Tuesday, August 4, 2009

துறைமுக முன்னாள் தலைவர் வீட்டில் கிலோகணக்கில் தங்கம் : சி.பி.ஐ., விசாரணை தொடர்கிறது

சென்னை துறைமுக பொறுப்புக்கழக முன்னாள் தலைவர் சுரேஷ். வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்ததாக இவர் மீது புகார் எழுந்ததையடுத்து. அவரது வீட்டில் சி.பி.ஐ., அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். காலை முதல் நடந்து வரும் இந்த விசாரணைக்கு சுரேஷ் முழு ஒத்துழைப்பு அளித்து வருவதாக கூறப்படுகிறது. மேலும் அவரது வீட்டில் இருந்து 3 கிலோ தங்கம், 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அமெரிக்க டாலர்கள் உள்ளிட்ட ரூ.2 கோடிக்கும் அதிகமான சொத்துக்களை கைப்பற்றி, அதுகுறித்து சி.பி.ஐ., அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நன்றி : தினமலர்

அணுகுமுறை சரியில்லை...!

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தில் தவறே செய்ய முடியாது, அந்த அளவுக்கு நிலையான, மாற்றமுடியாத மென்பொருள்கள் இந்த இயந்திரத் தயாரிப்பின்போதே உள்ளுக்குள் அமைக்கப்படுகின்றன என்று சொல்லி, "தில்லுமுல்லு செய்யமுடியும் என்பதை நிரூபித்துக் காட்டுங்கள் பார்க்கலாம்' என்று தேர்தல் ஆணையம் சவாலுக்கு அழைத்துள்ள வேளையில், ஒரிசா மாநிலத்தில் ஒரு தன்னார்வ அமைப்பு அதை நிரூபித்தே காட்டிவிட்டது.

புவனேஸ்வரத்தைச் சேர்ந்த ஜன சைத்திரிய வேதிகா என்ற அமைப்பினர் இதைச் செய்து காட்டியுள்ளனர். முன்னாள் நீதிபதிகள், பத்திரிகையாளர்கள், அரசியல் தலைவர்கள் முன்னிலையில் செயல்விளக்கம் நடத்தி, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் தில்லுமுல்லு செய்ய முடியும் என்பதை நிரூபித்துள்ளனர்.

தேர்தல் ஆணையம் குறிப்பிடுவதைப் போல, இந்த மென்பொருள்கள் மாற்றவியலாத தன்மையுடன் தயாரிப்பிலேயே உள்ளுக்குள் பொருத்தப்பட்டிருப்பது உண்மைதான். அடிப்படையான மென்பொருள் மாற்றம் இல்லாமல் இருக்கலாம். ஆனாலும், ஒவ்வொரு தொகுதியிலும் போட்டியிடுவோர் எண்ணிக்கை மாறுகிறது. அவர்களுக்கான சின்னங்கள் தனித்தனியாக உள்ளன. சின்னங்களுக்கான தகவல் இணைப்பை மென்பொருளுடன் சேர்க்கும் பணி மாவட்ட அளவிலான அதிகாரிகளின் பொறுப்பில்தான் நடைபெறுகிறது.

பதிவு செய்யும் பொத்தானுக்கு அருகில் ஒரு கட்சியின் சின்னம் வெளிப்பார்வைக்கு பதிவு இயந்திரத்தில் தெரிந்தாலும், அதை அழுத்தினால் வேறு சின்னத்துக்கு வாக்குப் போய்ச் சேரும்படியாக இணைப்பை மாற்றித் தருவதற்கோ, அல்லது இரண்டாவது அணியின் சின்னத்தில் விழும் வாக்குகள் மூன்றாவது அணிக்கும், மூன்றாவது அணி சின்னத்தின் வாக்குகள் இரண்டாவது அணிக்கும் விழும்படியாக மாற்றி அமைக்கவோ அதிகாரிகள் நினைத்தால் முடியாதா என்பதே சில அரசியல் கட்சிகள் கேட்கும் அடிப்படையான கேள்வி.

நியாயமாக, இத்தகைய செயல்விளக்கத்தை அரசியல் கட்சிகள்தான் செய்துகாட்டியிருக்க வேண்டும். தோல்வியால் முகம் சுணங்கிப் போகிற அவர்கள்தான் இதில் அதிக அக்கறையும் ஆர்வமும் காட்டியிருக்க வேண்டும். ஆனால் தன்னார்வ அமைப்பு இந்த விஷயத்தைக் கையில் எடுத்துக்கொள்ளும் நிலையில் அரசியல் சூழல் உள்ளது.

வாக்குப் பதிவுக்கு வந்து இறங்குவது முதலாக வாக்குப்பதிவு நடந்து இயந்திரங்கள் மீண்டும் பொது இடத்தில் சேகரிக்கப்படுவது வரையிலும் எந்தெந்த நிலைகளில் எப்படியெல்லாம் தில்லுமுல்லு நடைபெற வாய்ப்பு உள்ளது என்பதை செயல்விளக்கம் செய்து காட்டும் பொறுப்பு அரசியல் கட்சிகளுக்கு உள்ளது. அப்போதுதான் அந்தத் தவறுகள் நேராதபடி மாற்று நடைமுறைகளை தேர்தல் ஆணையம் உருவாக்க முடியும்.

பாஜக தமிழ் மாநிலத் தலைவர் இல. கணேசன் ஓர் ஆக்கபூர்வமான யோசனையை முன்வைத்திருக்கிறார். மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் ஒரு வாக்காளர் தான் தேர்வு செய்யும் சின்னத்திற்கான பொத்தானை அழுத்தியதும் வாக்குப்பதிவு நடப்பதோடு, அச் சின்னம் பொறித்த சீட்டும் (பிரின்ட்-அவுட்) அச்சாகி வெளிவரும் வசதி இருந்தால், அந்தத் துண்டுச்சீட்டை பார்த்தவுடன் தனது சின்னத்துக்குத்தான் வாக்கு அளித்தோம் என்ற மனநிறைவை வாக்காளர் பெற முடியும். அதேநேரத்தில், அந்த துண்டுச்சீட்டை வாக்குப்பெட்டியில் போடச் செய்தால், இயந்திரக்கோளாறு அல்லது தில்லுமுல்லு புகார்கள் வரும்போது அந்தச் சீட்டுகளையும் எண்ணிப் பார்த்து வாக்குச்சாவடி வாரியாக, கணினி மற்றும் சீட்டு எண்ணிக்கையைச் சரிபார்க்க முடியும். சாதாரண மளிகைக் கடை ரசீது போல, பேருந்து நடத்துநர் தரும் டிக்கெட் போல மிக எளிய, அதிக செலவில்லாத தொழில்நுட்பம்.

தற்போது அந்தந்த மாவட்ட ஆட்சியர்தான் மாவட்டத் தேர்தல் அலுவலராகவும் இருக்கிறார். பொதுத்தேர்தலின்போது தேர்தல் பார்வையாளர்களை பிற மாநிலங்களிலிருந்து வரவழைப்பதைப் போல, மாவட்டத் தேர்தல் அலுவலர்களாகப் பிற மாநில ஐஏஎஸ் அதிகாரிகளை நியமிக்கும் புதிய மாற்றத்தையும் அரசியல் கட்சிகள் வலியுறுத்த வேண்டும். கடைசி ஒரு மணி நேரத்தில் அதிக எண்ணிக்கையில் வாக்காளர்கள் வந்தால், வாக்குப் பதிவு முடியும் வரை காத்திருக்காமல், 5 மணி வரை வாக்குச் சாவடிக்குள் வந்துள்ளவர்களின் எண்ணிக்கையை மாவட்டத் தேர்தல் அலுவலரிடம் தெரிவித்துவிட்டு, வாக்குப்பதிவை நிதானமாகச் செய்துகொள்ளும் திட்டத்தையும் உருவாக்க வேண்டும்.

குறைகள் சொல்லப்படும்போது அதற்கான வாய்ப்புகளை அலசிப் பார்ப்பதும், பல்துறை வல்லுநர்களின கருத்துகளை அறிவதும்தான் தேர்தல் ஆணையத்தின் பணியாக இருக்க வேண்டும். மாறாக, நிரூபித்துக் காட்டுங்கள் என்று சவால் விடுவது முறையான அணுகுமுறை அல்ல.
நன்றி : தினமணி

ஹூண்டாய் மோட்டாஸில் ஆகஸ்டு மாதத்தில் 1,000 பேருக்கு வேலைவாய்ப்பு

இந்தியாவின் இரண்டாவது மிகப் பெரிய கார் தயாரிப்பு நிறுவனமான ஹூண்டாய் மோட்டார் இந்தியா, இம்மாதத்தில் புதிதாக 1,000 பணியாளர்களை தேர்ந்தெடுக்க திட்டமிட்டுள்ளது. மேலும் வரும் செப்டம்பர் மாதத்திலிருந்து தொழிற்சாலைகளின் உற்பத்தி திறனை சுமார் 20 சதவீதம் அதிகரிக்கவும் முடிவு செய்திருக்கிறது. வெளிநாடுகளில் இந்நிறுவனத்தின் கார்களுக்கான தேவை அதிகரித்து வருவதையடுத்து மேற்கண்ட நடவடிக்கைகளில் இறங்க உள்ளது. ஹூண்டாய் நிறுவனம், சென்னையில் உள்ள இரண்டு தொழிற்சாலைகளில் ஏற்கனவே ஜூலை மாதத்திலிருந்து அதன் கார்கள் உற்பத்தியை சுமார் 25 சதவீதமும், பணியாளர்களின் எண்ணிக்கையை 1,000-த்துக்கும் அதிகமான அளவிலும் உயர்த்தியுள்ளது. சென்ற மாதத்தில் உற்பத்தி உயர்ந்த பிறகு, இந்நிறுவனம் நாள் ஒன்றுக்கு சுமார் 2,000 கார்களை தயாரித்து வருகிறது. இரண்டாவது தொழிற்சாலையில் மூன்றாவது ஷிஃப்ட் தொடங்கும்போது நாள் ஒன்றுக்கு மேலும் 400 கார்களை தயாரிக்க இயலும். நடப்பு ஆகஸ்டு மாதத்தில் மேலும் 1,000 புதிய பணியாளர்களை நியமிக்கும் பட்சத்தில், நிறுவனத்தின் மொத்த பணியாளர்களின் எண்ணிக்கை 12,000 என்ற அளவை தாண்டும் என ஹூண்டாய் இந்தியா நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை செயல் அதிகாரி எச்.எஸ்.லீம் தெரிவித்தார்.
நன்றி : தினமலர்


அடுத்த வருடத்தில் இருந்து வருடத்திற்கு 200 டன் தங்கத்தை விற்க ஐ.எம்.எப்., முடிவு

சர்வதேச அளவில் தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. விலை உயர்வை கருத்தில் கொண்டு, ஆண்டுக்கு 200 டன் தங்கத்தை விற்பனை செய்ய சர்வதேச நிதியமைப்பு (ஐஎம்எப்) திட்டமிட்டுள்ளது.
இப்போது லண்டன் சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 935.32 டாலராக இருக்கிறது. இது தொடர்ந்து அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கிறார்கள். 2010ம் ஆண்டின் முதல் ஆறு மாதத்தில் அது 1000 டாலரைத் தாண்டும் என்கிறார்கள். விலை உயர்ந்து வருவதால் அடுத்த ஆண்டு முதல் ஆண்டுக்கு 200 டன் தங்கத்தை விற்க ஐஎம்எப் திட்டமிட்டுள்ளது. எனினும், அடுத்த ஆண்டின் பிற்பாதியில் அவுன்ஸ் தங்கத்தின் விலை 850 டாலராகத்தான் இருக்கும் என்று சிட்டி குழுமத்தின் ஆய்வாளர் ஆலன் ஹீப் கூறியுள்ளார். அக்டோபர் மாதம் நடைபெற உள்ள வருடாந்திர கூட்டத்துக்கு முன்பே தங்கம் விற்பதற்கு ஐஎம்எப் வாரியம் ஒப்புதல் வழங்கும் என்று அதன் திட்டமிடுதல் மற்றும் மறு ஆய்வு பிரிவு இயக்குநர் ரெஸா மொகதம் தெரிவித்துள்ளார். 403 டன் தங்கம் விற்பனை செய்வதற்கு அமெரிக்க அரசு கடந்த மாதம் ஒப்புதல் வழங்கியது குறிப்பிடத்தக்கது. அமெரிக்கா, ஜெர்மனிக்கு அடுத்தபடியாக, ஐஎம்எப் அமைப்பிடம் 3,217 டன் தங்கம் இருப்பு உள்ளதாக லண்டனைச் சேர்ந்த ஜிஎப்எம்எஸ் ஆய்வு நிறுவன புள்ளி விவரம் கூறுகிறது. உலக நாடுகளின் ரிசர்வ் வங்கிகள் கடந்த ஆண்டில் 246 டன் தங்கத்தை விற்பனை செய்துள்ளன.
நன்றி : தினமலர்