
இந்தியாவில் 7 சதவீத வளர்ச்சி இருக்கும் போது எப்படி வேலை இழப்பு ஏற்படும் என்று மத்திய நிதி அமைச்சர் சிதம்பரம் கேட்டுள்ளார். சமீபத்தில் அசோசெம் வெளியிட்ட ஒரு அறிக்கையில், இன்னும் 10 வருடங்களில் இந்தியாவின் முக்கிய துறைகளில் பணியாற்றி வரும் ஊழியர்களில் 25 முதல் 30 சதவீதத்தினர் வேலை இழக்க நேரிடும் என்று தெரிவித்திருந்தது. இதற்கு பதிலளித்து இன்று பேசிய மத்திய நிதி அமைச்சர் சிதம்பரம், இந்தியாவில் 7 சதவீத வளர்ச்சி இருக்கும்போது எப்படி வேலை இழப்பு ஏற்படும் என்று கேள்வி எழுப்பினார். புதிய வேலை வாய்ப்பு உருவாகுதல் வேண்டுமானால் குறையுமே ஒழிய ஏற்கனவே இருக்கும் வேலையில் பாதிப்பு வராது என்றார் அவர். விமான போக்குவரத்து, தகவல் தொழில்நுட்பம், ஸ்டீல், நிதி சேவை, ரியல் எஸ்டேட், சிமென்ட், கட்டுமானம் ஆகிய ஏழு துறைகளில் இன்னும் 10 வருடங்களில் 25 முதல் 30 சதவீதம் வரை வேலை இழப்பு ஏற்படும் என்று சொன்ன அசோசெம்மின் கருத்தை, இன்னொரு தொழில் துறை அமைப்பான எஃப்.ஐ.சி.சி.ஐ.,யும் மறுத்திருக்கிறது. இது குறித்து சிதம்பரம் மேலும் தெரிவித்தபோது, இந்தியாவின் 7 சதவீத வளர்ச்சியால், தே. ஜ. கூட்டணி ஆட்சியின் போது ஏற்படுத்தப்பட்ட மொத்த வேலை வாய்ப்பை விட இப்போது கூடுதலாகத்தான் வேலைவாய்ப்பு ஏற்படுத்தப்படுகிறது என்றார். அவர்கள் ஆட்சியில் வளர்ச்சி 5.8 சதவீதமாகத்தான் இருந்தது. இப்போது எழும் இம்மாதிரியான கேள்விகள் அப்போது ஏன் எழவில்லை என்றார் அவர். அமெரிக்க பொருளாதாரம் வீழ்ந்து வருவதை குறித்து அவரிடம் கேட்டபோது, உலக அளவில் பொருளாதாரம் பாதிப்புக்குள்ளானால் அது முன்னேறிய நாடுகளை வெகுவாக பாதிக்கும். அதே நேரம் இந்தியாவில் மறைமுகமான பாதிப்பை ஏற்படுத்தும் என்றார். இந்திய பொருளாதாரம், உள்நாட்டு பயன்பாடு மற்றும் முதலீட்டை சார்ந்தே அமைந்திருக்கிறது. இங்கு ஏற்றுமதியில் ஏற்படும் பாதிப்பு என்பது சீனாவை போல் அவ்வளவு கடுமையானதாக இருக்காது என்றார்.
நன்றி : தினமலர்
1 comment:
USA athnna சதவீத % வளர்ச்சி?
anga ______ வளர்ச்சி இருக்கும்போது எப்படி வேலை இழப்பு ஏற்படுகிரது ஏன் ? : சிதம்பரம் பதில் சொல்லுஙக
Post a Comment