Thursday, November 20, 2008

இனிமேல் டியூட்டி ஃப்ரீ ஷாப்களில் சிகரெட் பாக்கெட்களை வைத்திருக்க தடை வரும் ?

இனிமேல் பென்ஸன் அண்ட் ஹெட்ஜஸ், டன்ஹில் போன்ற வெளிநாட்டு சிகரெட் பாக்கெட்கள் டியூட்டி ஃப்ரீ ஷாப்களில் கிடைக்காது என்று தெரிகிறது. சிகரட் பிடிப்பதை இந்தியா முழுவதும் தடை செய்த மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் அன்புமணி ராமதாஸ், இப்போது மேலும் ஒரு முயற்சியாக டியூட்டி ஃப்ரீ ஷாப்களில் வெளிநாட்டு சிகரெட்களை வைத்திருக்க தடை விதிக்க முயற்சிப்பதாக தெரிகிறது. டியூட்டி ஃப்ரீ ஷாப்களில் வைத்திருக்க வேண்டிய பொருட்கள் லிஸ்டில் இருந்து சிகரெட்டை எடுத்துவிட அவர் முயற்சிப்பதாக தெரிகிறது. நாடுகளிடையே ஏற்படுத்தப்படும் தடையில்லா வர்த்தக ஒப்பந்தத்தில் ( எஃப்.டி.ஏ ) பெரும்பாலான நாடுகள், சிகரெட் பாக்கெட்டை லிஸ்டில் இருந்து எடுத்து விட்டன. ஆனால் இலங்கை போன்ற சில நாடுகள் இன்னும் எடுக்கவில்லை. எனவே இனிமேல் இலங்கையுடன் எஃப்.டி.ஏ., செய்யும்போது சிகரெட் பாக்கெட்டை லிஸ்ட்டில் இருந்து எடுத்துவிட அன்புமணி ராமதாஸ் முயற்சிப்பதாக சொல்லப்படுகிறது. இதன் மூலம் வெளிநாட்டு சிகரெட்கள் குறைந்த விலையில் இந்தியாவில் கிடைப்பது தடை செய்யப்படும். அதன் பின் டியூட்டி ஃப்ரீ ஷாப்களில் சிகரெட் பாக்கெட் வைத்திருக்க முடியாத நிலை ஏற்பட்டுவிடும்.
நன்றி : தினமலர்


டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 50.44 ஆக குறைந்தது

அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு, இன்று காலை வர்த்தகத்தில் 50.55 ஆக துவங்கியது. பின்னர் அது 50.44/45 ஆக இருக்கிறது. அமெரிக்க பொருளாதாரம் குறித்த கவலையால் இந்திய பங்கு சந்தையில் ஏற்பட்ட வீழ்ச்சி, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்திருப்பது போன்ற காரணங்களால் ரூபாய் மதிப்பு குறைந்திருப்பதாக சொல்கிறார்கள். பங்கு சந்தையில் ஏற்பட்ட வீழ்ச்சியை தொடர்ந்து அதிலிருந்து முதலீடு பெருமளவு வெளியேறி இருப்பதால் ரூபாய் மதிப்பு குறைந்திருக்கிறது. ஆயில் கம்பெனிகள், அவர்களது பில்தொகையை கொடுக்க அதிக அளவில் டாலர்களை வெளி மார்க்கெட்டில் வாங்குவதாலும் ரூபாய் மதிப்பு குறைகிறது என்கிறார்கள்.
நன்றி : தினமலர்


பணவீக்கம் கொஞ்சம் குறைந்திருக்கிறது

நவம்பர் 8ம் தேதியுடன் முடிந்த வாரத்தில் இந்தியாவின் பணவீக்கம் 8.90 சதவீதமாக குறைந்திருக்கிறது. இது, இதற்கு முந்தைய வாரத்தில் 8.98 சதவீதமாக இருந்தது. மொத்த விற்பனை விலை அட்டவணை அடிப்படையில் கணக்கிடப்படும் இந்தியாவின் பணவீக்க விகிதம், ராய்ட்டர் செய்தி நிறுவனத்தின் கணிப்பான 8.99 சதவீதத்தை விட குறைந்திருக்கிறது. ஆனால் கடந்த ஆண்டு இதே காலத்தில் பணவீக்கம் 3.20 சதவீதமாகத்தான் இருந்தது. கடந்த வாரத்தை விட 0.08 சதவீதம் குறைந்ததற்கு காரணம் எரிபொருள் விலை குறைந்திருப்பதுதான் என்கிறார்கள். சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை இப்போது பேரலுக்கு 54 டாலருக்கும் குறைவாகத்தான் இருக்கிறது.
நன்றி : தினமலர்


ஐந்து வருடங்கள் இல்லாத அளவாக அமெரிக்க பங்கு சந்தையில் கடும் வீழ்ச்சி

அமெரிக்க பங்கு சந்தையில் நேற்று புதன்கிழமை கடும் வீழ்ச்சி ஏற்பட்டது. கடந்த ஐந்து வருடங்களில் இல்லாத அளவாக வால்ஸ்டிரீட்டில் 5 சதவீத வீழ்ச்சி ஏற்பட்டிருக்கிறது. டவ் ஜோன்ஸ் இன்டக்ஸ் 427 புள்ளிகள் குறைந்து 7,997.28 புள்ளிகளுக்கு வந்து விட்டது. 2003 க்குப்பிறகு நேற்று தான் டவ்ஜோன்ஸ் இன்டக்ஸ் 8,000 புள்ளிகளுக்கும் கீழே போயிருக்கிறது. அமெரிக்க பொருளாதாரத்தில் ஏற்பட்ட சரிவை முன்னிட்டு அமெரிக்க பங்கு சந்தையிலும் கடும் பாதிப்பு ஏற்பட்டு இருக்கிறது. அக்டோபர் மாதத்தில் அங்கு கன்சூமர் பிரைஸ் ஒரு சதவீதம் குறைந்திருக்கிறது. கடந்த 61 ஆண்டுகளுக்குப்பின் இப்போதுதான் இவ்வளவு குறைந்திருக்கிறது. இது பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள சரிவையே காண்பிக்கிறது. இதனால் அங்குள்ள ஃபெடரல் ரிசர்வ் வங்கி, வட்டி விகிதத்தில் 0.5 சதவீதத்தை டிசம்பரில் குறைக்கும் என்று எதிர்பார்க்கிறார்கள். ஏற்கனவே அங்கு வட்டி ஒரு சதவீதம்தான் வசூலிக்கப்படுகிறது. அது இனிமேல் 0.5 சதவீதமாக குறைக்கப்படும் என்கிறார்கள். கன்சூமர் பிரைஸ் குறைந்திருப்பதால் பெடரல் ரிசர்வ் வங்கி, வட்டியை மேலும் குறைக்க வேண்டியதாகிறது. கன்சூமர் பிரைஸ் குறைந்திருப்பதால் கச்சா எண்ணெய் விலையும் குறைந்து விட்டது. அது பேரலுக்கு 54 டாலருக்கும் குறைவான விலைக்கு போய் விட்டது. அமெரிக்காவின் மூன்று மிகப்பெரிய கார் கம்பெனிகளான ஜெனரல் மோட்டார்ஸ், ஃபோர்டு மற்றும் கிரைஸ்லர் ஆகியவை அமெரிக்க அரசாங்கத்திடம 2500 கோடி டாலர் கடன் கேட்டு நின்று கொண்டிருக்கின்றன. 2500 கோடி டாலர் கடன் கொடுக்கவில்லை என்றால் நாங்கள் கம்பெனியை மூட வேண்டியதுதான் என்கின்றன அவைகள். அதன் பின் அதில் வேலைபார்த்து வந்தவர்களுக்கெல்லாம் வேலை இல்லாமல் போய்விடும் என்கின்றனர்.
நன்றி : தினமலர்


மியூச்சுவல் ஃபண்ட்டில் முதலீடு செய்வது அதிகரித்திருக்கிறது

இந்தியாவில் பணப்புழக்கம் அதிகரித்திருக்கிறது என்பது, மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்வது அதிகரித்திருப்பதில் இருந்து தெரிய வந்திருக்கிறது. இந்தியாவில் பணப்புழக்கமும் அதிகரித்திருக்கிறது; மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்வதும் அதிகரித்திருக்கிறது என்று அசோசியேஷன் ஆஃப் மியூச்சுவல் ஃபண்ட்ஸ் இன் இன்டியாவின் சேர்மன் குரியன் தெரிவித்தார். பணப்புழக்கத்தை அதிகரிக்க செய்ய ரிசர்வ் வங்கி எடுத்த நடவடிக்கைகள் வேலை செய்திருக்கிறது என்றார் அவர். மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு அதிகரிப்பதற்கும் அது உதவியிருக்கிறது. அக்டோபரில் கடும் சிக்கலில் இருந்த மியூச்சுவல் ஃபண்ட் இன்டஸ்டிரி, ரிசர்வ் வங்கி எடுத்த நடவடிக்கைகளால் இந்த மாதத்தில் மீண்டு வந்துவிட்டது. அக்டோபருக்குப்பின் கேஷ் ரிசர்வ் ரேஷியோவை (சி.ஆர்.ஆர்.,) 3.5 சதவீதமும், ரிபோ ரேட்டை 1.5 சதவீதமும் ரிசர்வ் வங்கி குறைத்தது. அதற்குப்பின் இந்த இன்டஸ்டிரியில் முன்னேற்றம் ஏற்பட்டிருக்கிறது. மியூச்சுவல் ஃபண்ட் இன்டஸ்டிரிக்கு இதுவரை 14 - 18 சதவீத வட்டிக்கு நிதி அளித்துக்கொண்டிருந்த இந்திய வங்கிகள், ரிசர்வ் வங்கியின் தலையீட்டுக்குப்பின் இப்போது 10.5 - 11 சதவீத வட்டிக்கு தாராளமாக நிதி அளிக்கின்றன என்றார் அவர்.
நன்றி : தினமலர்

தங்கம் உபயோகிப்பதில் தொடர்ந்து இந்தியாதான் முதலிடத்தில் இருக்கிறது

உலகில் அதிகம் தங்கம் உபயோகிப்பதில் தொடர்ந்து இந்தியாதான் முதலிடத்தில் இருக்கிறது. சமீபத்தில் வெளியான தகவல் இதனை உறுதி செய்கிறது. வேர்ல்ட் கோல்ட் கவுன்சில் ( டபிள்யூ.ஜி.சி.) சமீபத்தில் வெளியிட்ட கோல்ட் டிமாண்ட் டிரன்ட்ஸ் என்ற அறிக்கையில், கடந்த வருடத்தை விட இந்த வருடத்தில் இந்தியாவில் வாங்கப்பட்ட தங்க நகைகளின் அளவு 29 சதவீதம் அதிகரித்திருப்பதாக தெரிவித்திருக்கிறது. உலக அளவில் பொருளாதாரத்தில் சரிவு ஏற்பட்டிருந்தாலும், மக்களிடையே வாங்கும் சக்தி குறைந்திருந்தாலும், இந்தியாவில் தங்கம் அல்லது தங்க நகை விற்பனை அதிகரித்துதான் இருக்கிறது. கடந்த வருடத்தில் ரூ.12,300 கோடிக்கு விற்பனை ஆகி இருந்த தங்கம் இந்த வருடத்தில், செப்டம்பர் வரை ரூ.21,900 கோடிக்கு விற்பனை ஆகி இருக்கிறது. இந்த வருடம் 178 டன் தங்கம் விற்பனை ஆகி இருப்பதாக சொல்லப்பட்டுள்ளது. கடந்த வருடத்துடன் ஒப்பிட்டால் இது 29 சதவீதம் அதிகள். பங்கு சந்தை வீழ்ச்சி அடைந்திருப்பதால் நகர்ப்புறங்களில் இருப்பவர்கள் பங்கு சந்தையில் முதலீடு செய்வதை விட தங்கத்தில் முதலீடு செய்வதே பாதுகாப்பு என்று கருதுவதாலும் தங்கம் விற்பனை அதிகரித்ததற்கு காரணம் என்கிறார்கள்.
நன்றி : தினமலர்


முதலீட்டாளர்களுக்கு தொடர்ந்து விழுகிறது அடி

சர்வதேச பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண கூட்டப்பட்ட, 'ஜி-20' மாநாடு முடிந்ததும், பங்குச் சந்தைகள், 'ஜிங்குஜா... ஜிங்குஜா...' என்று மேலே போகும் என்று முதலீட்டாளர்கள் எதிர்பார்த்தனர். ஆனால், நடந்தது என்ன? சங்கு ஊதிக் கொண்டு சந்தை கீழேயே போகிறது. எவ்வளவு கீழே போகும் என்று யாருக்கும் தெரியவில்லை. 'ஜி-20' மாநாடு எவ்விதமான தீர்க்கமான முடிவுகளையும் தராததால், சந்தை பரவலாக எல்லா நாடுகளிலுமே கீழேயே இருந்தது. இது தவிர, ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிக்கையாலும் சந்தையில் எவ்விதமான உயர்வையையும் திங்களன்று ஏற்படுத்தவில்லை. ஒரு சமயத்தில் 400 புள்ளிகளுக்கும் மேல், கீழே இறங்கியிருந்தது. சந்தை 9,000 புள்ளிகளுக்கு கீழேயும் சென்றது. ஆனால், 300 புள்ளிகள் அளவு மீண்டதால் சந்தை தப்பித்தது என்றே கூறவேண்டும். நேற்று முன்தினம் இறக்கத்திலேயே இருந்தது. 353 புள்ளிகள் சரிந்தது. வங்கிப் பங்குகளும், சாப்ட்வேர் பங்குகளும் இறக்கத்திற்கு வழி வகுத்தன. சந்தை எவ்விதமான பிடிமானமும் இல்லாமல் விழுந்து கொண்டிருக்கிறது. அமெரிக்காவின் ஹெட்ஜ் பண்டுகள் அதிகம் விற்றதால் சந்தை மிகவும் கீழே இறங்கியது. உள்நாட்டில் சிறிய முதலீட்டாளர்களும், மியூச்சுவல் பண்டுகளும் வாங்கிக் கொண்டிருந்தாலும், வெளிநாட்டு முதலீட்டு நிறுவனங்கள் அதிகளவில் விற்பதால் சந்தை கீழேயே சென்று கொண்டிருக்கிறது. நேற்று சந்தை மேலேயே துவங்கியது. பலரும் ஆறு நாட்களுக்கு பின் சந்தை மேலே செல்கிறது என்று தான் நினைத்தனர். அதுபோல சந்தையும் 250 புள்ளிகளுக்கு மேலே சென்றது. முடிவாக நடந்ததே வேறு. 163 புள்ளிகள் குறைந்து மும்பை பங்குச் சந்தை 8,773 புள்ளிகளுடனும், தேசிய பங்குச் சந்தை 2,638 புள்ளிகளுடனும் நேற்று முடிவடைந்தது. சந்தை ஏன் இந்த அளவு விழுகிறது? கம்பெனிகள் பலவற்றில் வாரத்தில் பல ஷிப்டுகள் குறைக்கப்படுகின்றன என்ற செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. இது, எரியும் தீயில் எண்ணெய் ஊற்றியது போல் சந்தையை இறக்கத்திற்கு மேலும் ஒரு காரணமாக இருக்கிறது. கச்சா எண்ணெய் பேரல் 50 முதல் 60 டாலர் வரை உழன்று கொண்டிருக்கிறது. யாருமே நினைத்துப் பார்த்திருக்கமாட்டார்கள் இவ்வளவு குறைவாக வருமென. மேலும் பல பொருட்களும், 'கமாடிட்டி சந்தை'யில் குறைந்து வருகிறது. இது, சந்தையை பலப்படுத்துவதற்கு பதில் கீழே தள்ளிக் கொண்டிருக்கிறது. அதாவது, உலகளவில் கமாடிட்டி டிரேடிங்கில் பலரும் கோடிக்கணக்கில் பணத்தை இழந்துள்ளது பங்குச் சந்தையையும் பாதிக்கிறது. என்ன செய்யலாம்? சந்தை 9,000க்கும் கீழே வந்திருக்கிறது. இது ஒரு நல்ல சந்தர்ப்பம் என்று தான் கருதவேண்டும். ஆவரேஜ் செய்ய விரும்புபவர்களோ அல்லது புதிதாக நீண்டகாலத்திற்கு வாங்க விரும்புபவர்களுக்கோ ஏற்ற சந்தை. இருந்தாலும், முதலீட்டாளர்களின் மனநிலையும் முக்கியம். இது ஆபத்தானது என்ற எச்சரிக்கை உணர்வுடன் சந்தைக்கு வரவேண்டும். எடுத்த எடுப்பிலேயே பணத்தை போடாமல் சந்தையின் ஏற்றம் இறக்கத்தையும், உலக நடப்புகளையும் கவனித்து செயல்படுவது நல்லது.
- சேதுராமன் சாத்தப்பன்-
நன்றி : தினமலர்