Monday, October 20, 2008

ஏற்றத்தில் முடிந்த பங்கு சந்தை

ஐரோப்பிய மற்றும் ஆசிய பங்கு சந்தைகளில் இருந்த ஏற்ற நிலை மற்றும் ரிசர்வ் வங்கியின் ஒரு சதவீத ரெபோ ரேட் கட் போன்ற காரணங்களால் இன்று பங்கு சந்தையில் ஏற்ற நிலை காணப்பட்டது. காலை வர்த்தகம் ஆரம்பித்ததில் இருந்தே உயர்ந்திருந்த சென்செக்ஸ், மாலை வர்த்தக முடிவில் 247.74 புள்ளிகள் ( 2.48 சதவீதம் ) உயர்ந்து 10,223.09 புள்ளிகளில் முடிந்திருக்கிறது. தேசிய பங்கு சந்தையிலும் நிப்டி 48.45 புள்ளிகள் ( 1.58 சதவீதம் ) உயர்ந்து 3,122.80 புள்ளிகளில் முடிந்திருக்கிறது. இன்றைய வர்த்தகத்தில் டெக்னாலஜி, பேங்கிங், பார்மா,மெட்டல் மற்றும் சில ஆயில் கம்பெனி பங்குகள் அதிகம் வாங்கப்பட்டது. மிட் கேப் மற்றும் ஸ்மால் கேப் பங்குகள் அதிகம் விற்கப்பட்டன. ரியல் எஸ்டேட், பவர், சில ஆட்டோ நிறுவன பங்குகள் அதிகம் விற்கப்பட்டன.ரிசர்வ் வங்கியின் ஒரு சதவீத பெரோ ரேட் குறைப்பு இன்றைய வர்த்தகத்தில் அதிக அளவு உதவி புரிந்தது.இன்று பேங்கிங் இன்டக்ஸ் 2.08 சதவீதம் அல்லது 149.03 புள்ளிகள் உயர்ந்திருக்கிறது. கடந்த ஆகஸ்ட் 2003 க்குப்பின் இப்போது தான் ரெபோ ரேட் 9 சதவீதத்தில் இருந்து 8 சதவீதமாக குறைக்கப்பட்டிருக்கிறது. சி.ஆர்.ஆர். எனப்படும் கட்டாய பண கையிருப்பு விகிதமும் 2.5 சதவீதம் குறைக்கப்பட்டிருப்பதால் வங்கிகளில் தாராளமாக பணபுழக்கம் இருந்து வருகிறது. இந்த இரு நடவடிக்கைகளும் வளர்ச்சிக்கு பெரும் உதவியாக இருக்கும் என்று ஐ.டி.பி.ஐ. வங்கியின் சேர்மன் யோகேஷ் அகர்வால் தெரிவித்துள்ளார். ஆனால் வங்கிகள் வட்டியை குறைப்பது, கடனுக்கான டிமாண்ட் எப்படி இருக்கிறது என்பதை பொருத்தே அமையும் என்றார்.
நன்றி :தினமலர்


ஐந்து ஆண்டு ஊதியமில்லா விடுப்பு; திரும்பி வந்தால் வேலை: சர்ச்சைக்கு ஏர் இந்தியா முற்றுப்புள்ளி

ஐந்தாண்டுக்கு நீண்ட விடுப்பு எடுத்துக்கொள்ளலாம்; ஆனால், சம்பளம் கிடைக்காது; ஐந்தாண்டுக்கு பின் மீண்டும் திரும்பி வந்தால் வேலையில் சேர்த்துக்கொள்ளப்படுவர்!- இப்படி ஒரு நூதனமான தற்காலிக 'வி.ஆர். எஸ்.,' திட்டத்தை, மத்திய அரசுக்கு சொந்தமான ஏர் இந்தியா, 2002 ல் அறிமுகம் செய்தது. இந்த சலுகை திட்டத்தை ஏற்று, அப்போது 500 ஊழியர்கள் விடுப்பு எடுத்தனர். இதனால், ஏர் இந்தியாவுக்கு சில நூறு கோடிகள் செலவு மிஞ்சியது. இந்த சிக்கன நடவடிக்கையால் விமான நிறுவனத்துக்கு இழப்பு ஏற்படாமல் தவிர்க்கப்பட்டது. இந்த ஊழியர்களில் சிலர், மீண்டும் வந்து வேலையில் சேர்ந்தனர். இந்த திட்டத்தை தான் மீண்டும் ஏர் இந்தியா இப்போது அமல்படுத்த உள்ளது. ஆனால், ஏர் இந்தியா செயல் இயக்குனர் ஜிதேந்தர் பார்கவா கூறியதை தவறாக அர்த்தம் புரிந்து கொண்ட சில பத்திரிகைகளும், 'டிவி'க்களும் 'ஏர் இந்தியா தன் ஊழியர்கள் சிலரை 'வீட்டுக்கு' அனுப்ப திட்டமிட்டுள் ளது' என்று வெளியிட்டு விட்டன. இதனால், மத்திய விமானப் போக்குவரத்து துறை அமைச்சர் பிரபுல் படேல் கடுப்பாகி விட்டார். பத்திரிகையாளர்களை அழைத்து விளக்கம் அளித்தார். 'ஏர் இந்தியா எல்லா வகையிலும் நிதி நிர்வாக நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதற்கு எந்த இழப்பும் ஏற்படவில்லை. ஊழியர்களுக்கு கட்டாய விருப்ப ஓய்வு கொடுக்க இருப்பதாக கூறப்படுவதில் உண்மை இல்லை. அப்படி எந்த திட்டமும் அமல்படுத்த மாட்டோம். மாறாக, ஏற்கனவே 2002ல் அமல்படுத்த நீண்ட விடுப்பு திட்டத்தை அமல்படுத்த உள்ளோம்' என்று தெரிவித்தார். 'சுய விருப்ப ஓய்வு திட் டம் அல்ல; சுய விடுப்பு திட்டத்தை தான் நாங்கள் அமல்படுத்தி வருகிறோம். இதனால், நிர்வாகத்துக்கும் சரி, ஊழியர்களுக்கும் சரி நல்லது. நிதி இழப்பை தடுக்க இது நிர்வாகத்துக்கு உதவுகிறது. அதுபோல, ஊழியர்களை டிஸ்மிஸ் செய்வதையும் தடுக்கிறது. சர்வதேச விமானப் போக்குவரத்து அமைப்பு இது தொடர்பாக பல பரிந்துரைகளை செய்துள்ளது. அதன் அடிப்படையில் தான் இந்த முறை அமல்படுத்தப்படுகிறது' என்று பார்கவா கூறினார். ஏர் இந்தியா மற்றும் பல தனியார் நிறுவனங்கள், விமானங்களை வெளிநாட்டு நிறுவனங்களிடம் இருந்து நீண்ட நாள் குத்தகைக்கு வாங்கித்தான் இயக்கி வருகின்றன. பயணிகள் இல்லாமல், ஒரு விமானம் நின்று விட்டாலும், அதனால் கோடிக்கணக்கில் இழப்பு ஏற்படும். இப்படிப்பட்ட நிலை இப்போது ஏற்பட்டு வருகிறது. அதனால், விமானங்களை மீண்டும் குத்தகைக்கு எடுப்பதை சில நிறுவனங்கள் தள்ளி வைத்துள்ளன. விமானம் ஓடாத போது, அதன் ஊழியர்களுக்கும் வேலையில்லாமல் தான் இருக்க வேண்டியிருக்கும். அதனால், இதுபோன்ற நிலையை தவிர்க்கவும், இழப்பை முடிந்தவரை தடுக்கவும் ஏர் இந்தியா இந்த புதுமை திட்டத்தை அமல்படுத்த முடிவு செய்துள்ளது.
நன்றி : தினமலர்