Sunday, July 26, 2009

இதோ ஒரு வழிகாட்டி!

மேற்கு வங்க மாநில ஆளுநர் கோபாலகிருஷ்ண காந்தி புவி வெப்பமடைவதைக் குறைப்பதில் நல்லதொரு வழிகாட்டியாகத் திகழ்கிறார். இதை மற்றவர்களும் குறிப்பாக சாதாரண மக்களும் பின்பற்றத் தொடங்கினால் புவியின் வெப்பத்தைக் குறைப்பதுடன் கணிசமான அளவுக்கு ரூபாயையும் மிச்சப்படுத்தலாம்.

மின் விளக்குகளை எரியவிடுவதும், மோட்டார் வாகனங்களைப் பயன்படுத்துவதும், குளிர்சாதனப் பெட்டி போன்ற குளிரூட்டும் சாதனங்களைப் பயன்படுத்துவதும் நாகரிக வாழ்க்கையின் இன்றியமையாத அம்சங்களாகக் கருதப்பட்டாலும், பூமியைச் சுற்றியுள்ள ஓசோன் படலத்தில் ஓட்டை விழுவதற்கும் அதனால் புவி வெப்பம் அடைவதற்கும் அதுதான் காரணம் என்று அறிவியலாளர்கள் இப்போது இடைவிடாமல் அரற்றிக் கொண்டிருக்கிறார்கள்.

கீழை நாடுகளைவிட மேலை நாடுகளில் உள்ளவர்கள் அறிவாளிகள், புதிய புதிய கண்டுபிடிப்புகள் மூலம் மக்கள் இனிமையாக வாழ வழி செய்கிறார்கள், அவர்களுடைய அறிவியல் கண்டுபிடிப்புகள் பகுத்தறிவின் வெளிப்பாடுகள், அதனால் மனிதகுலம் அடைந்துவரும் நன்மைகளுக்கு அளவே இல்லை என்று புளகாங்கிதம் அடையாதவர்களே கிடையாது. ஆனால் ஒவ்வொரு கண்டுபிடிப்புக்கும் இயற்கையை நாசப்படுத்தும் சக்தி இருப்பதும், அதன் விளைவாக புவியில் உள்ள தாவரங்கள், மனிதர்கள் உள்ளிட்ட அனைத்து உயிரினங்களுக்கும் பெருத்த அச்சுறுத்தல் ஏற்பட்டிருப்பதும் மெல்ல மெல்லத் தெளிவாகிக் கொண்டிருக்கிறது.

இனி இந்த முன்னேற்றங்களை ஒரேயடியாகத் தூக்கி எறிந்துவிட்டு மாட்டுவண்டி காலத்துக்கு யாராலும் போக முடியாது. ஆனால் தீமைகளின் தீவிரத்தைக் குறைக்க சில நடவடிக்கைகளை உடனே எடுத்தாக வேண்டும். அதற்கு மேற்கு வங்க ஆளுநரும் மகாத்மா காந்திஜியின் பேரனுமான கோபாலகிருஷ்ண காந்தி வழிகாட்டி வருகிறார்.

ஆளுநர் வெளியே செல்லும்போது அவருடன் பயணிக்கும் மோட்டார் வாகனங்களின் எண்ணிக்கையைக் கணிசமாகக் குறைத்துவிட்டார். ஆளுநர் மாளிகையில் தேவையற்ற மின்சார சாதனங்களை நீக்குமாறு கூறிவிட்டார். அதிக அளவு மின்சாரத்தைத் துய்ப்பதும் வெப்பத்தை வெளியிடுவதுமான மின் விளக்குகளை அகற்றிவிட்டு, சுற்றுச் சூழலுக்குக் கேடு விளைவிக்காத மின்சார விளக்குகளைப் பொருத்தச் செய்தார். அதிக எண்ணிக்கையில் இருந்த குளிரூட்டிகளைக் குறைத்துவிட்டார். சுடுநீர் பெறுவதற்காக இருந்த மின்சார சூடேற்றிகளுக்குப் பதிலாக சூரிய சக்தியில் இயங்கும் சூடேற்றிகளைப் பயன்பாட்டுக்குக் கொண்டுவந்துள்ளார். தினமும் 2 மணி நேரம் மாலை நேரத்தில் ஆளுநர் மாளிகையில் மின்சார விநியோகத்தை நிறுத்தி வைத்து மின்சாரப் பயன்பாட்டை வெகு கணிசமாகக் குறைத்திருக்கிறார்.

அவர் ஆளுநராகப் பதவியேற்றபோது 2005-06-ல் ஆளுநர் மாளிகையில் கரியமில வாயு வெளியேற்றம் 408 டன்கள் என்று கணக்கிடப்பட்டிருக்கிறது; அதுவே, அவருடைய நடவடிக்கைகளுக்குப் பிறகு 335 டன்களாக இருக்கிறது.
இது சாதாரணமான சாதனை அல்ல. ஆடம்பரம், அதிகாரத்தை வெளிக்காட்டும் அனாவசியப் பகட்டு ஆகியவற்றைக் குறைத்துக் கொண்டாலே செலவும் குறையும், புவி வெப்பமடைவதும் கணிசமாகத் தணியும் என்பது இந்த உதாரணத்திலிருந்து அறிய முடிகிறது.

அரசு அலுவலகங்கள், பள்ளிக்கூடங்கள், கல்லூரிகள், விடுதிகள், ஆலயங்கள், திருமண மண்டபங்கள், வங்கிகள், அரசுத்துறை நிறுவனங்கள், ரயில் நிலையங்கள், பஸ் நிலையங்கள் போன்ற இடங்களில் அந்தந்த இடங்களுக்குப் பொறுப்பான தலைமை நிர்வாகி முதல் கடைநிலை ஊழியர் வரை அனைவருமே உறுதி எடுத்துக் கொண்டு மின்சாரத்தைச் சேமிக்க நடவடிக்கைகளைத் தொடங்கினால் மின்சார விரயம் கணிசமாகக் குறையும். அதனால் தொழில்துறைப்பயன்பாடு, விவசாயத் தேவை போன்றவற்றுக்கு மின்சார வாரியத்தால் கூடுதல் மின்சாரத்தை அளிக்க முடியும்.

தமிழ்நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் பஸ் போக்குவரத்தைச் சீர்படுத்தி பெரிய பஸ், மினி பஸ் ஆகியவற்றை எந்த நேரமும் இயக்குவதை உறுதி செய்தால் சொந்தமாக 2 சக்கர வாகனங்களை வாங்க வேண்டிய தேவை நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்தவர்களுக்கு அறவே ஏற்படாது.

இதனால் பெட்ரோல் பயன்பாடு கணிசமாகக் குறைந்து நம் நாட்டுக்கு மிகவும் தேவைப்படும் அரிய அன்னியச் செலாவணி கோடிக்கணக்கில் மிச்சப்படும். மின்சார ஸ்கூட்டர்களின் விற்பனையை ஊக்குவிக்க அவற்றுக்கு வரிச்சலுகை, எளிய கடன் வசதி போன்றவற்றை அளித்து மோட்டார் வாகனத்துறையில் தேவையற்ற பெட்ரோல், டீசல் வண்டிகளின் எண்ணிக்கையைக் குறைக்க அரசு உதவலாம்.

வீடுகளிலும் கிணறுகளில் தண்ணீர் இறைக்கப்பயன்படும் மின்சார மோட்டார், மிக்ஸி, கிரைண்டர், ஏ.சி., தரையைப் பெருக்க வாக்குவம்-கிளீனர் போன்ற சாதனங்களின் பயன்பாட்டை குறைத்துக் கொண்டால் மின்சாரம் கணிசமாக மிச்சப்படும். சூரிய சக்தியால் இயங்கும் சாதனங்களை படிப்படியாக புழக்கத்துக்குக் கொண்டுவந்தால் மின்சாரம் வெகுவாக மிச்சப்படும். சிறுதுளிதானே பெரு வெள்ளமாகிறது.
நன்றி : தினமணி

அதிக வரி செலுத்துவதில் சச்சின் நெம்பர் 1

இந்திய கிரிக்கெட் வீரர்களில், அதிக வரி செலுத்துபவர்களில், பிரபல கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் முதலிடத்தில் உள்ளார். தற்போது அதிகளவிலான விளம்பரங்களில் தோனி தோன்றினாலும், அதிகளவு வரி செலுத்துபவர்கள் பட்டியலில், சச்சின் டெண்டுல்கரே முதலிடம் வகிக்கிறார். இவரைத் தொடர்ந்து, தோனி இரண்டாமிடமும், சேவக் மூன்றாமிடமும், யுவராஜ் சிங் நான்காமிடமும் பெற்றுள்ளதாக, வருமான வரித்துறை தகவல்கள் தெரிவிக்கின்றன. இது குறித்து வருமான வரித்துறை தகவலில் கூறப்பட்டுள்ளதாவது: கடந்த 2006-07ம் ஆண்டு முதல் 2008-09ம் ஆண்டு வரையிலான மூன்று ஆண்டுகளில், ஒவ்வொரு ஆண்டும் எட்டு கோடி ரூபாய்க்கு மேல் வரி செலுத்தி உள்ளார் சச்சின். இவர், 2007-08ம் ஆண்டு, 8.7 கோடி ரூபாயும், 2008-09ம் ஆண்டு 8.1 கோடி ரூபாயும் வரி செலுத்தி உள்ளார்.
அதே போல், 2006-07ம் ஆண்டு மூன்றாமிடத்தில் இருந்த தோனி, கடந்தாண்டு 4.7 கோடி ரூபாய் செலுத்தியதன் மூலம், அதிக வரி செலுத்துபவர்கள் பட்டியலில் இரண்டாமிடம் பெற்றுள்ளார். ஆனால், 2007-08ம் ஆண்டு மூன்றாமிடத்தில் இருந்து ராகுல் டிராவிட், ஐந்தாமிடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார்.
இவ்வாறு அந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.
நன்றி : தினமலர்


இந்தியாவின் வல்லரசுக் கனவு...

இந்தியாவின் மக்கள் தொகை 112 கோடியைத் தாண்டி பெருகிக் கொண்டே இருக்கிறது. அத்தனை பேருக்கும் உணவளிக்க வேண்டிய விவசாயத் துறை நாளுக்கு நாள் குறுகிக் கொண்டே போகிறது என்பதுதான் அதிர்ச்சி தரும் செய்தி.

முன்பு, பெரிய முதலீடு இல்லாமல் விவசாயம் செய்த நம் முன்னோர்கள், இன்று பசுமைப் புரட்சி விவசாயத்தால் பெரிய அளவில் மூலதனம் போட்டு செய்ய வேண்டிய தொழிலாகிவிட்டது விவசாயம். அதனால், லாபமில்லாத தொழிலாக மாறிவிட்ட விவசாயத்தின் மீது நம்பிக்கை இழந்த கிராமவாசிகள், விவசாயத்தை விட்டு நகரத்தை நோக்கிச் சென்ற வண்ணம் உள்ளனர்.
தமிழ்நாட்டில் ஒட்டுமொத்த நிலப்பரப்பு சுமார் 130 லட்சம் ஹெக்டேர். இதில், நீர்ப்பாசன வசதி இருப்பதாகக் கருதப்படுகிற நிலம் 33 லட்சம் ஹெக்டேர்தான். நீர்ப் பாசன வசதியற்ற, வானம்பார்த்த பூமியாக இருக்கும் நிலப்பரப்பு சுமார் 37 லட்சம் ஹெக்டேராகும்.

அதாவது, மொத்த நிலப்பரப்பான 130 ஹெக்டேரில் சுமார் 70 லட்சம் ஹெக்டேர்தான் விவசாயத்திற்குப் பயன்படுகிறது. ஆனால், கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு சுமார் 90 லட்சம் ஹெக்டேர் நிலம் விவசாயத்திற்கு பயன்படுத்தப்பட்டுள்ளது.

இதில் வேதனையான விஷயம் என்னவென்றால் உணவு தானியங்களைப் பயிர் செய்தால் அதிக நஷ்டம் வருகிறது என்பதால் விவசாயிகளுக்கு உணவு தானியமற்ற பணப்பயிர் என்று சொல்லக்கூடிய விவசாய உற்பத்திப் பொருள்களின் மீது நாட்டம் ஏற்பட்டுள்ளது.

1970-ம் ஆண்டு வரையிலும்கூட சுமார் 25 சத நிலங்கள்தான் இப்படி உணவு தானியமற்ற மற்றவற்றை உற்பத்தி செய்யும் நிலங்களாக இருந்தன. இப்போது சுமார் 45 சதமாக இது மாறிய அதேவேளையில், உணவு தானிய உற்பத்தியில் இருந்த விவசாய நிலங்கள் மூன்றில் இரண்டு பங்காகக் குறைந்து விட்டன.

காரணம், நாட்டின் தேவைக்கு ஏற்ப உணவு உற்பத்தியைப் பெருக்குகிறோம் என்று கூறி வீரிய விதைகள், மலட்டு விதை போன்றவற்றைப் பயன்படுத்தி, குறைந்த நிலத்தில் நிறைந்த விவசாயம் செய்தல் போன்ற இயற்கைக்கு மாறான செயல்பாட்டால், இன்று விளைநிலங்கள் எல்லாம் பாழ்பட்டுள்ளன. ரசாயன உரங்கள், பூச்சிக்கொல்லி மருந்துகள் போன்றவற்றால் விவசாய செலவு அதிகரித்ததே தவிர, விவசாயத்தால் லாபம் கிடைத்ததாகத் தெரியவில்லை என்கிறார்கள் விவசாயிகள்.

கிராமப்புறங்களில் விவசாயத்திற்குத் தேவையான நீர் ஆதாரம் இல்லாதது, பற்றாக்குறையான மின்சாரம், அனைத்து கிராமத்திலும் மும்முனை மின்சாரம் இல்லாதது போன்ற காரணங்களால் இன்று விவசாயம் சுருங்கி, பல கிராமங்களில் விவசாயம் இல்லாமல் விளை நிலங்கள் வெறிச்சோடிக்கிடக்கின்றன. விவசாயத்திற்கு மானியம் வழங்குகிறோம் என்ற பெயரில் விவசாயிகளை அரசின் கொத்தடிமைக் கடன்காரர்களாக மாற்றியதும் அரசின் இன்னொரு சாதனை.

விவசாய விளைபொருளுக்கு போதிய விலை நிர்ணயம் இல்லாததால், ரூ. 10 ஆயிரம் முதலீட்டில் அறுவடை செய்யப்படும் ஒரு விளைபொருள், சந்தையில் வெறும் ரூ. 4 ஆயிரத்துக்கு விற்கப்பட்டால் எப்படி விவசாயம் லாபகரமாக இருக்கும்? எந்த விவசாயிதான் தொடர்ந்து நஷ்டத்திற்கு ஒரு தொழில் செய்ய முடியும்? ஒவ்வொரு சாகுபடியின்போதும் இந்நிலை நீடிப்பதால், சூதாட்டத்தில் என்றாவது ஒரு நாள் ஜெயித்து லாபம் கிடைக்கும் என்ற நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர்.

விவசாயிகளுக்கு சலுகை என்ற பெயரில் மாறி, மாறி கடன் கொடுத்து அவர்களை கடைசிவரை கடன்காரர்களாக அசிங்கப்படுத்துவதைவிட, விவசாய விளைபொருள்களுக்கு போதிய விலை நிர்ணயம் கிடைக்கச் செய்தாலே விவசாயிகள் லாபமடைவார்கள். நாட்டில் விவசாயத் தொழில் செழித்தோங்கும். விவசாயிகள் கூனிக்குறுகி மற்றவர்களிடம் கையேந்தி நிற்காமல் கெüரவமாக இருப்பார்கள்.

உரம் தயாரிக்க முன்வரும் நிறுவனங்களுக்கு ரூ. 1.25 கோடி மானியம் வழங்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. இது வரவேற்கக்தக்கது என்றாலும், இதன் மூலம் விவசாயமோ, விவசாயிகளோ பயனடைவதைவிட ஒரு சில நிறுவனங்களும் அதன் உரிமையாளர்களுமே பயனடைவார்கள் என்பது தான் உண்மை.

இந்நிலையில், இந்த மானியத்தை நேரடியாக விவசாயிகளுக்கு வழங்கினால் அவர்கள் தனியாக இயற்கை உரம் மற்றும் செயற்கை உரங்களைப் பெற உதவியாக இருக்கும். விவசாயிகள் முழுமையாகப் பயனடைவார்கள். முதலாளி வர்க்கங்களை காப்பாற்றக் காட்டும் ஆர்வத்தில் 50 சதம்கூட விவசாய மற்றும் நடுத்தர மக்களைக் காப்பாற்ற அரசு முன் வருவதில்லை. மேலும் அவர்களை நசுக்கி வருகிறது என்றே கூறலாம்.

விவசாயத்தைப் பெருக்க ஆக்கப்பூர்வமான, நடைமுறைக்கு சாத்தியப்படும் நிலைகளை உருவாக்கி, கிராமப்புறங்களில் விவசாயம் செழிக்க வைக்க, விவசாய விளைபொருள்களுக்கு அரசு உரிய விலை நிர்ணயம் செய்து ஊக்கப்படுத்த வேண்டும். இல்லாவிட்டால் இந்தியா வல்லரசாகும் என்பது வெறும் கனவாகப் போய்விடும்.

கட்டுரையாளர் :என். கணபதி

நன்றி : தினமணி

கம்பெனிகளின் காலாண்டு முடிவால் தொடர்கிறது பங்குச் சந்தை ஏற்றம்

சிறப்பான காலாண்டு முடிவுகள் தான் சந்தை நிலவரத்தை நிர்ணயிக்கின்றன. வியாழனும், வெள்ளியும் சந்தையில் மின்னியதற்கு காரணம் காலாண்டு முடிவுகள் தான். பெரிய சாப்ட்வேர் கம்பெனிகள் அனைத்தும் நல்ல காலாண்டு முடிவுகளைத் தருவது தொடர்கிறது. டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பும் சிறிது நாட்களாக 48 அளவிலேயே நிற்பதும், சாப்ட்வேர் கம்பெனிகளுக்கு ஒரு சாதகமான அம்சம். ஆதலால், சந்தை வியாழனன்று மும்பை பங்குச் சந்தை 219 புள்ளிகள் மேலே சென்று முடிவடைந்தது.
வெள்ளியன்று காலையில் சிறிது டல்லாக இருந்த பங்குச் சந்தை மதியத்திற்கு மேலே சென்றது. ஆட்டோ, கட்டுமானத்துறை, மெட்டல் ஆகிய துறைப் பங்குகள் மேலே சென்றன. குறிப்பாக ஆட்டோ பங்குகள் பறந்தன; வங்கிப் பங்குகள் கீழே சரிந்தன.
ஏன் சரிந்தது? : அடுத்த வாரம் ரிசர்வ் வங்கியின் காலாண்டு மானிடரி பாலிசி அறிவிப்புகள் வருகின்றன; ஆதலால் தானா? வெள்ளியன்று இறுதியாக மும்பை பங்குச் சந்தை 148 புள்ளிகள் கூடி 15,378 புள்ளிகளுடனும், தேசிய பங்குச் சந்தை 44 புள்ளிகள் கூடி 4,568 புள்ளிகளுடனும் முடிவடைந்தது. சந்தை மறுபடி ஜம்மென 15 ஆயிரத்தைத் தாண்டி சென்றிருக்கிறது.
புதிய வெளியீடுகள்: சமீபத்திய மகிந்த்ரா ஹாலிடே ரிசார்ட் புதிய வெளியீடு ஒன்பது தடவைகளுக்கு மேல் செலுத்தப் பட்டது ஞாபகமிருக்கலாம். அந்த கம்பெனியின் பங்குகள் சென்ற வாரம் பட்டியலிடப்பட்ட பிறகு 30 சதவீதம் கூடியுள்ளது. இது மற்ற கம்பெனிகளுக்கு மகிழ்ச்சி அளிக்கும் விஷயம். வைத்திருப்பவர்களுக்கு இதுவரை 30 சதவீதம் லாபம் கிடைத்துள்ளது. ராஜ் ஆயில் மில் வெளியீடு முடிவு தேதி அன்று முழுதாகச் செலுத்தப்பட்டது. சிறிய முதலீட்டாளர்கள் பகுதி ஒரு தடவைக்கும் கீழாகத்தான் செலுத்தப்பட்டிருந்தது. இருந்தாலும், எண்ணெய் விலை கூடி வருவதால் பட்டியலிடப்படும் போது பிரிமியத்தில் பட்டியலிப்படலாம் என்று கூறப்படுகிறது. அடுத்த வாரம் அதானி பவர் வருகிறது. பெரிய வெளியீடாக இருப்பதால் எப்படி செலுத்தப்படுகிறது என்பது மிகவும் முக்கியமான விஷயம்.
ஒரே மார்க்கெட் பிரிமியம்: கொஞ்ச நாளாக புதிய வெளியீடுகளுக்கான க்ரே மார்க்கெட் பிரிமியம் இல்லாமல் இருந்தது. தற்போது மறுபடி தலைதூக்க ஆரம்பித்துள்ளது. வரவிருக்கிற அதானி பவருக்கு 8 முதல் 12 ரூபாய் வரையும், என்.எச்.பி.சி., வெளியீட்டிற்கு 11 முதல் 13 ரூபாய் வரையும் பிரிமியம் இருப்பதாகக் கூறப்படுகிறது.
பணவீக்கம்: சென்ற வார பணவீக்கம் மைனஸ் 1.21 சதவீதமாக இருந்தது. அது 0.04 சதவீதம் குறைந்து மைனஸ் 1.17 சதவீதமாக உள்ளது. பொருட்களின் விலை 100 சதவீதத்திற்கு மேலே கூடியுள்ளது. ஆனால், பணவீக்கம் அசைவதாக இல்லை.
கூடி வரும் நேர்முக வரிகள்: இந்த வருடத்தின் முதல் காலாண்டு முடிவில் நேர்முக வரி கலெக்ஷன் 3.65 சதவீதம், சென்ற வருடம் இதே காலாண்டை விடக் கூடியுள்ளது ஒரு நல்ல அறிகுறி.
காலாண்டு முடிவுகள்: விப்ரோ சென்ற வருடம் இதே காலாண்டை விட 12 சதவீதம் அதிகமாக லாபம் ஈட்டியுள்ளது. இது தவிர ஹெச்.டி.எப்.சி., கனரா வங்கி, மாருதி, ஐ.டி.சி., மாரிகோ, பார்தி டெலிகாம் ஆகிய கம்பெனிகளும் நல்ல காலாண்டு முடிவுகளைத் தந்துள்ளன. செலவுகளைக் கட்டுப்படுத்தினால் சேமிக்க முடியும் என்பதற்கு கம்பெனிகளின் இந்த காலாண்டு முடிவுகள் ஒரு எடுத்துக்காட்டு. இது கம்பெனிகளுக்கும் பொருந் தும்; வீட்டுக்கும் பொருந்தும். கம்பெனிகளே செலவுகளைக் கட்டுப்படுத்தும் போது, வீட்டிலும் கட்டுப்படுத்தி இன்னும் சேமிக்கலாம் அல்லவா? செய்ய ஆரம்பியுங்கள்.
வெளிநாடு முதலீட்டு நிறுவனங்கள்: வெளிநாடு முதலீட்டு நிறுவனங்கள் பங்குகளை வாங்குவது மறுபடி அதிகரித்துள்ளது, பங்குச் சந்தை கூடுவதற்கு ஒரு காரணம்; இது தொடருமென எதிர்பார்க்கப் படுகிறது. ஏனெனில், உலகளவில் அவர்கள் வருமானங்கள் பார்ப்பதற்கு இந்தியா ஒரு நல்ல சந்தை.
அடுத்த வாரம் எப்படி இருக்கும்? : உலகளவில் பங்குச் சந்தைகளின் ஏற்றம், நல்ல காலாண்டு முடிவுகள் போன்றவை சந்தையை தூக்கிச் சென்றிருக்கின்றன. மேலும், சந்தையை 15 ஆயிரம் புள்ளியில் நிறுத்தியும் வைத்திருக்கின்றன. சந்தையின் ஏற்றம் தொடரும்.
-சேதுராமன் சாத்தப்பன்
நன்றி : தினமலர்