Sunday, November 1, 2009

உன் கண்ணில் நீர்வழிந்தால்...

ஆந்திர மாநிலம் நெல்லூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனை நடத்திய இலவச கண் மருத்துவ முகாமில் கண்புரை அறுவைச் சிகிச்சை செய்து கொண்டவர்களில் 12 பேர், கண்களில் நோய்த் தொற்று ஏற்பட்டு, பார்வை பாதிக்கப்பட்டனர்.

இவர்கள் தீவிர சிகிச்சைக்காக சென்னை சங்கர நேத்ராலய கண் மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டாலும், இவர்களில் 4 பேரின் கண்களில் நோய்த்தொற்று மிக அதிகமாக இருந்ததால், உயிரைக் காப்பாற்ற அவர்களது கண்களை அகற்றுவதைத் தவிர வேறுவழியில்லை என அகற்றப்பட்டது.

விழிப் படல மாற்றுச் சிகிச்சை முதலாக, கண்புரை அகற்றும் சிகிச்சை வரையிலும் கண் மருத்துவமனைகளில் எப்போதும் ஒரு கண்ணுக்கு மட்டும்தான் சிகிச்சை அளிக்கப்படும். திரைப்படங்களில் காட்டப்படுவதைப்போல இரண்டு கண்களிலும் கண் அறுவைச் சிகிச்சை செய்து, இரண்டு கண் கட்டுகளும் ஒரே நேரத்தில் பிரிக்கப்படும் அபத்தங்கள் உலகின் எந்தக் கண் மருத்துவமனையிலும் நடப்பதில்லை என்பதால், இந்த 4 பேரும் தங்களது ஒரு கண்ணை மட்டுமே இழந்துள்ளனர். மற்ற கண்களின் புரையை தரமான மருத்துவமனைகளில் நீக்கி, பார்வையை எளிதில் பெற முடியும் என்பது நம் மனதுக்கு ஆறுதல் தருகிறது.

மற்றவர்கள் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களில் 2 பேருக்கு மீண்டும் பார்வை கிடைத்துவிடும். இன்னும் 2 பேருக்கு ஓரளவு பார்வை கிடைக்கச் செய்ய இயலும் என்று சங்கர நேத்ராலய நிறுவனர் டாக்டர் பத்ரிநாத் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நோய்த் தொற்றுக்குக் காரணமான பாக்டீரியாவை அடையாளம் கண்டுள்ள சங்கர நேத்ராலய, தனது ஆய்வுக் கூடத்திலேயே இந்த பாக்டீரியாவின் மரபீனி (டிஎன்ஏ) அமைப்பைக் கண்டறியும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. இதன் மூலம், இந்த பாக்டீரியாவால் தொற்று ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும் என்கிற மருத்துவச் சிகிச்சைகளை முறைப்படுத்தி, அனைத்து மருத்துவர்களும் பயன்பெற முடியும்.

இதேபோன்ற சம்பவம் ஓர் ஆண்டுக்கு முன்பு திருச்சியில் உள்ள தனியார் கண் மருத்துவமனையிலும் நிகழ்ந்தது. சிலர் பார்வை இழந்தனர். மற்றவர்களுக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டது. அந்தக் கண் மருத்துவமனை மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்கள். ஆனால் காலம் நம் ஞாபகத்தை மூடி மறைத்துவிட்டது. தற்போது நெல்லூரில் நடைபெற்றுள்ளதால் மீண்டும் இப்போது நம் கண்களை இவர்களின் கண்கள் திறந்துள்ளன.

இந்தச் சம்பவங்களிலும் பொதுவான ஒரு விஷயம், இவை இலவச மருத்துவ முகாம்களில் தேர்வு செய்யப்பட்ட நோயாளிகளுக்கு நிகழ்ந்தவை என்பதுதான். அதற்காக, நோயாளிகளைத் தேடிப் போய், கண்களைச் சோதித்து அவர்களுக்கு இலவச உணவு, தங்குமிடம், இலவச கண்புரை அகற்றம், அதன் பின்னர் கண்ணாடி அனைத்தும் வழங்கும் இத்தகைய கண் சிகிச்சை முகாம்களின் சேவையைக் குறைத்து மதிப்பிடுவதும் சரியாக இருக்காது. இத்தகைய முகாம்கள் நடக்காவிட்டால், பல குடும்பங்களில் பார்வை இருண்டவர்கள் நிறையப் பேராக இருப்பார்கள்.

அறுவைச் சிகிச்சைக்குப் பிந்தைய இந்த நோய்த்தொற்றுக்குக் காரணம் அறுவைச் சிகிச்சை செய்த மருத்துவர்கள் என்றும் சொல்வதற்கில்லை. மருத்துவர்கள் திறமையானவர்களாக இருந்தாலும், இத்தகைய இலவச அறுவைச் சிகிச்சைக்காக மருத்துவர்கள் கையாளும் கருவிகள், மருந்துகள், சிகிச்சையின்போது கண்களைக் கழுவும் மருத்துவ நீர், புரையை அகற்றியவுடன் பொருத்தப்படும் இன்ட்ரா ஆக்குலர் லென்ஸ் (ஐ.ஓ.எல்.) எல்லாவற்றிலும் தரத்தைக் குறைத்துச் செலவை ஈடுகட்ட (அல்லது லாபத்தை பெருக்கிக்கொள்ள) முயற்சிக்கும்போதுதான் இத்தகைய விபரீதங்கள் நடந்துவிடுகின்றன. அதுதான் உண்மை.

இலவச மருத்துவச் சிகிச்சை என்று சொல்லப்படும் இந்தக் கண் மருத்துவச் சிகிச்சைகள் 99 சதவீதம் அரசு அல்லது ஏதாவொரு உள்நாடு அல்லது வெளிநாட்டைச் சேர்ந்த தன்னார்வ அமைப்புகளால் நிதி பெறுகின்றன. இவர்கள் கொடுக்கும் தொகையிலேயே மருத்துவமனைக்கு ஓரளவு வருவாய் கிடைக்கும் வகையில்தான் தருகிறார்கள். இருப்பினும் ஒரு சில கண் மருத்துவமனைகள், இந்தச் சேவையிலும் அதிக லாபம் பார்க்கக் கருதும்போது, மருந்துகள், செயற்கை லென்ஸ் எல்லாவற்றிலும் விலை மலிவான, தரம் குறைந்த பொருள்களுக்கு மாறுகின்றன.

இத்தகைய சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் இருக்க வேண்டும் என்றால், சில நடவடிக்கைகளை அரசு-எந்த மாநிலமானாலும்-மேற்கொள்வது அவசியம். ஒவ்வொரு தரமான கண்புரை அறுவைச் சிகிச்சைக்கு என்ன செலவாகிறது; அதற்காக தன்னார்வ அமைப்புகள் வழங்கும் தொகை எவ்வளவு? அந்தத் தொகை தரமான சிகிச்சைக்குப் போதுமானதா? தரமான மருந்துகள், என்னென்ன லென்ஸýகள் சந்தையில் உள்ளன, இவற்றை மட்டுமே மருத்துவர்கள் பயன்படுத்த வேண்டும் என்பதை அரசு கண்டறிய வேண்டும். அறுவைச் சிகிச்சை அரங்கம் தூய்மைக்குச் சான்றுகள் பெறச் செய்தல் வேண்டும்.

மேலும், மருந்துக் கம்பெனிகள் அனைத்தும் சுகாதாரமான உற்பத்தி முறையை (Good Manufacturing Practice) கையாளுகின்றனவா என்று மருந்து வாங்கும் மருத்துவமனைகளால் அறியமுடிவதில்லை. மருந்து நிறுவனத்தின் பெயரை வைத்து நன்றாக இருக்கும் என்று முடிவு செய்யத்தான் முடிகிறது. மருந்து தயாரிப்பு நிறுவனங்களில் ஆய்வு நடத்தி, சுகாதாரமான உற்பத்தி முறைகளைக் கடைப்பிடிக்காத நிறுவனங்கள் குறித்த பட்டியலை அரசு வெளியிட்டால் மருத்துவர்களுக்குப் பயனுள்ளதாக இருக்கும்.

இத்தகைய சம்பவங்களால் சிலர் பார்வை இழந்தவுடன் அரசாங்கம் இழப்பீடு வழங்குவதைக் காட்டிலும் மிக முக்கியமானது இத்தகைய நடைமுறைகளும் அவற்றை நடைமுறைப்படுத்துகிறார்களா என்பதைக் கண்காணிப்பதும்தான், மருத்துவருக்கும் மருத்துவமனைக்கும் மட்டுமல்ல, மக்களுக்கும் அதுவே பயன் தரும்.
நன்றி : தினமணி

புதிய குறியீடுகளுடன் ரூபாய் நோட்டுகள்: ரிசர்வ் வங்கி ஆலோசனை

ரூபாய் நோட்டுகளிலுள்ள பாதுகாப்பு அம்சங்களைக் கூட, அப்படியே காப்பியடித்து அச்சுஅசலாக கள்ளநோட்டுகளை அச்சடித்து பரப்பி வருகிறது பாகிஸ்தான். இதனால், இந்திய ரிசர்வ் வங்கி, ரூபாய் நோட்டுக்குரிய பாதுகாப்புக் குறியீடுகளை மாற்றி அமைப்பது குறித்து ஆலோசித்து வருகிறது.
இந்தியாவின் மீது வன்மத்துடன் இருக்கும் பாகிஸ்தான், இந்தியாவில் கள்ளநோட்டுகளை அச்சடித்து புழக்கத்தில் விடுவது, மத்திய அரசுக்கு பெரும் சவாலாகவே இருந்து வருகிறது. ரிசர்வ் வங்கி அவ்வப்போது 100, 500,1,000 ரூபாய் நோட்டுகளில் உள்ள பாதுகாப்புக் குறியீடுகளை நுணுக்கமாக மாற்றிக் கொண்டே வந்தாலும், மாற்றம் செய்யப் பட்ட குறியீடுகளை, நோட்டின் பேப்பர் உட்பட காப்பியடித்து பாகிஸ்தான் கள்ளநோட்டு

களைத் தயாரித்து விடுகிறது.ரூபாய் நோட்டின் உயர்தரத்தாள், அதிலுள்ள வெள்ளிக்கோடு அல்லது பச்சைக் கோடு, அலங்காரப் பூக்கள், காந்திஜி, எண்கள், ரிசர்வ் வங்கி கவர்னரின் கையெழுத்து, வாட்டர் மார்க் எனப்படும் வெற்றிடம் போன்றவை கள்ளநோட்டுகளிலும் அப்படியே இருக்கின்றன.கடந்த 1996ல் அச்சான நோட்டுகளின் சாயலில் கள்ளநோட்டுகள் வந்ததால், 2006ல் ரிசர்வ் வங்கி புதிய பாதுகாப்புக் குறியீடுகளை அறிமுகப்படுத்தியது.

500 ரூபாய் நோட்டிலுள்ள பச்சைக் கோடு; அந்தக் கோட்டில் அச்சாகியிருக்கும் 'பாரத் ஆர்.பி.ஐ.,' என்ற வார்த்தை; நோட்டின் குறுக்கு மறுக்காக ஓடும் கண்ணாடி நூலிழைகள்; நோட்டின் ஒரு பக்கத்தில் உள்ள மலர் அலங்காரங்களில் 500 என்று தெரிவது; நோட்டு வெளியிடப்பட்ட ஆண்டு போன்றவை இந்தப் புதிய குறியீடுகளில் அடக்கம்.பாகிஸ்தானிலுள்ள குவெட்டா என்ற இடத்தில் அச்சாகி, நேபாளம் வழியாக உத்தரபிரதேச மாநிலத்துக்குள் இந்தக் கள்ளநோட்டுகள் புழக்கத்தில் விடப்படுகின்றன. இந்தக் கள்ளநோட்டுகளில் மேலே சொல்லப்பட்ட புதிய பாதுகாப்புக் குறியீடுகள் அப்படியே இருந்தன. இது மத்திய

அரசைப் பெரும் அதிர்ச்சிக் குள்ளாக்கி யிருக்கிறது. இந்த ஆண்டு மே மாதம் உ.பி.,யிலுள்ள 'கொண்டா' வாரணாசிக்கருகிலுள்ள 'மலாகியாபுல்' என்ற இடங்களில் கள்ளநோட்டுகளைக் கண்டுபிடித்துள் ளது. கடந்த 2002ல் ஐந்து கோடியே 57 லட்ச ரூபாய்; 2004ல் ஆறு கோடியே 81 லட்ச ரூபாய்; 2007ல் எட்டு கோடி ரூபாய்; 2008ல் 15 கோடி ரூபாய் என்று ஆண்டுக்கு ஆண்டு பிடிபடும் கள்ளநோட்டுகளின் மதிப்பு அதிகரித்துக் கொண்டே வருகிறது.தற்போது இந்திய அரசு நோட்டு தயாரிக்கும் உயர்தரத் தாள்களை இங்கிலாந்து,நெதர்லாந்து,ஜெர்மனி, இத்தாலி, பிரான்ஸ் ஐந்து நாடுகளிலுள்ள ஆறு கம்பெனிகளிடம் வாங்கி வருகிறது.இந்தியாவிலுள்ள 'ஹொஷங்காபாத்' என்ற இடத்திலுள்ள நோட்டுத்தாள் தயாரிக்கும் கம்பெனி, 100,500,1,000 ரூபாய் நோட்டுக்களைத் தவிர்த்து பிற நோட்டுகளுக்கான தாள்களை மட்டும் தயாரித்து வருகிறது. இதன் உற்பத்தித் திறன் வெறும் இரண்டாயிரத்து 500 மெட்ரிக் டன் மட்டுமே. இதனால், பாதுகாப்பான உயர்தர தாள்களைத் தயாரிக்கும் 12 ஆயிரம் மெட்ரிக் டன் உற்பத்தித் திறன் கொண்ட ஒரு புதிய பேப்பர் மில் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இது குறித்த தகவல் களை வெளியிட ரிசர்வ் வங்கி மறுத்து விட்டது. உள்நாட்டிலேயே தரமான கரன்சி நோட்டு பேப்பர்களைத் தயாரிக்க வேண்டும் என்று மத்திய நிதி அமைச்சகம், ரிசர்வ் வங்கியிடம் கேட்டுக் கொண்டதின் பேரில் இந்தப் புதிய மில் உருவாகி வருகிறது. இது குறித்து ரிசர்வ் வங்கி தலைமையகம் ,'500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகளின் எந்தெந்த பாதுகாப்புக் குறியீடுகளை கள்ளநோட்டுகளில் பயன்படுத்தி வருகின்றனர் என்பதைக்

கண்காணித்து வருகின்றோம். 'புதிய குறியீடுகள் உருவாக்குவது பற்றிய ஆலோசனை நடந்து வருகிறது. தேவைப்படும்போது அந்தக் குறியீடுகள் அறிமுகப்படுத்தப்படும்' என்று தெரிவித்துள்ளது.


கள்ளநோட்டுகளை கண்டுபிடிப்பது எப்படி?: புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட ஒரிஜினல் 500 ரூபாய் நோட்டின் ஒரு பக்கத்தில் மேலிருந்து கீழாக பளபளக்கும் பச்சைக் கோடு ஒன்றிருக்கும். அதில் 'ஆர்.பி.ஐ.,' என்பது ஆங்கிலத்திலும், 'பாரத்' என்பது இந்தியிலும் பொறிக்கப்பட்டிருக்கும். பச்சைக் கோட்டினை வெளிச்சத்தில் பார்க்கும்போது நீல நிறத்தில் தெரியும். கள்ளநோட்டுகளில் பச்சைக் கோடு இருக்கும். ஆனால் அதில் 'ஆர்.பி.ஐ., பாரத்' என்று பொறிக்கப்பட்டிருக்காது. வெளிச்சத்தில் பார்க்கும் போது பச்சைக் கோடு பச்சையாகவே

தெரியும். வேறு நிறங்களுக்கு மாறாது.