Wednesday, December 3, 2008

கமர்சியல் சிலிண்டர் விலை ரூ.290 வீழ்ச்சி

கடந்த 1ம் தேதி முதல் கமர்சியல் சிலிண்டர் ஒன்றுக்கு 290 ரூபாய் குறைந்துள்ளது. எனினும் காஸ் ஏஜென்சியினர், விலை குறைக்காமல் பழைய விலைக்கே சிலிண்டர் விற்பனை செய்கின்றனர். சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையை பொறுத்து, ஆயில் நிறுவனங்கள் மாதம் தோறும் 1ம் தேதி 19.2 கிலோ எடை கொண்ட கமர்சியல் காஸ் சிலிண்டர் விலையை நிர்ணயிப்பர். இதன் அடிப்படையில், மே மாதம் 1,094 ரூபாயாக இருந்த கமர்சியல் சிலிண்டர், ஜூன் மாதம் 1,172 ரூபாயாகவும், ஜூலையில் 1,231 ரூபாயாகவும், ஆகஸ்டில் 1,250 ரூபாயாகவும் விலை அதிகரிக்கப்பட்டது. செப்டம்பர் மாதம் 1,191 ரூபாயாக விலைக் குறைந்த கமர்சியல் சிலிண்டர், அக்டோபர் மாதம் 1,226 ஆகவும், நவம்பர் மாதம் 1,238 ஆகவும் என மீண்டும் விலை அதிகரித்தது. சர்வதேச சந்தையில், கச்சா எண்ணெய் விலை, ஒரு பேரல் 47 டாலராக சரிந்துள்ளதைத் தொடர்ந்து, கமர்சியல் காஸ் சிலிண்டர் விலையை குறைக்க வேண்டிய நிர்ப்பந்தம், எண்ணெய் நிறுவனங்களுக்கு ஏற்பட்டது. எனவே, நேற்று முன்தினம் ரூ.949.95 ஆக விலைக் குறைப்பு செய்து எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்தன. ஒரே மாதத்தில் சிலிண்டர் விலை ரூ.288.90 குறைந்தது வியாபாரிகளையும், பொதுமக்களையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. இதனால், காஸ் ஏஜென்சிகள் தாங்கள் 'ஸ்டாக்' வைத்துள்ள கமர்சியல் சிலிண்டர்களை விலைக் குறைத்து விற்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. ஒரு சிலிண்டரை 290 ரூபாய் நஷ்டத்திற்கு விற்க விரும்பாத பெரும்பாலான ஏஜென்சிகள், 'விலைக் குறைப்பு உத்தரவு எங்களுக்கு வரவில்லை' என கூறி, பழைய விலைக்கே சிலிண்டர்களை விற்பது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மார்க்சிஸ்ட் செயற்குழு உறுப்பினர் சண்முகராஜா கூறுகையில், 'ஆயில் நிறுவனங்கள், பெட்ரோல், காஸ் விலையை உயர்த்தினால், அதற் கேற்ப விலையை உயர்த்தி விடுகின்றன. விலை குறையும்போது, உத்தரவு எதுவும் வரவில்லை எனக் கூறி, பழைய விலைக்கே சிலிண்டர்களை விற்பனை செய்கின்றன என்றார்.
நன்றி : தினமலர்


ஒரு டிக்கெட்டுக்கு ஒன்று இலவசம் : பாரமவுன்ட் ஏர்வேஸ் அறிவிப்பு

விடுமுறை காலச் சலுகையாக, விமான பயணத்தில், ஒரு டிக்கெட் வாங்கினால், ஒரு டிக்கெட்டை இலவசமாக, தரும் திட்டத்தை, பாரமவுன்ட் ஏர்வேஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. மதுரையில் பாரமவுன்ட் ஏர்வேஸ் நிர்வாக, மேலாளர் தியாகராஜன் கூறியதாவது: விடுமுறைக்கால சலுகையாக, ஒரு டிக்கெட் வாங்கினால், ஒரு டிக்கெட் இலவசம் என்ற திட்டத்தை அறிமுகம் செய்துள்ளோம். எங்கள் விமானத்தில் 'எலைட் பிசினஸ் கிளாஸ்' டிக்கெட் ஒன்று வாங்கும்போது, கூடுதலாக 1500 ரூபாய் செலுத்தி இலவசமாக ஒரு டிக்கெட் பெற்றுக்கொள்ளலாம். வரிகள், சர்சார்ஜ் தனி. அடிக்கடி விமானங்களில், பறப்பவர்களுக்காக 'பாரமவுன்ட் ராயல்' என்ற பெயரில் தனிச்சலுகைகள் வழங்குகிறோம். இதில், உறுப்பினரானால் கோல்ப் கிளப்புகள், ரிசார்ட்டுகள் போன்றவற்றின் சேவைகள் பெற்றுத் தரப்படும். இச்சலுகையை பெற விரும்புவோர் தீதீதீ.ணீச்ணூச்ட்ணிதணtச்டிணூதீச்தூண்.ஞிணிட் என்ற வெப்சைட்டில், பதிவு செய்யலாம். மதுரையில் இருந்து ஒரு நாளைக்கு நான்கு விமானங்களை சென்னைக்கு இயக்குகிறோம். இது தவிர, மதுரையில் இருந்து கோவா, ஆமதாபாத், புனே செல்லவும் தொடர்பு விமான வசதிகளை தருகிறோம். எங்கள் சேவைக்கு போட்டி இருப்பதாக கருதவில்லை. தென்னிந்திய விமான பயணிகளில் 26 சதவீதம் பேர் எங்களது வாடிக்கையாளர்கள். விமான பெட்ரோல் விலை குறைந்துள்ளதால், அதன் பயனை பயணிகளுக்கு தருவது பற்றி பரிசீலிக்கப்படும். மதுரையில் சர்வதேச விமான நிலையம் அமைந்த பிறகு, 2011 முதல் வெளிநாட்டு விமானங்களை இயக்குவோம். இதற்கு எங்களிடம் உள்ள 'எம்பரெர்' ரக விமனங்கள் பொருத்தமாக இருக்கும். மும்பையில் பயங்கரவாதிகளின் தாக்குதலால் விமான பயணிகளின் ஆர்வம் குறைந்துள்ளது. தென்னிந்தியாவில் அதிகம் பாதிப்பு இல்லை. இவ்வாறு மேலாளர் கூறினார்.
நன்றி : தினமலர்