Friday, October 31, 2008

பங்கு சந்தையில் நல்ல முன்னேற்றம் : 700 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்தன

மும்பை பங்கு சந்தையில் இன்று காலை வர்த்தக ஆரம்பித்ததிலேயே நல்ல முன்னேற்றம் காணப்பட்டது. வர்த்தகம் ஆரம்பித்த ஒரு மணி நேரத்தில், சென்செக்ஸ் 792.03 புள்ளிகள் உயர்ந்து 9,836.54 புள்ளிகளாக இருந்தது. தேசிய பங்கு சந்தையிலும் நிப்டி 214.80 புள்ளிகள் உயர்ந்து 2,911.85 புள்ளிகளாக இருந்தது. இந்த வாரம் திங்கட்கிழமை வரை கடுமையான வீழ்ச்சியை சந்தித்து வந்த பங்கு சந்தை, செவ்வாய்க்கிழமை 2 மணி நேரம் மட்டும் நடந்த முகுரத் வர்த்தகத்தின் போது 500 புள்ளிகள் வரை உயர்ந்திருந்தது. அதற்கு அடுத்த நாளும் சந்தையில் முன்னேற்றம் தான் காணப்பட்டது. நேற்று விடுமுறைக்குப்பின் இன்று துவங்கிய பங்கு சந்தையில் சென்செக்ஸ் 700 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்திருப்பது முதலீட்டாளர்களியையே மீண்டும் உற்சாகத்தை ஏற்படுத்தியது. இன்றைய வர்த்தகத்தில் மெட்டல், ஆயில்,பேங்கிங், டெலிகாம், ஐ.டி., ஆட்டோ மற்றும் கேப்பிட்டல் குட்ஸ் பங்குகள் பெருமளவில் வாங்கப்பட்டன. சென்செக்ஸ் அதிகபட்டமாக 9,870.42 புள்ளிகள் வரை உயர்ந்து, பின்னர் வர்த்தக முடிவில், நேற்றைய நிலையில் இருந்து 743.55 புள்ளிகள் ( 8.22 சதவீதம் ) உயர்ந்து 9,788.06 புள்ளிகளில் முடிந்தது. தேசிய பங்கு சந்தையில் நிப்டி அதிகபட்சமாக 2,921.35 புள்ளிகள் வரை உயர்ந்து, பின்னர் முடிவில் 188.55 புள்ளிகள் ( 6.99 சதவீதம் ) உயர்ந்து 2,885.60 புள்ளிகளில் முடிந்திருக்கிறது. இன்று அதிகம்ற உயர்ந்திருந்தது மகிந்திரா அண்ட் மகிந்திரா பங்குகள்தான். 23 சதவீதம் உயர்ந்திருந்தது. ஹெச்டிஎஃப்சி, ஜெய்பிரகாஷ் அசோசியேட்ஸ், ஐசிஐசிஐ பேங்க், ஸ்டெர்லைட் இன்டஸ்டிரீஸ், ரிலையன்ஸ் இன்டஸ்டிரீஸ், ரிலையன்ஸ் கம்யூனிகேஷன், ஹிண்டல்கோ, டாடா ஸ்டீல், டாடா பவர், டாடா கம்யூனிகேஷன், ஹெச்.சி.எல் டெக், கெய்ர்ன் இந்தியா, ஐடியா செல்லுலார் ஆகியவை 10 முதல் 18 சதவீதம் வரை உயர்ந்திருந்தது. ஆசிய சந்தைகளை பொறுத்தவரை, ஜப்பானின் நிக்கி 5 சதவீதம் இறங்கியிருந்தது. ஹாங்காங்கின் ஹேங்செங்க் 2.52 சதவீதம், சீனாவின் ஷாங்காய் 1.97 சதவீதம், சிங்கப்பூரின் ஸ்டெயிட் டைம்ஸ் 0.43 சதவீதம் இறங்கியிருந்தது. ஆனால் ஜகர்த்தா, கோஸ்பி, தைவானில் 2.6 சதவீதத்தில் இருந்து 7.06 சதவீதம் உயர்ந்திருந்தது.
நன்றி : தினமலர்


இன்சூரன்ஸ் துறையில் அந்நிய நேரடி முதலீட்டை அதிகரிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்

ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் இருந்து கம்யூனிஸ்ட் கட்சிகள் விலகி 3 மாதங்களுக்குப்பின், இப்போது இன்சூரன்ஸ் துறையில் அந்நிய நேரடி முதலீட்டை அதிகரிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்திருக்கிறது. இதற்கான திருத்தி அமைக்கப்பட்ட இன்சூரன்ஸ் ஒழுங்குமுறை சட்ட திருத்த மசோதா பார்லிமென்டில் தாக்கல் செய்யப்பட இருக்கிறது. இது குறித்து நடந்த மத்திய அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் பற்றி இன்று நிதி அமைச்சர் சிதம்பரம் விளக்கினார். அப்போது, இன்சூரன்ஸ் துறை சம்பந்தமான சட்டங்களில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டிருக்கின்றன என்றும், முக்கியமாக, தனியார் இன்சூரன்ஸ் துறையில் இப்போது 26 சதவீதமாக இருக்கும் அந்நிய நேரடி முதலீடு, இனிமேல் 49 சதவீதமாக உயர்த்தப்படுகிறது என்றும் தெரிவித்தார்.மத்திய அரசின் இந்த முடிவை இடதுசாரி கட்சிகள் கடுமையாக எதிர்க்கின்றன. எனினும் தனியார் இன்சூரன்ஸ் நிறுவனங்கள் வரவேற்றுள்ளன. அந்நிய நேரடி முதலீடு 26 சதவீதத்தில் இருந்து 49 சதவீதமாக உயர்த்தப்படுவதால் ஏராளமான முதலீடு இந்தியாவுக்குள் வரும் என்றும் அது, நிறுவன வளர்ச்சிக்கு பெரிதும் உதவும் என்றும் அவர்கள் கருத்து தெரிவித்திருக்கிறார்கள். கடந்த நான்கு வருடங்களாக இதைத்தான் இடதுசாரி கட்சிகள் எதிர்த்து வந்தார்கள்.மத்திய அரசுக்கு அளித்து வந்த ஆதரவை அவர்கள் விலக்கிக்கொண்டபின்புதான் மத்திய அரசால் இன்சூரன்ஸ் துறையில் மாற்றங்களை கொண்டு வர முடிந்திருக்கிறது.
நன்றி : தினமலர்

இந்தியாவில் 7 சதவீத வளர்ச்சி இருக்கும்போது எப்படி வேலை இழப்பு ஏற்படும் ? : சிதம்பரம்

இந்தியாவில் 7 சதவீத வளர்ச்சி இருக்கும் போது எப்படி வேலை இழப்பு ஏற்படும் என்று மத்திய நிதி அமைச்சர் சிதம்பரம் கேட்டுள்ளார். சமீபத்தில் அசோசெம் வெளியிட்ட ஒரு அறிக்கையில், இன்னும் 10 வருடங்களில் இந்தியாவின் முக்கிய துறைகளில் பணியாற்றி வரும் ஊழியர்களில் 25 முதல் 30 சதவீதத்தினர் வேலை இழக்க நேரிடும் என்று தெரிவித்திருந்தது. இதற்கு பதிலளித்து இன்று பேசிய மத்திய நிதி அமைச்சர் சிதம்பரம், இந்தியாவில் 7 சதவீத வளர்ச்சி இருக்கும்போது எப்படி வேலை இழப்பு ஏற்படும் என்று கேள்வி எழுப்பினார். புதிய வேலை வாய்ப்பு உருவாகுதல் வேண்டுமானால் குறையுமே ஒழிய ஏற்கனவே இருக்கும் வேலையில் பாதிப்பு வராது என்றார் அவர். விமான போக்குவரத்து, தகவல் தொழில்நுட்பம், ஸ்டீல், நிதி சேவை, ரியல் எஸ்டேட், சிமென்ட், கட்டுமானம் ஆகிய ஏழு துறைகளில் இன்னும் 10 வருடங்களில் 25 முதல் 30 சதவீதம் வரை வேலை இழப்பு ஏற்படும் என்று சொன்ன அசோசெம்மின் கருத்தை, இன்னொரு தொழில் துறை அமைப்பான எஃப்.ஐ.சி.சி.ஐ.,யும் மறுத்திருக்கிறது. இது குறித்து சிதம்பரம் மேலும் தெரிவித்தபோது, இந்தியாவின் 7 சதவீத வளர்ச்சியால், தே. ஜ. கூட்டணி ஆட்சியின் போது ஏற்படுத்தப்பட்ட மொத்த வேலை வாய்ப்பை விட இப்போது கூடுதலாகத்தான் வேலைவாய்ப்பு ஏற்படுத்தப்படுகிறது என்றார். அவர்கள் ஆட்சியில் வளர்ச்சி 5.8 சதவீதமாகத்தான் இருந்தது. இப்போது எழும் இம்மாதிரியான கேள்விகள் அப்போது ஏன் எழவில்லை என்றார் அவர். அமெரிக்க பொருளாதாரம் வீழ்ந்து வருவதை குறித்து அவரிடம் கேட்டபோது, உலக அளவில் பொருளாதாரம் பாதிப்புக்குள்ளானால் அது முன்னேறிய நாடுகளை வெகுவாக பாதிக்கும். அதே நேரம் இந்தியாவில் மறைமுகமான பாதிப்பை ஏற்படுத்தும் என்றார். இந்திய பொருளாதாரம், உள்நாட்டு பயன்பாடு மற்றும் முதலீட்டை சார்ந்தே அமைந்திருக்கிறது. இங்கு ஏற்றுமதியில் ஏற்படும் பாதிப்பு என்பது சீனாவை போல் அவ்வளவு கடுமையானதாக இருக்காது என்றார்.
நன்றி : தினமலர்

சூடாகிறது என்று புகார் : ஒரு லட்சம் கம்ப்யூட்டர் பேட்டரிகளை திரும்ப பெறுகிறது சோனி

ஜப்பானின் சோனி கார்பரேஷன் தயாரித்து கொடுத்து, லேப்டாப்களில் பொருத்தப்பட்டிருந்த சுமார் ஒரு லட்சம் பேட்டரிகள், சூடாகிறது என்று வந்த புகாரினால் திரும்ப பெறப்படுகிறது. சோனி தயாரிப்பு பேட்டரிகள் சூடாகிறது என்றும் அதிலிருந்து புகை வருகிறது என்றும் வந்த சுமார் 40 புகார்களால், அந்த பேட்டரிகளை சோனி நிறுவனம் திரும்ப வாங்குகிறது. இதனால் கம்ப்யூட்டர் பாதிக்கப்பட்டு விட்டது என்று 21 பேரும், சூடான பேட்டரியால் தோல் பாதிப்பிற்குள்ளாகி இருக்கிறது என்று நான்கு பேரும் இதுவரை புகார் அளித்திருக்கிறார்கள். ஹேலட்-பேக்கார்ட், டோஷிபா, டெல் போன்ற முன்னணி கம்ப்யூட்டர் நிறுவனங்கள், சோனி பேட்டரியை அவர்களது லேப்டாப்களில் பொருத்தியிருந்தார்கள். அக்டோபர் 2004 க்கும் ஜூன் 2005 க்கும் இடைப்பட்ட காலத்தில் தயாரிக்கப்பட்ட பேட்டரிகள்தான் இந்த புகாருக்கு உள்ளாகி இருக்கிறது. ஆனால் இந்த பேட்டரி பிரச்னையில் சோனியின் வையோ லேப்டாப்கள் பாதிக்கப்படவில்லை என்கிறார்கள். அமெரிக்காவில் 32,000 சோனி பேட்டரிகள் திரும்ப பெறப்பட்டிருக்கிறது. இதில் பெருமாலானது ஹேலட்-பேக்கார்ட்டில் பொருத்தப்பட்டிருந்தது. சோனி பேட்டரிகள் பொருத்தப்பட்ட லேப்-டாப்களை பயன்படுத்த வேண்டாம் என்று வாடிக்கையாளர்களும் கேட்டுக்கொள்ளப் பட்டிருக்கிறார்கள். டேஷிபாவின் 14,400 லேப்-டாப்கள் பாதிக்கப்பட்டிருப்பதாக அந்த நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் யுகோ சுகஹரா தெரிவித்தார். 2006 ம் ஆண்டிலும் ஒரு தடவை சோனியின் ஒரு கோடி லேப்-டாப் பேட்டரிகள் திரும்ப பெறப்பட்டிருக்கிறது. அப்போதும் அது சூடாகிறது என்றுதான் புகார் வந்தது.
நன்றி : தினமலர்


சிங்கூர் நிலத்தை டாடா திருப்பி கொடுக்க வேண்டும் : இடதுசாரி கட்சி கோரிக்கை

மேற்கு வங்கத்தில் உள்ள சிங்கூரில் இருந்து டாடா மோட்டார்ஸ் வெளியேறி விட்டதால், அவர்களுக்கு கொடுக்கப்பட்டிருந்த இடத்தை அவர்கள் அரசாங்கத்திடம் திருப்பி கொடுக்க வேண்டும் என்று அங்குள்ள ஆளும் கட்சியான இடதுசாரி கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. சிங்கூரில் ஏற்பட்ட கசப்பான அனுபவங்களால் அங்கிருந்து முழுமையாக டாடா வெளியேறி விட்டது. அங்கு தயாரிக்கப்படுவதாக இருந்த டாடாவின் நானோ கார் திட்டம்ற இப்போது குஜராத்திற்கு மாற்றப்பட்டு விட்டது. ஆனால் அந்த இடம் இன்னமும் டாடாவிடம் தான் இருக்கிறது. அந்த இடத்தை அரசாங்கம் பெற்று அந்த இடத்தை வேறு தொழிற்சாலைக்கு கொடுத்து அங்கு தொழில் துவங்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்று ஆளும் இடதுசாரி முன்னணி தலைவர் பிமன் போஸ் தெரிவித்துள்ளார். அந்த இடம் விவசாயிகளுக்கும் திருப்பி கொடுக்கப்படாமல், அல்லது வேறு தொழிற்சாலையும் அமைக்கப்படாமல் இருந்தால், அந்த இடம் ஏலம் விடப்படவேண்டும் என்றும் அவர் கேட்டுள்ளார். இது குறித்து நடந்த இடதுசாரி முன்னணியின் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய முதல் அமைச்சர் புத்ததேப் பட்டாச்சார்ஜி, அந்த இடத்தில் டாடாவே வேறு தொழிற்சாலையை அமைக்க வேண்டும் என்றார்.
நன்றி : தினமலர்


பணவீக்கம் குறைவதால் பலன் வருமா?

கடந்த ஐந்து வாரங்களில் இல்லாத வகையில், பணவீக்கம் 10.68 சதவீதமாகக் குறைந்தது. இதனால், இதுவரை ரிசர்வ் வங்கியும், அரசும் எடுத்த நடவடிக்கைகள் பலன் தரத் துவங்கியது என்ற நம்பிக்கை ஏற்பட்டிருக்கிறது. நிதியமைச்சகக் கருத்துப்படி, முக்கியமான 30 பொருட்கள் விலை சிறிது குறைவே. இதுவரை 11 சதவீதம் என்று அச்சுறுத்திய அளவில் இருந்து 10.68 சதவீதமாகக் குறைந்திருக்கிறது என்று கூறப்படுகிறது. பணவீக்கம் குறைவதால், ரிசர்வ் வங்கி இனி மேலும் 'வங்கி ரொக்க கையிருப்பு விகிதத்தை' குறைக்க வாய்ப்பு அதிகம் என்று எச்.டி.எப்.சி., வங்கி தலைமை பொருளாதார நிபுணர் பரூவா கருத்து தெரிவித்திருக்கிறார். பொதுவாக கடந்த சில நாட்களாக வங்கிகளும், பெரிய நிறுவனங்களும் சந்தித்து வரும் நிதி நெருக்கடி குறைய வேண்டும் என்ற கட்டத்திற்கு அரசு சிந்தித்து, அடுத்தடுத்த நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. இல்லாவிட்டால், தொழில் துறை தேக்கம் ஏற்படும் போது அதிகளவு வேலைவாய்ப்பு குறையும். தற்போது, அதிகளவில் எண்ணிக்கை இருப்பதாகக் கூறி பணியாளர்களைக் குறைக்கும் நடவடிக்கையில் பல பெரிய நிறுவனங்கள் இறங்கியிருப்பதாக பேச்சு உள்ளது. அதே சமயம், தற்போது கச்சா எண்ணெய் விலை குறைந்திருந்த போதும், பலன் இருக்காது என்றும், டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு அதிகம் சரிவதை எளிதில் தடுக்க முடியாது என்றும் கூறப்படுகிறது. மேலும் பெட்ரோல், டீசல் விலை குறைப்பு என்ற பேச்சே இல்லை என்று பெட்ரோலிய அமைச்சர் தியோரா கருத்து தெரிவித்தார். சமையல் காஸ் விலை மட்டும் குறையும் என்று வெளியான தகவலையும் நேற்று அவர் மறுத்தார்.
நன்றி : தினமலர்


சிறிய முதலீட்டாளர்கள் ஒதுங்கி இருப்பதால் பங்குச் சந்தை 'டல்' : சேதுராமன் சாத்தப்பன்

மொபைல் போன்களில் தற்போது அதிகமாக சுற்றும் ஒரு ஜோக் என்ன தெரியுமா? பர்கர் வாங்கும் பணத்தில் ஒரு புளு சிப் பங்கை வாங்கி விடலாம். உதாரணமாக யுனிடெக் கம்பெனியின் ஒரு பங்கு 30 ரூபாய் அளவில் வந்தது. இது போல பல கம்பெனியின் பங்குகள் பர்கர் விலைக்கும் கீழே வந்தது. பணத்தை இழந்தவர்கள் மனம் விட்டு சிரிக்க முடியாவிட்டாலும், ஒரு வறட்டு சிரிப்பு சிரித்ததென்னவோ உறுதி. கடந்த சில வாரத்தைப் போலவே திங்களன்று சந்தை இன்னுமொரு பெரிய சரிவை சந்தித்தது. 1,000 புள்ளிகள் வரை சரிந்து 7,700 புள்ளிகளில் வந்து நின்றது. பார்த்தவர்களில் பலருக்கு நிச்சயம் அதிர்ச்சி ஏற்பட்டிருக்கும். காரணம், அமெரிக்க சந்தையில் கடந்த வாரம் வெள்ளியன்று ஏற்பட்ட சரிவைத் தொடர்ந்து, ஆசிய சந்தைகள் எல்லாம் திங்களன்று காலை கீழேயே துவங்கின. பல ஆசிய சந்தைகள் கடந்த ஐந்து ஆண்டு இறக்க அளவில் உள்ளன. இந்தியாவிலும் அதே நிலை நீடித்தது. வெளிநாட்டு முதலீட்டு நிறுவனங்கள் விற்பது நிற்கவில்லை. ஆதலால், அடிமட்டத்தை தொட்டு வருகிறது. நல்ல புளூ சிப் பங்குகள் அடிமாட்டு விலைக்கு கிடைத்தாலும் வாங்க யாரும் தயாராக இல்லை. மியூச்சுவல் பண்டுகளும், சிறிய முதலீட்டாளர்களும் ஒதுங்கியே இருக்கின்றனர். எப்.ஐ.ஐ.,க்கள் (வெளிநாட்டு முதலீட்டு நிறுவனங்கள்) விற்பதை நிறுத்தினால் மற்றவர்கள் பயமில்லாமல் உள்ளே வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அரசு, நிலைமையை சரிசெய்ய பெரிய அளவில் கட்டுமானத் திட்டங்களை கொண்டு வரலாம். அதன் மூலம் அரசு திட்டங்கள், கம்பெனிகளுக்கு கிடைக்கலாம். இது, வேலை வாய்ப்பையும், தொழில் வளர்ச்சியையும் ஊக்குவிக்கும். அதே சமயம் சந்தையையும் ஊக்குவிக்கும். ரிசர்வ் வங்கி ரெப்போ கட் மறுபடி செய்யப்படலாம். உலக அளவில் உள்ள மத்திய வங்கிகள் எல்லாம் ஒன்று கூடி சந்தைகளை நிலைநிறுத்த முயற்சிகள் எடுத்து வருகின்றன. அது பலனளித்தால் சரிதான். இந்த முயற்சி ஏற்படும் என்ற நம்பிக்கையில் பல நாடுகளின் கரன்சிகள் வலு கூடின. டாலருக்கு எதிராக இந்திய ரூபாயும் கூடியது. இந்திய சந்தையின் நிலை மட்டும் தான் இப்படியா என்று பலரும் நினைக்கலாம். ஜப்பானின் பங்குச் சந்தை கடந்த 26 ஆண்டுகளில் மிகவும் குறைவான நிலையை எட்டியுள்ளது. ஐரோப்பிய சந்தைகள் கடந்த ஐந்து ஆண்டுகளில் மிகவும் குறைவான நிலையை எட்டியுள்ளது. அனைவரும் ஆவலாக எதிர்பார்த்த ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கியின் காலாண்டு முடிவுகள், எவ்வித மாற்றமும் இல்லாமல் கடந்த ஆண்டின் காலாண்டு போலவே இருந்தது. ஸ்டேட் பாங்கின் காலாண்டு முடிவுகள் கடந்த ஆண்டை விட 40 சதவீதம் அதிகமாக இருந்தது. மியூச்சுவல் பண்டுகளில் இன்னும் ரிடம்ஷன் பிரஷர் அதிகமாக இருக்கிறது. அதாவது பிடுங்கிய வரை லாபம் என்று முதலீட்டாளர்கள் நினைக்கின்றனரோ என்னவோ? இந்திய கம்பெனிகள் வலுவானவை. சந்தை மிகவும் மலிந்துள்ளதால் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் நிச்சயம் வருவர். வந்தால் சந்தை கூடும்; சந்தை கூடினால் இந்திய முதலீட்டாளர்களும் வருவர்.

நன்றி :தினமலர்