Monday, September 8, 2008

ஃபோர்ப்ஸ் பத்திரிக்கையின் வாழ்நாள் சாதனையாளர் விருது பெறுகிறார் லட்சுமி மிட்டல்

அமெரிக்க பிசினஸ் பத்திரிக்கையான ஃபோர்ப்ஸ், வாழ்நாள் சாதனையாளர் விருதை லட்சுமி மிட்டலுக்கு இன்று வழங்குகிறது . சர்வதேச அளவில் தொழில்துறையில் சாதனை புரியும் மிகப்பெரிய தொழில் அதிபர்களுக்கு இந்த விருது வழங்கப்படுகிறது. சிங்கப்பூரில் இன்றிரவு நடக்கும் தொழில் அதிபர்கள் கூட்டத்தில் இந்த விருது வழங்கப்படுகிறது. உலக அளவில் 160 பில்லியன் டாலருக்கும் மேல் மதிப்புள்ள தொழில்களின் அதிபர்கள் சுமார் 450 பேர் இந்த கூட்டத்தில் கலந்து கொள்கிறார்கள். இந்த வருடம் ஜூன் மாதத்தில்தான் உலகின் நான்காவது மிகப்பெரிய பணக்காரராக லட்சுமி மிட்டல் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவரது நிறுவனத்தின் அப்போதைய மதிப்பு 45 பில்லியன் டாலர்கள். ராஜஸ்தானில் பிறந்த லட்சுமி மிட்டல், 1976ம் ஆண்டு மிட்டல் ஸ்டீல் கம்பெனியை நிறுவினார். பின்னர் அவர் உலகம் முழுவதும் உள்ள பல ஸ்டீல் கம்பெனிகளை வாங்கி குவித்தார். 2006ம் ஆண்டு ஆர்செலர் கம்பெனியை வாங்கியபின் உலகில் அதிகம் ஸ்டீல் உற்பத்தி செய்பவராக லட்சுமி மிட்டல் உயர்ந்தார்.

நன்றி : தினமலர்


அணு எரிபொருள் சப்ளைக்கான தடை நீங்கியதால் இந்திய பங்கு சந்தையில் நல்ல முன்னேற்றம்

45 நாடுகளை உறுப்பினராக கொண்ட அணு எரிபொருள் சப்ளை நாடுகள் அமைப்பு, இந்தியாவுக்கு எதிராக விதித்திருந்த தடையை விலக்கி இருக்கிறது. கடந்த 34 ஆண்டுகளாக இருந்த தடை நீக்கப்பட்டிருப்பதை அடுத்து விரைவில் அமெரிக்காவுடனான அணுசக்தி ஒப்பந்தம் நிறைவேறும் என்று நம்பப்படுகிறது. இதனை தொடர்ந்து இன்று இந்திய பங்கு சந்தையில் நல்ல முன்னேற்றம் காணப்பட்டது. காலை வர்த்தக துவக்கத்தில் சென்செக்ஸ் 600 புள்ளிகளுக்கு மேல் ( 4 சதவீதத்திற்கும் கூடுதலாக ) உயர்ந்திருந்தது. தேசிய பங்கு சந்தையில் நிப்டி 4500 புள்ளிகளுக்கு மேல் போய் விட்டது. அணுசக்தி ஒப்பந்தம் நிறைவேறினால், கடும் மின்சார தட்டுப்பாட்டில் இருக்கும் இந்தியாவில் அந்த குறை விலகி விடும் என்றும் இதனால் தொழில்துறை நன்கு வளர்ச்சி அடையும் என்றும் சொல்கிறார்கள். இது தவிர சிங்கூரில் இருக்கும் டாடா மோட்டார்ஸ்க்கு எதிரான போராட்டத்தை மம்தா பானர்ஜி விலக்கிக்கொண்டதால் அங்கு மீண்டும் உற்பத்தி துவக்க ஆரம்பித்து விடும் என்பதால் டாடா மோட்டார்ஸின் பங்குகள் இன்று 5.5 சதவீதம் உயர்ந்திருந்தன. இதன் காரணமாக இன்று காலை 9.57 க்கு மும்பை பங்கு சந்தையில் சென்செக்ஸ் 617.30 புள்ளிகள் ( 4.26 சதவீதம் ) உயர்ந்து 15,101.13 புள்ளிகளாக இருந்தது. தேசிய பங்கு சந்தையில் நிப்டி 4.05 சதவீதம் உயர்ந்து 4,528.65 புள்ளிகளாக இருந்தது.
நன்றி : தினமலர்


ஆசிய 'டாப்' நிறுவனங்களில் இந்திய நிறுவனங்கள் 'டாப்'

ஆசியாவின் சிறந்த நிறுவனங்கள் பட்டியலில் முதல் இரு இடங்களை இந்தியாவைச் சேர்ந்த சீமன்ஸ் இண்டியா மற்றும் யுனிடெக் ஆகியவை பிடித்துள் ளன. ஆசிய நாடுகளில் சிறந்து விளங்கும் 50 நிறுவனங்கள் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. பிரபல நிதித்தறை இதழ் 'பிசினஸ் வீக்' இதை தயார் செய்துள்ளது. இந்தியாவைச் சேர்ந்த டி.சி.எஸ்., டி.எல்.எப்., டெக் மகிந்திரா மற்றும் ஐ.டி.சி., உட்பட 10 நிறுவனங்கள் முன்னணியில் உள்ளன. பட்டியலில் சீனாவைச் சேர்ந்த எட்டு, ஹாங்காங்கைச் சேர்ந்த ஆறு நிறுவனங்கள் இடம்பெற்றுள்ளன. ஜெர்மனியில் பிரபல சீமன்ஸ் நிறுவனத்தின் இந்திய நிறுவனம் சீமன்ஸ் இண்டியா. அதுபோல, கட்டுமான சேவையில் உள்ள நிறுவனம் யுனிடெக். இந்த இரு நிறுவனங்களை அடுத்து, சீனாவைச் சேர்ந்த அலிபாபா டாட் காம் மற்றும் மோலிபோடினம், ஜப்பானைச் சேர்ந்த இம்பெக்ஸ் ஹோல்டிங் ஆகிய நிறுவனங்கள் அடுத்தடுத்த இடத்தைப் பிடித்துள்ளன. முதல் 20 இடங்களுக்குள் ஏழு இந்திய நிறுவனங்கள் இடம்பெற்றுள்ளன. மருந்து நிறுவனம் சிப்லா(ஆறாவது), ஏ.பி.பி., இண்டியா(12), டெக் மகிந்திரா(13), இந்துஸ்தான் சிங்க்(17), டி.எல்.எப்., (18), பெல்(27), ஐ.டி.சி.,(45) மற்றும் டி.சி.எஸ்., (50) ஆகிய நிறுவனங்கள் குறிப்பிடத்தக்கவை. வர்த்தக ரீதியாக இந்த நிறுவனங்களுக்கு எந்த அளவில் செல்வாக்கு உள்ளது என்பதை பிரதிநிதிகளின் ஒட்டெடுப்பு மூலம் இந்த பட்டியல் தயாரிக்கப்பட்டது. இதில் இடம்பெற்ற சில முன்னணி நிறுவனங்கள், உலக அளவில் கொடிகட்டிப்பறக்கின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.
நன்றி : தினமலர்