Wednesday, June 17, 2009

பங்கு சந்தையில் 435 புள்ளிகள் சரிவு

பங்கு சந்தை இன்றும் சரிவில் முடிந்திருக்கிறது. காலையில் வர்த்தகம் ஆரம்பித்ததில் இருந்தே குறைந்திருந்த சந்தை குறியீட்டு எண்கள், மாலை வர்த்தக முடிவு வரை நீடித்தது. வர்த்தக முடிவில் மும்பை பங்கு சந்தையில் சென்செக்ஸ் 435.07 புள்ளிகள் ( 2.91 சதவீதம் ) குறைந்து 14,522.84 புள்ளிகளில் முடிந்திருக்கிறது. தேசிய பங்கு சந்தையில் நிப்டி 161.65 புள்ளிகள் ( 3.58 சதவீதம் ) குறைந்து 4,356.15 புள்ளிகளில் முடிந்திருக் கிறது. கடந்த மூன்று நாட்களாகவே நிறுவன முதலீட்டாளர்கள் கொஞ்சம் ஜாக்கிரதையாக இருப்பதாக தெரிகிறது. இதன் காரணமாகவும் ஐரோப்பிய சந்தைகளில் ஒரு சதவீத வீழ்ச்சி ஏற்பட்டிருப்பதாலும் இந்திய பங்கு சந்தைகள் சரிவை சந்தித்து வருகின்றன என்றும் சொல்கிறார்கள்.
நன்றி : தினமலர்


பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் இந்த வருடம் அடைய இருக்கும் வருமான இழப்பு ரூ.38,700 கோடி

இந்திய பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களான இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம் மற்றும் ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகியவை, பெட்ரோல், டீசல், எல்.பி.ஜி. மற்றும் மண்ணெண்ணெய் விற்பனையால், இந்த வருட வருமானத்தில் ரூ.38,700 கோடியை இழப்பார்கள் என்று கணக்கிடப்பட்டிருக்கிறது. இந்த மூன்று நிறுவனங்களுமே ஒவ்வொரு லிட்டர் டீசல் விற்பனையின் போதும் ரூ.2.96 ஐ இழக்கிறார்கள் என்கின்றனர் அதிகாரிகள். சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை பேரல் ஒன்றுக்கு 70 டாலர் வரை உயர்ந்து விட்டதால், ஏற்கனவே இந்திய எண்ணெய் நிறுவனங்களுக்கு ஒவ்வொரு லிட்டர் பெட்ரோல் விற்பனையின் போதும் ஆகிக்கொண்டிருந்த ரூ.3.68 நஷ்டம், இப்போது ரூ.6.08 ஆக உயர்ந்து விட்டது. இதன் மூலம் எண்ணெய் நிறுவனங்கள், பெட்ரோல், டீசல், எல்.பி.ஜி.மற்றும் மண்ணெண்ணெய் விற்பனையால் நாள் ஒன்றுக்கு ரூ.135 கோடி நஷ்டம் அடைந்து வருகின்றன.
நன்றி : தினமலர்


காலியான விமானத்தை ஓட்டி வர மறுத்த பைலட்டுக்கு ஏர் இந்தியா நோட்டீஸ்

பயணிகள் யாரும் இல்லாத காலி விமானம் ஒன்றை ரியாத்தில் இருந்து மும்பைக்கு ஓட்டி வர மறுத்த ஏர் இந்தியாவின் மூத்த பைலட் ஒருவருக்கு அந்நிறுவனம் ஷோ காஸ் நோட்டீஸ் கொடுத்திருக்கிறது. அது ஒரு பாதுகாப்பில்லாத விமானம். எனவே அதனை என்னால் ஒட்டி வர முடியாது என்று அந்த பைலட் ஓட்ட மறுத்து விட்டார். சரியான காரணம் எதுவுமின்றி கேப்டன் என்.கே.பெர்ரி என்ற பைலட் விமானத்தை ஓட்ட மறுத்ததால் அவருக்கு ஷோ காஸ் நோட்டீஸ் கொடுக்கப்பட்டிருக்கிறது என்கிறார்கள் ஏர் - இந்தியா உயர் அதிகாரிகள். ஆனால் பெர்ரியோ, அந்த விமானத்தில் ஒரு கோளாறு இருக்கிறது. லேண்டிங் கியர் சரியில்லை. எனவே விமானத்தை லேண்ட் செய்யும்போது பிரச்னை வரும். இந் நிலையில் நான் எப்படி அதை ஓட்டி வருவது என்கிறார். ஆனால் அந்த விமானத்தில் அந்த கோளாறு இருப்பது உண்மைதான். மே 27 ம் தேதி ரியாத்தில் இருந்து மும்பைக்கு புறப்பட வேண்டிய அந்த விமானத்தில் ( பிளைட் நம்பர் ஏஐ - 882 ) லேண்டிங் கியரில் கோளாறு இருப்பது தெரிய வந்து, அதிலிருந்த பயணிகள் இறக்கப்பட்டு வேறு விமானம் மூலம் மும்பைக்கு அனுப்பப்பட்டனர். அந்த விமானத்தை சரி செய்ய ஏர் இந்தியாவுக்கு ரியாத்தில் வசதியில்லாததால்தான் கேப்டன் பெர்ரியை கொண்டு அதை மும்பைக்கு ஓட்டி வர சொன்னார்கள். ஆனால் அதை பெர்ரி ஓட்ட மறுத்ததால் வேறு பைலட்டை கொண்டு அந்த விமானத்தை மும்பைக்கு கொண்டு வந்து விட்டனர். இப்போது பெர்ரிக்கு, ஏன் விமானத்தை ஓட்ட மறுத்தீர்கள் என்று விளக்கம் கேட்டு நோட்டீஸ் கொடுக்கப்பட்டிருக்கிறது.
நன்றி : தினமலர்