Friday, August 21, 2009

இந்திய ரோடுகளில் விரைவில் ஏராளமான பவர் பைக்குகள் : ஒரு ரிப்போர்ட்

இந்தியாவில் பவர் பைக்குகள் வாங்குவதில் வாடிக்கையாளர்களிடம் ஏற்பட்டுள்ள மோகத்தை தொடர்ந்து, புதிய மாடல் பவர் பைக்குகளை அதிக அளவில் உற்பத்தி செய்ய முன்னணி நிறுவனங்கள் போட்டா போட்டிக் கொண்டு களமிற‌ங்கியுள்ளன. சர்வதேச அளவில் டூவீர் உற்பத்தியில் ஜாம்பவான்களாக விளங்கும் யமஹா, சுசூகி, கே.டி.எம்., கவாசாக்கி ஆகிய நிறுவனங்கள் பவர் பைக்குளின் புதிய மாடல்களை த‌யாரிப்பதில் முணைப்புடன் செயல்பட்டு வருகின்றன. இம்மாதிரியான பைக்குகளின் விலை 10 முதல் 12 லட்சம் ரூபாயாக இருந்தால் கூட வாடிக்கையாளர்கள் வாங்க தயாராக தான் இருப்ப‌தாக பவர் பைக் மார்கெட் அனாலிசிஸ் தெரிவிக்கின்றன. பவர் பைக்குகள் உற்பத்தி குறித்து பேட்டியளித்த சுசூகி மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் இந்தியா துணை தலைவர் ( மார்கெட்டிங் - சேல்ஸ்) அடுல் குப்தா , பவர் பைக்குகளுக்கு நிலவும் தேவையை பூர்த்தி செய்வதே எங்கள் லட்சியம் என்றார். மேலும் தங்கள் நிறுவனத்தின் ஜி.எக்ஸ்.ஆர்., (ஜிக்ஸர்) மாடல் பவர்பைக் டிசம்பர் மாத இறுதிக்குள் லாஞ்ச் செய்யப்படும் என்றார். இதன் விலை தற்போது மார்க்கெட்டில் உள்ள அதிவேகமான பைக்குகள் ஹயாபுசா மற்றும் இன்டரூடருக்கு நிகராக 12.5 லட்சம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. யமஹா நிறுவனமும் தனது பிரசித்த பெற்ற அடுத்த ஜெனரேஷனுக்கான ஒய்.ஏசட்.எப். ஆர் 1(2009 மாடலை) விரைவில் அறிமுகப்படுத்தயிருப்பதாக தெரிவித்துள்ளது.
நன்றி : தினமலர்


ஈஸி இன்ஸ்டால்மன்டில் கிராமப்புற மக்களுக்கு செல் போன்கள் வழங்க நோக்கியா திட்டம்

ஈஸி இன்ஸ்டால்மன்டில் கிராமப்புற மக்களுக்கு செல் போன்கள் வழங்க நோக்கியா திட்டமிட்டுள்ளது. அதுவும் வார தவணை முறையில் செல்போன் விற்க நோக்கியா திட்டமிட்டுள்ளது. நோக்கியா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி கிராமப்புறங்களில் இப்போது செல்போனுக்கான தேவை அதிகரித்துள்ளது. இதை கருத்தில் கொண்டு, இந்தியாவில், 12 மாநிலங்களில் ஏழை மக்களுக்காக வார தவணை முறையில் செல்போன்களை விற்க திட்டமிட்டுள்ளோம் என கூறினார். வாரம் ரூ.100 வீதம் 25 வாரங்களில் விலையை செலுத்த அனுமதிக்கப்படுவார்கள். இதற்காக சிறுகடன் வழங்கும் நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்ய உள்ளதாக கூறினார். முதற்கட்டமாக சோதனை அடிப்படையில் ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களில் 2000க்கும் மேற்பட்ட கிராமங்களில் செல்போன் வழங்கும் திடடம் அமல் படுத்தப்பட்டது. அதிக அளவில் விண்ணப்பங்கள் வந்து குவிந்தன. திட்டத்துக்கு கிடைத்த வெற்றியின் அடிப்படையில், மற்ற மாநிலங்களிலும் இதை செயல்படுத்த முடிவு செய்துள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.
நன்றி : தினமலர்


பிற வங்கி ஏடிஎம்களை 5 முறைக்கு மேல் பயன்படுத்தினால் கட்டணம்!

எந்த ஏடிஎம்மிலும் பணம் எடுக்கலாம், கட்டணமில்லை என்ற அறிவிப்பு வெளியானதும் கார்டும் கையுமாக ஏடிஎம் வாசல்களில் க்யூவில் காத்திருப்பவர்கள் உற்சாகத்தில் துள்ளினர்.

இப்போது அந்த அறிவிப்பில் ஒரு மாறுதல்...

பிற வங்கிகளின் ஏடிஎம்களில் மாதத்துக்கு 5 முறைக்கு மேல் பணம் எடுத்தால் கட்டணம் வசூலிக்கப்படும் என்ற திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளது. இதுவரை குறிப்பிட்ட வங்கியின் ஏடிஎம் அட்டைகளை மற்ற வங்கி ஏடிஎம்களில் பயன்படுத்தினால் ஒவ்வொரு முறை பணம் எடுக்கும் போதும் ரூ.20 முதஸ் 75 வரை வங்கிக்கேற்ப கட்டணம் விதிக்கப்பட்டு வந்தது.
இதனால் குறிப்பிட்ட வங்கியின் தானியங்கி பணம் வழங்கும் கருவியைத் தேடி அலைந்தனர் மக்கள் . பல ஏடிஎம்களில் பெரிய க்யூ நீள்வது வாடிக்கையாக இருந்தது.
இந்த நிலையில்தான், அரசு வங்கி, தனியார் வங்கி என்ற பேதமில்லாமல், எந்த வங்கியின் கார்டாக இருந்தாலும் அதை வைத்து கட்டணமின்றி பணம் எடுக்கலாம் என அறிவிக்கப்பட்டது.

இப்போது அதிலும் ஒரு மாறுதல்...

குறிப்பிட்ட வங்கியின் அட்டையை பிற வங்கி ஏடிஎம்களில் மாதத்துக்கு 5 முறைக்கு மேல் பயன்படுத்தினால் கட்டணம் வசூலிக்கப்படுமாம்.

அக்டோபர் மாதத்திலிருந்து இந்த புதிய திருத்தம் அமலுக்குவரும் என்று அனைத்து வங்கிகள் சங்கத்தின் துணை தலைமை அலுவலர் உன்னிகிருஷ்ணன் அறிவித்துள்ளார். இதற்கு ரிசர்வ் வங்கியும் ஒப்புதல் வழங்கியுள்ளது.

இந்தியாவில் மொத்தம் 80 அரசு, தனியார், கூட்டுறவுத் துறை சேர்ந்த வங்கிகளின் 40000க்கும் மேற்பட்ட ஏடிஎம்கள் உள்ளன.
நன்றி : தட்ஸ்தமிழ்

தேர்தலும் துப்பாக்கிகளும்!

தலிபான்களின் ஆட்சியில் ஆப்கானிஸ்தானில் பெண்கள் அடிமைகளாக நடத்தப்பட்டனர். மனித உரிமைகள் பேருக்குக்கூடக் கிடையாது. அரசை எதிர்த்து யாரும் வாய்திறக்க முடியாது. அடக்குமுறையே சட்டமாக இருந்தது. 10 ஆண்டுகள்வரை நீடித்த இந்த நிலைக்கு எதிராக யாரும் வெகுண்டு எழவில்லை. 2001-ல் உலக வர்த்தக மையம் தகர்க்கப்பட்டதும், ஆப்கனில் தலிபான்களின் அடக்குமுறைக்கு முடிவுகட்ட வேண்டும் என்கிற "பொதுநல' ஆவேசம் அமெரிக்காவுக்கும் பிரிட்டனுக்கும் வந்தது.

ஆப்கானிஸ்தானைத் தாக்குவதற்கு அமெரிக்காவுக்கு நேரடிக் காரணம் இருந்தது. ஆனால் பிரிட்டனுக்கு அப்படி ஏதும் இருக்கவில்லை. போர் என்றால் ஏதாவது காரணம் வேண்டுமே? அதனால், ஆப்கானிஸ்தானில் மனித உரிமைகளை நிலை நாட்டப் போகிறோம்; பெண்ணடிமைத்தனத்தை முடிவுக்குக் கொண்டுவரப் போகிறோம் என்று கூறி அமெரிக்காவுக்கு டோனி பிளேர் ஆதரவு தெரிவித்தார். மேற்கத்தியச் சிந்தனை கொண்டவராகக் கருதப்படும் ஹமீத் கர்சாயிடம் நாட்டின் தலைமைப் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது.

எட்டு ஆண்டுகள் முடிந்துவிட்டன. தலிபான்களுக்கு மாற்றாக யார், கருதப்பட்டாரோ, அந்த அதிபர் ஒரு சட்டத்தைக் கொண்டுவந்தார். கணவனைக் கேட்காமல் பெண்கள் யாரும் வீட்டைவிட்டு வெளியே செல்லக்கூடாது; கணவனின் தாம்பத்ய விருப்பத்துக்கு இணங்காத பெண்களுக்கு சாப்பாடு போட வேண்டிய அவசியமில்லை என்றது அந்தச் சட்டம். பெண்கள் வேலைக்குப் போவதென்பது கணவனின் விருப்பத்துக்குக் கட்டுப்பட்டது. குழந்தைகள் மீது பெண்களுக்கு எந்த உரிமையும் இல்லை. குழந்தைகளைப் பெற்றுக் கொள்வதும், கணவனுக்குப் பிடிக்கும் விதத்தில் அவர்களை வளர்ப்பதுமே பெண்களின் பணி. இதில் உரிமை எடுத்துக் கொள்வதற்கு இடமேயில்லை என அந்தச் சட்டம் சொன்னது.

சர்வதேச அளவில் எதிர்ப்புகள் கிளம்பியதும் சட்டத்தைப் படித்துப் பார்க்காமலேயே கையெழுத்திட்டுவிட்டதாக மழுப்பினார் கர்சாய். இப்போது அதே சட்டம் சிறிய மாறுதல்களுடன் மீண்டும் அமலுக்கு வந்திருக்கிறது. மத அடிப்படைவாத வாக்கு வங்கியைக் கவருவதற்காகவே இந்தச் சட்டம் கொண்டுவரப்பட்டதாகக் கருதப்படுகிறது. நிலைமை இப்படியிருக்க, தலிபான்களின் ஆதிக்கத்திலிருந்து ஆப்கானிஸ்தான் விடுபட்டுவிட்டது என்று சொன்னால் யாராவது நம்புவார்களா?

இப்படி ஆனதற்குக் காரணம் அமெரிக்காவும் பிரிட்டனும்தான். தலிபான்களின் ஒத்துழைப்புடன் நாட்டை ஜனநாயகப் பாதைக்குத் திருப்பப் போகிறோம் என்று கூறி, பயங்கரவாதத் தலைவர்களையும், போர்க் குற்றவாளிகளையும் உயர் பதவியில் அமெரிக்கா அமர்த்தியது. அதனால்தான், ஆட்சி நிர்வாகத்திலும் சட்டங்களிலும் மத அடிப்படைவாதம் புகுத்தப்படுகிறது.

இப்படியான சூழலில் ஆப்கானிஸ்தானில் இன்று அதிபர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடக்கிறது. 2001-ம் ஆண்டுக்குப் பிறகு ஆப்கானிஸ்தானில் நடக்கும் இரண்டாவது அதிபர் தேர்தல் இது. 2004-ம் ஆண்டு அமலுக்கு வந்த அரசியல் சட்டப்படி ஒருவர் இரண்டுமுறை மட்டுமே அதிபராகப் பதவி வகிக்க முடியும். அந்தச் சட்டம் வருவதற்கு முன்னரே கர்சாய் அதிபராக இருந்தார் என்பதால், இது அவருக்கு மூன்றாவது முறை.

இந்தத் தேர்தலில் 30-க்கும் மேற்பட்டோர் களத்தில் உள்ளனர். சுயேச்சையாகப் போட்டியிடும் கர்சாய் தவிர, முன்னாள் வெளியுறவு அமைச்சர் அப்துல்லா அப்துல்லாவும், அஷ்ரப் கனியும் முக்கியப் போட்டியாளர்கள்.

பெரும்பாலான நாடுகளைப் போலவே, இரண்டு சுற்று வாக்குப் பதிவைக் கொண்டது அதிபர் தேர்தல். முதல் சுற்றில் யாருக்கும் 50 சதவீதத்துக்கும் அதிகமான வாக்குகள் கிடைக்கவில்லை எனில் முதல் இரண்டு இடங்களைப் பிடித்த வேட்பாளர்கள் மட்டும் போட்டியிடும் இரண்டாவது சுற்று வாக்குப் பதிவு நடைபெறும்.

தேர்தல் என்றாலே பண பலத்துடனும் அரசு ஊழியர்களின் துணையுடனும் நடத்தப்படும் மாபெரும் மோசடி என்னும் கருத்து இன்றைய மக்கள் மனங்களில் வேரூன்றியிருக்கிறது. இந்த விஷயத்தில் வளர்ந்த மற்றும் வளர்ச்சியடைந்த ஜனநாயக நாடுகளுக்கு சற்றும் சளைத்ததல்ல ஆப்கானிஸ்தான். வாக்காளர் அடையாள அட்டைகள் 10 டாலர் விலையில் மொத்தமாகவும் சில்லறையாகவும் விற்பனை செய்யப்படுவதாக பிபிசி புலனாய்வில் தெரியவந்திருக்கிறது. கிராமப்புறங்களில் குட்டித் தலைவர்கள் மூலமாக வாக்கு வர்த்தகம் நடைபெறுவதாகவும் செய்திகள் வெளியாகியிருக்கின்றன. அரசு ஊழியர்களும், அரசு ஊடகங்களும் கர்சாய்க்கு ஆதரவாகப் பிரசாரத்தில் ஈடுபடுவதாக பிற வேட்பாளர்கள் குற்றம்சாட்டியிருக்கின்றனர்.

அதிபர் தேர்தலுக்கு ஒத்துழைப்பு அளிக்க முடியாது என தலிபான்கள் அறிவித்திருக்கின்றனர். அதற்கு முன்னோட்டமாக காபூல் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் ஆங்காங்கே குண்டுகள் வெடித்துக் கொண்டிருக்கின்றன.

நாடு முழுவதும் அமைக்கப்பட்டுள்ள மொத்த வாக்குச் சாவடிகளில் 30 சதவீதத்துக்கும் மேலானவை தலிபான்களின் ஆதிக்கம் மிகுந்த பகுதிகளில் இருப்பதால், அங்கெல்லாம் தேர்தல் அமைதியாக நடக்கும் என எதிர்பார்க்க முடியாது.

ஒருவருக்கே ஒன்றுக்கு மேற்பட்ட அடையாள அட்டைகளை வழங்குவது, வாக்காளர் பட்டியலில் பெயர் விடுபடுவது போன்ற வழக்கமான குழப்பங்களும் உண்டு.

இத்தனை சிக்கல்களுக்கும் மத்தியில், முன்பு இருந்ததைவிட கருத்துச் சுதந்திரம் மேம்பட்டிருப்பதும், ஊடகங்களுக்கு உரிய மரியாதை அளிக்கப்படுவதும் முழுமையான ஜனநாயகம் மலர்வதற்கான அறிகுறிகளாகக் கருதப்படுகின்றன. பெண்ணடிமை முழுமையாக ஒழிக்கப்படாவிட்டாலும், முக்கிய பதவிகளுக்குப் பெண்கள் வந்திருப்பது பெரிய முன்னேற்றம்தான்.

என்னதான் முறைகேடுகள் நடந்தாலும், பயங்கரவாதம் மற்றும் ஏகாதிபத்தியம் ஆகியவற்றின் பிடியில் இருந்து விடுபட்டு சுயாட்சி மலர்வதில் இந்த அதிபர் தேர்தல்கூட முக்கிய பங்காற்றத்தான் போகிறது.
கட்டுரையாளர் : பூலியன்
நன்றி : தினமணி

யாருக்காக, இது யாருக்காக...?

"சொன்னால் வெட்கக்கேடு, சொல்லாட்டி மானக்கேடு' என்கிற கதையாக, தமிழக சட்டப்பேரவையில் கடந்த ஜூன் 23-ம் தேதி அறிமுகம் செய்யப்பட்டு, மறுநாளே எந்த விவாதமும் இல்லாமல் நிறைவேற்றப்பட்டிருக்கிறது தமிழக வேளாண் தொழில்ஆலோசகர் ஒழுங்காற்றுச் சட்டம் என்கிற மசோதா.

இந்தச் சட்டத்தின் அடிப்படையான ஒரேயொரு விஷயம் ""விவசாயிகளுக்கு வேளாண்மைத் தொழில்நுட்பத்தை சொல்லித் தருவோர் பதிவுபெற்ற வேளாண் பட்டதாரிகளாக இருக்க வேண்டும்'' என்பதுதான். இதை மீறினால் சிறை அல்லது ரூ.10,000 வரை அபராதம் விதிக்கப்படும். இச் சட்டத்தில் இயற்கை, மற்றும் பாரம்பரிய விவசாயத்துக்கு விலக்கு அளிக்கப்படவில்லை என்பதுதான் அதிர்ச்சியான விஷயம்.

புதிதாக ஒரு சட்டம் கொண்டுவரப்படுகிறது என்றால், ஒன்று அது யாருக்கோ லாபம் சேர்ப்பதாக இருக்கலாம். அல்லது நாட்டில் பொதுமக்கள் அல்லது குறிப்பிட்ட துறையினர் பாதிக்கப்பட்டு பேரிழப்பு நேர்ந்திருந்தால், மறுபடியும் அப்படி நடக்கக்கூடாது என்பதற்காகச் சட்டம் இயற்றப்பட்டிருக்கலாம்.

சரி, இத்தகைய சட்டத்தை தமிழ்நாட்டில் கொண்டுவர வேண்டிய அவசியம் என்ன? தமிழ்நாட்டில் போலி வேளாண் ஆலோசகர்கள் பெருகிப்போய், விவசாயிகள் ஏமாற்றப்பட்டு, நஷ்டமடைந்து, தற்கொலைச் சம்பவங்கள் நடந்துவிட்டதா? அப்படியேதும் நடைபெற்றுவிடவில்லையே! ஏன் கொண்டுவந்தீர்கள் என்று நம் சட்டப்பேரவை உறுப்பினர்களும், எதிர்க்கட்சிகளும்கூட கேட்கவில்லை. அமைச்சரும் இதற்கான காரணத்தை விளக்கவில்லை.

மருத்துவத் துறையில் பட்டம்பெற்று பதிவு செய்துகொண்டவர்கள் மட்டுமே மருத்துவத் தொழில்புரிய வேண்டும் என்ற நிலைமை ஏற்பட்டபோது, பல தலைமுறைகளாக சித்தா, ஆயுர்வேதம், யுனானி போன்ற இந்திய மருத்துவம் அளித்துவந்தோருக்கு, அவர்கள் பரம்பரையாகச் செய்து வருகிறவர்கள் என்பதை நிரூபித்து பதிவு செய்துகொள்ள அனுமதிக்கப்பட்டது. தற்போது சித்தா, யுனானி, ஹோமியோபதி ஆகிய மருத்துவத்துக்கு தனித்தனியாக கல்லூரிகள் வந்துவிட்டன. மாணவர்களும் அதிக அளவில் சேர்கிறார்கள். இப்போது பரம்பரை வைத்தியர்கள் என்பதை நீக்கினாலும், இந்த இந்திய மருத்துவ அறிவைக் கொண்டு செல்ல ஆட்கள் வந்தாகிவிட்டது.

ஆனால், தமிழகத்தின் பாரம்பரிய, இயற்கை வேளாண்மைக்கு அத்தகைய நிலைமை இல்லை. பாடத்திட்டத்தில் ஒரு சிறு அறிமுகப் பாடமாக இவை இருக்கக்கூடுமே தவிர, தமிழகப் பல்கலைக்கழகங்களில் பாரம்பரிய விவசாயம், இயற்கை வேளாண்மை குறித்த தனியான சிறப்புப் பட்டப்படிப்புகள் இல்லை. தற்போது தமிழ்நாட்டில் பாரம்பரிய விவசாயம் அறிந்த விவசாயிகளின் தலைமுறை முடிந்துபோனது. இப்போது இருக்கும் விவசாயிகள் பசுமைப் புரட்சியின் ரசாயன விவசாயத்துக்குப் பழகியவர்கள். இந்த நிலையில் பாரம்பரிய விவசாயம் மற்றும் இயற்கை விவசாயத்தை மீட்டெடுக்கும் பணியில் சில விவசாய அமைப்புகள் குழுக்கள் ஆங்காங்கே ஈடுபட்டு வருகின்றன. இந்தப் பாரம்பரிய அறிவு இப்போதுதான் பரவலாகப் பேசப்படும் நிலை உருவாகியுள்ளது. பஞ்சகவ்யா, பூச்சிவிரட்டி, மண்புழு உரம் என்பதெல்லாம் இப்போதுதான் மீண்டும் கையாளப்படுகிறது. இந்நிலையில் இச்சட்டம் வந்திருப்பது தமிழகப் பாரம்பரிய விவசாயத்தை அழிக்கத்தான் உதவுமே தவிர, காப்பாற்றாது.

தமிழக அரசு தனது தவறைத் திருத்த விரும்பினால் ஒன்றைச் செய்ய வேண்டும். அதாவது, முன்பு மருத்துவத் துறையில் சித்தா, ஆயுர்வேத மருத்துவம் பார்த்த பாரம்பரிய மருத்துவர்களையும் பதிவு செய்துகொண்டு மருத்துவம் நடத்த அனுமதித்ததைப் போல, தற்போது இயற்கை வேளாண்மை, பாரம்பரிய வேளாண்மையில் கருத்தரங்கம், செயல்விளக்கம், பண்ணைவிளக்கம் நடத்துபவர்களையும் உறுப்பினர்களாகப் பதிவு செய்துகொள்ள அனுமதிக்க வேண்டும். தமிழகப் பல்கலைக்கழகங்களில் இதற்கான தனிச்சிறப்பு பட்டப்படிப்புகளில் போதுமான எண்ணிக்கையில் மாணவர்கள் பட்டம் பெற்று வந்தபின்னர், இந்த நடைமுறையில் தேவைப்பட்டால் திருத்தம் செய்துகொள்ளலாம்.

சில ஆண்டுகளுக்கு முன்பு, மலேசிய அமைப்புடன் இணைந்து, இயற்கை வேளாண் வல்லுநர் நம்மாழ்வார் ஒரு வேளாண் பல்கலைக்கழகம் தொடங்கப்போவதாக அறிவித்தார். இதில் பயில அடிப்படைத் தகுதி அவர் விவசாயியாக இருந்தால் போதும். அத்தகைய பல்கலைக்கழகம் செயல்பாட்டில் இருக்குமேயானால், அது அரசு அங்கீகாரம் பெற்றிருக்காவிட்டாலும்கூட, அதில் தொடர்புடையவர்கள் தங்கள் பெயரைப் பதிவு செய்துகொள்ள தமிழக அரசு அனுமதிக்க வேண்டும். இந்த விதித் தளர்வுகள்தான் தமிழகப் பாரம்பரிய வேளாண்மையை இந்தத் தமிழ் மண்ணில் நீடிக்கச் செய்யும்.

மண்ணை வீணாக்கும் முயற்சிக்கும், ரசாயன உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லி மருந்துகளின் விற்பனையை அதிகரிக்கும் முயற்சிக்கும் ஊக்கமளிக்கும் இப்படிப்பட்ட சட்டத்தை எந்தவித விவாதமும் இல்லாமல் சட்டப்பேரவை நிறைவேற்றி இருப்பதற்கு நமது மக்கள் பிரதிநிதிகளுக்கு ஒரு விழா எடுத்தால் தகும்!
நன்றி : தினமணி

ஊழியர்களுக்கான ஊக்கத்தொகையில் 50 சதவீதம் கட் : ஏர் இந்தியா அதிரடி நடவடிக்கை

ஏர் இந்தியா நிறுவனம் அதன் ஊழியர்களுக்கு அளிக்கப்படும் ஊக்கத்தொகையில் 50 சதவீதத்தை கட் செய்வதாக அறிவித்துள்ளது. டில்லியில் ஏர் இந்தியா போர்டு மீட்டிங் நடந்தது. ஆலோசனை கூட்டத்தில் நிதி நெருக்கடியில் உள்ள ஏர் இந்தியாவின் நிலையை சமாளிக்கும் வகையில், ஊக்கத்தொகை வெட்டு அமல்படுத்தப்படுவதாக கூறப்பட்டது. இந்த வெட்டின் மூலம், ஊழியர்களுக்கு சம்பளம் மற்றும் படிகள் அளிக்கும் வகையில் ஏர் இந்தியாவுக்கு சுமார் 675 கோடி ரூபாய் மிச்சமாகும் என கணக்கிடப்பட்டுள்ளது. ஏர் இந்தியாவில் 31,000 ஊழியர்கள் உள்ளனர். இவர்களுக்கு அளிக்கப்படும் ஊதியம் மொத்தம் 3000 கோடி ரூபாயாகும், இதில் ஊக்கத்தொகை மட்டும் 45 சதவீதமாகும். இந்த ஊக்கத்தொகை வெட்டு ஏர் இந்தியாவின் சீனியர் அலுவலர்களுக்கும் பொருந்தும் என கூறப்பட்டுள்ளது. மத்திய அரசின் பரிந்துரையின்படி ஏர்இந்தியா நிறுவனத்தின் சம்பள செலவினங்களை குறைக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஏர் இந்தியா போர்டு தெரிவித்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
நன்றி : தினமலர்


வெளிநாட்டு மாணவர்களுக்கு ஸ்டிரிக்ட் விசா விதிமுறைகள் : ஆஸ்திரேலிய அரசு கிடுகிப்பிடி

ஆஸ்திரேலியாவில் கல்வி கற்க விருப்பப்பட்டு விசாவுக்கு மனு தாக்கல் செய்பவர்களுக்கு இனி அவ்வளவு ஈசியாக விசா கிடைத்து விடாது. ஆஸ்திரேலிய கல்வி நிறுவனங்கள் பல, வருமானத்துக்காக மானாவரியாக வெளிநாட்டு மாணவர்களை சேர்த்து வருவது குறித்து புகார் எழுந்தது. இதன் எதிரொலியாக ஆஸ்திரேலிய குடியுரிமை ஆணையம் புது முயற்சியில் இறங்கியுள்ளது. விசாவுக்கு தாக்கல் செய்யும் மாணவர்கள் டேடா ஸ்டிரிக்டாக செக் செய்யப்படவிருப்பதாக ஆஸி., குடியுரிமை அலுவலகம் தெரிவித்துள்ளது. ‌இதனால் ஸ்டூடன்ட் விசாவில் வந்து விட்டு, திறன்சாரா தொழிலாளர்களாக ஆஸியில் பணிபுரிவோரின் எண்ணிக்கை கட்டுப்படுத்தப்படும் என நம்புவதாக அந்த ஆணையம் தெரிவித்துள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்த ஆஸி., குடியுரிமை அமைச்சர் கிரிஸ் இவான்ஸ் : 2008-2009 கல்வி ஆண்டில் மாணவர்கள் விசாவுக்கான விண்ணப்பங்கள் 20 சதவீதம் உயர்ந்துள்ளதாக தெரிவித்தார். சுமார் 3லட்சத்து 62 ஆயிரத்து 193 விண்ணப்பங்கள் வந்ததாகவும், அவற்றில் 28,000 விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டதாகவும் தெரிவித்தார். தற்போது விசா விண்ணப்ப செக்கிங்கில் ஏற்படுத்தப்பட்டுள்ள மாற்றங்கள் அமெரிக்க குடியுரிமை அலுவலகம் பின்பற்றும் விதிமுறைகளை பின்பற்றி கெடுபிடியாக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். தற்போதைய நடைமுறைப்படி விசாவுக்கு அப்ளை செய்பவர்களின் நிதி நிலை ஆராயப்பட்டு அதன் அடிப்படையில் விசா அளிக்கப்படும் என்றார். தற்போதைய நிலவரப்படி ஆஸி., யில் 97,000 இந்திய மாணவர்கள் கல்வி பயில்வதாகவும், அவர்களில் பலர் நிதிப்பற்றாக்குறை காரணமாக பார்ட் டைம் வேலைகளில் தங்களை ஈடுபடுத்திக் கொள்வதாக தெரிவித்தார்.
நன்றி : தினமலர்