Thursday, April 16, 2009

ரூ.31 கோடி வருமான வரி செலுத்தி முதல் இடத்தில் இருக்கும் பாலிவுட் நடிகர் அக்ஷய்குமார்

சென்ற 2008-09-ஆம் நிதி ஆண்டில், பாலிவுட் திரைப்பட நட்சத்திரங்களில் அதிக வருமான வரி செலுத்தியதில் அக்ஷய்குமார் முதலிடத்தை பிடித்துள்ளார். இவர் ரூ.31 கோடி முன்கூட்டிய வரி (அட்வான்ஸ் டாக்ஸ்) செலுத்தி உள்ளார். அதாவது, இவரது ஆண்டு வருமானம் ரூ.100 கோடியை தாண்டி உள்ளது என்பதை இது வெளிப்படுத்துகிறது. இது, கடந்த 2007-08-ஆம் நிதி ஆண்டில், இவரால் செலுத்தப்பட்ட வரியான ரூ.12.50 கோடியைக் காட்டிலும் 148 சதவீதம் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.
ஷாருக்கான் : கடந்த 2007-08-ஆம் நிதி ஆண்டில் ஷாருக்கான் ரூ.31.50 கோடி முன்கூட்டிய வருமான வரியாக செலுத்தி முதலிடத்தில் இருந்தார். சென்ற நிதி ஆண்டில், இவர் செலுத்திய வரி 1.62 சதவீதம் குறைந்து, ரூ.30.90 கோடியாக குறைந்துள்ளது. இதனையடுத்து, 2008-09-ஆம் நிதி ஆண்டில் இவர் இரண்டாவது இடத்திற்கு சென்றுள்ளார்.
பத்து முன்னணி இந்தி நட்சத்திரங்கள் சென்ற 2007-08-ஆம் நிதி ஆண்டில் மொத்தம் ரூ.107 கோடியை வரியாக செலுத்தி உள்ளனர். இதில், அக்ஷய்குமார் மற்றும் ஷாருக்கான் ஆகிய இரண்டு நடிகர்கள் மட்டும் செலுத்திய வரியின் அளவு மட்டும் 60 சதவீதம் என்பது கவனிக்கத்தக்கது.
இந்தி திரைப்பட உலகில் கொடி கட்டி பறந்த அமிதாப்பச்சன், சென்ற 2008-09-ஆம் நிதி ஆண்டில் ரூ.1.25 கோடி செலுத்தி 10 முன்னணி நட்சத்திரங்களின் பட்டியலில் கடைசி இடத்தை பிடித்துள்ளார். இவர் கடந்த 2007-08-ஆம் நிதி ஆண்டில் ரூ.4.95 கோடி முன்கூட்டிய வரி செலுத்தி இருந்தார். இது, இவரது வருமானம் குறைந்துள்ளதை எடுத்துக்காட்டுகிறது. அமிதாப்பச்சனின் மகன் அபிஷேக் பச்சன் ரூ.3.20 கோடி செலுத்தி எட்டாவது இடத்தில் உள்ளார். இவர் செலுத்திய முன்கூட்டிய வரியும் கடந்த நிதி ஆண்டைக் காட்டிலும் 42.80 சதவீதம் (ரூ.5.60 கோடி) குறைந்துள்ளது.
ஐஸ்வர்யா ராய் : அதேசமயம், இவர்களையெல்லாம் விஞ்சி, அமிதாப்பச்சனின் மருமகள் ஐஸ்வர்யா ராய் ரூ.4.75 கோடி செலுத்தி ஆறாவது இடத்தில் உள்ளார். முந்தைய நிதி ஆண்டுடன் ஒப்பிடும்போது இவர் செலுத்திய வரி 10.46 சதவீதம் (ரூ.4.30 கோடி) அதிகரித்துள்ளது.
ராஜேஷ் கன்னா : ராஜேஷ் கன்னா கடந்த 2007-08-ஆம் நிதி ஆண்டில் ரூ.11.90 கோடி வரி செலுத்தி மூன்றாவது இடத்தில் இருந்தார். சென்ற நிதி ஆண்டில், இவர் செலுத்திய வரி 42.27 சதவீதம் குறைந்து ரூ.6.87 கோடியாக சரிவடைந்துள்ளது. இதனையடுத்து 2008-09-ஆம் நிதி ஆண்டில் இவர் ஐந்தாவது இடத்திற்கு சென்றுள்ளார்.
நன்றி : தினமலர்


சத்யம் பங்குகளை வாங்க டெக் மகேந்திராவுக்கு கம்பெனி லா போர்டு ஒப்புதல்

சத்யம் கம்ப்யூட்டர்ஸின் 31 சதவீத பங்குகளை வாங்கிக்கொள்ள, டெக் மகேந்திராவுக்கு கம்பெனி லா போர்டு ஒப்புதல் கொடுத்து விட்டது. சத்யத்தின் போர்டு, அதன் 31 சதவீத பங்குகளை டெக் மகேந்திராவுக்கு கொடுக்க சம்மதித்திருந்தாலும் அதற்கு கம்பெனி லா போர்டு ஒப்புதல் கொடுக்க வேண்டியிருந்தது. இப்போது அதற்கான ஒப்புதல் கொடுக்கப்பட்டிருக்கிறது. 31 சதவீத பங்குகளுக்கான தொகை ரூ.1,756 கோடியை டெக் மகேந்திரா ஏப்ரல் 21க்குள் தனியாக ஒரு அக்கவுன்ட்டில் டெபாசிட் செய்ய வேண்டும் என்றும் கம்பெனி லா போர்டு கேட்டுக்கொண்டிருக்கிறது. மேலும் அந்த பணத்தை டெபாசிட் செய்தபின், புதிதாக அமைக்க இருக்கும் சத்யம் கம்ப்யூட்டர்ஸின் போர்டுக்காக அதிகபட்சம் நான்கு நபர்களை இயக்குநர்களாக நியமிக்குமாறும் கம்பெனி லா போர்டு டெக் மகேந்திராவை கேட்டுக்கொண்டிருக்கிறது. டெக் மகேந்திராவுக்காக அதன் துணை நிறுவனமான வெஞ்சர்பே கன்சல்டன்ட்ஸ் பி.லிட் தான்இந்த தொகை ரூ.1756 கோடியை டெபாசிட் செய்யும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. வெஞ்சர்பே இந்த தொகையை செலுத்தியதும், அவர்களுக்கு சத்யம் கம்ப்யூட்டர்ஸின் ரூ.10 மதிப்புள்ள பங்குகள் 30,27,64,327 ஒதுக்கப்படும் என்று கம்பெனி லா போர்டு தெரிவித்திருக்கிறது.
நன்றி : தினமலர்


8,700 ஊழியர்களை வேலை நீக்கம் செய்யும் சுவிட்சர்லாந்தின் மிகப்பெரிய வங்கி

சுவிட்சர்லாந்தின் மிகப்பெரிய வங்கியான யு பி எஸ், அதன் ஊழியர்களில் 8,700 பேரை வேலையில் இருந்து நீக்கப்போவதாக அறிவித்திருக்கிறது. அடுத்த வருடத்தில் இந்த ஆட்குறைப்பு செய்யப்படும் என்று சொல்லப்படுகிறது. செலவை குறைக்கும் நடவடிக்கையாக இந்த ஆட்குறைப்பு செய்யப்படுகிறது என்று அந்த வங்கி தெரிவித்திருக்கிறது. 2009 ம் வருடத்தின் மூன்று மாதங்களில் மட்டும், அந்த வங்கி 2 பில்லியன் சுவிஸ் ஃபிராங்குகள் ( சுமார் 8,750 கோடி ரூபாய் ) நஷ்டமடைந்திருக்கிறது. அதன் எதிரொலியாகத்தான் இந்த ஆட்குறைப்பு நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்று சொல்லப்படுகிறது. அமெரிக்காவில் ஏற்பட்ட சப் - பிரைம் லோன் திட்டத்தில் ஏற்பட்ட குளறுபடி காரணமாக அதிக அளவில் பாதிக்கப்பட்டது யு பி எஸ் வங்கிதான் என்கிறார்கள். ஆட்குறைப்பு குறித்து அதன் பங்குதாரர்களிடையே பேசிய யு பி எஸ் வங்கியின் தலைமை செயல் அதிகாரி ஆஸ்வால்ட் குருபெல், என்னால் இதற்கு மேல் வேறு ஒன்றும் செய்ய முடியவில்லை. உங்களுக்கு ஒரு நல்ல செய்தியை சொல்ல முடியாத நிலையில் நான் இப்போது இருக்கிறேன் என்றார். இது குறித்து பி பி சி செய்தி நிறுவனத்திடம் பேசிய யு பி எஸ் வங்கியின் தலைவர், இதற்கு முன் இந்த வங்கியில் இருந்த நிர்வாகம் பல சிக்கல்களை ஏற்படுத்தி விட்டது. இப்போதுள்ள நிர்வாகம், ஒரளவு வங்கியை பழைய நிலைக்கு கொண்டு வர முயற்சி மேற்கொண்டு வருகிறது. சுவிட்சர்லாந்தின் புகழ்பெற்ற வங்கி துறையை, மீண்டும் சிறப்புடையதாக ஆக்க புது நிர்வாகம் பல ஏற்பாடுகளை செய்து வருகிறது என்றார். யு எஸ் பி வங்கியின் சேர்மன் மற்றும் தலைமை செயல் அதிகாரிகள் சமீபத்தில்தான் மாற்றப்பட்டறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
நன்றி ; தினமலர்


நிலைத்து நிற்க துவங்கி விட்டது பங்குச் சந்தை

பங்குச் சந்தை 11,000 புள்ளிகளையும் தாண்டி பந்தயக் குதிரை போல் தான் போய்க் கொண்டிருக்கிறது. சந்தையில் முதலீடு செய்தவர்கள் அனைவரும் இன்னும் மேலே செல்ல வேண்டும் என்று பிரார்த்தித்துக் கொண்டிருக்கின்றனர். திங்களன்று துவக்கமே அமர்க்களமாக இருந்தது. தொடர்ந்து 7வது நாளாக சந்தை மேலே சென்றது. நான்காவது காலாண்டு முடிவுகள் கம்பெனிகளுக்கு நன்றாகவே இருக்கும் என்ற நம்பிக்கையில், சந்தைகள் மேலே சென்றன. இந்த ஆண்டின் முதல் இரண்டு மாதங்கள் வெளிநாட்டு முதலீட்டு நிறுவனங்கள், பங்குகளை விற்று பணத்தை எடுத்துக் கொண்டு சென்றே இருந்தன. ஆனால், கடந்த மாதமும், இந்த மாதமும் வாங்கத் துவங்கியுள்ளன. திங்களன்று மட்டும் 580 கோடி ரூபாய்க்கு வாங்கியுள்ளன. இதுவும் சந்தை கூடியதற்கு ஒரு காரணம். முடிவாக மும்பை பங்குச் சந்தை 163 புள்ளிகள் மேலே சென்று முடிந்தது. நேற்று முன்தினம் விடுமுறையை அடுத்து, நேற்று சந்தையை வைத்து நோக்கும் போது காளைகளின் பிடியில் பங்குச் சந்தை இருப்பதாகவே எடுத்துக் கொள்ள வேண்டும். காலையில் மற்ற ஆசிய சந்தைகள் கீழேயே துவங்கியதால் மும்பை பங்குச் சந்தையும் 100 புள்ளிகளுக்கும் மேலாக சரிவில் தான் துவங்கியது.
நான்காவது காலாண்டு முடிவு அறிவிப்புகள் சாதாரணமாக இன்போசிஸ் வைத்துத் தான் துவங்கும். அப்படித்தான் நேற்று இன்போசிஸ் காலாண்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. அது சந்தை எதிர்பார்த்தது போல் இல்லாததாலும், மேலும் வரும் ஆண்டு வருமானம் குறைவாகவே இருக்கும் எனவும் தெரிவித்திருந்தது. இதனால், சந்தையில் அந்தக் கம்பெனியின் பங்குகளை கீழே தள்ளியதும் இல்லாமல், சந்தையில் உள்ள பல சாப்ட்வேர் கம்பெனியின் பங்குகளையும் கீழே தள்ளியது.
கடந்த வாரம் பணவீக்கம் 0.26 சதவீதம் அளவிற்கு கீழே சென்றதால், ரிசர்வ் வங்கி மறுபடி ஒரு ரேட் கட் செய்யும் என்ற எதிர்பார்ப்பிலும், வரும் பருவமழை குறித்த காலத்தில் வரும் என வானிலை ஆராய்ச்சி நிலைய அறிவிப்புகளும் சந்தை காலரை தூக்கி விட உதவின எனலாம்.
- சேதுராமன் சாத்தப்பன்
நன்றி : தினமலர்