இரு சக்கர வாகனம் வாங்க அளிக்கப்பட்ட கடனை பலரும் கட்டாததால், வாகனக் கடன் தரவே வங்கிகள் அச்சப்படுகின்றன. வாகனக் கடனை நிறுத்தி விட சில வங்கிகள் திட்டமிட்டுள்ளன.பணவீக்கம் அதிகரித்து விட்டதால், எல்லா பொருட்களின் விலைகளும் அதிகரித்து விட்டன; வீடு, வாகனக் கடன் வட்டி வீதம் கிடு கிடுவென உயர்ந்து வருகிறது. வீட்டுக்கடன் வாங்குவோருக்கு மாதத் தவணைத் தொகை இப்போதே பல மடங்கு உயர்த்தப்பட்டு விட்டன.
வாகனக் கடன் வட்டி வீதம் உயர்த்தப்பட்டதை அடுத்து, அதன் மாதத் தவணைத் தொகையும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
ஆனால், மாதத் தவணையை கட்டாமல் பலர் டிமிக்கி கொடுத்து விட்டனர். இவர்களின் எண்ணிக்கை கடந்த சில மாதங்களில் மிக அதிகமாக உள்ளது.வாகனக் கடனை வங்கிகள் இரண்டு வகையில் தருகின்றன. தனி நபர்களுக்கு நேரடியாக தருகின்றன; வாகன விற்பனை ஏஜென்சிகள் மூலம் அவர்களின் வாடிக்கையாளர்களுக்கு தருகின்றன.
சமீப காலத்தில், விற்பனை ஏஜென்சிகள் மூலம் வாடிக்கையாளர்களுக்கு அளிக்கப்பட்ட கடன் பாக்கித்தொகை தான் வராக்கடனாகி வருகிறது. கடன் தவணையை கட்டாமல் பாக்கி வைத்திருப்போரின் எண்ணிக்கை மிக அதிகமாகி வருகிறது.கடன் பாக்கியை கட்டாமல் இருக்க சிலர் திட்டமிட்டு, சில தவறான வழிகளையும் கையாள்கின்றனர்.
தங்கள் வாகனம் தொலைந்து விட்டதாக போலீஸ் புகார் மனு அளித்து, அதன் முதல் தகவல் அறிக்கையை வங்கிக்கு அனுப்பி விடுகின்றனர். இப்படிபட்ட சூழ்நிலையில், கடனை கட்டாமல் நிறுத்தி விடுகின்றனர்.இன்னும் சிலர், போலி ரேஷன் கார்டு போன்ற சான்றிதழ் நகல்களைக் கொடுத்து கடன் வாங்கி விடுகின்றனர். அவர்கள் விலாசம் தெரியாததால், அவர்களிடம் கடன் பாக்கியை வசூலிக்க முடியாமல் வங்கிகள் திணறுகின்றன.இப்படி பல வகையில் கடன் பாக்கி வராமல் இருப்பதால், தனியார் வங்கிகள் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளன. ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கி இதற்கு பிள்ளையார் சுழி போட்டுள்ளது. விற்பனை ஏஜென்சிகள் மூலம் வாடிக்கையாளர்களுக்கு தரப்படும் கடன் பட்டுவாடாவை ரத்து செய்துள்ளது. வரும் 15ம் தேதி இது அமலுக்கு வருகிறது.வங்கியின் 1,400 கிளைகள் மூலம் வாகனக் கடன், வாடிக்கையாளர்களுக்கு நேரடியாக தர வங்கி முடிவு செய்துள்ளது. இப்படி செய்தால், கடன் பாக்கி கட்டாமல் டிமிக்கி கொடுப்போர் எண்ணிக்கை குறையும் என்று எதிர்பார்க்கிறது.இந்த வங்கியைத் தொடர்ந்து, எச்.எஸ்.பி.சி., வங்கியும் தனி நபர் கடன்களைத் தருவதில் கடும் கட்டுப்பாடுகளைக் கொண்டு வந்துள்ளது. பர்சனல் லோன் உட்பட வாடிக்கையாளர்களுக்கு தரப்படும் பலவித கடன்களுக்கு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
நன்றி : தினமலர்
Monday, August 11, 2008
Subscribe to:
Posts (Atom)