Monday, July 28, 2008

பங்கு சந்தையில் லேசான முன்னேற்றம்


ரிசர்வ் வங்கி, அதன் நிதிக்கொள்கைக்கான கூட்டத்தை நாளை கூட்டியுள்ளதை அடுத்து இன்று பங்கு சந்தை நிதானமாகவே நடந்தது எனலாம். பெரும்பாலான பங்கு வர்த்தகர்கள், நாளை ரிசர்வ் வங்கி, வங்கிகளுக்கான பெபோ ரேட்டை உயர்த்தும் என்று எதிர்பார்த்தார்கள். எனவே காலை மும்பை பங்கு சந்தையில் வர்த்தகம் ஆரம்பித்ததில் இருந்தே அவ்வளவாக உயராமலும் அவ்வளவாக குறையாமலும் இருந்த சென்செக்ஸ், மாலை வர்த்தக முடிவில் 74.17 புள்ளிகள் மட்டும் ( 0.52 சதவீதம் ) உயர்ந்து 14,349.11 புள்ளிகளில் முடிந்தது. தேசிய பங்கு சந்தையில் நிப்டி 20.25 புள்ளிகள் ( 0.47 சதவீதம் ) மட்டும் உயர்ந்து 4,332.10 புள்ளிகளில் முடிந்தது. கேபிடல் குட்ஸ், ஆயில் அண்ட் கேஸ், ரியாலிடி, பார்மா துறை பங்குகள் வாங்கப்பட்டன. பி எஸ் இ மிட்கேப் 1 சதவீதமும் ஸ்மால் கேப் 2 சதவீதமும் உயர்ந்திருந்தது.

நன்றி : தினமலர்


எல் அண்ட் டி., யின் நிகர லாபம் 33 சதவீதம் உயர்வு


இந்தியாவின் மிகப்பெரிய இஞ்சினியரிங் மற்றும் கன்ஸ்டிரக்ஷன் நிறுவனமாக எல் அண்ட் டி.,யின் இந்த ஆண்டு முதல் காலாண்டில் பெற்ற நிகர லாபம் 502 கோடி ரூபாய். இது கடந்த வருடம் முதல் காலாண்டில் இது பெற்றிருந்த லாபம் ரூ.377 கோடியை விட 33 சதவீதம் அதிகம். ராய்ட்டர் செய்தி நிறுவனத்தின் எதிர்பார்ப்பான 405 கோடியையும் மீறி இப்போது ரூ.502 கோடி லாபம் கிடைத்திருக்கிறது. அதன் இஞ்சினியரிங் மற்றும் கன்ஸ்டிரக்ஷன் பிரிவில் ஏற்பட்ட அபரிவிதமான வளர்ச்சியின் காரணமாக இந்த லாபத்தை அது அடைந்திருக்கிறது. இந்தியாவில் இப்போது விமான நிலையங்கள், ரோடுகள், துறைமுகங்கள், மின் உற்பத்தி நிலையங்கள் அதிக அளவில் கட்டப்படுவதால் எல் அண்ட் டி., யின் இஞ்சினியரிங் மற்றும் கட்டுமான தொழில் வேகமாக வளர்ச்சி அடைந்து வருகிறது. 18 பில்லியன் டாலர் ( சுமார் 76,000 கோடி ரூபாய் ) மதிப்புள்ள எல் அண்ட் டி.,யின் பங்கு இப்போது 4.4 சதவீதம் உயர்ந்து ரூ.2,739.95 க்கு விற்பனை ஆகிறது. இருந்தாலும் இந்த காலாண்டில் பங்கு சந்தையில் சென்செக்ஸ் 14 சதவீதம் குறைந்திருந்தாலும் எல் அண்ட் டி.,யின் பங்கு மதிப்பு 28 சதவீதம் குறைந்திருக்கிறது.

நன்றி : தினமலர்


நம்பிக்கை ஓட்டெடுப்பில் வெற்றி பெற்றதால் அரசுக்கு லாபம் ரூ.64,000 கோடி


கடந்த 22ம் தேதி பார்லிமென்டில் நடந்த நம்பிக்கை ஓட்டெடுப்பில் மத்திய அரசு வெற்றி பெற்றதால் பங்கு வர்த்தகம் மூலம் அது ரூ.86,600 கோடி லாபம் சம்பாதித்திருக்கிறது. நம்பிக்கை ஓட்டெடுப்பில் அரசு வெற்றி பெற்றதை அடுத்து பங்கு வர்த்தகத்தில் பொதுத்துறை நிறுவனங்களின் பங்கு மதிப்பு உயர்ந்திருக்கிறது.ஜூலை 9ம் தேதி ரூ.7.42 லட்சம் கோடியாக இருந்த மத்திய அரசுக்கு சொந்தமான நிறுவனங்களின் பங்கு மதிப்பு, இப்போது ரூ.8.29 லட்சம் கோடியாக உயர்ந்திருக்கிறது. இதன் மூலம் ரூ.63,900 கோடி அரசுக்கு லாபம் கிடைத்திருக்கிறது. மத்திய அரசுக்கு 87 முதல் 98 சதவீதம் பங்குகள் இருக்கும் நேஷனல் அலுமினியம், ஐ டி ஐ, ஹெச் எம் டி, போன்ற நிறுவன பங்கு மதிப்பு உயர்ந்திருக்கிறது. இது தவிர என் டி பி சி, ஓ என் ஜி சி, என் எம் டி சி, ஸ்டேட் பேங்க், பஞ்சாப் நேஷனல் பேங்க் போன்ற நிறுவனங்களின் பங்கு மதிப்பும் உயர்ந்திருக்கிறது. மும்பை பங்கு சந்தையில் கடந்த ஜூலை 9ம் தேதிக்குப்பின் பொதுத்துறை நிறுவனங்களை சேர்ந்த பங்குகள் 11.9 சதவீதம் உயர்ந்திருக்கிறது. இந்த காலத்தில் சென்செக்ஸ் மொத்தத்தில் 2.2 சதவீத புள்ளிகளே உயர்ந்திருந்தது.

நன்றி : தினமலர்


பணவீக்கத்தால் 32 லட்சம் கோடி ரூபாய் திட்டங்கள் பாதிப்பு


இந்தியாவில் பணவீக்கத்தால், விலைவாசி பல மடங்கு அதிகரித்துள்ளதை அடுத்து, சாதாரண மக்கள் வாழ்க்கை மட்டுமல்ல, மத்திய, மாநில அரசு நிறுவனங்கள் மற்றும் தனியார் நிறுவனங்கள் போட்டுள்ள 32 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களிலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மும்பையில் உள்ள கன்சல்டன்சி நிறுவனம், ஆன்-லைன் மூலம் இது தொடர்பான தகவல்களை திரட்டி, ஆய்வு செய்துள்ளது. அது வெளியிட்டுள்ள ஆய்வு அறிக்கையில் கூறியிருப்பதாவது: உணவுப்பொருட்கள் முதல், பல பொருட்களின் விலைகள் உயர்ந்து விட்டதால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். அரசை பொறுத்தவரை, மத்திய, மாநில அரசுகள் போட்ட திட்டங்கள் எல்லாவற்றிலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. திட்டங்களில் மதிப்பீட்டு செலவு அதிகரித்து விட்டது; சில திட்டங்கள் தாமதப்படுகின்றன. இன்னும் சில திட்டங்கள் இப்போதைக்கு கைவிடப்பட்டுள்ளன. நீண்ட கால அடிப்படையில் பார்த்தால், பணவீக்கம் கண்டிப்பாக குறைந்து, நிலைமை சீராகும் என்று நிதி ஆலோசகர்கள் திடமாக நம்புகின்றனர். ஆனாலும், இப்போதுள்ள நிலையில் பல முக்கிய திட்டங்கள் தாமதப்படுகின்றன. மத்திய, மாநில அரசுகள் மட்டுமின்றி, தனியார் நிறுவனங்கள் போட்டுள்ள திட்டங்களும் ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன. ஒரு பக்கம் உற்பத்தி குறைகிறது; இன்னொரு பக்கம் வாங்கும் சக்தி குறைகிறது. இது பொருளாதார வளர்ச்சிக்கு பெரும் முட்டுக்கட்டை. முதலீட்டு வாய்ப்புகள் பாதிக்கப்படாமல் உள்ளதால், மொத்த உற்பத்தி விகிதம் பெரிய அளவில் பாதிக்கப்படாமல் உள்ளது. பல்வேறு துறைகளை சேர்ந்த அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் போட்டுள்ள திட்டங்கள் எண்ணிக்கை 25 ஆயிரத்து 400. பணவீக்கத்தால் இந்த திட்டங்ளின் பணிகள் பாதிக்கப்பட்டு வருகின்றன. இந்த திட்டங்களில் 11 ஆயிரம் திட்டங்கள் மொத்த மதிப்பு, 15 லட்சம் கோடி ரூபாய். திட்ட அமலாக்க விகிதம் 45 சதவீதமாக இருந்தது, பணவீக்கத்தால் விலைவாசி உயர்ந்து விட்டதால், திட்டப்பணிகள் வேகம் 42 சதவீதமாக குறைந்து விட்டது. இதுகுறித்து நிதி ஆலோசகர்கள் கூறுகையில், 'பணவீக்கம் அதிகரித்து கொண்டிருக்கிறது. அதன் விளைவாக விலைவாசி அதிகரித்து வருகிறது. இதனால், திட்டச் செலவுகள் பல மடங்கு உயர்ந்து வருகிறது.
அரசு திட்டங்களில் முக்கியமானவற்றை முழுவீச்சில் செயல்படுத்த திட்டமிட்டாலும், தனியாரை பொறுத்தவரை, அவசர திட்டங்கள் தவிர, மற்றவற்றை தாமதம் செய்யவே நினைக்கின்றனர்; இதனால், இழப்பு குறையும் என்பதும் அவர்கள் கணிப்பு' என்று தெரிவித்தனர். தமிழகத்தில் மொத்தம் 1,750 திட்டங்கள் இப்போது நடந்துகொண்டிருக்கின்றன. இந்த திட்டங்களில் ஒரு லட்சத்து 94 ஆயிரம் கோடி ரூபாய் போடப்பட்டுள்ளது.


நன்றி : தினமலர்


ஏர்-இந்தியா எக்ஸ்பிரசின் 'லேடீஸ் ஸ்பெஷல்' பிளைட்


முழுவதும் பெண்களே பணியாற்றும் ஏர்-இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவன விமானம் சென்னையில் இருந்து சிங்கப்பூருக்கு நேற்று இயக்கப்பட்டது. இது குறித்து ஏர்-இந்தியா நிறுவனம் வெளியிட்ட அறிக்கை: சென்னையில் இருந்து சிங்கப்பூருக்கு 'ஏர்-இந்தியா' நிறுவனத்தின் 'ஏர்-இந்தியா எக்ஸ்பிரஸ்' முழுவதும் பெண்களே பணியாற்றும் விமான சேவை ஒன்று நேற்று இயக்கப்பட்டது. இந்த விமானத்தின் முதல் பெண் பைலட்டாக சாமிலி குரோட்டப் பள்ளியும், இணை பைலட்டாக அம்ரித் நம்தாரியும், பணிப் பெண்களாக பானு, பூட்டியா, திவ்யா, பினல்வேலன்ட் ஆகியோரும் செயல்பட்டனர். 183 பயணிகளுடன் நேற்று மதியம் 2.25 மணிக்கு சென்னையில் இருந்து சிங்கப்பூருக்கு இந்த விமானம் புறப்பட்டு சென்றது. ஏர்-இந்தியா நிறுவனத்திற்கு மொத்தம் 76 பைலட்கள் உள்ளனர். இவர்களில் ஆறு பேர் பெண் பைலட்கள்.