Monday, October 19, 2009

நெஞ்சில் உரமுமின்றி...

பிரபல ஆங்கில நாவலாசிரியர் ஆலிவர் கோல்ட்ஸ்மித் தனது நாவல் ஒன்றில் கூறுவார்~சிறிய மீன்களுக்குப் பேசும் சக்தி கிடைக்குமேயானால் அவை தங்களை திமிங்கலங்களாக நினைத்துப் பேசத் தொடங்கும் என்று. அதுபோலத்தான் இருக்கிறது, ஐக்கிய நாடுகள் சபையில் இலங்கைப் பிரதமர் ரத்தினசிறி விக்கிரமநாயகாவின் பேச்சு. ஐ.நா. சபையின் 64-வது பொதுக் கூட்டத்தில் பேசிய இலங்கைப் பிரதமர் உலக நாடுகளின் கூட்டமைப்புக்கு விடுத்திருக்கும் வேண்டுகோள் (எச்சரிக்கை?) என்ன தெரியுமா? எங்கள் உள்நாட்டு விவகாரங்களில் தலையிடாதீர்கள் என்பதுதான்!

இலங்கைப் பிரதமரின் வாக்குமூலப்படியே பார்த்தாலும், கடந்த மே மாதம் முடிவுக்கு வந்த போரின் முடிவில் 2.85 லட்சம் பேருக்கு மேலானவர்கள் தங்கள் இருப்பிடத்திலிருந்து இடம்பெயர்ந்து சொந்த மண்ணில் அகதிகளாக முள்கம்பிகளாலான வேலிக்குள்ளே அடைபட்டுக் கிடக்கிறார்கள். இவர்களில் விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சார்ந்தவர்களை அடையாளம் கண்ட பிறகு ஏனைய மக்கள் அவரவர் ஊர்களில் குடியமர்த்தப்படுவார்கள் என்று முதலைக் கண்ணீர் வடித்திருக்கிறார் இலங்கைப் பிரதமர்.

விடுதலைப் புலிகள் அல்லது விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள் என்பதை அடையாளம் பிரிக்கப் போவது யார்? வட இலங்கைப் பகுதியிலிருந்த பெருவாரியான மக்கள் விடுதலைப் புலிகளின் அனுதாபிகளாக இருந்திருக்கும் வாய்ப்பு உண்டே. அப்படியானால், அவர்கள் அனைவரையும் தண்டிக்கப்போகிறதா இலங்கை அரசு? இனப்படுகொலையைத் தொடர இதுவேகூட ஒரு சாக்காக ஆகி விடாது என்பது என்ன நிச்சயம்?

தனது மக்கள் என்று தமிழர்களை சொந்தம் கொண்டாடும் இலங்கை அரசு, அவர்களுக்கு மருந்தும், உணவும், உடையும் அன்னிய நாடுகள் வழங்க வேண்டும் என்று கையேந்துவதிலிருந்தே, தனது கஜானாவிலிருந்து சல்லிக்காசுகூடத் தமிழர்களுக்குச் செலவிட அந்த அரசு தயாராக இல்லை என்பதைத்தானே எடுத்துக்காட்டுகிறது? முன்பே பலமுறை குறிப்பிட்டதுபோல, அது வளம் கொழிக்கும் அமெரிக்காவாகவே இருந்தாலும் மூன்று லட்சம் பேரைக் கம்பி வேலிக்குள் அமைக்கப்பட்ட முகாம்களில் ஐந்து மாதத்துக்கும் மேலாக சகல வசதிகளுடன் பாதுகாப்பது சாத்தியம்தானா?

ஆயிரக்கணக்கான அகதிகள் குடியமர்த்தம் என்கிற பெயரில் காணாமல் போனதாகக் கூறப்படுகிறது. இதைப்பற்றி எழுதினாலோ, பேசினாலோ, பயங்கரவாதிகளுக்குத் துணைபோனதாகக் கூறி அடக்குமுறைச் சட்டங்கள் பாய்கின்றன. ஜார் மன்னனின் கொடுங்கோல் ஆட்சியைப் பற்றி மகாகவி பாரதி எழுதியதுபோல, "இம்மென்றால் சிறைவாசம் ஏனென்றால் வனவாசம்' என்பது ஈவிரக்கமே இல்லாமல் நடைமுறைப்படுத்தப்படுகிறது.

ஐ.நா. சபையின் வளர்ச்சித் திட்டம் என்கிற போர்வையில் ஹலேஸ் நிறுவனத்துடன் ஓர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருக்கிறார் இலங்கைப் பிரதமர். இதன் மூலம் அம்பாறை மாகாணத்தின் விவசாய வளர்ச்சிக்கு உதவி பெறுகிறது இலங்கை அரசு. இந்த உதவிக்குக் காரணம் அகதிகளைக் குடியமர்த்தி அவர்களுக்கு வாழ்வாதாரம் அளிப்பது என்பதுதான். ஆனால் அதற்கு அவர்கள் தேர்ந்தெடுத்திருக்கும் மாகாணம், பெரிய அளவில் சிங்களவர்களைக் குடியேற்றிப் புதிதாக உருவாக்கப்பட்ட அம்பாறை. தமிழர்களைக் குடியமர்த்துகிறோம் என்கிற போர்வையில் சிங்களவர்களுக்குத்தான் உதவும் இந்தத் திட்டம்.

எங்கள் உள்நாட்டு விவகாரத்தில் ஐ.நா. தலையிடக்கூடாது என்று என்ன தைரியத்தில் இலங்கைப் பிரதமர் கூறுகிறார்? அமெரிக்காவின் விரலசைப்புக்கு ஏற்பச் செயல்படும் ஐ.நா. சபைக்கே மறைமுக எச்சரிக்கை விடுமளவுக்கு இலங்கைக்கு தைரியம் வந்தது எப்படி? சீனாவின் முழுமையான ஆதரவு தனக்கு இருக்கிறது என்கிற ஆணவமா, இல்லை இந்திய அரசு கண்டும் காணாமலும்தான் இருக்கும் என்கிற துணிவா? இத்தனைக்கும் அமெரிக்க அதிபர் ஒபாமாவே இலங்கையில் படுதுயர் அனுபவிக்கும் தமிழ் அகதிகளின் நிலைமை குறித்து வேதனைப்படும் நிலையில், இலங்கை அரசு ஐ.நா. சபை தலையிடாமல் இருக்க வேண்டும் என்று கூறுவது அதிர்ச்சி அளிக்காமல் என்ன செய்யும்?

கனடா, ஜெர்மனி, ஆஸ்திரேலியா, பிரான்ஸ் போன்ற நாடுகள் எல்லாம் இலங்கையிலிருந்து அகதிகளாக வந்தவர்களுக்குக் குடியுரிமை வழங்கின. அங்கே நடப்பது ஓர் இனப்படுகொலை என்று உணர்ந்து செயல்பட்டன. ஆனால் நமது இந்தியாவில் நடப்பது என்ன? இன்னும் 115 முகாம்களில் சுமார் 73,572 இலங்கைத் தமிழர்கள் அகதிகளாகத் தங்கியுள்ளனர். சுமார் 30,000 பேர் வெளியே தங்கியுள்ளனர். கால் நூற்றாண்டு காலமாக இங்கே வசித்துவரும் இவர்கள் இன்றுவரை அகதிகள்தான். அவர்களுக்குக் குடியுரிமை வழங்க நமது அரசு தயாராக இல்லை.

வங்க தேசத்திலிருந்து ஊடுருவி வரும் லட்சக்கணக்கான அகதிகள் இந்தியா முழுவதும் பரவிக் கிடக்கிறார்கள். இவர்களில் முக்கால்வாசிப் பேர் ரேஷன் அட்டையும், வாக்காளர் அட்டையும் வைத்திருக்கிறார்கள். கேட்டால் வங்காளிகள் என்று தப்பித்துக் கொள்கிறார்கள். தேர்தலில் நின்று ஒருவர் சட்டப்பேரவை உறுப்பினரான அவலம்கூட அசாமில் அரங்கேறியது. ஆனால், 25 ஆண்டுகாலமாக இங்கே இருக்கும் இலங்கைத் தமிழர்கள் இப்போதுகூட அகதிகள்தான்.

காஞ்சிபுரத்தில் சமீபத்தில் நடைபெற்ற திமுகவின் முப்பெரும் விழா நிகழ்ச்சியில் இவர்களுக்குக் குடியுரிமை வழங்குவது, மீனவர்களுக்கு இலங்கைக் கடற்படையினரின் தாக்குதல்களிலிருந்து பாதுகாப்பு வழங்குவது மற்றும் கச்சத்தீவை மீட்பது போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. தீர்மானம் நிறைவேற்றுவதுடன் நின்றுவிடாமல் இந்தப் பிரச்னைக்குத் தீர்மானமான முடிவையும் காண வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கிறது.

சீனா என்கிற பூச்சாண்டியைக் காட்டி இந்தியாவை எத்தனை காலம்தான் இலங்கை பயமுறுத்தப் போகிறது? நாமும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கப் போகிறோம்? இலங்கையில் தமிழர்கள் சுயமரியாதையுடனும், தனிமரியாதையுடனும் வாழ்ந்தால் மட்டுமே இந்தியா பாதுகாப்புடனும் தலைநிமிர்ந்தும் உலக அரங்கில் வலம்வர முடியும் என்கிற உண்மையை, தில்லித் தலைமைக்கு யார் உணர்த்துவது?

நெஞ்சுரம் கொண்ட கடைசிப் பிரதமர் இந்திரா காந்திதான் என்று தோன்றுகிறதே...
நன்றி : தினமணி

டாலரின் மதிப்பு உயர்வால், கச்சா எண்ணெய் விலையில் சரிவு

டாலரின் மதிப்பு மீண்டும் உயர்ந்து வருவதன் காரணமாக கச்சா எண்ணெய் விலையில் சரிவின‌ை கண்டு வருவதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இன்று ஆசிய சந்தையில் டாலரின் மதிப்பு மீண்டும் எழுச்சி பெற்றது. இதனால், கச்சா எண்ணெய் விலை சரிய தொடங்கியது. கடந்த 2008ம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் அதிகரித்ததை போல கடந்த வெள்ளி கிழமை கச்சா எண்ணெய் விலை 78.53 அமெரிக்க டாலராக உயர்வினை கண்டது. இது இன்று 78.41 அமெரிக்க டாலராக சரிவினை கண்டது. இன்று காலை ஆசிய சந்தையில், நவம்பர் டெலிவரிக்கான , நியூயார்க் மெயின் கான்ட்ராக்ட், லைட் ஸ்வீட் கச்சா எண்ணெய் விலை, பேரல் ஒன்றிற்கு 12 சென்ட்டுகள் குறைந்து 78.41 அமெரிக்க டாலராக உள்ளது. டிசம்பர் டெலிவரிக்கான பிரண்ட் நார்த் ஸீ கச்சா எண்ணெய் விலை 14 சென்ட்டுகள் குறைந்து 76.85 அமெரிக்க டாலராக உள்ளது.
நன்றி : தினமலர்


சட்டம் செயல்படட்டும்...

ஆட்சியாளர்களும், நிர்வாகமும் தங்கள் கடமையைச் சரிவரச் செய்யாமல் போகும்போது, பத்திரிகையாளர்களும், நீதித்துறையும் வரம்பு மீற வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. வாக்கு வங்கியை மட்டுமே கருத்தில் கொள்ளாமல் சட்டம் தமது கடமையைச் செய்ய வேண்டிய விஷயத்துக்கெல்லாம் நீதித்துறையை நாடி வழிகாட்டுதல் வாங்க வேண்டிய அவல நிலைக்கு நமது ஆட்சியாளர்கள்தான் காரணம்.

இந்தியா என்றைக்குத் தன்னை ஒரு குடியரசு என்று அறிவித்துத் தனக்கென ஓர் அரசியல் சட்டத்தை ஏற்படுத்திக் கொண்டதோ, அன்று முதல் எந்தவொரு பிரச்னையும் அரசியல் சட்டத்தின் அடிப்படையில் மட்டுமே அணுகப்படுவதுதான் முறை. அதற்குப் பெயர்தான் சட்டத்தின் ஆட்சி. இந்தச் சட்டம் அதிகாரம் படைத்தவர்களுக்காகவோ, வசதி படைத்தவர்களுக்காகவோ, வேறு எந்த அரசியல் நிர்பந்தங்களுக்காகவோ வளைந்து கொடுக்கலாகாது என்பதுதான் குடியாட்சித் தத்துவத்தின் அடிப்படையே.

பொதுமக்கள் நடமாடுவதற்காக சாலையின் இருபுறமும் போடப்பட்டிருக்கும் நடைபாதைகள், சிறு வியாபாரிகளால் ஆக்கிரமிக்கப்பட்டிருப்பது ஒருபுறம் இருக்கட்டும். ஆங்காங்கே எழுப்பப்படும் கோயில்களாலும் அல்லவா பாதசாரிகள் சிரமப்பட வேண்டியதாக இருக்கிறது. இப்போது இந்தப் பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதத்தில் உச்ச நீதிமன்றம் சில வழிகாட்டுதல்களை வழங்கி இருப்பதைப் பாராட்டியே தீரவேண்டும்.

குஜராத் உயர் நீதிமன்றம் 2006-ம் ஆண்டில் அந்த மாநிலத்திலுள்ள எல்லா மாநகராட்சி மற்றும் நகராட்சிகளுக்கு, அவர்களது எல்லைக்கு உள்பட்ட பகுதிகளில் நடைபாதைகளில் எழுப்பப்பட்டிருக்கும் வழிபாட்டுத் தலங்கள் எந்த மதத்தினருடையது ஆனாலும் அவை உடனடியாக அகற்றப்பட வேண்டும் என்று உத்தரவிட்டது. விளைவு? வதோதரா நகரத்தில் தொடங்கி குஜராத் மாநிலத்திலுள்ள சூரத், ஆமதாபாத், ராஜ்கோட், ஆனந்த் என்று பல நகரங்களில் மக்கள் வன்முறையில் ஈடுபடத் தொடங்கினர்.

நடைபாதை மத வழிபாட்டுத் தலங்களை அகற்றும் பணி ஸ்தம்பித்தது. மத்திய அரசு தலையிட்டு, மக்களுடைய பாதுகாப்புக் கருதியும், சட்டம் ஒழுங்கு பாதிக்கப்படலாம் என்பதாலும் உயர் நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றத்தில் தடை வாங்கியது. அதுமட்டுமல்லாமல், கோயிலோ, மசூதியோ, மாதா கோயிலோ எதுவாக இருந்தாலும் அவை அகற்றப்பட்டால் மக்களின் மத உணர்வுகள் பாதிக்கப்படும் என்றும், சமுதாய நல்லிணக்கத்துக்கு ஊறு நேரிடும் என்றும் உச்ச நீதிமன்றத்தில் வாதிட்டது.

இந்தப் பிரச்னையில் மாநில மற்றும் மத்திய அரசுகளின் அணுகுமுறை கண்டும் காணாமலும் இருப்பது என்பதாகத்தான் இருந்து வருகிறது. அதற்கு ஒரு முக்கியமான காரணம் வாக்கு வங்கி அரசியல் மட்டுமல்ல. இதுபோன்ற திடீர் வழிபாட்டுத் தலங்களை உருவாக்குபவர்களின் அரசியல் செல்வாக்கும்கூட.

கோயில்களை அமைப்பது, மாதாகோயில் கட்டுவது, திடீர் பிள்ளையார் கோயில் இல்லையென்றால் அம்மன் கோயில், தெரு முனைகளில் சிலுவையை வைப்பது போன்றவை தெய்வ பக்தியால் செய்யப்படுவன என்பதை ஏற்றுக் கொள்வதற்கில்லை. நடைபாதைக் கோயில்களும், சிலுவைகளும் சம்பந்தப்பட்ட நபர்களுக்கு முக்கியத்துவம் கிடைப்பதற்காகவும், இதன் மூலம் தன்னை ஒரு தீவிர பக்தன் என்று காட்டிக் கொள்வதற்காகவும்தான் செய்யப்படுகின்றன. சிலர், உண்டியலில் கிடைக்கும் வருமானத்துக்காகவும் செய்கிறார்கள்.

அதேபோல, புறம்போக்கு நிலங்களை ஆக்கிரமிப்பவர்கள் அங்கே ஒரு கோயிலையோ, மாதா கோயிலையோ முதலில் ஏற்படுத்தி விடுகிறார்கள். அதைச் சுற்றிலும் இடங்களை வளைத்துப் போட்டுக் கொண்டு குடியிருப்பும் உருவாக்கப்படுகிறது. மத உணர்வுகள் புண்படும் என்று பயந்து ஆட்சியாளர்களும் நிர்வாகமும் அதை வேடிக்கை பார்க்கின்றன. அரசியல்வாதிகள் வாக்கு வங்கிக்கு பாதிப்பு ஏற்படக்கூடாது என்று இதுபோன்ற செய்கைகளுக்கு உறுதுணையாக நிற்கிறார்கள்.

தெருவுக்குத் தெரு, ஊருக்கு ஊர் நமது முன்னோர்கள் கட்டி வைத்திருக்கும் கோயில்களும், மசூதிகளும், மாதா கோயில்களும் ஏராளம், ஏராளம். அவைகளை முறையாகப் பராமரித்தாலே போதுமானது. எத்தனை எத்தனையோ கோயில்கள் ஒருகால பூஜைகூட நடத்த வழியில்லாமல் தவிக்கின்றன. உண்மையான பக்தி இருப்பவர்கள் அந்தக் கோயில்களைச் செப்பனிட்டு முறையாகப் பூஜை நடக்க வழிவகுப்பதுதானே?

புதிதாகக் கோயில்கள், மசூதிகள், மாதா கோயில்கள் அமைக்கப்படுவதாக இருந்தால் அது சொந்த இடத்தில் அமைத்துக் கொள்ள அனுமதிக்கலாமே தவிர, அரசின் புறம்போக்கு நிலங்களில் சட்டவிரோதமாக அமைப்பதற்கு அனுமதி தரப்படக் கூடாது. மத வழிபாட்டுத் தலங்கள் அமைக்க அரசு இடம் ஒதுக்கித் தருவதும் கூடாது. அதேபோல நடைபாதைகளில் பாதசாரிகளுக்கு இடையூறாக வழிபாட்டுத் தலங்கள் இருந்தால் அவை தயவுதாட்சண்யமே இல்லாமல் அகற்றப்பட வேண்டும்.

நீதிபதிகள் தல்வீர் பண்டாரி மற்றும் முகுந்தகம் சர்மா ஆகியோர் அடங்கிய உச்ச நீதிமன்ற பெஞ்ச் எல்லா மாவட்ட ஆட்சியாளர்களுக்கும், அனுமதி இல்லாமல் கோயில், மாதா கோயில், மசூதி, குருத்வாரா போன்ற வழிபாட்டுத் தலங்கள் தெருக்களிலோ, பொது இடங்களிலோ இந்தியாவின் எந்தப் பகுதியிலும் அனுமதிக்கப்படக் கூடாது என்று உத்தரவைப் பிறப்பித்திருக்கிறது. இதை நிர்வாகம் எப்போதோ செய்திருக்க வேண்டும். நீதி தலையிட்டு இந்த அநீதியைக் களைய வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்காது.

குடியரசில் மதம் என்பது குடிமகனின் தனிப்பட்ட விஷயம். அவர் சாலையில் அடியெடுத்து வைத்தால் அவர் அரசியல் சட்டத்துக்கு மட்டுமே கட்டுப்பட்டவராவார். எந்த மதத்தைச் சேர்ந்ததாக இருந்தாலும் தெருவோர மற்றும் பொது இடங்களில் அமைக்கப்படும் வழிபாட்டுத் தலங்கள் அகற்றப்பட்டால் மட்டுமே இந்தியாவில் சட்டத்தின் ஆட்சி நடைபெறுகிறது என்று அர்த்தம்!
நன்றி : தினமணி

வருகிறது விண்டோஸ்-7: 22ம் தேதி அதிகாரபூர்வ அறிவிப்பு

விண்டோஸ்-7 அதிகார பூர்வமாக வரும் 22ம் தேதி உலகமெங்கும் ரிலீசாக உள்ளது. 2001ம் ஆண்டு விண்டோஸ் எக்ஸ்பியை வெளியிட்ட மைக்ரோசாப்ட் நிறுவனம், தொடர்ந்து விஸ்டாவை வெளயிட்டது. விஸ்டாவில் நிறைய குறைபாடுகள் இருப்பதாக வாடிக்கையாளர்கள் குறை கூறினர். இதனை சரிசெய்யும் விதமாக, மைக்ரோசாப்ட் நிறுவனம் தனது அடுத்த பதிப்பான விண்டோஸ் 7யை உருவாக்கி உள்ளது. இதில், சின்ன சின்ன குறைபாடுகளை நீக்க முற்றிலும் வேகமான இயக்கத்துக்கு வழிவகுக்கும் மென்ப‌ொருளை வெளியிடுகிறது மைக்ரோசாப்ட் நிறுவனம்.
நன்றி : தினமலர்


கடலுக்கு யார் காவல்?

உலகமயம் என்கிற போர்வையில் இந்தியாவும் ஏனைய வளர்ச்சி அடையும் பொருளாதாரங்களும் வளர்ச்சி அடைந்த நாடுகளின் தேவைக்கும் வசதிக்கும் பயன்படுத்தப்படுகின்றன என்கிற குற்றச்சாட்டில் உண்மையில்லை என்று கூறுபவர்கள் முழுப்பூசணிக்காயை சோற்றில் மறைக்கிறார்கள். மேலோட்டமாக வசதி வாய்ப்புகள் பெருகிவிட்டது போன்ற மாயத்தோற்றம் ஏற்படுத்தப்பட்டு, தேசத்தின் அடிப்படை ஸ்திரத்தன்மை தகர்க்கப்பட்டு வருகிறது.

உலகமயம் என்கிற பெயரில் அவர்களது பொருள்களை விற்கும் சந்தையாக மட்டும் இந்தியா பயன்படுத்தப்பட்டிருந்தால்கூடப் பரவாயில்லை. வளர்ச்சி அடைந்த நாடுகளை அசுத்தப்படுத்தும் கழிவுப் பொருள்களையும், அந்த நாட்டு மக்களுக்கு ஆபத்தை விளைவிக்கும் நச்சுப் பொருள்களையும், கதிரியக்கத்தை ஏற்படுத்தும் பொருள்களையும் கொண்டுவந்து கொட்டும் குப்பைத் தொட்டியாக நாம் மாற்றப்படுவதை எப்படிச் சகித்துக் கொண்டிருப்பது?
அதைவிட துர்பாக்கியமான நிலைமை என்ன தெரியுமா? நமது அரசும் ஆட்சியாளர்களும் இது தெரிந்தும் தெரியாததுபோல இருப்பதும், மறைமுகமாக இதுபோன்ற செயல்களுக்கு ஆதரவு அளிப்பதும்தான். ஏன் நீதிமன்றங்களேகூட இந்தச் சம்பவங்களை சட்டத்தின் போர்வையில் ஆதரிக்கத் தலைப்படுகின்றன என்பதுதான் அதைவிட வேதனைதரும் விஷயம்.

ஓராண்டுக்கு முன்னால் எஸ்.எஸ். நார்வே என்கிற கப்பல் "ப்ளுலேடி' என்று பெயர்மாற்றம் செய்யப்பட்டு கடல் பயணத்துக்கு உகந்ததல்ல என்பதால் அதை உடைப்பதற்கு வங்கதேசத்துக்கு வந்தது. சுமார் 1,240 டன்கள் நச்சுத்தன்மை கொண்ட ஆஸ்பெஸ்டாசும், பாலி க்ளோரினேடட் பை பினைல்ஸ் என்கிற நச்சுத்தன்மையையுடைய ரசாயனமும் இருப்பதாக அந்த நிறுவனத்தாரே ஒப்புக்கொண்ட அந்தக் கப்பலை உடைக்க சின்னஞ்சிறு வங்கதேசமும், மலேசியாவும் கூட மறுத்துவிட்ட நிலையில் "ப்ளுலேடி' இந்தியாவைத் தஞ்சமடைந்தது.

என்னவாயிற்று தெரியுமா? நமது நீதிமன்றங்களில் தங்களுக்குச் சாதகமான தீர்ப்புகளைப் பெற்று, குஜராத் மாநிலம் பவநகரிலுள்ள கப்பல் உடைக்கும் தளத்தில் அந்தக் கப்பல் உடைத்துப் பிரிக்கப்பட்டது. மத்திய அரசின் சுற்றுச்சூழல் அமைச்சகத்தால் அந்தக் கப்பல் உரிமையாளர்களின் கோரிக்கை மனிதாபிமான அடிப்படையில் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

கடந்த 2005-ம் ஆண்டில் பன்னாட்டுப் புகையிலை நிறுவனமான ஐடிசி நிறுவனத்தாரின் காகித தொழிற்சாலைப் பிரிவினர் 25,000 டன் பழைய பேப்பர் இறக்குமதி செய்வதாகக் கூறி நியூஜெர்ஸி நகரத்தின் குப்பைக் கூளங்களையும் சில கன்டெய்னர்களில் நிரப்பி அந்தக் கழிவுகளை இந்தியாவில் கொட்டுவதற்குக் கொண்டு வந்தது தெரியவந்தது. இதுபோல எந்தெந்த பன்னாட்டு நிறுவனங்கள் என்னென்ன நச்சுப் பொருள்களையும் கழிவுப் பொருள்களையும், ரகசியமாக இந்தியாவில் கொண்டு வந்து கொட்டுகிறார்களோ, யார் கண்டது?.

இப்போது மீண்டும் ஒரு பிரச்னைக்குரிய கப்பல் குஜராத் செüராஷ்டிரா பகுதியில் ஆழ்கடலில் நங்கூரமிடப்பட்டு இருக்கிறது. "எஸ்.எஸ். இண்டிபென்டன்ஸ்' என்கிற அந்தக் கப்பல் எம்.எஸ். ஓஷியானிக் என்று முதலில் பெயர்மாற்றம் செய்யப்பட்டு இப்போது "பிளாட்டினம் 2' என்கிற பெயருடன் இந்தியத் துறைமுகத்துக்கு வந்திருக்கிறது. இந்த அமெரிக்கக் கப்பல் இந்தியாவைத் தஞ்சம் அடைவானேன்?.

கடந்த ஒன்றரை ஆண்டுகளாக துபாய் துறைமுகத்தில் நங்கூரம் பாய்ச்சி நிறுத்தப்பட்டிருந்த இந்தக் கப்பலை ஏன் அமெரிக்காவிலேயே உடைத்து பிரிக்கக் கூடாது? நியாயமாகப் பார்த்தால் அமெரிக்கக் கப்பலான "பிளாட்டினம் 2' அமெரிக்காவில் பிரிக்கப்படுவதுதானே நியாயம்?

அமெரிக்கச் சுற்றுச்சூழல் சட்டப்படி சுமார் 200 டன்களுக்கும் அதிகமான "ஆஸ்பெஸ்டாஸ்' அடங்கிய பொருள்களும் சுமார் 210 டன்கள் பாலி குளோரினேடட் பை பினைல்ஸ் என்கிற நச்சு ரசாயனம் கலந்த பொருள்களும் இருக்கும் இந்தக் கப்பல் அமெரிக்காவில் உடைக்கப்பட முடியாது. இதை உடைப்பதால் அமெரிக்கச் சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பு ஏற்படுவதுடன், மக்களின் சுகாதாரம் பாதிக்கப்படலாம் என்று அமெரிக்க அரசு கருதுகிறது. அமெரிக்கச் சட்டங்கள் அனுமதி மறுக்கின்றன.

இந்தியாவை இந்தக் கப்பல் எப்படி அடைந்தது என்று கேட்டால் அதைவிட சுவாரஸ்யமான ஒரு தகவல் கிடைக்கிறது. கடந்த அக்டோபர் 7-ம் தேதி செüராஷ்டிரா கடற்கரையை ஒட்டிய ஆழ்கடலை அடைந்த இந்தக் கப்பல் பவநகரிலுள்ள "அலங்க்' கப்பல் உடைப்புத் தளத்துக்கு மாநில அரசின் அனுமதி பெறாமல், ஒரு விசைத்தோணி மூலம் இழுத்து வரப்பட்டது. எதிர்பாராதவிதமாக இரவு நேரத்தில் அந்த விசைத்தோணி இன்னொரு கப்பலில் மோதிவிட அங்கேயே அந்தக் கப்பல் கைகழுவப்பட்டது.

இந்தக் கப்பலை யாருக்கும் தெரியாமல் "அலங்க்' கப்பல் உடைக்கும் தளத்துக்குக் கொண்டு வர எத்தனித்த தனியார் நிறுவனம் கைகழுவி விட்டதால் கடலில் நங்கூரமிட்டது இந்தக் கப்பல். விவரமறிந்த குஜராத் மாசுக் கட்டுப்பாடு வாரிய அதிகாரிகள் கப்பலைப் பரிசோதித்து அறிக்கை சமர்ப்பித்திருக்கிறார்கள். ஒருவேளை, அந்தத் தனியார் நிறுவனமே கூடத் திட்டமிட்டு இந்தக் கப்பலை நடுக்கடலிலிருந்து விசைத்தோணி மூலம் இந்தியக் கடல் எல்லைக்குள் இழுத்துக் கொண்டுவந்து கைவிட்டதோ என்னவோ? கப்பல் உரிமையாளரிடம் அதற்குப் பெரிய தொகை பெற்றிருக்கலாம். இந்திய எல்லைக்குள் கைவிடப்பட்ட நிலையில் உள்ள கப்பலை நாம் நடுக்கடலில் கொண்டு விட முடியாது. உடைத்துத்தானே தீரவேண்டும்?

இதைப்பற்றி ஓர் அறிக்கை தயாரிக்கச் சொல்லியிருப்பதாகக் கூறுகிறது மத்திய சுற்றுச்சூழல் துறை. இதுபோன்ற நச்சுக்கழிவுகளும், கதிரியக்கத்தைத் தோற்றுவிக்கும் பொருள்களையும் கொண்ட ஒரு கப்பலை யார், எப்படி, எதற்காக இந்திய எல்லையில் நங்கூரம் பாய்ச்ச அனுமதித்தது என்று விசாரணை நடத்தவும் உத்தரவிடப் போவதாகக் கூறியிருக்கிறார் அமைச்சர்.
இதுபோன்ற கப்பல்கள் உள்ளே வருவதை கண்காணிப்பதுதானே கடலோரப் பாதுகாப்பு படையினரின் வேலை. அவர்கள் என்ன செய்து கொண்டிருந்தார்கள்? அவர்கள் மீது ஏதாவது நடவடிக்கை எடுக்கப்பட்டதா, படுகிறதா? மும்பை தாக்குதலுக்கு வந்தவர்களையே கண்காணிக்காமல் விட்டவர்கள்தானே அவர்கள்? அதற்குப் பிறகாவது உஷாராக இருந்திருக்கவேண்டாமா?

உலகமயம் என்கிற பெயரில் உலகின் நச்சுப் பொருள்களும், கதிரியக்கப் பொருள்களும், கழிவுகளும் கொட்டப்படுவதற்கு நமது தாய்த்திருநாடு பயன்படுகிறது என்பதைப் பார்க்க நமக்கு ரத்தம் கொதிக்கிறது. ஆனால், நமது ஆட்சியாளர்களை இது சற்றும் பாதித்ததாகவே தெரியவில்லை! இந்த லட்சணத்தில் நாம் அமெரிக்காவுடன் அணுசக்தி ஒப்பந்தம் வேறு செய்துகொண்டிருக்கிறோம். மிக அதிகமான கதிரியக்கம் உள்ள அணுக்கழிவுகள் இந்தியாவில் கொட்டப்பட மாட்டாது என்பது என்ன நிச்சயம்?
நன்றி : தினமணி

பாவ்பிஜ் திருவிழா: பங்குச்சந்தைகளுக்கு விடுமுறை

மும்பை பங்குச்சந்தைக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. பாவ்- பிஜ் என்ற திருவிழாவை முன்னிட்டு பங்குச்சந்தைகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த திருவிழா அன்று சகோதரிகள் தங்கள் சகோதரர்களை கிருஷ்ண பரமாத்வாக பாவித்து பாத பூஜை செய்வது வழக்கம். மகாராஷ்டிரா மற்றும் கோவாவில் இந்த விழா மிகவும் விமரிசையாக கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு மும்பை பங்குச்சந்தை, தேசிய பங்குச்சந்தை, கோல்ட், ஆயில் மற்றும் ஆயில்சீட், காட்டான், பெப்பர் உள்ளிட்ட அனைத்து சந்தைகளுக்கும் விடுமுறை அறிவிக்கப் பட்டுள்ளது.
சென்ற சனிக்கிழமையன்று(17ம் தேதி) மும்பை மற்றும் தேசிய பங்கு சந்தைகளில், தீபாவளியை முன்னிட்டு முகூர்த்த பங்கு வர்த்தகம் நடைபெற்றது. இந்த முகூர்த்த பங்கு வர்த்தகத்தில் மும்பை பங்கு சந்தையின் குறியீட்டு எண் `சென்செக்ஸ்', வர்த்தகம் முடியும்போது 3.19 புள்ளிகள் உயர்ந்து 17,326.01 புள்ளிகளோடு முடிந்தது. தேசிய பங்கு சந்தையின் குறியீட்டு எண் `நிப்டி' 0.35 புள்ளிகள் குறைந்து 5,141.80 புள்ளிகளோடு முடிந்தது.

நன்றி : தினமலர்


வெளிநாட்டு பைலட்டுகளை வீட்டுக்கு அனுப்புகிறது ஏர் இந்தியா

வெளிநாட்டு பைலட்டுகளை வேலையில் இருந்து நீக்க ஏர் இந்தியா முடிவு செய்துள்ளது. இதுகுறித்து, ஏர் இந்தியா நிறுவனத்தில் செயல் இயக்குனர் ஜித்தேந்தர் பார்கவா தெரிவிக்கும் போது, ஏர் இந்தியா நிறுவனம் தற்‌போது கடும் நிதிநெருக்கடியில் உள்ளது. நெருக்கடியை சமாளிக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். இதன் ஒரு கட்டமாக வெளிநாட்டு பைலட்டுகளை வரும் ஓராண்டிற்குள் பணியில் இருந்து விலக்க முடிவு செய்துள்ளோம். இதனால், எங்களுக்கு 75 கோடி மிச்சமாகும் என்று கூறினார். சமீபத்தில் ஏர் இந்தியா நிறுவன பைலட்டுகளில் சம்பளத்தை குறைத்ததற்காக பைலட்டுகள் வேலைநிறுத்ததில் ஈடுபட்டனர். இதனால், ஏர் இந்தியா நிறுவனத்திற்கு கோடி கணக்கில் நஷ்டம் ஏற்பட்டது. தற்போது, அதே சிக்கன நடவடிக்கையாக மொத்தம் உள்ள 1400 பைலட்டுகளில் 175 வெளிநாட்டு பைலட்டுகளை வேலையில் இருந்து நீக்க அந்நிறுவனம் முயற்சி‌ மேற்கொண்டு வருவது பைலட்டுகள் இடையே மீண்டும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
நன்றி : தினமலர்