"சொன்னால் வெட்கக்கேடு, சொல்லாட்டி மானக்கேடு' என்கிற கதையாக, தமிழக சட்டப்பேரவையில் கடந்த ஜூன் 23-ம் தேதி அறிமுகம் செய்யப்பட்டு, மறுநாளே எந்த விவாதமும் இல்லாமல் நிறைவேற்றப்பட்டிருக்கிறது தமிழக வேளாண் தொழில்ஆலோசகர் ஒழுங்காற்றுச் சட்டம் என்கிற மசோதா.
இந்தச் சட்டத்தின் அடிப்படையான ஒரேயொரு விஷயம் ""விவசாயிகளுக்கு வேளாண்மைத் தொழில்நுட்பத்தை சொல்லித் தருவோர் பதிவுபெற்ற வேளாண் பட்டதாரிகளாக இருக்க வேண்டும்'' என்பதுதான். இதை மீறினால் சிறை அல்லது ரூ.10,000 வரை அபராதம் விதிக்கப்படும். இச் சட்டத்தில் இயற்கை, மற்றும் பாரம்பரிய விவசாயத்துக்கு விலக்கு அளிக்கப்படவில்லை என்பதுதான் அதிர்ச்சியான விஷயம்.
புதிதாக ஒரு சட்டம் கொண்டுவரப்படுகிறது என்றால், ஒன்று அது யாருக்கோ லாபம் சேர்ப்பதாக இருக்கலாம். அல்லது நாட்டில் பொதுமக்கள் அல்லது குறிப்பிட்ட துறையினர் பாதிக்கப்பட்டு பேரிழப்பு நேர்ந்திருந்தால், மறுபடியும் அப்படி நடக்கக்கூடாது என்பதற்காகச் சட்டம் இயற்றப்பட்டிருக்கலாம்.
சரி, இத்தகைய சட்டத்தை தமிழ்நாட்டில் கொண்டுவர வேண்டிய அவசியம் என்ன? தமிழ்நாட்டில் போலி வேளாண் ஆலோசகர்கள் பெருகிப்போய், விவசாயிகள் ஏமாற்றப்பட்டு, நஷ்டமடைந்து, தற்கொலைச் சம்பவங்கள் நடந்துவிட்டதா? அப்படியேதும் நடைபெற்றுவிடவில்லையே! ஏன் கொண்டுவந்தீர்கள் என்று நம் சட்டப்பேரவை உறுப்பினர்களும், எதிர்க்கட்சிகளும்கூட கேட்கவில்லை. அமைச்சரும் இதற்கான காரணத்தை விளக்கவில்லை.
மருத்துவத் துறையில் பட்டம்பெற்று பதிவு செய்துகொண்டவர்கள் மட்டுமே மருத்துவத் தொழில்புரிய வேண்டும் என்ற நிலைமை ஏற்பட்டபோது, பல தலைமுறைகளாக சித்தா, ஆயுர்வேதம், யுனானி போன்ற இந்திய மருத்துவம் அளித்துவந்தோருக்கு, அவர்கள் பரம்பரையாகச் செய்து வருகிறவர்கள் என்பதை நிரூபித்து பதிவு செய்துகொள்ள அனுமதிக்கப்பட்டது. தற்போது சித்தா, யுனானி, ஹோமியோபதி ஆகிய மருத்துவத்துக்கு தனித்தனியாக கல்லூரிகள் வந்துவிட்டன. மாணவர்களும் அதிக அளவில் சேர்கிறார்கள். இப்போது பரம்பரை வைத்தியர்கள் என்பதை நீக்கினாலும், இந்த இந்திய மருத்துவ அறிவைக் கொண்டு செல்ல ஆட்கள் வந்தாகிவிட்டது.
ஆனால், தமிழகத்தின் பாரம்பரிய, இயற்கை வேளாண்மைக்கு அத்தகைய நிலைமை இல்லை. பாடத்திட்டத்தில் ஒரு சிறு அறிமுகப் பாடமாக இவை இருக்கக்கூடுமே தவிர, தமிழகப் பல்கலைக்கழகங்களில் பாரம்பரிய விவசாயம், இயற்கை வேளாண்மை குறித்த தனியான சிறப்புப் பட்டப்படிப்புகள் இல்லை. தற்போது தமிழ்நாட்டில் பாரம்பரிய விவசாயம் அறிந்த விவசாயிகளின் தலைமுறை முடிந்துபோனது. இப்போது இருக்கும் விவசாயிகள் பசுமைப் புரட்சியின் ரசாயன விவசாயத்துக்குப் பழகியவர்கள். இந்த நிலையில் பாரம்பரிய விவசாயம் மற்றும் இயற்கை விவசாயத்தை மீட்டெடுக்கும் பணியில் சில விவசாய அமைப்புகள் குழுக்கள் ஆங்காங்கே ஈடுபட்டு வருகின்றன. இந்தப் பாரம்பரிய அறிவு இப்போதுதான் பரவலாகப் பேசப்படும் நிலை உருவாகியுள்ளது. பஞ்சகவ்யா, பூச்சிவிரட்டி, மண்புழு உரம் என்பதெல்லாம் இப்போதுதான் மீண்டும் கையாளப்படுகிறது. இந்நிலையில் இச்சட்டம் வந்திருப்பது தமிழகப் பாரம்பரிய விவசாயத்தை அழிக்கத்தான் உதவுமே தவிர, காப்பாற்றாது.
தமிழக அரசு தனது தவறைத் திருத்த விரும்பினால் ஒன்றைச் செய்ய வேண்டும். அதாவது, முன்பு மருத்துவத் துறையில் சித்தா, ஆயுர்வேத மருத்துவம் பார்த்த பாரம்பரிய மருத்துவர்களையும் பதிவு செய்துகொண்டு மருத்துவம் நடத்த அனுமதித்ததைப் போல, தற்போது இயற்கை வேளாண்மை, பாரம்பரிய வேளாண்மையில் கருத்தரங்கம், செயல்விளக்கம், பண்ணைவிளக்கம் நடத்துபவர்களையும் உறுப்பினர்களாகப் பதிவு செய்துகொள்ள அனுமதிக்க வேண்டும். தமிழகப் பல்கலைக்கழகங்களில் இதற்கான தனிச்சிறப்பு பட்டப்படிப்புகளில் போதுமான எண்ணிக்கையில் மாணவர்கள் பட்டம் பெற்று வந்தபின்னர், இந்த நடைமுறையில் தேவைப்பட்டால் திருத்தம் செய்துகொள்ளலாம்.
சில ஆண்டுகளுக்கு முன்பு, மலேசிய அமைப்புடன் இணைந்து, இயற்கை வேளாண் வல்லுநர் நம்மாழ்வார் ஒரு வேளாண் பல்கலைக்கழகம் தொடங்கப்போவதாக அறிவித்தார். இதில் பயில அடிப்படைத் தகுதி அவர் விவசாயியாக இருந்தால் போதும். அத்தகைய பல்கலைக்கழகம் செயல்பாட்டில் இருக்குமேயானால், அது அரசு அங்கீகாரம் பெற்றிருக்காவிட்டாலும்கூட, அதில் தொடர்புடையவர்கள் தங்கள் பெயரைப் பதிவு செய்துகொள்ள தமிழக அரசு அனுமதிக்க வேண்டும். இந்த விதித் தளர்வுகள்தான் தமிழகப் பாரம்பரிய வேளாண்மையை இந்தத் தமிழ் மண்ணில் நீடிக்கச் செய்யும்.
மண்ணை வீணாக்கும் முயற்சிக்கும், ரசாயன உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லி மருந்துகளின் விற்பனையை அதிகரிக்கும் முயற்சிக்கும் ஊக்கமளிக்கும் இப்படிப்பட்ட சட்டத்தை எந்தவித விவாதமும் இல்லாமல் சட்டப்பேரவை நிறைவேற்றி இருப்பதற்கு நமது மக்கள் பிரதிநிதிகளுக்கு ஒரு விழா எடுத்தால் தகும்!
நன்றி : தினமணி
Friday, August 21, 2009
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment