Sunday, August 17, 2008

அரசு ஊழியர் சம்பள உயர்வு பங்கு சந்தையில் எதிரொலிக்கும்

கொடுத்தவனே எடுத்துக் கொண்டாண்டி என்பது பங்குச் சந்தைக்கு இந்த வாரம் மிகவும் பொருந்தும். திங்களைத் தவிர்த்து செவ்வாய், புதன், வியாழன் என்று தொடர்ந்து மூன்று நாட்களும் சந்தை கீழேயே சென்று கொண்டிருப்பது, ஒரு கவலைக்குரிய விஷயம். கிட்டத்தட்ட மூன்று நாட்களிலும் 800 புள்ளிகளுக்கு மேல் இழந்துள்ளது. குருவி போல சேர்த்த புள்ளிகளெல்லாம் சில நாட்களில் அடித்துச் சென்றது, பல முதலீட்டாளர்களை கவலையடைய வைத்திருப்பது உறுதி. காரணங்கள் என்று பார்க்கப் போனால், பணவீக்க சதவீதம் இந்த வாரம் கூடுதலாகப் போகிறது என்ற செய்தியும், அதைத் தொடர்ந்து ரிசர்வ் வங்கி சி.ஆர்.ஆர்., விகிதங்களைக் கூட்டலாம் என்று வந்த செய்தியும் சந்தையை அடித்துப் போட்டு விட்டது.
டாலருக்கு எதிராக ரூபாய் கிட்டத்தட்ட இரண்டு நாட்களில் 50 பைசாவிற்கு மேல் மதிப்பை இழந்தது. இது, பங்குச் சந்தையில் சாப்ட்வேர் மற்றும் ஏற்றுமதி கம்பெனி பங்குகளுக்கு ஆதாயமாக இருந்தாலும், சந்தையில் அதன் பாதிப்பு தெரிந்தது. வியாழனன்று இறுதியாக மும்பை பங்குச் சந்தை 368 புள்ளிகளை இழந்து 15 ஆயிரம் புள்ளிகளுக்கு கீழே வந்தது; 14,724 புள்ளிகளில் முடிவடைந்தது. தேசிய பங்குச் சந்தை 98 புள்ளிகள் இழந்து 4,430 புள்ளிகளில் முடிவடைந்தது.
எப் அண்ட் ஓ: பட்டியலிடப் பட்ட பங்குகள் எப் அண்ட் ஓ மெண்டுக்கு மாற்றப்படும் போதெல்லாம், அந்தப் பங்குகள் ஏற்றங்கள் இருப்பது வாடிக்கை தான். தற்போது வருகிற 21ம் தேதி முதல் 39 பங்குகள் எப் அண்ட் ஓவில் சேர்க்கப்படுகிறது. அதில் குறிப்பிடத்தகுந்த பங்குகள் எவரான், ரிலையன்ஸ் இன்பிரா, அக்ருதி சிட்டி, டோரண்ட் பவர், டி.வி.18, யூகோ பாங்க், ஜி.டி.எல்., தெர்மேக்ஸ், டிஷ் 'டிவி,' ஏ.பி.ஜே., ஷிப்யார்ட், குஜராத் ஸ்டேட் பெட்ரோ நெட், பர்ஸ்ட் சோர்ஸ் சொலூசன்ஸ், நோய்டா டோல் பிரிட்ஜ், கே.எஸ்., ஆயில், கோர் புராஜக்ட், வால்சந்த் நகர் இண்டஸ்டிரீஸ்.
பணவீக்கம் கூடி வருகிறது? இதுவரை பணவீக்கம் 13 ஆண்டு அதிக அளவாகத்தான் இருந்தது. இது, தற்போது 16 ஆண்டு அதிக அளவாகக் கூடியிருக்கிறது. இந்த வாரம் பணவீக்கம் 12.44 சதவீதமாகக் கூடியுள்ளது. இந்த ஆண்டு எல்லாமே பல ஆண்டுகளின் உச்சமாகத்தான் இருந்து வருகிறது.
பங்குச் சந்தையின் அதிகபட்ச சரிவு, பணவீக்கம், வங்கிகளில் டெபாசிட்களுக்கான வட்டி விகிதம் போன்றது.
பணவீக்கம் கூடி வரும் இந்த சமயத்தில், அரசு ஊழியர்களுக்கு 21 சதவீதம் வரை கூடுதலாக சம்பளம் தர முடிவு செய்துள்ளது. 21 சதவீதத்தை யானைப் பசிக்கு சோளப்பொரி என்று சொல்ல முடியாது. சுதந்திர தின ஜாக்பாட் என்றே சொல்ல வேண்டும். ஆனால், இந்த சம்பள உயர்வு, சந்தையை சிறிது அசைத்துப் பார்த்தது என்றே கூற வேண்டும். ஏனெனில், அரசாங்கத்திற்கு கிட்டத்தட்ட இந்த சம்பள உயர்வு கூடுதலாக 15,700 கோடி செலவுகளுக்கு வழிவகுக்கும்.
பணத்தை என்ன செய்யலாம்? : பங்குச் சந்தையை பார்த்து பார்த்துப் பூத்துப் போன கண்களுக்கும், ஏறி இறங்கும் மனதிற்கும் விடுதலை தர விரும்புவர்களுக்கு ஒரு யோசனை, வங்கி டெபாசிட்களில் பணத்தை போட்டு வைத்து விட்டு நிம்மதியாக இருப்பது தான். தற்போது, 10.30 சதவீதம் வரை நீண்ட கால வைப்புத் தொகைகளுக்கு கிடைக்கிறது.
வரும் நாட்கள் எப்படி இருக்கும்?: வியாழனன்று சந்தை நேரத்திற்கு பிறகு வெளியிடப்படும் பணவீக்கம் சதவீதத்தைப் பொறுத்து, வெள்ளியன்று சந்தையில் மாற்றங்கள் ஏற்படும்.
ஆனால், இந்த வாரம் வெள்ளியன்று சந்தைக்கு விடுமுறை. ஆதலால், அதன் எதிரோலி திங்களன்று தான் தெரியும்.
முடிந்த வாரத்தில் உலகளவில் பங்குச் சந்தைகளில் இருந்த போக்கை வைத்து தான், திங்களன்று பங்குச் சந்தையின் தொடக்கம் இருக்கும். கடந்த இரண்டு மாதத்தில் ஏற்பட்ட சரிவின் மூலம் தெரிய வருவது என்ன வென்றால்,ஓரளவு லாபம் கிடைத்தால் விற்பதே சிறந்தது. பங்குகளை வாங்கப் போகும் போது அவசரம் காட்டக்கூடாது.
ஆயிரம் புள்ளிகள் சரியும் போது கூட வாங்க ஆசைப்படக்கூடாது. கடந்த வாரம் 15 ஆயிரத்து 800 புள்ளிகள் வரை உச்சத்தை பார்த்து விட்டோம். அடுத்து இறக்கம் என்று பார்த்தால், 13 ஆயிரத்து 800 புள்ளிகள் வரை வந்தாலும் ஆச்சர்யப்படுவதற்கு இல்லை. இதை கவனத்தில் கொண்டால் போதும்.
நன்றி : தினமலர்


'ஸ்பா'க்களுக்கு இல்லை பணவீக்க தலைவலி


பணவீக்க தலைவலி எல்லாம், அடிமட்ட மக்களுக்கு தான்; உடலை அழகூட்டும் 'ஸ்பா'க்களுக்கு பணவீக்கம் என்றாலே என்னவென்று தெரியாது! ஆம், பணக்கார பெண்களும், ஆண்களும் அடிக்கடி சென்று உடலை அழகுபடுத்திக்கொள்ள உதவும் 'ஸ்பா'க்களின் வர்த்தகம் குறையவில்லை என்பது மட்டுமல்ல, அதிகரிக்கவும் செய் துள்ளன. சென்னை, பெங்களூரு, டில்லி, மும்பை உட்பட பல நகரங்களில் நட்சத்திர ஓட்டல்களிலும், தனியாகவும் 'ஸ்பா'க்கள் இயங்குகின்றன. மூலிகை சாறுகள் மூலம் உடலை அழகூட்ட உதவும் இந்த 'ஸ்பா'க்களில் குறைந்தபட்ச செலவே ரூ.ஐந்தாயிரத்தை தாண்டும். நட்சத்திர ஓட்டல்களில் நுழைந்து விட்டால், 'ஸ்பா' செலவு மட்டும் ஒரு லட்சத்தை எட்டி விடும். வெளிநாட்டவர்கள் , இந்தியா வரும் போதெல்லாம் இந்த மூலிகை முறையை கையாள தவறுவதில்லை; பணத்தை அள்ளி செலவழிக்கின்றனர். மாதத்துக்கு ஏழு லட்சம் ரூபாய் வர்த்தகம் செய்யும் 'ஸ்பா' மையங்களில் கடந்த சில மாதங்களில் 18 லட்சம் ரூபாய் வரை வர்த்தகம் நடந்து வருகிறது. வெளிநாட்டவர் எண்ணிக்கையில் குறைவில்லை; ஆனால், அவர்கள் நட்சத்திர ஓட்டல்களில் தங்குவது தான் குறைந்துள்ளது. பணவீக்கம் காரணமாக ஓட்டல் அறைகள் முன்பதிவு பாதிக்கப்பட்டாலும், வெளிநாட்டவரால் 'ஸ்பா'க் களுக்கு வருமானம் பாதிக்கவில்லை. பெங்களூரில், நடுத்தர ஓட்டல் களில் தங்கி, 'ஸ்பா'க்களுக்கு வரு வோர் எண்ணிக்கை அதிகமாகவே உள்ளது.
வெளிநாட்டவரை தவிர, இந்தியர்களும் இப்போது 'ஸ்பா'க்களுக்கு செல் வது அதிகரித்து வருகிறது. சாப்ட்வேர் உட்பட பல தனியார் நிறுவனங்களில் சம்பளம் அதிகரித்து விட்டதை தொடர்ந்து, மாதம் 'ஸ்பா' செலவு மட்டும் ஐந்தாயிரம் ரூபாய் செலவழிப்போர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

நன்றி : தினமலர்