Friday, July 3, 2009

ரயில்வே பட்ஜெட் காரணமாக பங்கு சந்தையில் முன்னேற்றம்

இன்று ரயில்வே பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டதையடுத்து, இன்று பங்கு சந்தையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டிருக்கிறது. நிதி, இன்ஃப்ராஸ்டரக்சர், பார்மா, மற்றும் ஆயில் அண்ட் கேஸ் போன்ற துறை பங்குகள் அதிகம் வாங்கப்பட்டன. மாலை வர்த்தக முடிவில் மும்பை பங்கு சந்தையில் சென்செக்ஸ் 254.56 புள்ளிகள் ( 1.74 சதவீதம் ) உயர்ந்து 14,913.05 புள்ளிகளில் முடிந்திருக்கிறது. தேசிய பங்கு சந்தையில் நிப்டி 75.40 புள்ளிகள் ( 1.73 சதவீதம் ) உயர்ந்து 4,424.25 புள்ளிகளில் முடிந்திருக்கிறது.
நன்றி : தினமலர்


ஆன்-லைன் வர்த்தக தடையை அகற்ற அரசு சர்வே பரிந்துரை

'அரிசி, சர்க்கரை, துவரம் பருப்பு மற்றும் உளுந்து ஆகியவற்றின் மீதான ஆன்-லைன் வர்த்தகத் தடையை அரசு நீக்க வேண்டும், அதன் மூலம் கிடைக்கும் உபரி லாபம், விவசாயிகளுக்கு கிடைக்கும்' என, லோக்சபாவில் நேற்று சமர்ப்பிக்கப்பட்ட பொருளாதார ஆய்வறிக்கையில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. லோக்சபாவில் மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி 2008-09ம் ஆண்டிற்கான பொருளாதார ஆய்வறிக்கையை நேற்று சமர்ப்பித்தார். அதில் கூறப்பட்டிருப்பதாவது: கடந்த 2007ம் ஆண்டு துவக்கத்தில் பணவீக்கத்தை கட்டுப்படுத்தும் ஒரு பகுதியாக, அரிசி, துவரம் பருப்பு மற்றும் உளுந்து ஆகியவற்றை ஆன்-லைன் மூலம் வர்த்தகம் செய்ய தடை விதிக்கப்பட்டது. உணவுப் பொருட்கள் மீதான ஆன் -லைன் வர்த்தகத்திற்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க வேண்டும். இவை மட்டும் அல்ல மற்ற உணவுப்பொருட்கள் மீதான யூக வர்த்தக தடையை அகற்றும் போது இப்பொருட்களின் அதிக பட்ச விலை தெரியும். அத்துடன், விலை ஏற்ற இறக்க அபாயங்கள் குறித்த நிர்வாகம், இதில் ஈடுபடுபவர்கள் அனைவரிடமும் சீராகும். அதே சமயம் இப்பொருட்கள் உற்பத்தி அதிகரிக்க வேண்டும் எனக் கூறப்பட்டிருக்கிறது. தானியங்கள், சமையல் எண்ணெய் மற்றும் இதர பொருட்களை இறக்குமதி செய்வதும் இந்திய பொருளாதாரத்தில் நெருக்கடியை உண்டாக்குவதுடன் பொருட்களின் விலை உயர்வுக்கும் காரணமாக அமைகிறது.
உணவுப் பொருட்கள் விலை உயர்வு ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு உதவாது. ஏழ்மையை அகற்ற உதவாது, தற்போது காணப்படும் குறைந்த பணவீக்கத்திற்கு கச்சா எண்ணெய் விலை உயர்வு காரணம் என்கிறது அறிக்கை.
நன்றி : தினமலர்