அண்மைக்காலமாக லஞ்சம் வாங்கியதாக அரசு அலுவலர்கள் கைது செய்யப்படுவது செய்தித்தாள்களிலும், ஊடகங்களிலும் அடிக்கடி இடம்பெறும் செய்தியாகிவிட்டது. லஞ்சம் தொடர்பாக எப்போதாவது ஒருவர் பிடிபட்ட காலம்போய் இன்று தினம் ஒருவர் கைதுசெய்யப்படும் நிலை. ஆடிய காலும் பாடிய வாயும் சும்மாயிருக்காது என்பதுடன் இனி வாங்கிய கையும் சும்மாயிருக்காது என சேர்த்துக் கொள்ளலாம்.
லஞ்சம் வாங்கியவர்களைப் பட்டியலிட்டுப் பார்த்தால், இந்தத் துறைதான் என்பது இல்லாமல் லஞ்சம் அனைத்துத் துறைகளிலும் நீக்கமற நிறைந்திருக்கிறது என்பது புரியும்.
தங்கள் தேவைகளுக்காக அரசு அலுவலகங்களை அணுகும் பொதுமக்கள் லஞ்சம் கொடுக்க இயலாமலோ, விரும்பாமலோ ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு காவல் துறையினரிடம் புகார் செய்து, அத்தகைய ஊழியர்களைச் சிக்கவைக்கும் சம்பவங்கள் அதிகரித்துள்ளன.
இது பொதுமக்களிடையே லஞ்சம் குறித்த விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளதையே காட்டுகிறது. எனினும் லஞ்சம் கொடுப்பது தவறு என்னும் விழிப்புணர்வு முழு அளவில் ஏற்படவில்லை என்பதே உண்மை.
லஞ்சம் கேட்கும் அதிகாரிகளையோ, ஊழியர்களையோ காட்டிக் கொடுத்தால் தனக்கு ஆகவேண்டிய காரியம் தடைபட்டுவிடுமோ என்ற ஐயமும், அச்சமுமே மேலோங்க, எவ்வளவோ செலவாகிறது ஒரு ஐநூறு, ஆயிரம் கொடுப்பதால் நமது வேலை பிரச்னை இல்லாமல் முடிந்தால் சரிதான் என எண்ணும் பொதுமக்களாலேயே லஞ்சம் லஜ்ஜையின்றி முளைவிடத் தொடங்குகிறது. பிறகு அதை நீருற்றி, வாடவிடாமல் வளர்ப்பது அத்தகைய அலுவலர்களின் பணியாகிவிடுகிறது.
சமூகத்தின் அடித்தட்டில் அன்றாடம் பிடிசோற்றுக்கு ஏங்குவோர் ஐந்துக்கும் பத்துக்கும் அடிமைகளைப்போல உழைத்து ஓடாய்த் தேய்வதைப் பார்க்கலாம்.
ஆனால், அரசாங்கப் பணி கிடைத்துவிட்ட ஒரே காரணத்துகாக குளிரூட்டப்பட்ட அறையில் வியர்க்காமல் வேலைபார்க்கும் இவர்களுக்கு, அரசு பல்லாயிரக்கணக்கில் ஊதியத்தை அள்ளி வழங்கினாலும், சிறிதும் வெட்கமின்றி புன்னகை முகத்துடன் தலை சொறிந்தபடியோ, இறுகிய முகத்துடன் வலுக்கட்டாயமாகவோ லஞ்சம் பெறுவது தவறென்பது உரைப்பதில்லை.
லஞ்சம் வாங்கியதாகக் கைதாகும் பலரும் வறுமையில் வாடிக்கொண்டிருப்போராகத் தெரியவில்லை. சொந்த வீடு, மனை, கார் என சகல வசதியுடன் சமூகத்தில் நல்ல அந்தஸ்து உள்ளவர்களாகவே தென்படுகின்றனர். அவர்கள் லஞ்சம் வாங்கியே இவ்வளவு வசதிபெற்றனரா அல்லது உயரும் விலைவாசியைத் தான் மட்டுமன்றி, தனது பல தலைமுறையும் சமாளிக்க வேண்டும் என்ற தொலைநோக்குத் திட்டத்துடன் லஞ்சம் வாங்கினரா என்பது முட்டையிலிருந்து கோழியா, கோழியிலிருந்து முட்டையா என்பதுபோல விடைதெரியாத கேள்வியாகிவிடும்.
ஆனால், இதுபோன்ற பேர்வழிகள் அனைவருமே நினைக்கும் ஒன்று, லஞ்சம் வாங்கினால் தாங்களும் கவலைகளின்றி ராசாபோல வாழலாம் என்பதே!
பலநாள் அதிர்ஷ்டம், ஒருநாள் துரதிர்ஷடமாக மாறிவிடும்போது அவர்கள் கைதுசெய்யப்படுகின்றனர். ஆனால், கைதாகி அழைத்துச் செல்லப்படும்போது சிலர் வெற்றிப்புன்னகை சிந்துவதைப் பார்க்கலாம். எப்படியும் வழக்கு தனக்குச் சாதகமாகவே முடியும், இறுதியில் "தர்மத்தின் வாழ்வுதன்னைச் சூது கவ்வும், தர்மம் மறுபடியும் வென்றது' என்ற டயலாக் பேச தனக்கும் ஒரு வாய்ப்புக் கிட்டும் என்பதாக இருக்கலாம்.
சிலரோ முகத்தை மூடியபடி செல்வதைப் பார்க்கலாம். அதற்கு, இந்தத் துறையில் இருந்துகொண்டு இவ்வளவு குறைந்த தொகைக்காக சிக்கிக் கொண்டோமே என்ற வெட்க உணர்வும் காரணமாக இருக்கலாம்.
"ஆணுக்கிங்கே பெண் இளைப்பில்லை காண்' என்று கும்மியடிக்கக் கூறினான் எட்டையபுரத்து எரிமலை. இருபத்தியோராம் நூற்றாண்டில் ஆண்களுக்கு நிகராக பெண்கள் அனைத்துத் துறைகளிலும் முன்னேறிவிடுவர், லஞ்சம் வாங்குவதில் அவர்கள் 33 அல்ல, 50 சதவிகித பங்கு வகிக்கும் காலம் வரும் எனத் தெரிந்துதான் பாரதி இப்படி பாடினானோ?
லஞ்சம் வாங்கியதாகக் கைதுசெய்யப்படும் பலரையும் பத்திரிகைகளும், ஊடகங்களும் போட்டிபோட்டுக் கொண்டு அன்றைய தினத்தில் மட்டும் முடிந்தளவு முக்கியச் செய்தியாக்கிவிட்டு தொடரும் சில நாள்களில் மறந்துவிடுவதும் வாடிக்கையாகிவிட்டது. விளைவு, அந்த நபர் தன் மீதான குற்றச்சாட்டையோ, வழக்குகளையோ "எதிர்கொள்ளும்விதமாய்' எதிர்கொண்டு, சில நேரங்களில் அதே துறையிலோ, வேறு துறையிலோ பதவி உயர்வுடன் மீண்டும் மக்களுக்கு வழக்கம்போலப் பணியாற்றும் வாய்ப்புபெறும் அதிர்ஷ்டத்துக்கு உள்ளாகும் சம்பவங்களும் நிகழ்ந்துவிடுகின்றன. சிக்கிய லஞ்சப் பணம் சாட்சி சொல்ல வருவதில்லை. அதில் சிரித்தபடியிருக்கும் காந்தியும் சாட்சி சொல்ல வருவதில்லை.
அவர்கள் விஷயத்தில் ஒருவேளை "இன்னாசெய் தாரை ஒறுத்தல் அவர்நாண நன்னயம் செய்து விடல்' என்பது கடைப்பிடிக்கப்படுகிறதோ என எண்ணத் தோன்றுகிறது.
கைதாகும் ஊழியர்கள் மீது இடைநீக்கம், துறைரீதியான விசாரணை என்பன போன்ற நடவடிக்கைகள் எல்லாம் வெறும் கண்துடைப்போ என நினைக்க வைக்கத் தக்கவிதத்திலேயே அமைந்துள்ளன.
நேர்மையான விசாரணை, தாமதமில்லா தீர்ப்பு, சிறை, வேலைபறிப்பு போன்ற கடுமையான தண்டனைகளை அமல்படுத்தாதவரை லஞ்சம் வாங்குவோர் எதுகுறித்தும் கவலைப்படப்போவதில்லை.
அரசை ஒரு மரம் எனக் கொண்டால் அனைத்துத் துறைகளும் கிளைகளுக்கு ஒப்பாகும். எல்லாக் கிளைகளிலுமே லஞ்சம் என்ற கரையான் தன் கைவரிசையைக் காட்டுவது இயற்கைதான். தாமதமின்றி நடவடிக்கை எடுத்து அவற்றை முற்றிலும் ஒழித்தால்தான் மரமும் வளம்பெறும்; மரத்தின் நிழலைப் பாதுகாப்பு என நம்பி நிற்கும் மக்களும் நிம்மதியாய் நலம்பெறுவர்!
கட்டுரையாளர் :மா. ஆறுமுககண்ணன்
நன்றி : தினமணி
Sunday, August 15, 2010
Subscribe to:
Posts (Atom)