Friday, September 17, 2010

ஏன்? எப்படி? எதற்கு?

ஜாதிவாரி கணக்கெடுப்பை 2011 ஜூன் மாதத்தில் தொடங்குவது என்று மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதில் காங்கிரஸ் கட்சிக்கு உடன்பாடில்லை என்பது இத்தனை காலமாக இதைக் காலம் தாழ்த்தியதிலிருந்தே புரிந்துகொள்ள முடியும். இருந்தும் கூட்டணி ஆட்சியில் ஆதரவாக நிற்கும் அரசியல் கட்சிகளின் நெருக்குதலுக்கு ஆளான மத்திய அரசு, வேறுவழியின்றி தற்போது இந்த முடிவை எடுத்துள்ளது.

ஜாதிவாரி கணக்கெடுப்பு என்பது அரசியல்வாதிகளின் கலக அரசியலுக்குத் துணைபோகும் என்று ஒரு சாரார் எதிர்த்தாலும், இன்னமும் தாழ்த்தப்பட்ட மக்கள் அரசின் சலுகைகளையும் பயன்களையும் பெறவில்லை என்று இன்னொரு சாரார் வலியுறுத்தி வந்தனர். ஆகவே, ஜாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவதென மத்திய அரசு தீர்மானித்து, அறிவித்துள்ளது.

இந்த முடிவால் மத்திய அரசுக்கு கூடுதல் நிதிச்செலவு

ரூ.2000 கோடி ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதைவிடக் கூடுதலாகவும் வாய்ப்பு உண்டு. இந்த முடிவை இரண்டு மாதங்களுக்கு முன்பே மேற்கொண்டிருந்தால், வழக்கமாக நடைபெறும் மக்கள் தொகை கணக்கெடுப்போடு இதையும் சேர்த்திருந்தால், இந்தச் செலவை மத்திய அரசு தவிர்த்திருக்க முடியும்.

இருப்பினும்கூட, இப்போது இத்தனை பெரும் பொருள்செலவில் நடத்தப்படும் ஜாதிவாரி கணக்கெடுப்பை அறிவியல் பூர்வமாகச் செய்ய வேண்டும். ஒவ்வொருவரின் ஜாதி, அவர்களின் வங்கி இருப்பு, சொத்துகள், அரசால் பெற்ற நலத்திட்டப் பயன்கள், கல்வி வேலைவாய்ப்புகளில் இடஒதுக்கீடு மூலம் பெற்ற சலுகைகள், அவர்தம் குழந்தைகள் பெற்றுவரும் சலுகைகள், கலப்பு மணம் என்றால் அதன் விவரம், வருமான வரி செலுத்துபவரா போன்ற அனைத்துத் தகவல்களையும் பெற்று, இவர்கள் ஏற்கெனவே மக்கள்தொகை கணக்கெடுப்பின்போது கொடுத்த தகவல்களையும் ஒப்பீடு செய்ய வேண்டியது அவசியம். அப்போதுதான் இந்தத் தகவல்கள் சரியானவையாக இருக்கும்.

இந்தியா முழுவதும் ஆயிரக்கணக்கான ஜாதிகள் உள்ளன. ஒரு மாநிலத்தில் பிற்படுத்தப்பட்டவர் பட்டியலில் இருக்கும் ஜாதி, இன்னொரு மாநிலத்தில் பொதுப்பட்டியலில் இடம் பெற்றிருக்கிறது. சில மாநிலத்தில் தாழ்த்தப்பட்டோராக இருக்கும் ஜாதி, அண்டை மாநிலத்தில் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் இருக்கிறது. இந்த வேறுபாடுகளை, இந்தப் புள்ளிவிவரம் களைய முற்படுமா? அல்லது அந்தந்த மாநிலத்தில் தற்போது பட்டியலில் இடம்பெற்றுள்ள ஜாதிகளை அந்தந்த வகைப்பாட்டிலேயே வைத்திருக்குமா?

புள்ளிவிவரத்தின்படி, குறிப்பிட்ட ஜாதியைச் சேர்ந்தவர்கள் கல்வி வாய்ப்புகளிலும், அரசுப் பணிகளிலும் குறிப்பிடத்தக்க அளவில் இடம்பெற்று விட்டார்கள் என்று தெரியவந்தால், அவர்களுக்கான ஒதுக்கீட்டு அளவைக் குறைத்தும், வாய்ப்பு பெறாதவர்களுக்காக இடஒதுக்கீட்டு அளவை அதிகரித்தும் சட்டத்தை மாற்ற முனைவார்களா?

÷பிரிட்டிஷ் ஆட்சியின்போது எடுக்கப்பட்ட மக்கள்தொகை கணக்கெடுப்புக்குப் பின்னர் இப்போதுதான் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது. கடந்த 70 ஆண்டு காலத்தில் இந்தியா மிகப்பெரும் மாறுதலை அடைந்துள்ளது என்பதில் எந்தவிதமான சந்தேகமும் இல்லை. குறிப்பாக, இடஒதுக்கீடு மூலம் பல சமுதாயங்கள் முன்னேற்றம் கண்டுள்ளன. ஆனாலும், சலுகை மூலம் சமுதாயத்தில் உயர்ந்த நிலைக்கு வந்த அதே குடும்பங்களே தொடர்ந்து சலுகையைத் தட்டிச்சென்று, அதே சமூகத்தைச் சேர்ந்த மற்றவர்களுக்கு நந்தியாகக் குறுக்கே நிற்பதைத் தடுக்கும் வகையில் "கிரீமி லேயர்' என்பதை அறிமுகம் செய்வதற்கும் அரசியல்வாதிகள் தடையாக இருக்கிறார்கள்.

இடஒதுக்கீட்டுச் சலுகை மூலம் டாக்டர் பட்டம் பெற்று பல லட்சம் சம்பாதித்தவர், தனது மகனுக்கும் இடஒதுக்கீட்டில் டாக்டர் படிப்புக்கு இடம்பெற்று, பல கோடி சம்பாதித்து, இப்போது பேத்திக்கும் இடஒதுக்கீட்டின் மூலம் மருத்துவச் சேர்க்கையில் இடம்பெறுவார் என்றால், அதே சமூகத்தின் இரு குடும்பங்களின் பலனை அவர் தட்டிப் பறிப்பதாகத்தானே அர்த்தம்? இப்படிப்பட்டவரை ஏன் "கிரீமி லேயர்' என்று கருதி, சலுகைகள் பெறுவதைத் தடுக்கக்கூடாது?

÷தனது சமூகத்துக்கே தடைக்கற்களாக இருக்கும் இத்தகைய சுயநலமிகளை இந்த ஜாதிவாரி கணக்கெடுப்பு மூலம் சலுகைக்கு வெளியே நிறுத்த அரசு முற்பட்டால், அதை இதே அரசியல் தலைவர்கள் ஒப்புக்கொள்வார்களா? இடஒதுக்கீடு மூலம் அரசு வேலைவாய்ப்பு பெற்றவரின் குழந்தைகளில் ஒருவர் மட்டுமே அடுத்த முறை இச்சலுகையைப் பெற முடியும் என்று இந்த ஜாதிவாரி கணக்கெடுப்புக்குப் பின்னர் அரசு தீர்மானிக்குமானால் அதை அரசியல்வாதிகள் ஏற்பார்களா?

ஏற்க மறுப்பார்கள் என்றால் - எந்த மாற்றமும் செய்ய உடன்பட மாட்டார்கள் என்றால், இந்தக் கணக்கெடுப்பு பொருளற்றது. வெறும் பொருள்செலவுதான் மிஞ்சும். அதற்காக மக்களின் வரிப்பணம் 2,000 கோடி ரூபாய் விரயமாக்கப்படுவதில் அர்த்தமேயில்லை.

ஜாதி ஏற்றத்தாழ்வுகளை அகற்ற வேண்டும் என்பதை யாரும் மறுக்கப்போவதில்லை. ஆனால், கணக்கெடுப்பு என்கிற பெயரில் ஜாதியம் நிலைநிறுத்தப்படுமானால், இது விபரீதத்தை விலை கொடுத்து வாங்கும் முயற்சியாகத்தான் இருக்கும்!
நன்றி : தினமணி