ஆட்சியாளர்களும், நிர்வாகமும் தங்கள் கடமையைச் சரிவரச் செய்யாமல் போகும்போது, பத்திரிகையாளர்களும், நீதித்துறையும் வரம்பு மீற வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. வாக்கு வங்கியை மட்டுமே கருத்தில் கொள்ளாமல் சட்டம் தமது கடமையைச் செய்ய வேண்டிய விஷயத்துக்கெல்லாம் நீதித்துறையை நாடி வழிகாட்டுதல் வாங்க வேண்டிய அவல நிலைக்கு நமது ஆட்சியாளர்கள்தான் காரணம்.
இந்தியா என்றைக்குத் தன்னை ஒரு குடியரசு என்று அறிவித்துத் தனக்கென ஓர் அரசியல் சட்டத்தை ஏற்படுத்திக் கொண்டதோ, அன்று முதல் எந்தவொரு பிரச்னையும் அரசியல் சட்டத்தின் அடிப்படையில் மட்டுமே அணுகப்படுவதுதான் முறை. அதற்குப் பெயர்தான் சட்டத்தின் ஆட்சி. இந்தச் சட்டம் அதிகாரம் படைத்தவர்களுக்காகவோ, வசதி படைத்தவர்களுக்காகவோ, வேறு எந்த அரசியல் நிர்பந்தங்களுக்காகவோ வளைந்து கொடுக்கலாகாது என்பதுதான் குடியாட்சித் தத்துவத்தின் அடிப்படையே.
பொதுமக்கள் நடமாடுவதற்காக சாலையின் இருபுறமும் போடப்பட்டிருக்கும் நடைபாதைகள், சிறு வியாபாரிகளால் ஆக்கிரமிக்கப்பட்டிருப்பது ஒருபுறம் இருக்கட்டும். ஆங்காங்கே எழுப்பப்படும் கோயில்களாலும் அல்லவா பாதசாரிகள் சிரமப்பட வேண்டியதாக இருக்கிறது. இப்போது இந்தப் பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதத்தில் உச்ச நீதிமன்றம் சில வழிகாட்டுதல்களை வழங்கி இருப்பதைப் பாராட்டியே தீரவேண்டும்.
குஜராத் உயர் நீதிமன்றம் 2006-ம் ஆண்டில் அந்த மாநிலத்திலுள்ள எல்லா மாநகராட்சி மற்றும் நகராட்சிகளுக்கு, அவர்களது எல்லைக்கு உள்பட்ட பகுதிகளில் நடைபாதைகளில் எழுப்பப்பட்டிருக்கும் வழிபாட்டுத் தலங்கள் எந்த மதத்தினருடையது ஆனாலும் அவை உடனடியாக அகற்றப்பட வேண்டும் என்று உத்தரவிட்டது. விளைவு? வதோதரா நகரத்தில் தொடங்கி குஜராத் மாநிலத்திலுள்ள சூரத், ஆமதாபாத், ராஜ்கோட், ஆனந்த் என்று பல நகரங்களில் மக்கள் வன்முறையில் ஈடுபடத் தொடங்கினர்.
நடைபாதை மத வழிபாட்டுத் தலங்களை அகற்றும் பணி ஸ்தம்பித்தது. மத்திய அரசு தலையிட்டு, மக்களுடைய பாதுகாப்புக் கருதியும், சட்டம் ஒழுங்கு பாதிக்கப்படலாம் என்பதாலும் உயர் நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றத்தில் தடை வாங்கியது. அதுமட்டுமல்லாமல், கோயிலோ, மசூதியோ, மாதா கோயிலோ எதுவாக இருந்தாலும் அவை அகற்றப்பட்டால் மக்களின் மத உணர்வுகள் பாதிக்கப்படும் என்றும், சமுதாய நல்லிணக்கத்துக்கு ஊறு நேரிடும் என்றும் உச்ச நீதிமன்றத்தில் வாதிட்டது.
இந்தப் பிரச்னையில் மாநில மற்றும் மத்திய அரசுகளின் அணுகுமுறை கண்டும் காணாமலும் இருப்பது என்பதாகத்தான் இருந்து வருகிறது. அதற்கு ஒரு முக்கியமான காரணம் வாக்கு வங்கி அரசியல் மட்டுமல்ல. இதுபோன்ற திடீர் வழிபாட்டுத் தலங்களை உருவாக்குபவர்களின் அரசியல் செல்வாக்கும்கூட.
கோயில்களை அமைப்பது, மாதாகோயில் கட்டுவது, திடீர் பிள்ளையார் கோயில் இல்லையென்றால் அம்மன் கோயில், தெரு முனைகளில் சிலுவையை வைப்பது போன்றவை தெய்வ பக்தியால் செய்யப்படுவன என்பதை ஏற்றுக் கொள்வதற்கில்லை. நடைபாதைக் கோயில்களும், சிலுவைகளும் சம்பந்தப்பட்ட நபர்களுக்கு முக்கியத்துவம் கிடைப்பதற்காகவும், இதன் மூலம் தன்னை ஒரு தீவிர பக்தன் என்று காட்டிக் கொள்வதற்காகவும்தான் செய்யப்படுகின்றன. சிலர், உண்டியலில் கிடைக்கும் வருமானத்துக்காகவும் செய்கிறார்கள்.
அதேபோல, புறம்போக்கு நிலங்களை ஆக்கிரமிப்பவர்கள் அங்கே ஒரு கோயிலையோ, மாதா கோயிலையோ முதலில் ஏற்படுத்தி விடுகிறார்கள். அதைச் சுற்றிலும் இடங்களை வளைத்துப் போட்டுக் கொண்டு குடியிருப்பும் உருவாக்கப்படுகிறது. மத உணர்வுகள் புண்படும் என்று பயந்து ஆட்சியாளர்களும் நிர்வாகமும் அதை வேடிக்கை பார்க்கின்றன. அரசியல்வாதிகள் வாக்கு வங்கிக்கு பாதிப்பு ஏற்படக்கூடாது என்று இதுபோன்ற செய்கைகளுக்கு உறுதுணையாக நிற்கிறார்கள்.
தெருவுக்குத் தெரு, ஊருக்கு ஊர் நமது முன்னோர்கள் கட்டி வைத்திருக்கும் கோயில்களும், மசூதிகளும், மாதா கோயில்களும் ஏராளம், ஏராளம். அவைகளை முறையாகப் பராமரித்தாலே போதுமானது. எத்தனை எத்தனையோ கோயில்கள் ஒருகால பூஜைகூட நடத்த வழியில்லாமல் தவிக்கின்றன. உண்மையான பக்தி இருப்பவர்கள் அந்தக் கோயில்களைச் செப்பனிட்டு முறையாகப் பூஜை நடக்க வழிவகுப்பதுதானே?
புதிதாகக் கோயில்கள், மசூதிகள், மாதா கோயில்கள் அமைக்கப்படுவதாக இருந்தால் அது சொந்த இடத்தில் அமைத்துக் கொள்ள அனுமதிக்கலாமே தவிர, அரசின் புறம்போக்கு நிலங்களில் சட்டவிரோதமாக அமைப்பதற்கு அனுமதி தரப்படக் கூடாது. மத வழிபாட்டுத் தலங்கள் அமைக்க அரசு இடம் ஒதுக்கித் தருவதும் கூடாது. அதேபோல நடைபாதைகளில் பாதசாரிகளுக்கு இடையூறாக வழிபாட்டுத் தலங்கள் இருந்தால் அவை தயவுதாட்சண்யமே இல்லாமல் அகற்றப்பட வேண்டும்.
நீதிபதிகள் தல்வீர் பண்டாரி மற்றும் முகுந்தகம் சர்மா ஆகியோர் அடங்கிய உச்ச நீதிமன்ற பெஞ்ச் எல்லா மாவட்ட ஆட்சியாளர்களுக்கும், அனுமதி இல்லாமல் கோயில், மாதா கோயில், மசூதி, குருத்வாரா போன்ற வழிபாட்டுத் தலங்கள் தெருக்களிலோ, பொது இடங்களிலோ இந்தியாவின் எந்தப் பகுதியிலும் அனுமதிக்கப்படக் கூடாது என்று உத்தரவைப் பிறப்பித்திருக்கிறது. இதை நிர்வாகம் எப்போதோ செய்திருக்க வேண்டும். நீதி தலையிட்டு இந்த அநீதியைக் களைய வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்காது.
குடியரசில் மதம் என்பது குடிமகனின் தனிப்பட்ட விஷயம். அவர் சாலையில் அடியெடுத்து வைத்தால் அவர் அரசியல் சட்டத்துக்கு மட்டுமே கட்டுப்பட்டவராவார். எந்த மதத்தைச் சேர்ந்ததாக இருந்தாலும் தெருவோர மற்றும் பொது இடங்களில் அமைக்கப்படும் வழிபாட்டுத் தலங்கள் அகற்றப்பட்டால் மட்டுமே இந்தியாவில் சட்டத்தின் ஆட்சி நடைபெறுகிறது என்று அர்த்தம்!
நன்றி : தினமணி
Monday, October 19, 2009
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment