Sunday, August 24, 2008

நாட்டின் பொருளாதாரத்தை சீர்குலைக்கும் கள்ள நோட்டு அபாயம்: அச்சம் தருகிறது உளவுத்துறை கணிப்பு

இந்தியா முழுவதும் புழக்கத்தில் உள்ள ரூபாய் நோட்டுக்களில், 28 சதவீதம் கள்ள நோட்டுக்கள் என்ற திடுக்கிடும் தகவலை வெளியிட்டுள்ளது புலனாய்வுத் துறை. மக்கள் பயன்படுத்தும் ரூபாய் நோட்டுக்களில், நான்கில் ஒன்று கள்ள நோட்டு.புலனாய்வுக் குழு (ஐ.பி.,) திரட்டியுள்ள தகவல்களின் அடிப்படையில், இந்தியாவில், புழக்கத்தில் உள்ள பணத்தில் ரூ. 1.7 லட்சம் கோடி பணம், கள்ளநோட்டுக்கள். 2008, ஜூலை 18ம் தேதி இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்ட புள்ளி விவரத்தின் படி, இந்தியாவில் மக்கள் புழக்கத்தில் உள்ள பணத்தின் மதிப்பு ரூ. ஆறு லட்சத்து மூவாயிரம் கோடி. புலனாய்வுக் குழு வெளியிட்ட தகவலை ஒப்பிட்டால், புழக்கத்தில் உள்ள ஆறு லட்சத்து மூவாயிரம் கோடி ரூபாயில், 28 சதவீதம் கள்ள நோட்டுக்கள். ரிசர்வ் வங்கி கையிருப்பாக வைத்திருக்கும் வெளிநாட்டு கரன்சிகள், தங்கம் போன்றவற்றின் மதிப்புக்கு இணையாக, ரூபாய் நோட்டுக்கள் புழக்கத்தில் விடப்படும் காலம் இப்போது கிடையாது.
ஆனால், கள்ளநோட்டுக்களும் பெருமளவு சேர்வதால், ரூபாயின் மதிப்பு படுபாதாளத்துக்கு போவதுடன், பணவீக்கம் பெரிதும் அதிகரித்து, விலைவாசி கடுமையாக உயருமே தவிர குறையாது. அதேசமயம் கள்ள நோட்டு நடமாட்டத்தால், இந்தியாவின் ஒட்டுமொத்த பொருளாதாரமே சிதைந்து போகும் அபாயம் காத்திருக்கிறது.கள்ள நோட்டுக்களை புழக்கத்தில் விடுவதற்கு, வங்கி அதிகாரிகளே துணை போகும் அவலமும் இந்தியாவில் உள்ளது. சமீபத்தில் உ.பி.,யில் அரசு வங்கியான ஸ்டேட்பாங்க் மற்றும் தனியார் வங்கியான ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கிகளில் மூன்று கோடி ரூபாய் மதிப்பிலான கள்ளநோட்டுக்கள் கண்டுபிடிக்கப் பட்டன. ஸ்டேட் பாங்க் காசாளர் வீட்டில் நடத்திய சோதனையில், 7.21 லட்ச ரூபாய் ரொக்கப்பணம் பறிமுதல் செய்யப் பட்டது. இதில், ஐந்து லட்ச ரூபாய் மதிப்புள்ள நோட்டுக்கள், கள்ள ரூபாய் நோட்டுக்கள்.
புலனாய்வு குழு வெளியிட்ட தகவலை ரிசர்வ் வங்கி மறுத்த போதும், இந்த அளவு கள்ளநோட்டுகள் எப்படிப் புழங்குகின்றன என்பதற்கு சரியான ஆதாரம் மற்றும் புள்ளிவிவரம் இல்லை. பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்ட மாநிலங்களின் மூத்த போலீஸ் அதிகாரிகளின் கூட்டம் டில்லியில் நடந்த போது, வங்கித் துறையே கள்ள நோட்டு புழக்கத்துக்கு காரணமாக இருப்பதை, உ.பி., மாநில அதிகாரி ஒருவர் சுட்டிக்காட்டினார். இதை தடுப்பதற்குரிய வழிவகை இல்லாததும் சுட்டிக் காட்டப்பட்டது. கள்ள நோட்டுகள் பிடிபட்ட சம்பவங்களில் வங்கியின் சில அதிகாரிகளே உதவியதாகக் கூறப்படுவது போலீசாருக்கு அதிர்ச்சி தந்திருக்கிறது.
ரிசர்வ் வங்கி அச்சிட்டு வெளியிடும் ரூபாய் நோட்டுக்கள், இந்தியா முழுவதும் உள்ள 4 ஆயிரத்து 422 கருவூலங்கள் மூலம் வினியோகிக்கப் படுகின்றன. இந்த கருவூலங்களிலேயே கள்ளநோட்டுக்கள் ஊடுருவும் அபாயமும் உள்ளது. புழக்கத்தில் உள்ள கள்ள நோட்டுக்கள், சாதாரணமாக ஒரு வங்கியின் காசாளரால் அடையாளம் காணமுடியாத அளவுக்கு நவீனத் தொழில் நுட்பத்துடன் துல்லியமாக அச்சிடப்பட்டு உள்ளது.
நாடு முழுவதும் பல்வேறு வங்கிகளால், வைக்கப் பட்டுள்ள ஏ.டி.எம்., இயந்திரங்களில், கள்ளநோட்டுக்கள் கலந்து உள்ளன.இதனால், அதைப் பயன்படுத்தி பணம் எடுப்போர், எடுக்கப்படும் ரூபாய் நோட்டு, தற்செயலாக கள்ள நோட்டாக இருப்பதை அறிந்தால், அவர்கள் மாட்டிக் கொள்வார்களே தவிர, அதற்கு ஈடாக நல்ல நோட்டு பெற முடியாது. ஆகவே, ஏ.டி.எம்., எனப்படும் தானியங்கி பணபட்டுவாடா நிலையத்தில் கள்ள நோட்டு ஊடுருவும் அளவுக்கு மோசமான நிலை ஏற்பட்டதால், இன்று இப்பிரச்னையின் பூதாகாரம் வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது.அதேநேரம் ரியல் எஸ்டேட்களில் பெருமளவு முதலீடு செய்யும் பெரும்பணக்காரர்கள், அதில் ஒரு பகுதியை, கறுப்புப் பணத்தை வெள்ளையாக மாற்ற பயன்படுத்துகின்றனர். இந்த கறுப்புப் பணத்தில் ஒரு பகுதி கள்ள நோட்டுக்களாக உள்ளன. ரியல் எஸ்டேட் துறையில் தான் அதிகளவில் கள்ள நோட்டுக்கள் புழக்கத்துக்கு கொண்டுவரப்படுகின்றன என்பதும் அதிர்ச்சி தரும் தகவல். கள்ள நோட்டுக்களுடன் சிக்குவோரிடமும், சந்தேகத்துக்கு இடமானோரிடமும் நடத்தப்பட்ட விசாரணையில், இந்திய கரன்சி நோட்டுக்களை அச்சிடுவதற்கென்றே பாகிஸ்தானில், அந்நாட்டு உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ.,யின் கண்காணிப்பின் பிரத்யேக அச்சகம் அனைத்து உள்கட்டமைப்புகளுடன் இயங்கி வருவது தெரியவந்துள்ளது அதேபோல, ஐரோப்பாவில் செயல்படும் பாகிஸ்தான் நிறுவனங்களும் இந்திய கரன்சியை அச்சிடுவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அங்குள்ள பாகிஸ்தான் நிறுவனங்கள் வாங்கும் கரன்சி நோட்டு அச்சிட பயன்படுத்தும் காகிதம், அதன் தேவைக்கு மிக அதிகமாக இருப்பது தெரியவந்துள்ளது.
இந்தியாவைப் போலவே, அதிநவீன தொழில்நுட்பத்துடன் கள்ளநோட்டுக்கள் அச்சிடப்படுவதால், அவற்றை கண்டுபிடிப் பது முடியாத காரியமாக உள்ளது. கள்ள நோட்டுக்கள் புழக்கத்தை தடுப் பதற்கு, வங்கித்துறையில் உரிய கட்டுப் பாடுகளும், கறுப்புப் பண புழக்கத்தை தடுப்பதற்கு கடும் நடவடிக்கைகளும் எடுக்கப் பட வேண்டியது அவசியமாகி உள்ளது.

கதிகலங்க செய்த பங்குச் சந்தையில் வரவேற்கத்தக்க திடீர் திருப்பம்...


முன்பெல்லாம் வெள்ளியன்று சந்தை முடியும் போது பயமுறுத்திக் கொண்டிருந்த பணவீக்கம், வியாழக்கிழமையே பாதிப்புகளை ஏற்படுத்தி விடுகிறது. அதுவும், 'யானை வரும் பின்னே மணியோசை வரும் முன்னே' என்பது போல பணவீக்க புள்ளி விவரம் வெளிவருவதற்கு முன்னரே (வியாழன் மாலை வெளியிடப்படுகிறது) பங்குச் சந்தையை புரட்டிப் போட்டு விடுகிறது. அப்படித்தான் இருந்தது வியாழக் கிழமை சந்தை. காலையிலிருந்தே சந்தை குறைய ஆரம்பித்தது. போதாக்குறைக்கு ஆசிய பங்குச் சந்தைகளும் விழுந்தன. மீண்டும் கூடி வரும் கச்சா எண்ணெய் விலையும் சேர்ந்து மொத்தமாக பங்குச் சந்தையை 435 புள்ளிகள் விழ வைத்தன. பணவீக்கம் கூடுகிறது என்றாலே அது வங்கிப் பங்குகளையும், கட்டுமானத்துறை பங்குகளையும் தான் அசைத்துப் பார்க்கும். வங்கித் துறை 5.2 சதவீதமும், கட்டுமானத்துறை 5.1 சதவீதமும் கீழே இறங்கின.

சமீப காலமாக கட்டுமானத் துறை மிகவும் கீழே இறங்கி வருவது ஒரு கவலைக்குரிய விஷயமாகும். 1997 மற்றும் 1998ம் ஆண்டுகளில் இதுபோல ஒரு பெரிய சரிவை சந்தித்தது. அதன் பிறகு வீறு கொண்டு எழுந்த கட்டுமானத் துறை, மறுபடி கீழே இறங்கி வருவது அது சார்ந்துள்ள எல்லா துறை பங்குகளையுமே அசைத்துப் பார்க்கும்.வியாழனைப் போல வெள்ளியும் துவக்கத்தில் கீழேயே இருந்தது. ஒரு கட்டத்தில் 100க்கும் அதிகமான புள்ளிகள் கீழே சென்றிருந்தன. சரி, இந்த வாரம் மொத்தமாக நஷ்ட வாரம் தான் என்று பலரும் நினைத்திருந்த போது ஐரோப்பிய சந்தைகளின் நல்ல துவக்கம், லண்டனில் உலகச் சந்தையில் மெட்டல் விலைகள் கூடியதால் அதன் எதிரொலி இங்கும் கேட்டது. பங்குச் சந்தை சிறிது மேலே வர அதுவும் ஒரு காரணமாக இருந்தது. குறிப்பாக ஸ்டெர்லைட், ஹிண்டால்கோ பங்குகளின் விலைகள் கூடின. வெள்ளியன்று இறுதியாக மும்பை பங்குச் சந்தை 14,401 புள்ளிகளுடனும், தேசிய பங்குச் சந்தை 4,327 புள்ளிகளுடனும் முடிவடைந்தன. சென்செக்ஸ் 14,400ஐ தாண்டியும், நிப்டி 4,300ஐ தாண்டியும் முடிந்து இருப்பது ஆச்சரியமான திருப்பம் தான். இது வரவேற்கத்தக்கது.அம்பானி சகோதரர்களின் பிரச்னை: அம்பானி சகோதரர்களின் பிரச்னைகளை, அவர்களின் அம்மா கோகிலா பென்னை வைத்து தீர்த்துக் கொள் ளும்படி கோர்ட் கூறியுள்ளது. இது ஒரு நல்ல முடிவைத் தரும் என்று பலரும் நினைப்பதால், அவர் களின் கம்பெனி பங்குகள் மேலே சென்றன.

ஐ போனும், பங்கு சந்தையும்: உலகில் பல நாடுகளில் அறிமுகமான ஆப்பிள் கம்பெனியின் ஐ போன் இந்தியாவிற்கு வராதா என்று பலரும் ஏங்கிக் கொண்டிருந்தனர். தற்போது, இந்தியாவிலும் வோடபோன் மற்றும் ஏர்டெல் ஆகிய கம்பெனிகள் ஐ போனை அறிமுகம் செய்துள்ளன. விலை சாதாரண போன்களை விட அதிகமாக உள்ளதால், ஐ.சி.ஐ.சி.ஐ., பாங்க், அக்சிஸ் பாங்க், பார்கலேஸ் பாங்க் ஆகியவை இந்த போனை வாங்குவதற்கு கடன்களும் கொடுக் கப் போகின்றன என்ற செய்திகளும் வருகின்றன. நன்கு விற்பனை ஆகும் பட்சத்தில் பாரதி ஏர்டெல் கம்பெனியின் பங்கு விலைகள் கூடலாம்.எப் அண்ட் ஓவிற்கு சென்ற பங்குகள்: 39 பங்குகள் எப் அண்ட் ஓ செக்மெண்டில் 21ம் தேதி முதல் பட்டியலிடப்பட்டது. பலரும் இந்தப் பங்குகள் நன்றாக விலைகள் கூடும் என்று எதிர்பார்த்தனர். ஆனால், பட்டியலிடப்பட்ட தினத்தன்று மூன்று பங்குகள் வர்த்தகமே நடைபெறவில்லை. மற்ற பங்குகளில் பல 2 சதவீதம் முதல் 7 சதவீதம் வரை கீழே விழுந்தன. 18 பங்குகளில் எப் அண்ட் ஓ டிரேடிங்கில் 50 டிரேட் மட்டும் தான் நடைபெற்றது.புதிய வெளியீடு: 22 கம்பெனிகள் புதிய வெளியீடுகள் கொண்டு வருவதற்காக செபியிடம் வாங்கியிருந்த காலக்கெடு முடிவடைந்து விட்டது. சந்தையின் நிலைமை சரியில்லாததால், தற்போது புதிய வெளியீடுகள் கொண்டு வரும் பட்சத்தில் அது சரியாக விற்காது, முதலீட்டாளர்கள் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள் என்ற எண்ணத்திலே பலரும் தங்களது திட்டங்களை ஒத்தி வைத்துவிட்டனர். அடுத்த வாரம் எப்படி இருக்கும்?: சந்தையின் நிலைமை இன்னும் மேலேயும், கீழேயும் தான் இருக்கிறது. பலரும் பணங்களை கைகளில் வைத்துள்ளனர். சந்தையில் முதலீடு செய்ய மனது வரவில்லை.
ஏனெனில், வங்கிகளில் 10 சதவீதம் அளவு வட்டி கிடைக்கிறது. அதில் முதலீடு செய்து விட்டு அக்கடா என்று இருக்கலாம் என்று தான் நினைக்கின்றனர். இது தவிர, மியூச்சுவல் பண்டுகள் வைத்திருக்கும் பணங்களும் சந்தைக்கு வரவில்லை. சந்தை இப்போதுள்ள நிலையில் சிறு முதலீட்டாளர்களுக்கு சொல்லிக் கொள்ளும் நிலையில் இல்லை. அன்றாட வர்த்தகத்தில் ஈடுபடுபவர்கள் சற்று ஒதுங்கியிருப்பது நல்லது. கையில் உள்ள பங்குகள் லாபத்தை எட்டினால் விற்று விட்டு, சரிவுக்காக காத்திருப்பதே மேல்.அடுத்த வாரம்' டிரைவேடிவ் டிரேடிங்' முடிவு தேதி வருகிறது. அதுவரை இது போல மேலும், கீழுமாகத்தான் இருக்கும்.காத்திருப்போம் பொறுமையாக.

-சேதுராமன் சாத்தப்பன்-

நன்றி :தினமலர்


சம்பளம் அதிகம் நுகர்வு அதிகம்: பணவீக்கம் இன்னும் ஏறும்: பிரிட்டன் வங்கி கணிப்பு

கணிசமான துறைகளில் சம்பளம் அதிகமாக உள்ளது; அதனால், உணவுப் பொருட்கள் முதல் பல பொருட்களின் நுகர்வு பல மடங்கு அதிகரித்து வருகிறது. இந்நிலையில், பணவீக்கம் இந் தாண்டு இறுதி வரை குறைய வாய்ப்பே இல்லை!பிரிட்டனின் பிரபல வங்கி 'பெர்க்லே' இப்படி கணித்துள்ளது.அதன் சர்வே அறிக்கையில் கூறியிருப்பதாவது:பணவீக்கம் அதிகரிப்பு, அதன் விளைவாக உணவு, எண்ணெய் பொருட்களின் விலை உயர்வு எல்லாம் சர்வதேச அளவில் பரவலாக உள்ளது. இந்தியாவில் இப்போது பல துறையிலும் சம்பளம் அதிகரிக்கப்பட்டுள் ளது. சர்வதேச அளவுக்கு சம்பளம் உயர்த் தப்பட்டுள்ள நிலையில், நுகர்வுப் பொருட்களும் சர்வதேச அளவில் இந்தியாவில் தான் அதிகரித்து வருகிறது.
பண வீக்கம், விலைவாசி ஏற்றம் இருந்தாலும், நுகர்வு மட்டும் இன்னும் குறையவே இல்லை. சம்பள உயர்வு அதிக அளவில் குறைக்கப் படவில்லை என்பதால், நுகர்வுப் பொருட்கள் சதவீதம் குறையவில்லை. பலரும் இன்னும் பொருட் களை வாங்கும் போக்கை மாற்றிக் கொள்ளவில்லை; சிக்கனத்தை கடைபிடிப்போர் எண்ணிக்கையும் குறைவு தான்.பணவீக்க உயர்வை அடுத்து, பழங்கள் விலை 9 சதவீதம் அதிகரித் துள்ளது. இதுபோல, பருப்புகள் விலை 2 சதவீதம், டீசல் விலை 16 சதவீதம் அதிகரித்துள்ளது. விலைவாசி ஏறியும், நுகர்வு சதவீதம் குறையாத நிலை உள்ளது. இந்த நிலை நீடித்தால், அடுத்த சில மாதங்களில் பணவீக்கம் 17 சதவீதத்தை எட்டலாம் என்று அஞ்சப்படுகிறது.சாப்ட்வேர் உட்பட பல துறைகளில் இன்னமும் சம்பள உயர்வு 15 சதவீதம் வரை இருப்பதால், விலை வாசி ஏற்றம், கணிசமான பேருக்கு பெரிய பாதிப்பாகவே இல்லை. அதனால் அவர்களின் நுகர்வில் பெரிய அளவில் குறைவு ஏற்படவில்லை.
மொத்த வளர்ச்சி உயர்வு கடந்தாண்டு வரை 9 சதவீதமாக இருந்தது; இப்போது 8ஆக குறைந்துள்ளது. இதற்கு காரணம், பல திட்டங்கள் தாமதமாகியும், முடங்கியும் உள்ளது தான்.பணவீக்க நிலை பங்குச்சந்தையையும் பாதித்து வருகிறது. இப்போது கண்டுள்ள சரிவுக்கே பலரும் வேதனைப்படுகின்றனர். பங்குச்சந்தையில் இன்னமும் சரிவு ஏற்படும்.இவ்வாறு சர்வேயில் கூறப்பட் டுள்ளது.
நன்றி : தினமலர்