Monday, September 8, 2008

அணு எரிபொருள் சப்ளைக்கான தடை நீங்கியதால் இந்திய பங்கு சந்தையில் நல்ல முன்னேற்றம்

45 நாடுகளை உறுப்பினராக கொண்ட அணு எரிபொருள் சப்ளை நாடுகள் அமைப்பு, இந்தியாவுக்கு எதிராக விதித்திருந்த தடையை விலக்கி இருக்கிறது. கடந்த 34 ஆண்டுகளாக இருந்த தடை நீக்கப்பட்டிருப்பதை அடுத்து விரைவில் அமெரிக்காவுடனான அணுசக்தி ஒப்பந்தம் நிறைவேறும் என்று நம்பப்படுகிறது. இதனை தொடர்ந்து இன்று இந்திய பங்கு சந்தையில் நல்ல முன்னேற்றம் காணப்பட்டது. காலை வர்த்தக துவக்கத்தில் சென்செக்ஸ் 600 புள்ளிகளுக்கு மேல் ( 4 சதவீதத்திற்கும் கூடுதலாக ) உயர்ந்திருந்தது. தேசிய பங்கு சந்தையில் நிப்டி 4500 புள்ளிகளுக்கு மேல் போய் விட்டது. அணுசக்தி ஒப்பந்தம் நிறைவேறினால், கடும் மின்சார தட்டுப்பாட்டில் இருக்கும் இந்தியாவில் அந்த குறை விலகி விடும் என்றும் இதனால் தொழில்துறை நன்கு வளர்ச்சி அடையும் என்றும் சொல்கிறார்கள். இது தவிர சிங்கூரில் இருக்கும் டாடா மோட்டார்ஸ்க்கு எதிரான போராட்டத்தை மம்தா பானர்ஜி விலக்கிக்கொண்டதால் அங்கு மீண்டும் உற்பத்தி துவக்க ஆரம்பித்து விடும் என்பதால் டாடா மோட்டார்ஸின் பங்குகள் இன்று 5.5 சதவீதம் உயர்ந்திருந்தன. இதன் காரணமாக இன்று காலை 9.57 க்கு மும்பை பங்கு சந்தையில் சென்செக்ஸ் 617.30 புள்ளிகள் ( 4.26 சதவீதம் ) உயர்ந்து 15,101.13 புள்ளிகளாக இருந்தது. தேசிய பங்கு சந்தையில் நிப்டி 4.05 சதவீதம் உயர்ந்து 4,528.65 புள்ளிகளாக இருந்தது.
நன்றி : தினமலர்


No comments: