Monday, April 6, 2009

நானோ காரை விட அதிக விலையுள்ள நாய்

டாடாவின் நானோ கார் ஒரு லட்சம் ரூபாய்க்கு கொடுக்கப்படும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. இதர வரிகள் எல்லாம் சேர்த்தால் ரூ.ஒரு லட்சத்தை விடவும் கொஞ்சம் அதிகம் வரும் என்று சொன்னாலும், அதன் எக்ஸ் ஃபேக்டரி விலை ரூ. ஒரு லட்சம் தான். ஆனால் அதைவிடவும் அதிக விலையில் விற்கப்படும் பொருட்கள் எவ்வளவோ இருக்கின்றன. அதில் ஒன்று இந்த வகை நாய். ' பிரஞ்ச் மஸ்டிப் ' என்ற இந்த வகை நாய் குட்டிகளில் விலை சந்தையில் ரூ.1,16,000 க்கும் அதிகம் என்று சொல்லப்படுகிறது.
நன்றி : தினமலர்


இன்றும் ஏற்றத்தில் முடிந்த பங்கு சந்தை

பங்கு சந்தையில் இன்று முழுவதும் ஏற்ற நிலையிலேயே இருந்த சென்செக்ஸ் மற்றும் நிப்டி, முறையே 10,500 புள்ளிகளுக்கு மேலும் 3,250 புள்ளிகளுக்கு மேலும் சென்று முடிந்திருக்கிறது. நிப்டி தொடர்ந்து உயர்ந்து வருவதை அடுத்து பங்கு சந்தை நிபுணர் அஸ்வானி குஜ்ரால் கருத்து தெரிவிக்கையில், இப்போது நிப்டி 3,100 - 3,150 புள்ளிகளை தக்க வைத்துக்கொண்டிருப்பதால், அது மேலும் உயர்ந்து 3,700 புள்ளிகள் வரை வந்து விடும் என்றார். இன்றைய வர்த்தகத்தின் போது மெட்டல், கேப்பிட்டல் குட்ஸ், ஆட்டோ, ரியல் எஸ்டேட், மற்றும் பேங்கிங் பங்குகள் பெருமளவில் வாங்கப்பட்டன. இன்று ஆசிய மற்றும் ஐரோப்பிய சந்தைகளும் உயர்ந்திருந்தன. மும்பை பங்கு சந்தையில் சென்செக்ஸ் 186.04 புள்ளிகள் ( 1.80 சதவீதம் ) உயர்ந்து 10,534.87 புள்ளிகளில் முடிந்திருக் கிறது. தேசிய பங்கு சந்தையில் நிப்டி 45.55 புள்ளிகள் ( 1.42 சதவீதம் ) உயர்ந்து 3,256.60 புள்ளிகளில் முடிந்திருக் கிறது. இன்றைய வர்த்தகத்தில் அதிகம் லாபம் சம்பாதித்தது எம் அண்ட் எம் ( 14.26 % ), ரிலையன்ஸ் கம்யூனி கேஷன் ( 11.19 % ), எல் அண்ட் டி ( 7.40 % ), ஹெச்.டி.எஃப்.சி. ( 7.37 %), மற்றும் ரிலையன்ஸ் இன்ப்ரா ( 6.47 % ) நிறுவனங்கள் தான்.
நன்றி : தினமலர்


கடனை அடைக்க நிதி திரட்டுவதை தள்ளிப்போட்டது டாடா மோட்டார்ஸ்

வங்கியில் வாங்கியிருக்கும் ' பிரிட்ஜ் லோனை ' அடைப்பதற்காக 2 பில்லியன் டாலர்கள் நிதியை திரட்ட தீர்மானித்திருந்த டாடா மோட்டார்ஸ், அந்த திட்டத்தை தள்ளி வைத்திருக்கிறது. டாடா நிறுவனங்களின் பங்குகளை வெளிநாடுகளில் விற்பனை செய்தும், சில முதலீடுகளை விற்பனை செய்தும் 2 பில்லியன் டாலர்களை திரட்டி, ஜாகுவார் மற்றும் லேண்ட்ரோவர் கார் கம்பெனிகளை வாங்கியதற்கு வாங்கியிருக்கும் கடனை அடைக்க எண்ணியிருந்த டாடா மோட்டார்ஸ், அந்த திட்டத்தை இப்போது தள்ளி வைத்திருக்கிறது. அமெரிக்காவின் ஃபோர்டு மோட்டார் கம்பெனியிடம் இருந்த பிரிட்டிஷ் சொகுசு கார் கம்பெனிகளான ஜாகுவார் மற்றும் லேண்ட் ரோவரை வாங்க, டாடா மோட்டார்ஸ் 3 பில்லியன் டாலர்களை வங்கியில் ' பிரிட்ஜ் லோனாக ' வாங்கியிருந்தது. அதில் ஒரு பில்லியன் டாலரை திருப்பி கொடுத்து விட்டது. டாடா ஸ்டீல் மற்றும் டாடா டெலி சர்வீசஸின் பங்குகளை மற்ற டாடா நிறுவனங்களுக்கு விற்றுதான் டாடா மோட்டார்ஸ் ஒரு பில்லியன் டாலரை திரட்டி வங்கியில் கட்டியது. இன்னும் 2 பில்லியன் டாலரை ஜூன் ஒன்றாம் தேதிக்குள் செலுத்த வேண்டும். இப்போது அதற்காக நிதி திரட்டுவது தள்ளி வைக்கப்பட்டிருப்பதால், அந்த வங்கியில் சொல்லி, பிரிட்ஜ் லோனையே ' டர்ம் லோனாக ' மாற்றி கொடுக்கும்படி கேட்டிருக்கிறது. இப்போது உலக பொருளாதாரம் மந்த நிலையில் இருப்பதால், தேவையான மீதி பணம் 2 பில்லியன் டாலர்களை இப்போது திரட்டுவது கஷ்டம் என்று டாடா மோட்டார்ஸ் கருதுகிறது. எனவே தான் அந்த முயற்சியை கைவிட்டு விட்டு, பேங்கிலேயே பேசி, பிரிட்ஜ் லோனை டர்ம் லோனாக மாற்ற முயன்று வருகிறது.
நன்றி : தினமலர்


ஜி - 20 மாநாடு ஒரு திருப்புமுனையாக இருந்தது : ஒபாமா

சர்வதேச நிதி பிரச்னையை தீர்க்க, ஜி - 20 நாடுகள் ஒன்றுபட்டு, ஒரு ஒப்பந்தத்திற்கு வந்ததை அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா வெகுவாக பாராட்டினார். மேலும், அங்கு செய்யப்பட்ட ஒப்பந்தம், பிரச்னையை தீர்க்க ஒரு திருப்புமுனையாக அமைந்தது என்றார். இரு நாட்கள் நடந்த மாநாட்டில், உறுப்பு நாடுகள் கஷ்டப்பட்டு உழைத்து ஒரு திட்டத்தை கொண்டு வந்து அதை நிறைவேற்றி, அதன் மூலம் உலக பொருளாதார சீர்குழைவுக்கு ஒரு தீர்வு கண்டிருக்கிறார்கள் என்று அவர் பாராட்டினார். உலக பொருளாதாரம் வீழ்ந்து விடாமல் தடுக்க உலக பொருளாதார நாடுகள் எல்லாம் ஒன்று கூடி ஒத்துழைத்தது பாராட்டத்தக்கது என்றார். எல்லா நாட்டு வங்கிகளும் வீழ்ச்சியில் இருந்து எழுந்து வந்து, மீண்டும் கடன் கொடுக்க வேண்டும் என்பதற்காக நாங்கள் எல்லோருமாக சேர்ந்து கடினமாக உழைத்துக்கொண்டிருக்கிறோம். நாங்கள் எல்லோரும் பொருளாதாரத்தை மேம்படுத்தவும் மீண்டும் வேலைவாய்ப்பை உண்டாக்கவும் முயற்சி மேற்கொண்டு வருகிறோம் என்றார். உலக பொருளாதாரத்துடன் பின்னிப்பிணைந்தது தான் அமெரிக்க பொருளாதாரம். எனவே அமெரிக்க பொருளாதாரத்தை சரிசெய்ய வேண்டுமானால், உலக பொருளாதாரம் சரியாக வேண்டும் என்றார் ஒபாமா.
நன்றி : தினமலர்


ஐ.எம்.எஃப்., வைத்திருக்கும் தங்கத்தை விற்க முடிவு

இன்டர்நேஷனல் மானிட்டரி பஃண்ட் ( ஐ.எம்.எஃப்.) நிறுவனம், அது சேமித்து வைத்திருக்கும் தங்கத்தை விற்க முடிவு செய்திருக்கிறது. சமீபத்தில் லண்டனில் நடந்த ஜி - 20 நாடுகள் மாநாட்டில், கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கும் நாடுகளுக்கு நிதி உதவி செய்வதற்காக, ஐ.எம்.எஃப்., நிறுவனம், அது வைத்திருக்கும் தங்கத்தை விற்று உதவி செய்யலாம் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனையடுத்து உலகில் அதிகம் தங்கத்தை சேமித்து வைத்திருக்கும் நாடுகளில் மூன்றாவது இடத்தில் இருக்கும் ஐ.எம்.எஃப்., அதனிடம் இருக்கும் 3,217 டன் தங்கத்தை ( மதிப்பு 95 பில்லியன் டாலர்கள் இருக்கும் - அதாவது சுமார் ரூ.4.8 லட்சம் கோடி ) விற்று விட முன்வந்திருக்கிறது. இந்த தங்கத்தை விற்று, இன்னும் இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளில், ஏழை நாடுகளுக்கு 6 பில்லியன் டாலர்கள் வரை நிதி உதவி செய்யலாம் என்று லண்டன் ஜி-20 மாநாட்டில் உறுப்பு நாடுகள் தெரிவித்திருந்தன. உலகிலேயே அதிகம் தங்கத்தை சேமித்து வைத்திருக்கும் நாடு அமெரிக்கா தான். அதனிடம் 8,000 டன்களுக்கும் அதிகமான தங்கம் இருக்கிறது. அதற்கு அடுத்தபடியாக ஜெர்மனியிடம் 3,400 டன் தங்கம் இருக்கிறது.


நன்றி : தினமலர்


சத்யம் யாருக்கு ? : ஏப்ரல் 13ம் தேதி தெரிந்து விடும்

நிதி மோசடியில் சிக்கி, வழக்கை சந்தித்து வரும் சத்யம் கம்ப்யூட்டர்ஸ் நிறுவனத்தின் 51 சதவீத பங்குகளை யாருக்கு விற்கப்போகிறார்கள் என்பதை, வரும் 13ம் தேதி அறிவிப்பார்கள் என்று தெரிகிறது. சத்யத்தை வாங்க விருப்பம் தெரிவித்து விண்ணப்பிப்பவர்கள் 13ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று சொல்லப் பட்டிருக்கிறது. ஏற்கனவே இது ஏப்ரல் 9 ம் தேதி என்று இருந்தது. சத்யத்தை வாங்க விருப்பம் தெரிவிப்பவர்களில் பலர், சத்யத்தின் நிதி நிலை, மற்றும் கடன் விபரம் போன்ற பல விபரங்களை தெரிந்து கொள்ள விரும்பியதால், கடைசி தேதி 9 ம் தேதியில் இருந்து 13ம் தேதிக்கு மாற்றப்பட்டிருக்கிறது. எனவே விண்ணப்பிக்க கடைசி நாளான 13 ம் தேதியே யாருக்கு கொடுக்க இருக்கிறோம் என்பதையும் அறிவித்து விடலாம் என்றார் சத்யத்தின் இப்போதைய சேர்மன் கிரண் கார்னிக். எத்தனை விண்ணப்பங்கள் வந்தாலும் அவைகளை சரிபார்த்து முடிவு செய்ய போதிய வசதிகள் இருக்கின்றன என்றார் அவர். சத்யத்தின் முந்தைய சேர்மன் ராமலிங்க ராஜூ, அவர் சகோதரர் ராம ராஜூ மற்றும் தலைமை நிதி அதிகாரியாக இருந்த வட்லமணி ஸ்ரீநிவாஸ் ஆகியோர், ரூ.7,800 கோடி அளவில் நிதி மோசடி செய்து, சிறையில் அடைக்கப்பட்டு, வழக்கை சந்தித்து வருவதால், சத்யத்தின் 51 சதவீத பங்குகளை விற்று விட, அதன் இப்போதைய போர்டு முடிவு செய்து, அதற்காக வாங்க விருப்பம் இருப்பவர்களிடம் இருந்து விண்ணப்பங்களை கோரி இருந்தது.
நன்றி : தினமலர்