Monday, November 17, 2008

இன்றும் சரிவில் முடிந்த பங்கு சந்தை

இன்றும் மும்பை பங்கு சந்தை சரிவில்தான் முடிந்திருக்கிறது. மதிய வேளையில் அதிகம் புள்ளிகளை இழந்திருந்த சென்செக்ஸ் மற்றும் நிப்டி, மாலை வர்த்தகம் முடிய ஒரு மணி நேரத்தில் ஓரளவு புள்ளிகளை மீட்டு விட்டது. ரியல் எஸ்டேட், மெட்டல், பேங்கிங், பார்மா மற்றும் சில ஆயில் கம்பெனி பங்குகள் தொடர்ந்து சரிந்துகொண்டுதான் இருக்கின்றன. மிட்கேப் மற்றும் ஸ்மால்கேப் பங்குகளும் வீழ்ந்துகொண்டுதான் இருக்கிறது. இருந்தாலும் பார்தி ஏர்டெல், ஓ.என்.ஜி.சி., இன்போசிஸ், விப்ரோ, என்.டி.பி.சி., பெல், ஏ.சி.சி., அம்புஜா சிமென்ட்ஸ், மாருதி மற்றும் டாடா மோட்டார்ஸ் பங்குகள் அதிகம் வாங்கப்பட்டன. இன்று காலை வர்த்தகம் ஆரம்பித்ததில் இருந்தே குறைந்த நிலையில் இருந்த சென்செக்ஸ் மற்றும் நிப்டி, மதிய வேளையில் அதிகம் புள்ளிகளை இழந்திருந்தது. சென்செக்ஸ் 9,000 புள்ளிகளுக்கு கீழும், நிப்டி 2,700 புள்ளிகளுக்கு கீழும் சென்றிருந்தது. இருந்தாலும் கடைசி ஒரு மணி நேரத்தில் டெலிகாம், கேப்பிடல் குட்ஸ், டெக்னாலஜி, சிமென்ட், ஆட்டோ,ஓ.என்.ஜி.சி., பங்குகள் பெருமளவில் வாங்கப்பட்டதால் இழந்த புள்ளிகள் ஒரளவுமீண்டு வந்தன. வர்த்தக முடிவில் சென்செக்ஸ் 94.41 புள்ளிகள் ( 1.01 சதவீதம் ) குறைந்து 9,291.01 புள்ளிகளில் முடிந்தது.தேசிய பங்கு சந்தையில் நிப்டி 10.80 புள்ளிகள் ( 0.38 சதவீதம் ) குறைந்து 2,799.55 புள்ளிகளில் முடிந்திருக்கிறது. ஹெச்.டி.எஃப்.சி. பேங்க், ரிலையன்ஸ் இன்ஃராஸ்டரக்ஸர், டாடா ஸ்டீல், டி.எல்.எஃப், ஹெச்.டி.எஃப்.சி, யூனிடெக், சீமென்ஸ், எம் அண்ட் எம், மற்றும் செய்ல் ஆகியவை 4 முதல் 4.7 சதவீதம் வரை இழந்திருந்தது. விப்ரோ, ஏ.சி.சி, டாடா மோட்டார்ஸ், மாருதி சுசுகி, பார்தி ஏர்டெல், நால்கோ, அம்புஜா சிமென்ட்ஸ்,மற்றும் பவர் கிரிட் கார்பரேஷன் 2 முதல் 5 சதவீதம் வரை உயர்ந்திருந்தது.
நன்றி : தினமலர்


கிங்ஃபிஷர் ஏர்லைன்ஸ் பங்குகளை வாங்க வெளிநாட்டு நிறுவனங்கள் முயற்சி

கிங்பிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் பங்குகளை வாங்க பல வெளிநாட்டு விமான கம்பெனிகளிடமிருந்து விண்ணப்பங்கள் வந்து கொண்டிருக்கின்றன என்று, அதன் சேர்மன் விஜய் மல்லையா இன்று தெரிவித்தார். ஆனால் இப்போதைய கொள்கையில் மத்திய அரசு மாற்றம் கொண்டு வந்து, வெளிநாட்டு நிறுவனங்களும் நம்நாட்டு விமான கம்பெனிகளின் பங்குகளை வாங்க வழி ஏற்படுத்தினால்தான் அவர்களின் விண்ணப்பங்களை பரிசீலிக்க முடியும் என்றார். இதற்கு மேல் நான் எதுவும் விவரமாக சொல்ல முடியாது என்று மல்லையா மறுத்தாலும், பங்குகளை விற்பது குறித்து வெளிநாட்டு நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடந்துகொண்டுதான் இருக்கிறது என்று கிங்ஃபிஷர் அதிகாரிகள் தெரிவித்தனர். இப்போதுள்ள அரசின் கொள்கையின் படி எந்த ஒரு வெளிநாட்டு நிறுவனமும் இந்திய விமான கம்பெனிகளின் பங்குகளை வாங்க முடியாது. ஆனால் விமான சேவையுடன் தொடர்புடைய மற்ற வேலைகளை, அதாவது கிரீன்ஃபீல்ட் விமான நிலையங்கள் அமைப்பது, கார்கோ அல்லது பராமரிப்பு வேலைகளை செய்வது, விமானங்களை ரிப்போர் பார்ப்பது அல்லது சர்வீஸ் செய்வது போன்ற வேலைகளில் 100 சதவீதம் வெளிநாட்ட நேரடி முதலீட்டுக்கு அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறது. இந்திய விமான நிறுவனங்களுக்கு அதிகம் சுதந்திரம் கொடுக்க வேண்டும் என்பதில் தீவிரமாக இருக்கும் விஜய் மல்லையா, இந்திய விமான நிறுவனங்கங்களின் பங்குகளில், நான்கின் ஒரு பங்கையாவது ( 25 சதவீதம் ) வெளிநாட்டு நிறுவனங்களுக்கு விற்க அனுமதி அளிக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளார். இதில் மத்திய அரசு நல்ல முடிவு எடுக்கும் என்று தான் நம்புவதாகவும் தெரிவித்தார். ஆனால் சமீபத்தில் இது குறித்து பேசிய கேபினட் செகரட்டரி கே.எம்.சந்திரசேகர், இந்திய விமான போக்குவரத்து துறையில் அந்நிய நேரடி முதலீட்டுக்கு அனுமதி அளிப்பது என்பது இப்போதைக்கு இல்லை என்றே குறிப்பிட்டார்.

நன்றிதினமலர்



காட்டன் ஏற்றுமதி 95 சதவீதம் சரிந்தது

கடந்த அக்டோபர் ஒன்றாம் தேதியில் இருந்து நவம்பர் 15ம் தேதிக்குட்பட்ட காலத்தில் இந்தியாவின் காட்டன் ஏற்றுமதி, கடந்த வருடத்துடன் ஒப்பிட்டால் 95 சதவீதம் குறைந்திருக்கிறது. கடந்த வருடம் இதே காலத்தில் 20,00,000 பேல்கள் ஏற்றுமதி செய்யப்பட்டிருந்தது. ஆனால் அதுவே இந்த வருடத்தில் வெறும் 75,000 பேல்கள்தான் ( ஒரு பேல் என்பது 170 கிலோ ) ஏற்றுமதி செய்யப்பட்டிருக்கிறது. மும்பையை சேர்ந்த காட்டன் அசோசியேஷன் ஆஃப் இந்தியாவின் தலைவர் பி.டி.படோடியா இது குறித்து கருத்து தெரிவிக்கையில், இந்திய அரசு இதுவரை காட்டன் ஏற்றுமதிக்கு கொடுத்து வந்த உதவித்தொகையை நிறுத்தி விட்டதாலும், சர்வதேச அளவில் ஏற்பட்டுள்ள மந்த நிலையால் காட்டனுக்கு டிமாண்ட் குறைந்து விட்டதாலும், இந்திய காட்டனின் விலை அதிகமாக இருப்பதாலும் ஏற்றுமதி குறைந்து விட்டது என்றார்.
நன்றி : தினமலர்


தினம் தினம் ரூ.22 கோடி நஷ்டமடையும் பெங்களுரு விமான நிலையம்

பெங்களுருவில் புதிதாக விமான நிலையம் திறக்கப்பட்டு ஆறு மாதங்களாகியும் அது தொடர்ந்து கடுமையான நஷ்டத்தை சந்தித்துக்கொண்டுதான் இருக்கிறது. அதனை நிர்வகிக்கும் பெங்களுரு இன்டர்நேஷனல் ஏர்போர்ட் லிமிடெட்., ( பி.ஐ.ஏ.எல்.,) நாள் ஒன்றுக்கு ரூ.22 கோடி நஷ்டமடைந்து வருகிறது. கடந்த ஆறு மாதங்களில் மொத்தமாக அது அடைந்த நஷ்டம் ரூ.130 கோடி இருக்கும் என்று சொல்லப்படுகிறது. பொதுவாக, புதிதாக விமான நிலையம் துவங்கிய முதல் ஐந்து வருடங்களுக்கு அதற்கு நஷ்டம்தான் ஏற்படும் என்று எதிர்பார்க்கிறார்கள். ஆனால் பெங்களுரு விமான நிலையத்தை பொருத்தவரை, அவர்கள் எதிர்பார்த்த நஷ்டத்தை விட கூடுதலான நஷ்டம் ஏற்படுவதாக சொல்கிறார்கள். இந்த பெரும் நஷ்டத்திற்கு அவர்கள் சொல்லும் முதல் காரணம், அவர்களுக்கு கொடுக்கப்படும் யு.டி.எஃப்., என்று சொல்லப்படும் யுசர் டெவலப்மென்ட் ஃபீஸ் குறைவாக கொடுக்கப்படுவதுதானாம். மத்திய அரசாங்கத்திடம் அவர்கள் கேட்பதோ பயணி ஒருவருக்கு ரூ.675 . ஆனால் இந்த தொகை அதிகமாக இருக்கிறது என்று அரசாங்கம் இதுவரை அந்த தொகைக்கு ஒப்புதல் அளிக்கவில்லை. இதற்கு அவர்கள் சொல்லும் காரணம், ஐதராபாத் விமான நிலையத்தில் யு.டி.எஃப்., பயணி ஒருவருக்கு ரூ.375 தான் கொடுக்கப்படுகிறது என்பதுதான். நஷ்டத்திற்கு இன்னொரு காரணம், பயணிகள் எண்ணிக்கை குறைந்து கொண்டே வருவது. ஆறு மாதங்களுக்கு முன் விமான நிலையம் திறக்கப்பட்டபோது, தினமும் 170 விமானங்கள் இங்கு இயக்கப்பட்டன. ஆனால் இப்போதோ அது 162 ஆக குறைந்து விட்டது. இந்த விமான நிலையத்தை பயன்படுத்தும் பெரும்பாலான விமான கம்பெனிகளும், பி.ஐ.ஏ.எல்.,க்குற கொடுக்க வேண்டிய கட்டணத்தை ஒழுங்காக கொடுக்காமல் தாமதப்படுத்துகின்றன.அதுவும் நஷ்டம் கூடுவதற்கு ஒரு காரணம் என்கிறார்கள்.
நன்றி : தினமலர்


கச்சா எண்ணெய் விலை குறைந்தது

சர்வதேச சந்தையில் இப்போது கச்சா எண்ணெய் விலை நாளுக்கு நாள் குறைந்து கொண்டேதான் இருக்கிறது. நியுயார்க் மெர்கன்டைல் சந்தையில் யு.எஸ்.லைட் ஸ்வீட் குரூட் ஆயில் விலை பேரலுக்கு 1.26 டாலர் குறைந்து 55.78 டாலராக இருக்கிறது. லண்டனின் பிரன்ட் நார்த் ஸீ குரூட் ஆயில் விலை பேரலுக்கு 84 சென்ட் குறைந்து 53.40 டாலராக இருக்கிறது. பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள மந்த நிலை காரணமாக ஏற்கனவே பெட்ரோலிய பொருட்களுக்கான டிமாண்ட் குறைந்து வருகிறது. இந்நிலையில் ஓபக் நாடுகள் எண்ணெய் உற்பத்தியை குறைக்க முன்வராது என்றும் சொல்லப்படுகிறது. இதன் காரணமாகத்தான் இப்போது எண்ணெய் விலை குறைந்து வருவதாக சொல்கிறார்கள். இருந்தாலும் இந்த மாதம் 29 ம் தேதி, ஓபக் நாடுகள் அமைப்பு எகிப்தில் கூடி, எண்ணெய் உற்பத்தியை குறைக்கலாமா என்பது குறித்து ஆராய இருக்கிறார்கள். ஆனால் இது குறித்து பேசிய ஓபக் அமைப்பின் தலைவர் சாகிப் கேலி, நவம்பர் 29ம் தேதி நடக்கும் கூட்டத்திற்குப்பின்னும் எண்ணெய் உற்பத்தி குறைக்கப்பட மாட்டாது என்றார்.
நன்றி : தினமலர்


இன்னும் 5 ஆண்டுகளில் ரூ.3,000 கோடியை முதலீடு செய்கிறது அப்பல்லோ டயர்ஸ்

வாகனங்களுக்கான டயர் தயாரிப்பில் முன்னணி நிறுவனமான அப்பல்லோ டயர்ஸ், இன்னும் ஐந்து ஆண்டுகளில் ரூ.3,000 கோடியை முதலீடு செய்கிறது. இந்தியா மற்றும் வெளிநாட்டில் புதிதாக இரண்டு கிரீன்ஃபீல்ட் டயர் தொழிற்சாலைகளை அமைக்கவும் ஏற்கனவே இருக்கும் தொழிற்சாலைகளை மேம்படுத்தவும் இந்த பணம் செலவு செய்யப்படும் என்று அந்த நிறுவனம் தெரிவித்திருக்கிறது. சென்னை மற்றும் கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் ஏதாவது ஒன்றில் புதிய தொழிற்சாலைகளை அமைப்பதன் மூலம், இன்றும் ஐந்து ஆண்டுகளில் அதன் மொத்த வரவு செலவை 4 பில்லியன் டாலராக உயர்த்தி, உலகின் மிகப்பெரிய ஆறு டயர் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றாக வளர்ந்து விட அது திட்டமிட்டிருக்கிறது. நாங்கள் இன்னும் ஐந்து ஆண்டுகளில் ரூ.3,000 கோடியை முதலீடு செய்ய இருக்கிறோம். எனக்கும் எங்கள் குழுவினருக்கும் இருக்கும் ஒரே ஆசை என்னவென்றால், எப்படியாவது உலகின் மிகப் பெரிய டயர் தொழிற்சாலைகள் ஆறில் ஒன்றாகி விட வேண்டும் என்பதுதான் என்றார் அப்பல்லோ டயர்ஸின் வைஸ் சேர்மன் மற்றும் ஜாயின்ட் எம்.டி., நீரஜ் கன்வார். நாங்கள் ஹங்கேரியில் இருந்து வெளியேறியதும் ஸ்லோவாக்கியா அல்லது போலந்தில் ஒரு தொழிற்சாலையை அமைக்க முடிவு செய்திருக்கிறோம். அங்கு ரூ.1,200 கோடி முதலீட்டில், வருடத்திற்கு 70 லட்சம் பயணிகள் வாகன ரேடியல் டயர்களை தயாரிக்க முடிவு செய்திருக்கிறோம். இப்போது சென்னையில் ஒரு புது தொழிற்சாலையை அமைத்துக்கொண்டிருக்கிறோம். அது அடுத்த வருடம் முடிவு பெற்றுவிடும். சென்னை தொழிற்சாலையில் உற்பத்தி துவங்கியதும் நாங்கள் வருடத்திற்கு 35,000 பயணிகள் வாகன ரேடியல் டயர்களும், 1,800 பஸ், லாரி டயர்களும் தயாரிப்போம். அப்போது இந்திய டயர் சந்தையில் 25 - 28 சதவீத மார்க்கெட் ஷேர்களை நாங்கள் பெற்று விடுவோம் என்றார் நீரஜ்.
நன்றி : தினமலர்