Wednesday, March 18, 2009

வீட்டு கடனுக்கான வட்டி குறைப்பால் மற்ற வங்கி வாடிக்கையாளர்களை ஈர்க்கும் எஸ்.பி.ஐ

ஸ்பெஷல் ஹோம் லோன் திட்டத்தில் கடன் வாங்குபவர்களுக்கு 8 சதவீதம்தான் வட்டி என்று சமீபத்தில் ஸ்டேட் பேங்க் அறிவித்ததை அடுத்து, மற்ற தனியார் வங்கி வாடிக்கையாளர்கள் பலர் ஸ்டேட் பேங்க்கிற்கு வந்து கொண்டிருப்பதாக சொல்லப்படுகிறது. எத்தனை வாடிக்கையாளர்கள் அப்படி ஸ்டேட் பேங்க்கிற்கு மாறி இருக்கிறார்கள் என்று சரியாக தெரியவில்லை என்றாலும் குறிப்பிடத்தக்க நபர்கள் வந்திருக்கிறார்கள் என்கிறார்கள். இந்த திட்டத்திற்கு நல்ல வரவேற்பு இருக்கும் என்பது நாங்கள் எதிர்பார்த்ததுதான் என்றாலும், எதிர்பார்த்ததை விட அதிக அளவில் டிமாண்ட் இருக்கிறது என்றார் மும்பை ஸ்டேட் பேங்க்கின் மூத்த அதிகாரி ஒருவர். இருந்தாலும் சில சிறிய நகரங்களில் வீட்டு கடனுக்கு விண்ணப்பிப்பது குறைவாகத்தான் இருக்கிறது. காரணம் என்னவென்றால், ரியல் எஸ்டேட் தொழில் இன்னும் ' டல் ' ஆகும் என்றும் அதனால் வீடுகளின் விலை இன்னும் குறையும் என்றும் எதிர்பார்ப்பதால்தான் என்றார் அவர். மேலும் வீட்டு கடனுக்கான வட்டியும் இன்னும் குறையும் என்று பலர் எதிர்பார்க்கிறார்கள் என்றார் அவர். தனியார் வங்கி வாடிக்கையாளர்கள் ஸ்டேட் பேங்கிற்கு மாறுகிறார்களா என்று சில தனியார் வங்கிகளில் விசாரித்தபோது, அதை ஒரளவு ஒத்துக்கொண்ட அவர்கள், எங்களிடம் கடன் வாங்கியவர்களில் பலர் முன் கூட்டியே வீட்டு கடனை முடிக்கிறார்கள் என்கின்றனர்.
நன்றி : தினமலர்


மிலிட்டரி வாகன தொழிற்சாலையில் தயாரிப்பை துவக்கியது மகிந்திரா அண்ட் மகிந்திரா

பயணிகள் வாகனங்களை தயாரித்துக்கொண்டிருந்த மகிந்திரா அண்ட் மகிந்திரா நிறுவனம், மிலிட்டரி வாகனங்களை தயாரிக்கும் புதிய தொழிற்சாலை ஒன்றை ஹரியானாவில் துவக்கியிருக்கிறது. இதற்காக மகிந்திரா அண்ட் மகிந்திரா நிறுவனம், மகிந்திரா டிஃபன்ஸ் சிஸ்டம்ஸ் ( எம்டிஎஸ் ) என்ற புதிய நிறுவனத்தை அமைத்திருக்கிறது. அதன் மூலம் ஹரியானாவில் ஃபரிதாபாத்தில் பிரித்லா என்ற இடத்தில் துவக்கி இருக்கும் மகிந்திரா ஸ்பெஷல் மிலிட்டரி வெகிக்கிள் தொழிற்சாலையில் ராணுவத்திற்கு தேவையான இலகு ரக ராணுவ வாகனங்களை தயாரிக்கிறது. இது தவிர குறிப்பிட்ட ரக ராணுவ வாகனங்களையும் இந்த தொழிற்சாலையில் தயாரிக்க முடியும். இது குறித்து மகிந்திரா அண்ட் மகிந்திரா குரூப்பின் வைஸ் சேர்மன் மற்றும் மேனேஜிங் டைரக்கடர் ஆனந்த் மகிந்திரா தெரிவித்தபோது, இந்த மாதிரியான ராணுன வாகன தயாரிப்பு தொழிற்சாலையை தனியார் அமைத்திருப்பது இந்தியாவிலேயே இதுதான் முதலாவது என்றார். இங்குள்ள தொழிற்சாலையில் ராணுவம், பாரா மிலிட்டரி ஃபோர்ஸ், மற்றும் போலீஸூக்கு தேவையான வாகனங்களை தயாரிக்க முடியும். மேலும் ராணுவத்திற்கு தேவையான வாகனங்களை டிசைன் செய்யவும் ஏற்கனவே இருக்கும் வாகனங்களை மாற்றி அமைக்கவும் முடியும் என்றார். அது சம்பந்தமான ஆர் அண்ட் டி வசதியும் இங்கு இருக்கிறது என்றார். வருடத்திற்கு 500 வாகனங்களை இங்கு தயாரிக்க முடியும் என்றார் அவர்.
நன்றி : தினமலர்


டெல் அறிமுகப்படுத்திய உலகின் மிக மெல்லிய லேப்-டாப் ' அடமோ '

டெல் கம்ப்யூட்டர் நிறுவனம் புதிய ' சொகுசு ' அடமோ லேப்-டாப்பை நேற்று அறிமுகப்படுத்தியது. இது தான் இப்போதைக்கு உலகின் மிக மெல்லிய லேப்-டாப் என்று அது அறிவித்திருக்கிறது. அதிக தொழில் நுட்பத்துடன் கூடிய கையடக்க லேப்-டாப் சந்தையில், ஆப்பிள் கம்ப்யூட்டரின் ' மேப்புக் ஏர் ' க்கு போட்டியாக இந்த லேப்-டாப் இருக்கும் என்று சொல்லப்படுகிறது. 0.65 இஞ்ச் தடிமனுடன் கூடிய அலுமனியம் மூடியுடன் வந்திருக்கும் டெல் லின் இந்த புதிய லேப்-டாப் அடமோ, 13.4 இஞ்ச் ஸ்கிரீனையும் 128 ஜிகாபைட்ஸ் டிரைவையும் கொண்டது. இந்த புதிய ஹை-எண்ட் லேப்டாப் இரு மாடல்களில் வெளிவந்திருக்கிறது. ஒரு மாடல் 1,999 டாலர் ( சுமார் ரூ.1,02,000 ) விலையிலும் இன்னொரு மாடல் 2,699 டாலர் ( சுமார் ரூ.1,38,000 ) விலையிலும் இருக்கிறது. சந்தையில் கிடைக்கும் மற்ற லேப்-டாப் களை விட வித்தியாசமாக இருக்கும் எங்களது அடமோ லேப்-டாப்பை வாடிக்கையாளர்களால் தெளிவாக புரிந்து கொள்ள முடியும். எனவேதான் கொஞ்சம் அதிக விலை கொடுத்தாலும் இதையே வாங்கற விரும்புவார்கள் என்பது எங்களுக்கு தெரியும் என்றார் டெல் நிறுவனத்தின் மார்க்கெட்டிங் எக்ஸிகூடிவ் ஜான் நியு.
நன்றி : தினமலர்


பேட்டரியில் இயங்கும் கார், வேன் பொதுமக்கள் பார்வைக்கு நிறுத்தம்

பேட்டரியில் இயங்கக் கூடிய கார், வேன் பொதுமக்களின் பார்வைக்காக கடலூரில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. கோல்கட்டா, 'டாரா' இன்டர்நேஷனல் கார் நிறுவனம் டிட்டு, டைனி, கொயட் என்ற பெயரில் மூன்று கார்கள், சுற்றுலா வேன் ஒன்றையும் தயாரித்துள்ளது. கொயட் மற்றும் டைனில் டிரைவரை சேர்த்து 4, டிட்டுவில் டிரைவரை சேர்த்து 2, சுற்றுலா வேனில் டிரைவரை சேர்ந்து 14 பேரும் பயணம் செய்யலாம். டிட்டு, கொயட் காரின் மதிப்பு ஒன்றரை லட்சம் ரூபாய். டைனி ஒரு லட்சத்து 90 ஆயிரம், சுற்றுலா வேன் எட்டு லட்சம் ரூபாய். இந்த கார்கள், வேன் பேட்டரியில் இயங்குவதால் சுற்றுச்சூழல் மாசுபடாது. ஒரு கிலோ மீட்டருக்கு பேட்டரி செலவு 30 பைசா மட்டுமே ஆகிறது. வீட்டிலேயே பேட்டரியில் சார்ஜ் ஏற்றலாம். ஒரு முறை சார்ஜ் ஏற்றினால் 70, 80 கி.மீ., தூரம் வரை பயணம் செய்யலாம். இந்த கார்கள், வேன் பொதுமக்களின் பார்வைக்காக கொண்டு செல்லப்பட்டு புதுச்சேரி கடற்கரையில் கடந்த ஐந்து நாட்களாக நிறுத்தப்பட்டிருந்தன. நேற்று முன்தினம் முதல் கடலூர் புதுப்பாளையம், அரசு போக்குவரத்துக் கழக பணிமனை அருகே நிறுத்தப்பட்டிருந்த கார்களை பொதுமக்கள் பார்த்துச் சென்றனர்.
நன்றி :தினமலர்