Thursday, November 13, 2008

'யுனிவர்செல்'லுடன் பி.எஸ்.என்.எல்., ஒப்பந்தம்

தமிழகம் முழுவதும் உள்ள யுனிவர்செல் மொபைல் விற்பனை நிலையங்களில், பி.எஸ்.என்.எல்., பிரீபெய்டு மற்றும் போஸ்ட்பெய்டு இணைப்புகளை விற்பனை செய்வது தொடர்பாக சென்னையில் நேற்று ஒப்பந்தம் கையெழுத்தானது. சென்னையில் நிருபர்களுக்கு பேட்டியளித்த 'யுனிவர்செல்' நிறுவன முதன்மை செயல் அதிகாரி ராஜகோபால் கூறியதாவது: யுனிவர்செல் மற்றும் பி.எஸ்.என்.எல்., நிறுவனங்களிடையே மேற்கொள்ளப்பட்டுள்ள ஒப்பந்தத்தின் மூலம், பி.எஸ்.என்.எல்., நிறுவன பிரீபெய்டு, போஸ்ட்பெய்டு இணைப்புகள், தமிழகம் முழுவதும் உள்ள யுனிவர்செல் விற்பனை நிலையங்களில் கிடைக்கும். மேலும், பி.எஸ்.என்.எல்., ரீசார்ஜ் வசதியையும், பி.எஸ்.என்.எல்., கட்டண திட்டங்கள் குறித்த விவரங்களையும் யுனிவர்செல் விற்பனை நிலையத்தில் பெற முடியும். இத்திட்டத்திற்கு கிடைக்கும் வரவேற்பைப் பொறுத்து, இதர மாநிலங்களில் உள்ள யுனிவர்செல் விற்பனை நிலையங்களுக்கும் இத்திட்டம் விரிவுபடுத்தப்படும். இவ்வாறு ராஜகோபால் கூறினார். சென்னை தொலைபேசி முதன்மை பொது மேலாளர் வேலுசாமி கூறுகையில், ''ஆறு மாதத்தில், சென்னையில் அதிக டவர்களை அமைக்கவுள்ளோம்,'' என்றார். பி.எஸ்.என்.எல்., தமிழக முதன்மை பொது மேலாளர் வரதராஜன் கூறுகையில், ''கட்டடங்களுக்கு உள்ளே பி.எஸ்.என்.எல்., சிக்னல் கிடைப்பதில் உள்ள பிரச்னையை நீக்க, புதிய டவர்களை அமைக்கவுள்ளோம்,'' என்றார். யுனிவர்செல் நிறுவன மார்கெட்டிங் பிரிவு துணைத் தலைவர் ரமேஷ் பரத் கூறுகையில், ''யுனிவர்செல் நிறுவனத்தில் மொபைல் எக்ஸ்சேஞ்ச், எளிய தவணையில் மொபைல் விற்பனை, மொபைல் இன்சூரன்ஸ், மெமரி கார்டில் புதிய பாடல்களை பதிவு செய்து வழங்குவது உள்ளிட்ட பல சேவைகளை வழங்கி வருகிறோம்,'' என்றார்.
நன்றி : தினமலர்


பங்குச் சந்தையில் 'மீன்' பிடிக்க வாறீங்களா

பங்குச் சந்தையில் கடந்த இரண்டு மூன்று ஆண்டுகளாக ஏற்பட்ட ஏற்றமெல்லாம் நீர்க்குமிழியா என்ற சந்தேகம் வந்துள்ளது. ஏனெனில், நீர்க்குமிழி தான் திடீரென பெரிதாகும். அப்படி ஒரு ஏற்றம் இருந்தது. அந்த நீர்க்குமிழி ஒரு அளவுக்கு மேல் பெரிதாகியவுடன் உடைந்து, இருக்கும் இடம் தெரியாமல் போய்விடும். அது போலத் தான் பங்குச் சந்தையிலும் நடந்து வருகிறது.
தூரத்தில் இருந்து சந்தையை பார்த்தவர்களெல்லாம் சந்தையில் முதலீடு செய்யவில்லையே என்று சந்தோஷப்படுகின்றனர். தற்போது, சந்தை சரிந்து இருப்பதை பார்த்தவுடன் இது நல்ல சந்தர்ப்பமா என தயக்கத்துடன் பார்க்கின்றனர். திங்களன்று ஏறிய ஏற்றமெல்லாம் கடந்த இரண்டு நாளில் காணாமல் போய்விட்டது. ஒவ்வொரு நாடும் சந்தைகளை நிலை நிறுத்த தன்னாலான முயற்சிகளை எல்லாம் செய்து வருகின்றன. அமெரிக்கா, ஐரோப்பா போல, சீன அரசும் திங்களன்று சலுகை அறிவிப்பை வெளியிட்டது. அது, ஆசிய அளவில் சந்தைகளை தூக்கி நிறுத்தியது.
அமெரிக்க நிலைமை இன்னும் சரியாகவில்லை என்றே தோன்றுகிறது. உலகின் நம்பர் 2 கம்பெனியான அமெரிக்காவின் சர்க்கியுட் சிட்டி, மஞ்சள் கடுதாசி கொடுத்துள்ளது. கச்சா எண்ணெய் விலை சரிய சரிய ரிலையன்ஸ் நிறுவன பங்கின் விலையும் தொடர்ந்து சரிந்து வருகிறது. வருங்காலங்களில் எண்ணெய் தேவை குறையும் என்று வரும் ரிப்போர்ட்களை அடுத்து அந்த கம்பெனியின் ரிபைனிங் உற்பத்தி அளவு குறையலாம் என்ற எண்ணத்தில் தான். நேற்று முன்தினம் மட்டும் 7.3 சதவீதம் குறைந்து அந்த கம்பெனியின் பங்குகள் 1,207 ரூபாய் அளவிற்கு வந்தது. நேற்று முன்தினம் முடிவாக மும்பை பங்குச் சந்தை 696 புள்ளிகளை இழந்தது. மற்ற ஆசிய சந்தைகளில் அடி விழுந்தால், இந்திய சந்தைகளில் மரண அடி விழுகிறது. நேற்றைய துவக்கம் மந்த நிலையிலேயே இருந்தது.
ஆகஸ்ட் மாதத்தில் 1.4 சதவீதமாக இருந்தது, செப்டம்பரில் 4.8 சதவீதமாக கூடியிருந்தது. ஐந்து மாநிலங்களில் நடக்கவிருக்கும் தேர்தல் முடிவுகள் எப்படி இருக்கும் என்று தற்போதே யூகங்கள் இருப்பதால் சந்தை மேலும், கீழுமாகவே இருந்தது. ரிலையன்ஸ் 4.89 சதவீதம் கீழே விழுந்து 1,148 ரூபாய் அளவிற்கு வந்துள்ளது. நேற்று வர்த்தக முடிவில் மும்பை பங்குச் சந்தை 303 புள்ளிகள் சரிவுடன் 9,536 என்ற நிலையிலும், தேசிய பங்குச் சந்தை 90 புள்ளிகள் சரிந்து 2,848 என்ற நிலையிலும் முடிந்தது. சந்தை 10,000க்கு கீழே இருப்பது சென்டிமென்டாக ஒரு கவலையளிக்கக் கூடிய விஷயம் தான்.
கச்சா எண்ணெய் பகவான்: கச்சா எண்ணெய் பகவான் தான் ஒரு காலத்தில் (சில மாதங்களுக்கு முன் வரை) சந்தையை கீழே இழுத்துக் கொண்டு சென்று கொண்டிருந்தார். தற்போது, பேரல் 60 டாலர் வரை குறைந்தும், சந்தை மேலே செல்லவில்லை.
சந்தைக்கு இன்று விடுமுறை: இன்று குருநானக் ஜெயந்தி விடுமுறை காரணமாக சந்தையில் வர்த்தகம் இல்லை. தெளிந்த நீரோட்டம் போல ஒரு சந்தை தேவை. அது தான் உடனடித் தேவை. ஆனால் அதற்கு இன்னும் பல காலாண்டுகள் காத்திருக்க வேண்டும் போல் தோன்றுகிறது. தீபாவளியன்று கிடைத்தது போல் சல்லிசாக பங்குகள் கிடைக்கும். அப்போது மீன் பிடிக்க வசதியாக இருக்கும்.
- சேதுராமன் சாத்தப்பன்-
நன்றி : தினமலர்


உலகின் பணக்கார இந்தியர் முகேஷ் அம்பானி : போர்ப்ஸ் பத்திரிக்கை தகவல்

உலகிலேயே மிகப்பெரிய பணக்கார இந்தியர் ரிலையன்ஸ் இன்டஸ்டிரீஸ் தலைவர் முகேஷ் அம்பானிதான் என்று போர்ப்ஸ் பத்திரிக்கை தெரிவித்திருக்கிறது. அமெரிக்காவின் போர்ப்ஸ் பத்திரிக்கை வருடந்தோறும் பணக்காரர்கள் லிஸ்ட்டை வெளியிட்டு வருகிறது. இப்போது வெளியிட்டுள்ள லிஸ்ட்டில் உலகிலேயே பணக்கார இந்தியர் முகேஷ் அம்பானிதான் என்று தெரிவித்திருக்கிறது. லண்டனில் இருக்கும் இந்தியரான லட்சுமி மிட்டலை பின்னுக்கு தள்ளிவிட்டு முகேஷ் அம்பானி முதல் இடத்திற்கு வந்து விட்டார். அவரின் சொத்து மதிப்பு 20.8 பில்லியன் டாலர் என்கிறது போர்ப்ஸ் பத்திரிக்கை. இரண்டாவது இடத்திற்கு வந்து விட்ட லட்சுமி மிட்டலின் சொத்து மதிப்பு 20.5 பில்லியன் டாலர் என்றும் முன்றாவதாக இருக்கும் அனில் அம்பானியில் சொத்து மதிப்பு 12.5 பில்லியன் டாலர் என்றும் தெரிவித்திருக்கிறது. ஏர்டெல் நிறுவனத்தின் சுனில் மிட்டல் 7.9 பில்லியன் டாலருடன் நான்காவதாகவும் , ரியல் எஸ்டேட் அதிபர் கே.பி.சிங் 7.8 பில்லியன் டாலருடன் ஐந்தாவது இடத்திலும் இருக்கிறார்கள். டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு குறைந்திருப்பதாலும், பங்கு சந்தையில் ஏற்பட்டுள்ள பெரும் சரிவின் காரணமாகவும், இந்தியாவின் 40 பெரும் பணக்காரர்களின் சொத்து மதிப்பு 60 சதவீதம் வரை குறைந்து போனது. கடந்த வருடம் 351 பில்லியன் டாலராக இருந்த இவர்களின் மொத்தசொத்து மதிப்பு இந்த வருடத்தில் 139 பில்லியன் டாலராக குறைந்திருக்கிறது என்கிறது போர்ப்ஸ் பத்திரிக்கை. இந்திய பங்கு சந்தை 48 சதவீதம் வீழ்ச்சி அடைந்திருக்கிறது. அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 24 சதவீதம் குறைந்திருக்கிறது. நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி ஒரு சதவீதம் வரை குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பணவீக்கமும் தொடர்ந்து இரட்டை இலக்கணமாகவே இருந்து வருகிறது. இதன் காரணமாக இவர்களின் சொத்து மதிப்பு குறைந்திருப்பதாக அது தெரிவித்திருக்கிறது.
நன்றி : தினமலர்


கச்சா எண்ணெய் விலை மேலும் குறைந்தது

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை மேலும் குறைந்திருக்கிறது. நியுயார்க் மெர்கன்டைல் சந்தையில் யு.எஸ்.லைட்.ஸ்வீட் குரூட் ஆயில் விலை பேரலுக்கு 68 சென்ட் குறைந்து 55.48 டாலராக இருந்தது. லண்டனின் நார்த் ஸீ குரூட் ஆயில் விலை 3.34 டாலர் குறைந்து 52.37 டாலராக இருந்தது. உலக அளவில் பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள தேக்க நிலையை அடுத்து பெட்ரோலிய பொருட்களுக்கான டிமாண்ட் குறைந்து வருவதால் கச்சா எண்ணெய் விலையும் குறைந்து வருவதாக சொல்கிறார்கள். ஜூலை மத்தியில் 147 டாலருக்கு மேல் சென்றிருந்த கச்சா எண்ணெய் விலை இப்போது 60 சதவீதத்திற்கு மேல் குறைந்து விட்டது.
நன்றி ; தினமலர்

பணவீக்கம் 8.98 சதவீதமாக குறைந்தது

நவம்பர் ஒன்றாம் தேதியுடன் முடிந்த வாரத்தில் இந்தியாவின் பணவீக்கம் 8.98 சதவீதமாக குறைந்திருக்கிறது. அதற்கு முந்தைய வாரத்தில் 10.72 சதவீதமாக இருந்த பணவீக்கம், இப்போது 1.74 சதவீதம் குறைந்து 8.98 சதவீதமாகியிருக்கிறது. ராய்ட்டர் செய்தி நிறுவனம் கூட பணவீக்கம் 10.37 சதவீதமாக இருக்கும் என்றுதான் சொல்லியிருந்தது. அதனை பொய்யாக்கும் விதமாக பணவீக்கம் சிங்கிள் டிஜிட்டுக்கு வந்திருக்கிறது. நாப்தா, விமான எரிபொருள் போன்றவைகளின் விலை குறைந்திருப்பதால் பணவீக்கம் குறைந்திருப்பதாக சொல்லப்பட்டிருக்கிறது. கடந்த வருடத்தில் இதே காலகட்டத்தில் பணவீக்கம் 3.35 சதவீதமாகத்தான் இருந்தது.
நன்றி : தினமலர்