இந்தியாவின் மிகப்பெரிய வங்கியான ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா, இன்று செவ்வாய்க்கிழமை முதல் கடனுக்கான வட்டியை ஒரு சதவீதம் உயர்த்தி இருக்கிறது. ரிசர்வ் வங்கி சமீபத்தில் வெளியிட்ட அதன் நிதிக்கொள்கைக்குப்பின் எல்லா வங்கிகளும் வட்டியை உயர்த்த துவங்கி இருக்கின்றன. சில வங்கிகள் ஏற்கனவே வட்டியை 0.25 - 0.50 சதவீதம் வரை உயர்த்தி விட்டன. இந்நிலையில் ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா கடனுக்கான வட்டி விகிதத்தில் ஒரு சதவீதத்தை இன்று முதல் உயர்த்தி உள்ளதாக அறிவித்திருக்கிறது. அதன் பிரைம் லெண்டிங் ரேட் இனிமேல் 13.75 சதவீதமாக இருக்கும் என்று எஸ்.பி.ஐ.உயரதிகாரிகள் தெரிவித்தனர். சனிக்கிழமையில் இருந்து டெபாசிட்டுக்கான வட்டியையும் 0.25 சதவீதம் முதல் 0.75 சதவீதம்வரை ஸ்டேட் பாங்க் உயர்த்துகிறது. ஸ்டேட் பாங்க்கில் கடனுக்கான வட்டி 13.75 சதவீதமாக இருந்தாலும் அது மற்ற வங்கிகளை ஒப்பிடும்போது குறைவுதான் என்று ஸ்டேட் பாங்க் தெரிவிக்கிறது. எனவே ஏற்கனவே நாங்கள் அடைந்து வரும், கடன் பிரிவில் 20 - 22 சதவீத வளர்சியையும், டெபாசிட் பிரிவில் 25 சதவீத வளர்ச்சியையும் அடைந்து கொண்டுதான் இருப்போம் என்கின்றனர். கடனுக்கான வட்டி உயர்த்தப்பட்டிருந்தாலும் ரூ.30 லட்சம் வரையிலான பழைய மற்றும் புதிய வீட்டு கடனுக்கான வட்டியை உயர்த்தவில்லை. ஏற்கனவே வழங்கப்பட்டிருக்கும் ஆட்டோ மற்றும் கல்வி கடனுக்கும் வட்டி உயர்த்தப்படவில்லை. புதிதாக ஆட்டோ கடன் வாங்கினால் கூடுதல் வட்டி செலுத்த வேண்டியதிருக்கும்.
நன்றி : தினமலர்