Saturday, July 11, 2009

வாளாவிருத்தல் நியாயமில்லை!

சொந்த மண்ணில் அகதிகளாக, உறவுகள் இருந்தும் அநாதைகளாக, உரிமைகள் இருந்தும் அடிமைகளாக கம்பி வேலிகளாலும், கழுகுப் பார்வை பார்க்கும் துப்பாக்கி ஏந்திய ராணுவ வீரர்களாலும் ஆட்டுமந்தையைப்போல இலங்கையிலுள்ள முகாம்களில் அடைபட்டு அல்லல்படும் ஏறத்தாழ மூன்று லட்சம் பேர்களின் பரிதாப நிலைக்காக நாம் ரத்தக் கண்ணீர் வடிப்பது, அவர்கள் தமிழர்கள் என்பதற்காக மட்டுமல்ல, அவர்களும் மனிதர்கள் என்பதால்தான்.
எந்தவொரு நாட்டிலும், எந்தவொரு இனத்திற்கும் இப்படியொரு நிலைமை ஏற்பட்டால் அவர்களுக்காகக் குரலெழுப்பவும், அவர்களது உணர்வுகளைப் பிரதிபலிக்கவும் நமக்குக் கற்றுத் தந்தவர்கள் அன்னிய நாட்டுப் போராளிகளோ, மேதாவிகளோ அல்ல. நமது தேசப்பிதா மகாத்மா காந்தி!
அங்கே அடுத்த வேளைச் சாப்பாடு கிடக்கட்டும், வறண்டுபோன தொண்டையின் தாகம் தீர்க்கத் தண்ணீர்கூடக் கிடைக்காமல், இயற்கையின் அழைப்பை எதிர்கொள்ள இடமில்லாமல், ரணத்தின் வேதனையிலிருந்து நிவாரணம் பெற வைத்திய வசதி பெற முடியாமல் தவிக்கும் மூன்று லட்சம் பேர்களும் ஆறு அகதிகள் முகாமில் அடைந்து கிடக்கிறார்கள். அவர்களது நிலைக்குப் பரிதாபப்படாமல், இந்தியாவிலுள்ள அகதிகள் முகாம்களைவிட நேர்த்தியாகவும், வசதியாகவும் இலங்கை அரசு அந்த முகாம்களை நிர்வகிக்கிறது என்று நற்சான்றிதழ் வழங்கத் தமிழக ஊடகங்களே தயாராகிறதே, அதுதான் விசித்திரமாக இருக்கிறது.
மூன்று லட்சம் பேர். ஆறு முகாம்களில் - சுமார் 85,000 குடும்பங்கள் தங்கள் இருப்பிடங்களை இழந்து கையறு நிலையில். இவர்களை செல்வச் செழிப்பான அமெரிக்கா போன்ற வளர்ச்சி பெற்ற நாடுகளால்கூட வசதியாகப் பராமரிக்க முடியாதே, அப்படி இருக்கும்போது, இந்த அகதிகளுக்கு உண்ண உணவும், நோய்க்கு மருந்தும் கொடுக்க வழியில்லாமல் இந்தியா உள்ளிட்ட உலக நாடுகளிடம் கையேந்தும் இலங்கை அரசு மகிழ்ச்சியாகவும், நேர்த்தியாகவும் முகாம்களில் சகல வசதிகளுடன் பராமரிக்கிறது என்று நற்சான்றிதழ் கொடுப்பவர்கள் யார் காதில் பூ சுற்ற நினைக்கிறார்கள்? யாருக்குத் தூதுவர்களாகச் செயல்படுகிறார்கள்?
பிரபல பத்திரிகையாளர்களை அழைத்துச் சென்று அவர்கள் மூலம் தனது கபட நாடகங்களுக்கு, உலக அரங்கில் அங்கீகாரம் தேடும் முயற்சியில் இலங்கை அரசு ஈடுபட்டிருக்கிறது என்பதும், அதற்கு நம்மவர்கள் சிலரேகூடத் துணை போகிறார்கள் என்பதும் ஒருபுறம் இருக்கட்டும். அங்கே தமிழ் ஈழ அகதிகள் முகாம்களின் உண்மை நிலைதான் என்ன?
வட இலங்கையில் வவுனியா பகுதியில் காடுகள் அழிக்கப்பட்டு ஆறு முகாம்களில் கம்பி வேலிகளுக்குள்ளே இந்த அகதிகள் அடைக்கப்பட்டிருக்கிறார்கள். சுற்றிலும் ஆயுதம் ஏந்திய ராணுவத்தினர் இவர்கள் வெளியில் சென்றுவிடாமல் பாதுகாப்பில் ஈடுபட்டிருக்கிறார்கள். சுமார் 10,000-க்கும் அதிகமான தாற்காலிகக் கூடாரங்கள் அமைக்கப்பட்டு இரண்டு அல்லது மூன்று குடும்பங்கள் அதில் அமர்த்தப்பட்டிருக்கிறார்கள்.
முறையான கழிப்பறை வசதிகள் கிடையாது. குடிக்கவும் குளிக்கவும் தண்ணீர் வசதி கிடையாது. வயிறு நிறைய உண்ண உணவு கிடையாது. மருத்துவ வசதியும் முழுமையாகக் கிடையாது. 13,000 அகதிகள் இருக்கும் முகாமில் எட்டு மருத்துவர்களும், நான்கு செவிலியர்களும், போராட்ட பூமியிலிருந்து காயங்களுடன் கதறித் துடிக்கும் அகதிகளுக்கு என்னதான் மருத்துவ உதவி அளித்துவிட முடியும்?
உலகின் மிகப்பெரிய அகதிகள் முகாம் என்று ஐக்கிய நாடுகள் சபையால் வர்ணிக்கப்படும் செடிக்குளம் முகாமின் நிலைமை அதிர்ச்சி அளிக்கிறது என்று கூறுவது நாமல்ல, சரத்நந்த சில்வா என்கிற இலங்கை உச்ச நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி. அவர் மட்டுமல்ல, ஐக்கிய நாடுகள் சபை செயலர் பான்கி-மூன் இதையே வருத்தப்பட்டுத் தெரிவித்திருக்கிறார்.
இலங்கை ராணுவத்தைவிடக் கண்ணி வெடிகளை அகற்றும் பணியில் இந்திய ராணுவம் திறமை வாய்ந்தது. இந்திய ராணுவத்தின் உதவியுடன் அடுத்த ஒரே மாதத்தில் கண்ணி வெடிகளை அகற்றவும், அகதிகள் முகாம்களைப் பராமரிக்கவும் இலங்கை அரசு முன்வர வேண்டும். அதற்கு இந்திய அரசு வற்புறுத்தவும் வேண்டும்.
முகாம்களில் அடைந்து கிடப்பவர்கள் அவரவர் இருப்பிடங்களுக்குத் திரும்பாதவரை, நாளும் பொழுதும் செத்து மடியும் அகதிகள் எண்ணிக்கை அதிகரித்தவண்ணம்தான் இருக்கும். ராணுவம் முற்றிலுமாக அகன்று, பொது நிர்வாகம் செயல்பட்டால்தான் சகஜ வாழ்க்கை தமிழர்கள் வாழும் பகுதிகளில் திரும்பப் போகிறது. அதற்குப் பிறகுதான், ஈழத் தமிழர் பிரச்னைக்குத் தீர்வு என்ன என்பதையும், அரசியல் தீர்வு எப்படி அமைய வேண்டும் என்பதையும் யோசிக்க முடியும். இதுதான் யதார்த்த உண்மை.
நீங்கள் நிதி உதவியும், பொருள் உதவியும் தாருங்கள். நாங்களே பார்த்துக் கொள்கிறோம் என்கிற இலங்கை அரசின் உள்நோக்கத்தைப் புரிந்துகொண்டு, அவதிப்படும் அகதிகளுக்கு உதவ இந்திய அரசு முன்வந்தால் மட்டுமே, அவர்கள் வாழ்வில் நம்பிக்கை மலரப் போகிறது. இனியும் நாம் வாளாவிருந்தால் நியாயமல்ல!
நம்மை வழி நடத்துவது "காந்தி'தானே? மகாத்மா காந்திதானே?

நன்றி : தினமணிலாரி வாடகை 15 சதவீதம் உயர்த்தப்பட்டது

டீசல் விலை லிட்டருக்கு இரண்டு ரூபாய் உயர்ந்துள்ளதால், லாரி வாடகையை 15 சதவீதம் உயர்த்த லாரி உரிமையாளர்கள் சங்கம் முடிவு செய்திருக்கிறது. திருப்பூர் பகுதியில் உள்ள லாரி உரிமையாளர் சங்க செயலாளர் சின்னசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், மத்திய அரசு டீசல் விலையில் லிட்டருக்கு இரண்டு ரூபாய்; பெட்ரோல் விலையில் நான்கு ரூபாய் உயர்த்தியுள்ளதால், லாரி உரிமையாளர்கள் பெரும் இழப்பை சந்திக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே, டயர், டியூப் மற்றும் உதிரி பாகங்களின் விலை உயர்வால் பெரும் நஷ்டத்தை சந்தித்து வருகின்றனர். இந்நிலையில், உயர்த்தப்பட்ட டீசல் விலையால் மேலும் நஷ்டமடைய வேண்டிய கட்டாயநிலை ஏற்பட்டுள்ளது. லாரி வாடகையை உயர்த்தும் போது, அத்தியாவசிய பொருட்களின் விலையும் அதிகமாகிறது. லாரி உரிமையாளர்கள், வேறு வழியின்றி நடைமுறையில் உள்ள வாடகை கட்டணத்தில் இருந்து 15 சதவீதத்தை உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது. புதிய கட்டண உயர்வை உடனடியாக, நடைமுறைப்படுத்தவும், லாரி உரிமையாளர்கள் சங்க செயற்குழு கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. இவ்வாறு, சின்னசாமி தெரிவித்துள்ளார்.
நன்றி : தினமலர்


திருப்பூர் பனியன் விற்பனை பாதிப்பு; உற்பத்தியும் 25 சதவீதம் குறைந்தது

கேரளா மற்றும் கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் பெய்து வரும் கனமழையால் பனியன் வியாபாரம் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், திருப்பூரில் உள்நாட்டு பனியன் உற்பத்தி 25 சதவீதம் குறைந்துள்ளது.
திருப்பூர் மற்றும் அதன் சுற்றுப்பகுதியில் உள்நாட்டு விற்பனைக்கான பனியன் மற்றும் பலவிதமான உள்ளாடைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இவை, டில்லி, மும்பை, குஜராத், ஆந்திரா, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் அதிகமாக விற்பனை செய்யப்படுகின்றன.
கோல்கட்டாவில் உற்பத்தி செய்யப்படும் பனியன், சில மாநிலங்களில் மட்டுமே விற்பனை செய்யப்படுகின்றன. லூதியானா, டில்லி பகுதிகளில் உற்பத்தி செய்யப்படும் பனியன், அப்பகுதியில் மட்டுமே அதிகமாக விற்பனை செய்யப்படுகின்றன.
திருப்பூர் பகுதியில் ஆண்டுக்கு 6,000 கோடி ரூபாய்க்கும் அதிகமாக, உள்நாட்டு விற்பனைக்கான பனியன் உற்பத்தி செய்யப்படுகிறது. இவை, பல மாநிலங்களில் உள்ள சில்லறை விற்பனையாளர்களுக்கு அனுப்பப்படுகின்றன. சில வாரங்களாக கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனால், பனியன் விற்பனை பாதிக்கப்பட்டுள்ளது. பெரும்பாலான சில்லறை விற்பனையாளர்கள், பிளாட்பாரங்கள் மற்றும் சந்தைகளில்தான் கடை அமைத்து விற்பனை செய்கின்றனர்.
மழை காரணமாக, சில்லறை வியாபாரிகள் கடைகள் அமைக்க முடியாமல் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்காரணமாக, உற்பத்தி செய்யப்பட்ட பனியன்கள் மற்றும் உள்ளாடைகளை விற்பனைக்கு அனுப்ப முடியாமல், லாரி கிடங்குகளிலும், உற்பத்தி நிறுவனங்களிலும் தேக்கமடைந்துள்ளன.
பனியன் உற்பத்தியாளர்கள் உற்பத்தியை குறைக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளது. நாளொன்றுக்கு இரண்டு கோடி ரூபாய் மதிப்புள்ள பனியன் உற்பத்தி செய்யப்படுவதால், மழை காரணமாக, நாளொன்றுக்கு 50 லட்சம் ரூபாய் மதிப்புள்ள உற்பத்தி குறைக்கப்பட்டுள்ளது.
உற்பத்தி குறைக்கப்பட்டுள்ளதால், தொழிலாளர்களுக்கு வேலையிழப்பும் ஏற்பட்டுள்ளது. ஆடி மாதம் துவங்குவதால், ஆந்திரா, கேரளா மாநிலங்களில் உள்ள மக்கள் புதிய ஆடைகளை வாங்கி அணிவதை தவிர்க்கின்றனர். இதன் எதிரொலியாகவும் பனியன் வியாபாரமும் பாதிக்கப்பட்டு வருகிறது.
நன்றி : தினமலர்


இன்போசிஸின் நிகர லாபம் 17.3 சதவீதம் அதிகரித்திருக்கிறது

ஜூன் மாதத்துடன் முடிவடைந்த இந்த நிதி ஆண்டின் முதல் காலாண்டில், இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய சாப்ட்வேர் ஏற்றுமதி நிறுவனமான இன்போசிஸ், ரூ.5,472 கோடியை மொத்த லாபமாக பெற்றிருக்கிறது. கடந்த வருடம் முதல் காலாண்டுடன் ஒப்பிட்டால், இது 12.7 சதவீதம் அதிகம். அதேபோல் வரிக்கு பிந்தைய லாபம் ரூ.1,527 கோடி கிடைத்திருக்கிறது. இது கடந்த நிதி ஆண்டைக்காட்டிலும் 17.3 சதவீதம் அதிகம். இது எதிர்பார்த்த லாபத்தை விட அதிகம். இந்த தகவலை வெளியிட்ட அந்த நிறுவனத்தின் சிஇஓ மற்றும் மேலாண் இயக்குனர் கிரிஸ் கோபாலகிருஷ்ணன், சர்வதேச அளவில் நிலவும் மந்தமான பொருளாதார நிலையிலும் கூட இந்த அளவுக்கு லாபம் சம்பாதித்திருப்பது ஒரு சாதனையே என்றார். இத்தனைக்கும் எங்களுக்கு ஆர்டர்களை கொடுத்துக்கொண்டிருக்கும் முக்கிய 10 கம்பெனிகளின் ஆர்டர்கள் இந்த காலாண்டில் 25.8 சதவீதம் குறைந்திருக்கிறது. ஆனால் இதைவிட அதிகமாக கடந்த நிதி ஆண்டின் முதல் காலாண்டில் அது 30.1 சதவீதம் குறைந்திருந்தது.இதிலிருந்து உலக பொருளாதாரம் ஒரு நிலையற்ற தன்மையில் இருப்பது தெரிய வரும் என்றார் கோபாலகிருஷ்ணன். நாங்கள் இந்த நிதி ஆண்டில் அவர்களது ஆர்டர்களை எதிர்பார்க்காமல், இந்திய அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களிடமிருந்து ஆர்டர்களை பெற்று வேலை செய்து வருகிறோம் என்றார் அவர்.
நன்றி : தினமலர்