Thursday, November 19, 2009

பொன்சேகாவை நம்பலாமா?

இலங்கை அதிபர் ராஜபட்சவும், விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரை முன்னின்று நடத்திய சரத் பொன்சேகாவும் முட்டிக் கொள்வதால், தமிழ்ச் சமூகத்துக்கு நியாயம் கிடைக்க வாய்ப்பிருப்பது போன்ற நம்பிக்கை உருவாக்கப்பட்டிருக்கிறது.

இந்த மோதலால் தமிழர்களுக்கு முழு உரிமைகள் கிடைக்காவிட்டாலும், குறைந்தபட்சம் போர் உச்சத்தில் இருந்தபோது நிகழ்த்தப்பட்ட படுகொலைகள் தொடர்பான உண்மைகளாவது வெளிவரக்கூடும். அந்த வகையில் ராஜபட்ச - பொன்சேகா மோதல் மீது வைக்கப்பட்டிருக்கும் நம்பிக்கை நியாயமானதுதான். ஆனால், இதே நம்பிக்கையை பொன்சேகா மீது வைப்பது ஈழத் தமிழர்களுக்கு பெரிய ஆபத்தாக முடியலாம்.

போருக்குப் பிந்தைய நிவாரணப் பணிகளைத் துரிதமாக மேற்கொண்டு, தமிழர்களின் மனதில் இடம்பிடிக்க ராஜபட்ச அரசு தவறிவிட்டது என பொன்சேகா தனது பதவி விலகல் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். இந்த ஒற்றை வரியைக் கொண்டு, தம்மீது இருக்கும் “தமிழின அழிப்பு’ பாவத்தைக் கழுவ அவர் முயன்றிருக்கிறார் என்பது தெரிகிறது. ஆனால் இதற்கு முந்தைய காலங்களில், அவரது பேச்சுகள் எதுவும் தமிழினத்துக்கு ஆதரவாக இருந்ததில்லை. சிறுபான்மையினத்தவர்கள் பெரும்பான்மை மக்களிடம் கெஞ்சிப் பிழைக்க வேண்டும் என்பதுதான் இவரது எண்ணமாக இருந்திருக்கிறது. ராணுவத் தளபதி என்கிற முறையில் சாதாரணமான யுத்த விதிகளைக்கூட மதிக்காமல், இன அழிப்பை நடத்தியதில் மற்றவர்களைக் காட்டிலும் இவருக்குத்தான் அதிகப் பங்கு இருந்திருக்க வேண்டும். இப்படிச் சில நாள்களுக்கு முன்பு வரை ராஜபட்ச சகோதரர்களுடன் கைகோர்த்து, ராணுவ அத்துமீறல்களுக்கு ஆதரவாக இருந்த பொன்சேகாவுக்கு, திடீரென தமிழர்கள் மீது பாசம் பொங்குவதற்கு பொதுநலக் காரணம் ஏதும் இருக்க முடியாது என்றே தோன்றுகிறது.

தமிழ் மக்கள் மத்தியில் அமைதியை உருவாக்காவிட்டால், மீண்டும் அவர்கள் கிளர்ந்து எழக்கூடும் என ராஜிநாமா கடிதத்தில் பொன்சேகா எச்சரித்துள்ளார். விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரை தீவிரப்படுத்தியது தாமே என்பதால், ஓய்வுக்குப் பிறகு தமக்குக் குண்டுதுளைக்காத கார், கவச வாகனங்கள் என பாதுகாப்பைப் பலப்படுத்த வேண்டும் எனவும் அவர் கோரியிருக்கிறார். விடுதலைப் புலிகள் பெரும் தாக்குதல் நடத்தும் அளவுக்கு இன்னமும் பலமாக இருக்கிறார்கள் என்பதற்கும், தமிழினத்தை இலங்கை ராணுவம் பெருமளவு சேதப்படுத்தியிருக்கிறது என்பதற்கும் அவரே அளித்திருக்கும் ஒப்புதல் வாக்குமூலங்கள் இவை.

ராஜபட்ச மற்றும் அவரது சகாக்களின் போர் உத்திகளும் ராஜதந்திர உத்திகளும் உலகத் தமிழ் சமூகம் எதிர்பார்க்காத அளவுக்கு வலுவானவையாக இருந்திருக்கின்றன என்பதை கடந்த சில மாத நிகழ்வுகள் உணர்த்தியிருக்கின்றன. அவர்களது வெளிப்படையான ஒவ்வொரு நடவடிக்கைகளுக்கும் பின்னால் மறைமுகக் காரணம் ஏதும் இருக்கலாம். இப்படியொரு சூழலில் பொன்சேகாவும் ராஜபட்சவும் அடித்துக் கொண்டு மாய்ந்து போவார்கள், அதனால் தமிழ்ச்சமூகத்துக்கு நீதிகிடைத்துவிடும் எனக் கருதுவது மிகத் தவறான கண்ணோட்டத்தின் வெளிப்பாடாகத்தான் இருக்க முடியும்.

அதிகாரமற்ற பதவி வழங்கப்பட்டது என்பதைத் தவிர, பதவியில் இருந்து விலகுவதற்காக பொன்சேகா தெரிவித்திருக்கும் வேறு காரணங்கள் எவையும் நம்பும்படியாக இல்லை. ராணுவப் புரட்சி ஏற்படும் என அஞ்சி இந்தியாவின் தயவை நாடியதாகக் கூறப்படுவது உண்மையாகவே இருந்தாலும், அதை ராஜிநாமா கடிதத்தில் தெரிவிக்க வேண்டிய அவசியமில்லை. “ராஜபட்ச என்னைக் கண்டு அஞ்சினார்’ என்ற கருத்தை ஏற்படுத்துவதற்கான உத்தியாகத்தான் இது கவனிக்கப்படுகிறது. மறுகுடியமர்த்தலில் அரசு மெத்தனம் காட்டுவதாகக் கூறுவதும் அப்பட்டமான அரசியல்தான்.

உண்மையில், தமிழர்களுக்கு மறுவாழ்வு அளிக்கப் போகிறேன் என்று கூறும் எந்த அரசியல்வாதியையும் சிங்கள மக்கள் ஆதரிக்கப் போவதில்லை. தமிழர்கள் மீது அதிக விரோதப் போக்கைக் கொண்டிருப்பவருக்குத்தான் சிங்களர்களிடையே அதிக ஆதரவு இருக்கும். அந்த அளவுக்கு இரு இனங்களிடையே கசப்புணர்வு உருவாக்கப்பட்டிருக்கிறது. இதெல்லாம் சிங்கள் அரசியல்வாதிகளுக்கு நன்றாகவே தெரியும். இப்போது ஆட்சியிலிருப்போரும், இதற்கு முன்பு ஆட்சியில் இருந்தவர்களும் இந்த வெறுப்பைத்தான் சிங்கள வாக்குகளைக் கவரும் முக்கியக் கருவியாகப் பயன்படுத்தினர். இனியொரு தேர்தல் வரும்போதுகூட, ராஜபட்ச, பொன்சேகா உள்ளிட்ட என யாராக இருந்தாலும் தமிழ் மக்களின் வாக்கு வங்கி என்பது அவர்களுக்கு இரண்டாம்பட்சமாகத்தான் இருக்கும். அந்த அளவுக்குத் தமிழ் மக்களின் வாக்குகள் அதிபரைத் தேர்ந்தெடுப்பதில் குறைந்தபட்ச செல்வாக்குக்கூடச் செலுத்த முடியாத நிலைதான் இன்றைக்கு இருக்கிறது.

பொன்சேகா ராஜிநாமாவால் தமிழர்களுக்கு ஓரளவு கிடைக்க வேண்டிய ஆதரவும் இல்லாமல் போகும் அபாயமும் ஏற்பட்டிருக்கிறது. அதிபர் தேர்தலில் ராஜபட்சவுக்கு எதிரான பொது வேட்பாளராக பொன்சேகா எதிர்க்கட்சிகள் சார்பில் நிறுத்தப்பட்டால், மேற்கத்திய நாடுகளுடன் நட்புறவை வளர்த்துக் கொண்டிருக்கும் ரணில் விக்கிரமசிங்க போட்டியிலிருந்து விலகிக் கொள்ள நேரிடும். ராஜபட்ச, பொன்சேகா ஆகிய இருவரில் ஒருவரைத்தான் தமிழர்கள் ஆதரிக்க வேண்டியிருக்கும். இந்த இருவரும் சீனா, இந்தியா போன்ற பிராந்தியப் பெருந்தலைகளுடன் மிக நெருக்கமாக இருப்பதால், தமிழர்கள் இன்னமும் நம்பிக்கொண்டிருக்கும் அமெரிக்கா போன்ற நாடுகள் ஈழ விவகாரத்தில் செல்வாக்குச் செலுத்த முடியாமல் போகும்.

ஒருவேளை ராஜபட்ச, பொன்சேகா தவிர ரணில் போன்ற வேறொருவர் களத்தில் இறங்கி மும்முனைப் போட்டியை ஏற்படுத்தினால் தமிழர்கள் வாக்களிப்பதில் ஒரு அர்த்தமிருக்கும். மற்ற நாடுகளில் இருப்பதைப் போன்று சிறுபான்மை வாக்கு வங்கியை ஜனநாயக ஆயுதமாகப் பயன்படுத்தவும் முடியும்.

இதற்கெல்லாம் ஈழத் தமிழர்கள் இன்னும் காத்திருக்க வேண்டும் என்றே தோன்றுகிறது. புலிகளுடனான போரில் கிடைத்த வெற்றியின் மூலம் ஏகத்துக்கும் உயர்ந்துபோன தனது செல்வாக்கைக் கொண்டு தேர்தலைச் சந்திப்பதற்கு ராஜபட்ச திட்டமிட்டது என்னவோ உண்மைதான். ஆனால், பொன்சேகா தனது அரசியல் ஆசைகளை அவசரப்பட்டு வெளியிட்டிருப்பதால், இப்போதைய சூழலில் பதவிக்காலம் முடிவதற்கு முன்பே தேர்தலை நடத்துவது தேவையற்றது என ராஜபட்ச உணர்ந்திருப்பார். ராஜபட்ச-பொன்சேகா மோதலால் இன்னும் சில உண்மைகள் வெளிவரலாம். ஆனால், நீதி கிடைத்துவிடும் என அப்பாவித்தனமாகக் கூறிக் கொண்டிருக்க முடியாது.
கட்டுரையாளர் :எம் . மணிகண்டன்
நன்றி : தினமணி

மேலே போக நிலை பெறுகிறது பங்குச் சந்தை

திங்கள் முதல் நேற்று வரை சந்தை ரோலர் கோஸ்டர் போல மேலே கீழே சென்று வந்தாலும், சந்தைக்கு பழுதில்லாமல் இருந்தது. சாப்ட்வேர் பங்குகள், மெட்டல் பங்குகள் சந்தையை சிறிது ஏற்றிச் சென்றன.
திங்களன்று அமெரிக்க டாலர் வீக்காக இருந்ததால் மற்ற நாடுகளில் சந்தையின் மாற்றங்களை வைத்து இங்கேயும் மேலே சென்றது. மேலும், செப்டம்பரில் கார் விற்பனை கூடியிருந்ததால் மாருதி சுசூகி கம்பெனியின் பங்குகள் மிகவும் மேலே சென்றது. அது சந்தை மேலே செல்லக்காரணமாக இருந்தது. அன்றைய தினம் முடிவாக 183 புள்ளிகள் அதிகமாகி முடிந்தது. நேற்று முன்தினம் காலை முதலே சந்தை கீழேயே இருந்தது. ஆனால், மதியத்திற்கு மேலே தொடங்கிய ஐரோப்பிய சந்தைகள் மேலே இருந்ததால் இங்கும் சந்தை மேல் நோக்கி செல்ல ஆரம்பித்தது. ஆதலால், சந்தை அன்றைய தினம் முடிவாக 18 புள்ளிகள் அதிகமாகி முடிந்தது. நேற்று, முதலீட்டாளர்கள் லாப நோக்கில் செயல்பட்டதும் சந்தை கீழே வர ஒரு காரணம். சந்தை சமீபகாலத்தில் மேலே சென்றிருக்கிறது. இது லாபம் பார்க்க ஒரு சந்தர்ப்பம் என்று கருதி விற்றதால் காலையில் மேலே இருந்த சந்தை பின்னர் கீழே சென்று முடிந்தது. நேற்று இறுதியாக மும்பை பங்குச் சந்தை 52 புள்ளிகள் குறைந்து 16,998 புள்ளிகளுடனும், தேசிய பங்குச் சந்தை 7 புள்ளிகள் குறந்து 5,054 புள்ளிகளுடனும் முடிந்தது. தங்கம்: டாலர் வீக்காக இருப்பது தங்கம் விலையேற்றத் திற்கு ஒரு காரணம். தங்கம் விலை கூடுவதற்கு இன்னும் இரண்டு காரணங்கள். ஒன்று, திருமண காலம் வருவது. இன்னொன்று தங்கச் சுரங்கங்களில் உற்பத்தி சிறிது குறைவு. மேலும், அதை சரிக்கட்ட பழைய நகைகள், ஸ்க்ராப் சந்தைக்கு வரும். அது சந்தைக்கு ஈடு கொடுக்கும். ஆனால், அந்த வரத்து நின்றுவிட்டது. ஏனெனில் விற்பவர்கள் இன்னும் அதிகம் விலை வரும் என்று காத்திருப்பதால் தான்.
ரிலையன்ஸ்: ரிலையன்ஸ் சமீப காலத்தில் மட்டும் 18 சதவீதம் கூடியுள்ளது. வருடாந்திர பொதுக்குழு கூட்டத்தில் தெரிவிக்கப்பட்ட விஷயங்களில் இரண்டு மிகவும் முக்கியமானவை. ஒன்று எரிசக்தித் துறையில் பெரிய அளவில் நுழையவுள்ளது. அதற்காக வெளிநாடுகளில் இருக்கும் கம்பெனியை வாங்கும் முயற்சிகளில் ஈடுபடும். இரண்டாவது, வரும் இரண்டு வருடங்களில் கடன் இல்லாத கம்பெனியாக மாறும் என்பது. மேலும், அறிவிக்கப்பட்ட போனஸ் வரும் 27ம் தேதி ரெகார்ட் தேதியாக எடுத்துக் கொள்ளப்பட்டு அந்த தேதியில் உள்ள பங்குதாரர்களுக்கு ஒன்றுக்கு ஒன்று போனஸ் வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளது.
சாப்ட்வேர் பங்குகள்: சாப்ட் வேர் பங்குகளை வாங்குங் கள் என்று சென்ற வாரம் கூறியிருந்தோம். அப்படி வாங்கியிருந்தால் நல்ல லாபத்தை சில நாட்களிலேயே பார்த்திருக்கலாம். ஏனெனில், அந்த அளவிற்கு சந்தையில் அந்தப் பங்குகளில் ஏற்றம் இருந்தது.
காக்ஸ் அண்டு கிங்ஸ் புதிய வெளியீடு: காக்ஸ் அண்டு கிங்சின் புதிய வெளியீடு வந்துள்ளது பெரிய எதிர்பார்ப்புகளை சந்தையில் ஏற்படுத்தியுள்ளன. 70 வருட பழமையான கம்பெனி என்பதால் அதிகப்படியாக செலுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், முதல் நாள் முடிவில் 0.60 தடவையே செலுத்தப் பட்டுள்ளது.
வரும் நாட்கள் எப்படி இருக்கும்? : வரும் நாட்கள் சிறிது மேலே கீழே இருந்தாலும் சந்தைக்கு பழுதில்லை. சந்தை 17,000 புள்ளிகளை சுற்றியே வருவது சிறிது தெம்பளிக்கிறது. சந்தை இம்மாதம் 11 சதவீதம் வரை கூடியுள்ளது.
நன்றி : தினமலர்


அளவுக்கு மீறினால்...

குழந்தைக்கு அலங்காரம் செய்து திருஷ்டி கழிக்க கன்னத்தில் கரும்புள்ளி வைப்பது போல, மகாராஷ்டிர மாநிலத்துக்குப் பெருமை சேர்க்கும் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கரின் சாதனைகள் நிறைந்த 20 ஆண்டு கிரிக்கெட் விளையாட்டுக்காக உலகம் முழுவதும் பாராட்டிக் கொண்டிருக்கும்போது, அவரது சொந்த மாநிலத்தில் அவர் தலையில் ஒரு குட்டு விழுந்திருக்கிறது. குட்டு வைத்திருப்பவர் சிவசேனா தலைவர் பால் தாக்கரே.

பத்திரிகையாளர்களிடம் பேசிக் கொண்டிருந்த சச்சின், "நான் ஒரு மகாராஷ்டிரன் என்பதற்காகப் பெருமைப்படுகிறேன். ஆனாலும், முதலில் நான் இந்தியன். மும்பை நகரம் இந்தியர் யாவருக்கும் உரியது' என்று குறிப்பிட்டுள்ளார். இதில் எந்தவித முரண்பாடான கருத்துகளோ, மறைமுகமான பதிலடியோ அல்லது அரசியல் பிரவேசமோ எதுவுமே இல்லை. ஆனாலும் தேவையே இல்லாமல் சச்சினைக் கண்டித்திருக்கிறார் பால் தாக்கரே.

"உன் விளையாட்டுத் திடலை விட்டுவிட்டு அரசியல் களத்திற்குள் புகுந்துகொண்டு, எல்லா இந்தியருக்கும் மும்பையில் சமஉரிமை உள்ளது என்று பேசியிருக்கிறீர். சச்சின், இந்த வார்த்தைகளால் மராட்டியர் இதயம் உடைந்துபோனது. மும்பைக்குள் இடம்பெயர்வோரை ஏன் தூண்டி விடுகிறாய்?...'என்று பலவாறாக சச்சினுக்குக் கண்டனம், எச்சரிக்கை, கேள்விக் கணைகள் என்று ஒரு கட்டுரை வடித்திருக்கிறார் பால் தாக்கரே, தனது சாம்னா இதழில்!

மகாராஷ்டிர மாநிலத் தேர்தல் முடிந்து, சட்டப்பேரவை உறுப்பினர்கள் உறுதிமொழியேற்பின்போது, சமாஜவாதி கட்சி உறுப்பினர் அபு ஆஸ்மி, மராத்தி மொழியில் உறுதி மொழி ஏற்காமல் ஹிந்தியில் உறுதிமொழி ஏற்றார் என்பதற்காக அவரை அடித்து, உதைத்து ரகளை செய்தனர் மகாராஷ்டிர நவ நிர்மாண் சேனா எம்.எல்.ஏக்கள். இதன் மூலமாக, இத்தனை காலமாக இந்த விவகாரங்களில் சிவசேனாவுக்கு இருந்துவந்த புகழை ராஜ் தாக்கரே தட்டிச்சென்றுவிட்டாரே என்ற ஆதங்கம் இருந்துவந்தது.

சிவசேனா தலைவர் பால் தாக்கரேவை அவதூறாகப் பேசியதற்காக அபு ஆஸ்மி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சட்டப்பேரவையில் சிவசேனா எம்.எல்.ஏ.க்கள் ரகளை செய்தனர். மராட்டிய மக்களின் கவனத்தை ஈர்த்தனர்.

இப்போது, சச்சின் டெண்டுல்கர் மீது பாய்ந்துள்ளதன் மூலம், மராட்டியர்கள் மட்டுமன்றி, இந்தியர்கள் மட்டுமன்றி, உலக மக்கள் அனைவரின் கவனத்தையும் தனது பக்கம் ஈர்த்துள்ளனர்.

உலகம் முழுவதும் கொண்டாடப்படும் ஒரு கிரிக்கெட் வீரரை, மகாராஷ்டிர மண்ணின் மைந்தர் என்பதற்காக, மாநில உணர்வுடன் குறுகிப் போக வேண்டும் என்று எதிர்பார்ப்பது அழகல்ல. "உலகம் கொண்டாடும் இந்தியர் சச்சின், எங்கள் மண்ணின் மைந்தர்' என்று சொல்லிக் கொள்வதில்தான் ஒவ்வொரு மராட்டியரும் பெருமை காண முடியும். சச்சின் தனது பேட்டியில் குறிப்பிட்டுள்ள கருத்தும் இதுதான். "நான் மராட்டியன் என்பதற்காகப் பெருமை கொள்கிறேன். ஆனாலும் முதலில் இந்தியன்' என்று சச்சின் குறிப்பிடும்போது, அதனால் அவருக்கு மட்டுமல்ல, மராட்டியர் அனைவருக்கும் பெருமை உண்டாகுமே தவிர, இழிவை ஏற்படுத்தாது.

இருப்பினும், மொழிப்பற்று, இனப்பற்றை வைத்துக்கொண்டு அரசியல் நடத்த முற்படும்போது, இத்தகைய தேவையற்ற கண்டனங்கள் மூலம் அரசியல் ஆதாயம் தேட முனைகிறார்கள்.

மனித உணர்வு விரிந்துகொண்டே சென்றாக வேண்டும். தன் குடும்பம், தன் மொழி, தன் இனம், தன் ஊர், தனது மாவட்டம், தன் மாநிலம், தனது நாடு என்ற பரந்துபட்ட மனதுடன், யாதும் ஊரே யாவரும் கேளிர் என்று உலகைத் தழுவ வேண்டும். மொழி, இனம், நாடு என்ற எல்லைகள் கடந்து உலக மக்கள் அனைவரையும் சகோதரனாக எண்ணும்போதுதான் அவன் "மனிதன்' ஆகிறான்.

உணவுக்கு உப்பு மிகமிக அவசியம். உப்பில்லாப் பண்டம் குப்பையிலே என்பது பழமொழி. உப்பில்லாவிட்டாலும் பசித்தவாய்க்கு சாப்பிட்டுவிட முடியும். ஆனால் உப்பு அளவுக்கு அதிகமானால் அந்த உணவைச் சாப்பிடவே முடியாது என்பதுமட்டுமல்ல, சாப்பிடுபவர் நலனுக்கும் நோய் சேர்க்கும்.

மொழி உணர்வும், கலாசார உணர்வும் உப்பு போன்றதுதான். ஒவ்வொரு மனிதனுக்கும் தன் மொழி, தன் இனம் குறித்த உணர்வும் பெருமிதமும் இருந்தே ஆக வேண்டும். இல்லாவிட்டால் அவன் வாழ்க்கை ருசிக்காது. சப்பென்று ஆகிவிடும். அதே நேரத்தில், அந்த உணர்வு அளவுகடந்த வெறியாக மாறும்போது, அரசியலுக்காக வெறியேற்றும்போது, உலகின் பார்வையில் அவர்கள் கடுகினும் சிறுத்துப் போவார்கள்.
நன்றி : தினமணி

இந்திய பணக்காரர்கள் பட்டியலில் முகேஷ் அம்பானி தொடர்ந்து முதலிடம்

இந்திய பணக்காரர் பட்டியலில் முகேஷ் அம்பானி முதலிடத்தில் இருப்பதாக பிரபல போர்ப்ஸ் பத்திரிக்கை தெரிவித்துள்ளது. இந்திய அளவிலான பணக்காரர்களின் பட்டியலை அமெரிக்க நாளிதழான போர்ப்ஸ் ஆண்டுதோறும் வெளியிட்டு வருகிறது. இந்த ஆண்டு வெளியிடப்பட்டுள்ள பட்டியலில், முகேஷ் அம்பானி முதலிடத்தில் உள்ளார். அவரது சொத்து மதிப்பு 32 பில்லியன் அமெரிக்க டாலர் ஆகும். அவருக்கு அடுத்த இடத்தில் உருக்கு ஆலை அதிபர் லஷ்மி மிட்டல் உள்ளார். கடந்த ஆண்டு வெளியான பட்டியலில் 3வது இடத்தில் இருந்த லஷ்மி மிட்டல், இந்த ஆண்டு 2வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். அவரது சொத்து மதிப்பு 30 பில்லியன் டாலர் ஆகும். இதனால் 2வது இடத்தில் இருந்த அனில் அம்பானி 17.5 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் 3வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார். விப்ரோ நிறுவனத் தலைவர் அஸிம் பிரேம்ஜி 4வது இடத்திலும், எஸ்ஸார் குழுமத்தைச் சேர்ந்த ஷாஷி,ரவி ருயா 5வது இடத்திலும் உள்ளனர்.
நன்றி : தினமலர்


'ஜெட்' வேகத்தில் தங்கம் : ஒரு சவரன் 13 ஆயிரம் ரூபாய்

ஆபரணத் தங்கத்தின் விலை இன்று மீண்டும் அதிகரித்தது. நேற்று ஒரு சவரன் 12,984 ரூபாய்க்கு விற்பனையானது. தங்கத்தின் விலை குறைவதாக இல்லை; நாளுக்கு நாள் எகிறிக் கொண்டே போகிறது. கடந்த மாதத்தில் 11 ஆயிரத்திற்கு விற்ற தங்கம், இந்த மாத துவக்கத்தில் 12 ஆயிரம் ரூபாயைத் தாண்டியது. தொடர்ந்து, தங்கத்தின் விலை உயர்ந்து கொண்டே செல்கிறது.
நேற்று முன்தினம் ஒரு கிராம், 1,605 ரூபாயாகவும், சவரன் 12,840 ரூபாயாகவும் இருந்தது. நேற்றும் கிராமுக்கு 18 ரூபாய் உயர்ந்தது. நேற்று மாலை ஒரு கிராம், 1,623 ரூபாயாகவும், ஒரு சவரன், 12,984 ரூபாய்க்கும் விற்பனையானது. ஒரே நாளில் சவரனுக்கு 144 ரூபாய் அதிகரித்தது.

இந்நிலையில், இன்றும் தங்கத்தின் விலை அதிகரித்துள்ளது. ஒரு கிராம் 22 காரட் தங்கத்தின் விலை 1,625 ரூபாயாக உள்ளது. 8 கிராம் 22 காரட் தங்கத்தின் விலை 13 ஆயிரமாக உள்ளது. 24 காரட் தங்கத்தின் விலை 17 ஆயிரத்து 475 ரூபாயாகவும், பார் வெள்ளியின் விலை 29 ஆயிரத்து 945 ரூபாயாகவும் உள்ளது. ஒரு கிராம் வெள்ளியின் விலை(சில்லரை) 32.05 ரூபாயாக உள்ளது.

இதுகுறித்து தங்க நகை வியாபாரிகள் கூறுகையில், 'சர்வதேச அளவிலான பொருளாதார மாற்றமும், தங்கத்தில் முதலீடு செய்வது பாதுகாப்பானது என கருதி உலக நாடுகள் தங்கத்தை வாங்கிக் குவிப்பதாலும் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஜெட் வேகத்தில் ஏறும் தங்கத்தின் விலை இப்போதைக்கு குறையாது, சில நாட்களில் 13 ஆயிரம் ரூபாயைத் தாண்டிவிடும்' என்றனர்.
நன்றி : தினமலர்