளது.

மற்ற நாடுகளின் மத்திய உளவுத்துறை போலீஸ் தனித்தன்மையுடன் செயல்படும்போது நமது நாட்டின் சிபிஐ மட்டும் ஆளும் கட்சியின் அடிமையானது எப்படி? 1977-ம் ஆண்டு, அக்டோபர் 3-ம் தேதி அன்றைய இரும்புப் பெண்மணி இந்திரா காந்தியை பிரபல ஜீப் ஊழல் வழக்கில் சிபிஐ கைது செய்தது. அடுத்த தேர்தலில் இந்திரா காந்தி வெற்றி பெற்ற பின் முதல் வேலையாக சிபிஐ நிர்வாகத்தை மத்திய உள்துறையிடமிருந்து மாற்றி பிரதமரின் நேரடி நிர்வாகத்தின்கீழ் கொண்டு வந்தார். தான் கைது செய்யப்பட்ட தனிப்பட்ட கோபத்தினால் எடுக்கப்பட்ட நடவடிக்கை இது என அப்போதே பலரும் முணுமுணுத்தனர்.

முந்தைய காங்கிரஸ் கூட்டணி அரசுக்குச் சாதகமாக முடிவெடுத்த காலகட்டத்தில், சமாஜவாதி கட்சியின் அமர்சிங், உச்ச நீதிமன்றத்தில் ஒரு மனுவைத் தாக்கல் செய்தார். முலாயம்சிங் மீதான வழக்கு முந்தைய தேசிய ஜனநாயக முன்னணி அரசின் பழி வாங்கும் செயல் எனவும் சிபிஐ சமர்ப்பித்த வழக்கின் அறிக்கையில் 288 தவறுகள் உள்ளதையும் சுட்டிக்காட்டினார்.

அன்றைய மத்திய அரசின் சட்ட அமைச்சர் பரத்வாஜ் வெளிப்படையாக முலாயம்சிங் யாதவின் மீது தவறான ஒரு வழக்குத் திணிக்கப்பட்டுள்ளதாகக் கூறினார். இது அரசின் வழக்குக்குச் சாவு மணி அடிக்கும் வேலை என்பது எல்லோருக்கும் தெரியும். சட்ட அமைச்சர் ஒருவர் நடைபெற்று வரும் வழக்கைப் பற்றிய எதிர்கருத்தைக் கூறினால் அரசு எந்தவகையில் வழக்கை நடத்த முடியும் என்பது நடுநிலையாளர்களின் அன்றைய கேள்வி.

இந்த வழக்கை உச்ச நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் சிபிஐ 2007-ம் ஆண்டு பதிவு செய்தது. பின் இடதுசாரி கட்சிகள் காங்கிரஸ் கூட்டணியை விட்டு விலகிய சூழ்நிலையில் முலாயம்சிங்கின் சமாஜவாதி கட்சியின் ஆதரவு மத்திய ஆளும் கூட்டணிக்குத் தேவைப்பட்டது. எந்தச் சத்தமும் இல்லாமல் மத்திய சட்டத்துறை, முலாயம்சிங் வழக்கு சம்மந்தப்பட்ட கோப்பை அன்றைய சொலிசிட்டர் ஜெனரல் வாஹன்வதியிடம் அனுப்புமாறு சிபிஐக்கு உத்தரவிட்டது.

இந்த வழக்கில் உண்மையில்லை எனவும், சிபிஐ தவறுதலாக முலாயம்சிங்கின் சொத்துகளுடன் அவரது மனைவி மற்றும் மருமகள் பெயரிலிருந்த சொத்துகளையும் சேர்த்துவிட்டது என மிக அறிவுப்பூர்வமான ஒரு சட்ட அறிவுரையையும் சொலிசிட்டர் ஜெனரல் வழங்கினார். 2008-ம் ஆண்டு டிசம்பர் 4-ம் தேதி, ""இதை எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்?'' என்று உச்ச நீதிமன்றம் பல கேள்விகளை எழுப்ப வழக்கு வாய்தா பெற்றது.

இதனிடையில் 2009-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலுக்கான கூட்டணி பேரங்களில் சமாஜவாதி கட்சியும் காங்கிரஸýம் உடன்பாடு ஏற்படுத்திக் கொள்ள முடியாத சூழ்நிலை உருவாகியது. சொலிசிட்டர் ஜெனரல் வாஹன்வதி, ""முலாயம்சிங் சொத்து பற்றி நான் அளித்த அறிக்கை சரியானதல்ல'' என ஒரு புதிய அறிக்கையை சிபிஐ மூலம் உச்ச நீதிமன்றத்தில் சமர்ப்பித்து மேல் விசாரணை துரிதப்படுத்தப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டது.

ஆனால் முலாயம்சிங் மிகவும் திறமையுடன் சிபிஐ அதிகாரிகளுடன் தனது கட்சித் தலைவர்கள் சட்டத்துறை அதிகாரிகள் முன்னிலையில் நடத்திய பேரங்கள் பற்றிய 16 ஒலிப்பதிவு சி.டி.க்களை உச்ச நீதிமன்றத்தில் சமர்ப்பித்தார். அகில இந்தியாவின் நாகரிக மனிதர்களும் தலையைத் தொங்கப் போட்டுக்கொள்ளும் இந்நிகழ்வு நம் நாட்டின் நடுநிலை ஆட்சிமுறையை எள்ளி நகையாடச் செய்தது.

மாயாவதியின் மீதான சிபிஐ வழக்கு 2003-ம் ஆண்டு பதிவு செய்யப்பட்டது. தாஜ் புராதன வழித்தடம் எனும் 175 கோடி ரூபாய் திட்டத்தில் ஊழல் நடந்ததாக வழக்கு. ஓராண்டு விசாரணைக்குப்பின் சரியான சாட்சியங்களுடன் இவ்வழக்கை நடத்த முனைந்த சிபிஐ, அன்றைய வாஜ்பாய் அரசின் தலையீட்டினால் தயக்கம் காட்டியது. பாஜக கூட்டணியுடன் மாயாவதி நட்புறவுடன் இருந்த காலம் அது.

பின்னர் மத்தியில் ஆட்சியமைத்த காங்கிரஸ் கூட்டணி மாயாவதியுடன் சேர்ந்து உத்தரப்பிரதேசத்தில் அரசியல் செய்ய முயற்சிகள் நடந்தன. அதேநேரத்தில் சிபிஐ தீவிரமான விசாரணை முடிவில் மாயாவதியின் மீதான தாஜ் வழித்தடத் திட்டத்தின் ஊழல் பற்றிய தகுந்த ஆதாரங்களைத் திரட்டி வைத்திருந்தது. ஆனால் காங்கிரஸ் அரசியல் காரணங்களுக்காக அன்றைய அட்டர்னி ஜெனரல் மிலின்ட் பானர்ஜி மிகவும் நகைச்சுவையான ஒரு காரணத்தைக் காட்டி மாயாவதிக்கு எதிராகத் தகுந்த ஆதாரம் இல்லை எனக் கூறினார்.

அதாவது ஊழல் நடவடிக்கைகளுக்கான ஆரம்பமாக காண்ட்ராக்டர்களுக்கு வழங்கப்பட்ட உத்தரவுகளில் மாயாவதி கையெழுத்திடாமல் அவரது செயலர் கையெழுத்திட்டுள்ளாராம். அரசாங்கக் கோப்புகளில் குறிப்பாணையில் முதல்வரும் உத்தரவுகளில் அதிகாரிகளும் கையெழுத்திடும் நடைமுறை பாவம் படித்த மேதை அட்டர்னி ஜெனரலுக்குத் தெரிந்திருக்கவில்லை.
ஆனால், உச்ச நீதிமன்றம் இதை ஏற்றுக்கொள்ளாமல் விசாரணையைத் தொடரும்படி தேசிய ஊழல் கண்காணிப்பு ஆணையரான சிவிசிக்கு மாயாவதியின் வழக்கை மாற்றியது.

சிவிசி சம்பந்தப்பட்ட எல்லா ஆவணங்களையும் பார்வையிட்டபின், மாயாவதியின்மீது சரியான அத்தாட்சிகள் உள்ளன எனக் கூறி வழக்கைத் தீவிரப்படுத்த சிபிஐக்கு உத்தரவிட்டது. அதேவேளையில் மாயாவதிக்கு காங்கிரஸýடன் மோதல் வலுக்க வழக்குத் தீவிரமடைந்துள்ளது.

இவை எல்லாவற்றிற்கும் சிகரம் போஃபர்ஸ் ஊழல் குற்றச்சாட்டு என்பதை அகில உலகத்துக்கும் பறைசாற்றி, சிபிஐ மத்திய அரசின் கைப்பாவை என உறுதி செய்துள்ளது. 1980-களில் பல நடவடிக்கைகளைக் கையாண்டு, 2006-ம் ஆண்டு லண்டனில் முடக்கப்பட்ட குவாத்ரோச்சியின் வங்கிக் கணக்கை உயிரூட்டி அவர் இருபத்தொரு கோடி ரூபாயைத் தனது கணக்கிலிருந்து எடுத்துக்கொள்ள வழிவகை செய்த சிபிஐ, காங்கிரஸ் கட்சியின் ஓர் அங்கமா அல்லது மத்திய அரசின் தலையாய உளவுத்துறையா எனும் சந்தேகத்தை நடுநிலை இந்தியர்கள் மனதில் எழுப்பியுள்ளது.

மத்தியப் புலனாய்வுத் துறை, மத்திய தேர்தல் ஆணையம், மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையம், நீதித்துறை போன்றவை ஆட்சியாளர்களின் தலையீடுக்கு இடம்கொடுக்காமல் சுதந்திரமாகச் செயல்பட வேண்டும் என்று நமது அரசியல் சட்டம் வலியுறுத்துகிறது.

சுதந்திரமாகச் செயல்படுவதற்கான அதிகாரத்தை அரசியல் சட்டம் வழங்கி இருக்கிறது. ஆனால், எந்த ஓர் அமைப்பும் முறையாகவும், துணிவாகவும் இயங்குவது என்பது அந்தத் துறையின் தலைமைப் பொறுப்பில் இருப்பவர்களைப் பொறுத்துத்தான் அமையும்.

டி.என். சேஷனின் தலைமையில் மத்தியத் தேர்தல் ஆணையமும், வி.என். விட்டலின் தலைமையில் மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையமும் சுதந்திரமாகச் செயல்பட்டது மட்டுமல்ல, அந்த ஆணையங்களின் அதிகாரம் எத்தகையது என்பதையும் தங்களது செயல்பாட்டின் மூலம் தெளிவுபடுத்தினார். பதவியின் கண்ணியத்தையும், கௌரவத்தையும் நிலைநாட்டுவதைவிட ஆட்சியாளர்களுக்குச் சாதகமாக நடந்து, தங்களது தனிப்பட்ட வாழ்க்கையை நிலைநிறுத்திக் கொள்பவர்கள் தலைமைப் பொறுப்பில் அமர்த்தப்படும்போது, மத்தியப் புலனாய்வுத் துறை மட்டுமல்ல, எல்லா துறைகளுமே செயலிழந்து விடுகின்றன என்பதுதான் உண்மை.
கட்டுரையாளர் : என். முருகன்
நன்றி : தினமணி

ஏற்றத்துடன் முடிந்தது இந்திய பங்குச் சந்தை

இன்றைய இந்திய பங்குச் சந்தை ஏற்றத்துடன் முடிந்தது. ஆசிய பங்குச் சந்தைகளில் ஏற்பட்ட ஏற்றமே இந்திய பங்கு சந்தையிலும் எதிரெலித்ததாக நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இன்று காலை வர்த்தக நேரம் தொடங்கிய போது, மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 217.03 புள்ளிகள் அதிகரித்து, அதாவது 1.29 சதவீதம் அதிகரித்து 17006.77 புள்ளிகளோடு தொடங்கியது. தேசிய பங்குச் சந்தை நிப்டி 66.35 புள்ளிகள், அதாவது 1.33 சதவீதம் அதிகரித்து 5054.95 புள்ளிகளோடு தொடங்கியது.
அதன் பின், நண்பகலில் இந்திய பங்குச் சந்தையில் ஏற்ற இறக்கம் காணப்பட்டது. முடிவில் ஏற்றத்துடன் முடிவடைந்தது. இறுதியாக பங்குவர்த்தகம் முடியும் போது, மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 21.07 புள்ளிகள் அதிகரித்து 16810.81 புள்ளிகளோடு நிலைப்பெற்றது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி 8.45 புள்ளிகள் அதிகரித்து 4997.05 புள்ளிகளோடு நிலைபெற்றது.
அதிகம் லாபம் அடைந்த நிறுவனங்கள்: ஸ்டர்லைட் இன்டஸ்டிரி 834.05 ரூபாயாக 2.27 சதவீதமும், டாடா ஸ்டீல் 552.60 ரூபாயாக 1.77 சதவீதமும், செயில் 185.75 ரூபாயாக 1.67 சதவீதமும் லாபத்தை கண்டன.
ரிலையன்ஸ் இன்டஸ்டிரிஸ் 2140.70 ரூபாயாக 0.34 சதவீதமும், இன்போசிஸ் டெக்னாலஜி 2,224 ரூபாயாக 0.57 சதவீதமும், விப்ரோ 584.95 ரூபாயாக 1.40 சதவீதமும், டி.எல்.எப் லிமிடெட் 462.80 ரூபாயாக 3.13 சதவீதமும் லாபத்தை கண்டன.
நன்றி : தினமலர்


மாறுமா அரசுப் போக்குவரத்துக் கழகம்

தீபாவளியையொட்டி தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் இயக்கிய சிறப்புப் பேருந்துகளில் வழக்கமான கட்டணத்தைவிட கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டது. இதுதொடர்பாகப் பயணிகள் நடத்துநர்களிடம் கேட்டபோது, "முன்பதிவு மற்றும் எக்ஸ்பிரஸ் கட்டணம், சிறப்புப் பேருந்து என்பதற்காகக் கூடுதலாகக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது' என்றனர்.

தீபாவளி கொண்டாட சொந்த ஊருக்கு வந்தவர்களும், கொண்டாடி முடிந்து பணிக்குப் புறப்பட்டுச் சென்றவர்களும் பேருந்து நடத்துநர்களிடம் வாக்குவாதம் செய்து, வேறு வழியில்லாமல் பயணச்சீட்டு பெற்றுப் பயணித்தனர்.

இதுகுறித்து அரசுப் போக்குவரத்துக் கழக நிர்வாகம் தரப்பில் அறிவிப்பு எதுவும் வெளியிடப்படவில்லை. ஏற்கெனவே மக்களவைத் தேர்தல் நேரத்தின்போது, சென்னை மாநகரப் பேருந்துகளின் கட்டணத்தை இரவோடு இரவாகக் குறைத்து அறிவித்ததும், பின்னர் கட்டணமே குறைக்கப்படவில்லை என அறிவிக்கப்பட்டதும் அறிந்ததே. "முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைத்தவர்கள், இதை மறைக்காமல் இருப்பார்களா?'

வருவாய் ஈட்ட பண்டிகை நாள்களிலும், திருவிழாக்காலங்களின்போதும் இயக்கப்படும் சிறப்புப் பேருந்துகளில் கட்டணத்தை உயர்த்த வேண்டிய அவசியமில்லை. மாறாக, நஷ்டம் அடையச் செய்துவரும், சாதாரண மக்களும் அறிந்த சிலவற்றை போக்குவரத்துக் கழகம் சீரமைத்தாலே போதும். ஆண்டுதோறும் பல நூறு கோடி ரூபாய் போக்குவரத்துக் கழகத்துக்குக் கூடுதல் வருவாய் கிடைக்கும்.

ஒரே துறையில் அரசும், தனியாரும் ஈடுபடும்போது, தனியாருக்குச் சலுகைகளை வழங்க அரசியல் பிரமுகர்களும், அதிகாரிகளும் முற்படுகின்றனர். தனிப்பட்ட முறையில் எதிர்பார்ப்புகள் நிறைவேற்றப்படுவதால், இதற்கு அவர்களும் உடன்படுகின்றனர்.

தனியார் பேருந்துகளுக்கு லாபகரமான "ரூட்'களை வழங்குவதிலும், "பீக் ஹவர்ஸ்' நேரங்களில் தனியார் பஸ்களை இயக்க அனுமதிப்பதும் உண்டு. இது தனியார் பேருந்து முதலாளிகள், அரசியல் மற்றும் அதிகாரிகள் மட்டத்தில் செய்துகொள்ளப்படும் ஒப்பந்தம். பேருந்து நிலையங்களில் தனியார் பேருந்து மற்றும் அரசுப் பேருந்துகள் இயக்கப்படும் நேரத்துக்கும் இடையே "டைமிங்' தொடர்பாகப் பிரச்னைகள் ஏற்படும். அரசுப் பேருந்துகளை ஒதுக்கப்பட்ட நேரத்துக்கு முன்கூட்டியே எடுக்குமாறும், நேரம் கடந்தும் தனியார் பேருந்துகளை எடுக்க மறுக்கும் செயல்களும் நடைபெறும்.

இதற்காக தனியார் பேருந்துகளுக்கு ஆதரவாக பல வகைகளில் "செல்வாக்கு' உடைய உள்ளூர் பிரமுகர்கள் இருப்பார்கள். சில நேரங்களில் அரசுப் பேருந்து ஊழியர்களைத் தாக்க முயலும் சம்பவங்களும் நடைபெறும்.

பேருந்து நிலையங்களில் நடைபெறும் இச்சம்பவங்களைத் தவிர்க்க, தனியாருக்குச் சாதகமாக அரசுப் பேருந்து ஊழியர்கள் நடந்துகொள்வதும் உண்டு. இதற்காக ஊழியர்கள் மட்டத்தில் "கவனிப்பு'ம் உண்டு.

இதனால், தனியார் பேருந்தில் ஏராளமான பயணிகள் நின்றுகொண்டு பயணிப்பதையும், அரசுப் பேருந்துகள் காலியாகச் செல்வதையும் காணமுடியும்.

அரசுப் பேருந்துகளில் ஏற்படும் சிறு பழுதுகளை உடனடியாகச் சரி செய்வது இல்லை. அந்தப் பழுதுகளுடனே பேருந்துகள் இயங்கிக் கொண்டிருக்கும். சில மாதங்கள் கழித்து பெரும் பழுது ஏற்படும்போதுதான், அதை நிறுத்தி சரிசெய்வது உண்டு. நூற்றுக்கணக்கில் செலவழிக்க வேண்டிய செலவு அப்போதே செய்யாமல் நாள்கணக்கில் இழுத்தடித்து, பல்லாயிரக்கணக்கில் செலவு செய்கின்றன போக்குவரத்துக் கழகங்கள்.

தொலைதூரப் பயணத்தின்போது, பயணிகள் உணவு, தேநீர் அருந்தவும், இயற்கை உபாதைகளுக்காகவும் சில இடங்களில் பேருந்துகள் நிறுத்தப்படுவது உண்டு. பேருந்துகள் நிற்கும் இடம் பெரும்பாலும் நகர்ப் பகுதியாக இருக்காது. ஊருக்கு ஒதுக்குப்புறமாக நெடுஞ்சாலைகளின் ஓரம் பேருந்து பயணிகளுக்காகவே அமைக்கப்படும் சிறு வணிக வளாகமாகவே அது காணப்படும். இங்கு அரசியல் செல்வாக்கு பெற்றவர்கள் கடைகளை அமைத்திருப்பர். இங்கு விற்பனை செய்யப்படும் பொருள்களின் விலை, அப்பொருளின் உண்மையான விலையைவிட சில மடங்கு அதிகமாக இருக்கும்.

இவ்விடங்களில் பேருந்துகள் நின்று செல்வதற்காக, அரசுப் போக்குவரத்துக் கழக அதிகாரிகள் முதல் ஊழியர்கள் வரை "கவனிப்பு' நடைபெறுகிறது.

இவ்வாறாக அதிகாரிகள் முதல் ஊழியர்கள் வரை தனியாருக்குச் சாதகமாக நடந்துகொண்டு, அவர்களின் மூலம் சலுகைகளைப் பெற்றுக் கொண்டு வருகின்றனர்.

இவற்றையெல்லாம் அரசுப் போக்குவரத்துத் துறை நிர்வாகம் கண்டறிந்து களைந்தால், அரசுப் போக்குவரத்துக் கழகம் தனது ஆண்டு வருவாயில் மேலும் சில நூறு கோடி ரூபாய்கள் கிடைக்கும்.

இவ்வாறு பயணிகள் அனைவரும் அறிந்த சில தவறுகளைக் களைந்து, வருவாயை அதிகரிக்கும் நடவடிக்கையை மேற்கொள்ள அரசுப் போக்குவரத்துக் கழக நிர்வாகம் முயலவில்லை. மாறாக, பண்டிகை நாள்களில் இயக்கப்படும் சிறப்புப் பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலிக்கத் தொடங்கிவிட்டது.

பண்டிகை நாள்களில் உள்ளூர் வணிகக் கடைகளில் சிலர் "இனாம்' கேட்பதுபோல், பயணிகளிடமும் அரசுப் போக்குவரத்துக் கழகம் கேட்கத் தொடங்கிவிட்டதா? என்று நினைக்கத் தோன்றுகிறது.

கட்டுரையாளர் : தி. நந்தகுமார்
நன்றி : தினமணி

ஏழையின் துன்பம்

உலகத்தில் உள்ள பெரும் பணக்காரர்களைப் பட்டியிலிட அமைப்புகள் இருக்கின்றன. அப்படிப் பணக்காரர்களை அடையாளம் காண்பதும் பட்டியலிடுவதும் மிகவும் சுலபமும்கூட. ஆனால் ஓர் ஏழை யார் என்று தீர்மானிப்பதுதான் மிகவும் கடினமான விஷயமாக இருக்கிறது. அதைத் தீர்மானிப்பவர்களும் ஏழையைப் பற்றி அதிகம் அறியாதவர்களாகவே இருக்கிறார்கள்.

வறுமைக் கோட்டிற்குக் கீழ் வாழ்பவர்கள் (ஆடக) யார் என்பதற்கான கணக்கெடுப்பை நடத்தும்போது யாரை வறுமைக் கோட்டிற்குக் கீழ் வாழ்பவராகக் கருதலாம், யாரை நீக்கிவிடலாம் என்பதற்கான சில வரையறைகளை மத்திய ஊரக மேம்பாட்டு அமைச்சகம் அண்மையில் அறிவித்துள்ளது.

இந்த வரையறைகள் பெரும்பாலும் ஒரு குடும்பத்தில் உள்ள வசதிகள் (டிவி. சமையல் இணைப்பு, மின்வசதி உள்பட), வருமானம், படித்தவர் எண்ணிக்கை, குடும்ப அங்கத்தினர் எண்ணிக்கை எனப் பலவாறாக நிர்ணயிக்கப்படுகிறது. இதற்கு மதிப்பெண் கொடுக்கப்படுகிறது. தாழ்த்தப்பட்ட வகுப்பினரா, மிகவும் பிற்படுத்தப்பட்டவரா, நிலமற்ற விவசாயக் கூலியா, சாதாரணத் தொழிலாளியா, சுயதொழில் செய்பவரா, வீட்டில் 5-வது வகுப்பு வரை படித்தவர்கள் எத்தனை பேர், யாருக்காவது டிபி, எய்ட்ஸ், ஊனம் உள்ளதா, குடும்பத்தலைவர் 60 வயதுக்கு மேற்பட்டவரா என்பது போன்ற கேள்விகளுக்கு மொத்தம் 20 மதிப்பெண் வழங்கி, 17 மதிப்பெண் கிடைத்தால் அவர் வறுமைக் கோட்டிற்குக் கீழ் உள்ளவர் என்று தீர்மானிப்பார்களாம். இந்த மதிப்பெண் முறை தவறானது என்று பொருளாதார நிபுணர்கள் எதிர்ப்புத் தெரிவிக்கிறார்கள்.

இது ஒருபுறம் இருக்கட்டும். வறுமைக் கோட்டிற்குக் கீழ் வராதவர் என்று நீக்கிவிடுவதற்கு ஐந்து வரையறைகள் தந்துள்ளனர். அவை: குடும்பத்தின் மாதச் சம்பளம் ரூ. 5,000-க்கு அதிகம், இரண்டு சக்கர வாகனம் வைத்திருத்தல், பண்ணை இயந்திரங்கள் வைத்திருத்தல், நிரந்தர வசிப்பிடம் இருத்தல், அந்த மாவட்ட விவசாயிகளுக்கான சராசரி நிலம் உடையவர் என இந்த ஐந்து வரையறையில் ஏதாவது ஒன்று இருந்தாலும் அவரை வறுமைக் கோட்டிற்குக் கீழ் சேர்க்கத் தேவையில்லை.

இதில் சிக்கலானதும், அனைவருடைய ஆட்சேபத்துக்குரியதுமான விவகாரம் ஒரு குடும்பத்தின் மாத வருவாய் ரூ. 5,000 என்று வரையறுக்கப்பட்டிருப்பதுதான். ஒரு கட்டடத் தொழிலாளிக்கு நாள்கூலி ரூ. 200 கிடைக்கிறது என்பதற்காக அவரது மாத வருவாயை ரூ. 6,000 என்று கணக்கிட்டு, அவரை ஏழைகள் பட்டியலிலிருந்து நீக்கிவிடுவது என்பது பேதைமையிலும் பேதைமை.

தற்போது தமிழக அரசின் கலைஞர் காப்பீட்டுத் திட்டத்துக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள ஆண்டுவருவாய் ரூ. 72,000-க்கு மிகாமல் இருக்க வேண்டும் என்ற கணக்கீடும் இந்த அடிப்படையில்தான் என்பதைப் பார்க்கும்போது, வேதனையாக இருக்கிறது.

ஒருவர் நிரந்தரமான வேலையில் இருக்கிறாரா, தாற்காலிக வேலையில் ஈடுபடுகிறாரா, அவரது தொழில் பருவகாலத்தைச் சார்ந்ததா அல்லது தினமும் செய்யக் கூடியதா, அவருக்கு வேலை கிடைக்காத நாள்கள் எத்தனை என்பதையெல்லாம் நிதானமாகக் கணக்கிட்டு, அந்தக் குடும்பத்தின் வருவாயைத் தீர்மானிக்கும் பொறுமை, அங்கே கணக்கெடுக்க வருபவருக்கு இருக்குமா என்பது சந்தேகம்தான். அவர்களாகத் தோராயமாக வருமானத்தை எழுதிக்கொள்வதுதான் நடைமுறையாக இருக்கிறது. கணவன் மனைவி இருவரும் சித்தாள் வேலைக்குப் போவதாகச் சொன்னால், உடனே அந்தக் குடும்பம் வறுமைக்கோட்டிற்கு மேலே போய்விடும்!

ஓர் ஏழையை "வறுமைக் கோட்டிற்குக் கீழ்' தள்ளிய பெருமை அமெரிக்கக் கலாசாரத்துக்குச் சொந்தமானது. நான்கு பேர் உள்ள ஒரு குடும்பம் ஆடம்பரமில்லாத, குறிப்பிட்ட கலோரி உணவுக்காக மாதம் எத்தனை ரூபாய் செலவிடுமோ அந்தத் தொகையின் மூன்று மடங்கு தொகையை வறுமைக் கோட்டிற்குக் கீழ் வாழ்பவருக்கான வருமானமாகத் தீர்மானிப்பது அமெரிக்கப் பொருளாதாரம். அவர்களைப் பொருத்தவரை உணவு, மருத்துவம், கல்வி ஆகிய மூன்றும்தான் வாழ்க்கைச் செலவு. அதற்காக வருவாயை மூன்று சமபங்குகளாகப் பிரித்துக் கணக்கிடப்படுகிறது.

இந்திய வாழ்க்கை முறை வேறானது. இங்கே கொடுக்கப்படும் முன்னுரிமைகளும் வேறானவை. இங்கே ஒரு குடும்பத்தில் ஒரு பெண் குழந்தை பிறந்தவுடனே சேமிக்கத் தொடங்கினால்தான் கல்யாணம் செய்துதர முடியும். அரசுப் பள்ளிகளில் கல்வி இலவசமாக இருக்கலாம். ஆனாலும் குழந்தை ஈட்டும் வருமானம் குடும்பத்துக்கே அவமானம் என்று ஏற்று, ஒரு சிறு வருமானத்தை இழந்தால்தான் ஒரு குழந்தைக்குக் கல்வி வாய்ப்பே கிடைக்கும். ஏறக்குறைய எல்லா வீடுகளிலும் அரசு வழங்கிய இலவச டிவி இருக்கிறது. இந்த டிவிகளில் சீரியல் பார்க்க வேண்டுமானால் கேபிள் கட்டணங்கள் கட்ட வேண்டும். அதற்கு மின்கட்டணம் செலுத்த வேண்டும். தொழில் செய்வதற்காக ஓர் இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்குச் செல்வதற்கு ஆகும் போக்குவரத்துச் செலவுகள் எல்லாம் தனிச்செலவுகள். ஏழைகளின் நல்வாழ்வுக்காகத் திறக்கப்பட்டுள்ள அதிக லாபத்தில் விற்கப்படும் மதுபான-மருந்து?-கடைகள் வேறு! ஓர் ஏழை எப்போதும் ஏழையாக இருப்பதற்கான எல்லாச் சூழலையும் ஏற்படுத்திவிட்ட பின்னர், எதற்காக இந்த வருமான வரம்புகள்?

வறுமைக் கோட்டிற்குக் கீழ் உள்ளவர்களுக்கு மட்டுமே அரசின் சலுகைகள் வழங்கப்படுகிறது என்பதால்தான் இவ்வளவு கறாராக வருமானத்தைத் தீர்மானிக்கிறார்கள். இன்றைய விலைவாசியில் குடும்பத்தின் ஆண்டு வருவாய் ரூ. 1 லட்சம் என்றாலும் வறுமைக் கோட்டிற்குக் கீழ் வாழ்பவர்கள்தான் என்பதை ஏன் அரசு நினைக்க மறுக்கிறது.
அமைச்சகம் தந்துள்ள இன்னொரு சலுகை: யார் ஏழை என்பதைத் தீர்மானிப்பதில் அந்தந்தப் பஞ்சாயத்து அல்லது கிராமசபை தீர்மானிக்கலாம் என்பதுதான். இந்த வரத்தை அனைத்துப் பஞ்சாயத்துகளும் சரியாகப் பயன்படுத்திக்கொள்ளும் - விழிப்புணர்வை ஏற்படுத்தினால், ஏழைகளுக்குக் கிடைக்க வேண்டிய சலுகைகள் தொடர்ந்து கிடைக்கும்.
நன்றி : தினமணி

பெல் நிறுவனத்தின் 2ம் காலாண்டு நிகர லாபம் அதிகரிப்பு

பெல் நிறுவனத்தின் இரண்டாம் காலாண்டு நிகர லாபம் அதிகரித்துள்ளது. பாரத் ஹெவி எலக்ட்ரிகல்ஸ் லிமிடெட்(பெல்) நிறுவனத்தின் செப்டம்பர் 30ம் தேதியுடன் முடிந்த இரண்டாம் காலாண்டு நிகர லாபம் அறிவிக்கப் பட்டுள்ளது. இதில், அந்நிறுவன நிகர லாபம் 39 சதவீதம் அதிகரித்துள்ளது. கடந்த 2008ம் ஆண்டு, செப்டம்பர் மாதம் 30ம் தேதியுடன் முடிந்த இரண்டாம் காலாண்டு கணக்கெடுப்பில் நிறுவனத்தின் நிகர லாபம் 615.77 கோடி ரூபாயாக இருந்தது. இது இந்தாண்டு 857.88 கோடி ரூபாயாக உள்ளது. செப்டம்பர் 30ம் தேதியுடன் முடிந்து இரண்டாம் காலாண்டு கணக்கெடுப்பில் மொத்த வருமானம் 6,923.02 கோடியாக உள்ளது. இது கடந்த ஆண்டு 5649.84 கோடி ரூபாயாக இருந்தது.
நன்றி : தினமலர்


மீண்டும் எழுச்சி பெறுகிறது ரியல் எஸ்டேட் துறை

கடந்த மூன்று மாதங்களாக 30 லட்சத்திற்கும் மேல் குறைவான விலை கொண்ட அடுக்குமாடி குடியிருப்புகள் விற்பனை சிற்ப்பான அளவில் அதிகரித்து வருகிறது. இதனால், ரியல் எஸ்டேட் துறை மீண்டும் எழுச்சி பெற்றுவதுடன், அதிக வருமானத்தையும் ஈட்ட தொடங்கி உள்ளது. கடந்த 2008ம் ஆண்டு உலக அளவில் ஏற்பட்ட கடும்‌ பொருளாதார நெருக்கடி காரணமாக, அனைத்து தொழில் துறைகளும் கடும் விழுச்சியை சந்தித்தன. இதில் ரியல் எஸ்டேட் துறையும் தப்பவில்லை. அந்த நேரத்தில், ரியல் எஸ்டேட் துறை கடும் வீழ்ச்சியை சந்தித்தது.
இந்நிலையில், தற்போது மீண்டும் ரியல் எஸ்டேட் துறை எழுச்சி பெற்று வருகிறது. சென்ற செப்டம்பர் மாதம் வரையிலான ஆறு மாத காலத்தில், நாட்டில் 7 கோடி சதுர அடி பரப்பளவு அடுக்குமாடி குடியிருப்புகள் விற்பனையாகி உள்ளன. இவற்றில் 75 சதவீதம் 30 லட்சத்திற்கும் குறைவானதாகும்.
நடப்பு 2009-10-ஆம் நிதி ஆண்டில் விற்பனையாகும் வீடுகளின் பரப்பளவு 19 கோடி சதுரஅடியைத் தாண்டிவிடும் என முன்னணி ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் கருத்து தெரிவித்துள்ளன.

நன்றி : தினமலர்