கடந்த அக்டோபர் மாதம் முதல், பணவீக்க விகிதத்தைக் கணக்கிடும் முறையை மத்திய அரசு மாற்றியுள்ளது. அதேபோல், பணவீக்க விகிதத்தை அறிவிக்கும் கால அட்டவணையையும் மாற்றியுள்ளது. இதன்படி, உணவுப் பொருள்களின் விலைகள் அடிப்படையில் பணவீக்கத்தைக் கணக்கிடும் நடைமுறை இந்தியாவில் முதன்முதலாக அமல்படுத்தப்பட்டுள்ளது.
புதிய முறைப்படி, டிசம்பர் 12-ம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் பணவீக்க
விகிதம் 18.65 சதவீதமாக இருந்தது. புதிய முறை அமல்படுத்தப்படாமல் இருந்திருந்தால், கடந்த பல மாதங்களாக உணவுப் பொருள்களின் விலை விண்ணை முட்டும் அளவு உயர்ந்திருப்பது, பணவீக்க விகிதத்தில் பிரதிபலித்திருக்குமா என்பது சந்தேகமே!
மத்திய அரசு செய்துள்ள மாற்றம் என்ன? எல்லா பொருள்களின் மொத்த விலையின் அடிப்படையில் பணவீக்க விகிதத்தைக் கணக்கிட்டு, அதை அரசு வாராவாரம் அறிவித்துக் கொண்டிருந்தது. அக்டோபர் மாதம் முதல், பணவீக்க விகிதத்தை மாதம் ஒருமுறை அறிவிக்கிறது. இது ஒரு மாற்றம்.
இரண்டாவது மற்றும் முக்கியமான மாற்றம் என்னவெனில் உணவுப் பொருள்கள் மற்றும் எரிபொருள்கள் உள்ளிட்ட அடிப்படைத் தேவைப் பொருள்களின் மொத்த விலை அடிப்படையில், பணவீக்க விகிதம் வாரம்தோறும் அறிவிக்கப்படுகிறது.
முன்னதாக என்ன நடந்தது என்றால், உணவுப் பொருள்களின் விலை ஏற்றம், தனியாகத் தெரியாமல், அது பல்வேறு பொருள்களின் விலை ஏற்றத்தில் இரண்டறக் கலந்து மூழ்கிப் போனது.
புதிய மாற்றத்தினால், உணவுப் பொருள்களின் விலை ஏற்றம் இனி தனியாக, தெளிவாகத் தெரிய வழி பிறந்துள்ளது. அந்தவகையில், புதிய மாற்றம் வரவேற்கப்பட வேண்டும். அதேநேரம், ""மொத்தவிலை அடிப்படையே'' தொடர்கிறது என்பதால் ஏமாற்றம் ஏற்படுகிறது.
உலகில் பெரும்பான்மையான நாடுகள் மொத்த விலையிலிருந்து மாறி சில்லறை விலை அடிப்படையில் பணவீக்க விகிதத்தைக் கணக்கிடத் தொடங்கிவிட்டன. இந்தியாவில் இன்னமும் மொத்த விலை அடிப்படையில்தான் பணவீக்க விகிதம் கணக்கிடப்படுகிறது.
மக்கள் பொருள்களை வாங்குவது சில்லறை விலையில் தானே? சில்லறை விலையில் எப்போதுமே விலை கூடுதல்தான்! ஆகையால்தான், பணவீக்க விகிதம் குறைந்துள்ள காலங்களில்கூட, சந்தையில் விலைகள் குறையவில்லையே, ஏன்? என்ற கேள்வியை மக்கள் எழுப்புகிறார்கள். அதுமட்டுமல்ல, இதனால் அரசு சார்ந்த புள்ளிவிவரம் என்றாலே, மக்களுக்கு நம்பிக்கை குறைந்து வருகிறது.
இதுபோதாது என்பதுபோல், இந்தியாவில் வெவ்வேறு காரணங்களுக்காக, வெவ்வேறு வழிமுறைகளில் பணவீக்க விகிதம் கணக்கிடப்படுகிறது. சில்லறை விலையில் கணக்கிடும்போதுகூட, நான்கு வகையில் கணக்கிடப்படுகின்றன.
உதாரணமாக, விவசாயத் தொழிலாளர்களுக்கு ஒரு விதம்; கிராமப்புறத் தொழிலாளர்களுக்கு வேறு விதம் - எனப் பல விதங்களில் கணக்கிடுகிறார்கள்.
விவசாயத் தொழிலாளர்களுக்குக் கணக்கிடுகையில், உணவுப் பொருள்களுக்கு 69.2 சதவீத "வெயிட்டேஜ்' தரப்படுகிறது. கிராமப்புறத் தொழிலாளர்களுக்குக் கணக்கிடும்போது, உணவுப் பொருள்களுக்கு 66.8 சதவீத "வெயிட்டேஜ்' தரப்படுகிறது.
அதாவது, 100-ல் 69.2 பங்குகள்; 100-ல் 66.8 பங்குகள் உணவுப் பண்டங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகின்றன.
இப்படி பல வகையில் கணக்கிடப்படும் வழிமுறைகளில், மொத்த விலையில் கணக்கிடப்பட்டு வந்த வழிமுறையை மட்டும் தான் தற்போது மேலே கூறிய வகையில் மத்திய அரசு மாற்றி அமைத்துள்ளது.
÷இந்த மாற்றத்தின் பயனாக ஓரளவு தெளிவு ஏற்பட்டிருந்தாலும், முழுமையான தெளிவு ஏற்பட வேண்டும் எனில், மேலும் சில மாற்றங்கள் தேவை.
தற்போதைய வழிமுறைகள் 1942-ம் ஆண்டு முதல் ஏறக்குறைய அதே வடிவில் தொடர்கின்றன.
தற்போதைய முதல் தேவை, மொத்த விலையில் அல்லாமல் சில்லறை விலை அடிப்படையில் பணவீக்க விகிதத்தைக் கணக்கிட வேண்டும்.
உலகில் பல நாடுகளுக்கு இது சாத்தியம் என்றால் இந்தியாவுக்கும் அது சாத்தியமே. பாரத ரிசர்வ் வங்கி இதனை பல ஆண்டுகளாக வலியுறுத்தி வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இரண்டாவதாக, பொருள்களை வகைப்படுத்துவதிலும், அவற்றுக்கு வழங்கும் "வெயிட்டேஜ்'லும் சீர்திருத்தம் தேவை. விலைவாசிகள் மூன்று வகையாகப் பிரிக்கப்படுகின்றன.
ஒன்று, அரிசி, கோதுமை, காய்கறி, பால், பழம், எண்ணெய் உள்ளிட்ட 98 உணவுப் பொருள்கள் விலைவாசிப் பட்டியலில் 22 சதவீத "வெயிட்டேஜ்' பெறுகின்றன. அதாவது 100-ல் 22 பங்குகள் உணவுப் பண்டங்களுக்குக் கொடுக்கப்படுகின்றன.
இரண்டாவதாக, பெட்ரோல், டீசல், மின்சாரம் போன்ற 19 எரிபொருள்கள் விலைவாசிப் பட்டியலில் 14 சதவீத "வெயிட்டேஜ்' அல்லது பங்குகள் பெறுகின்றன.
மூன்றாவதாக, தொழிற்சாலைகளில் தயாரிக்கப்படும் 318 பொருள்கள் விலைவாசிப் பட்டியலில் 64 பங்குகள் பெறுகின்றன.
இவ்வாறு மக்களால் பயன்படுத்தப்படும் 435 பொருள்களின் விலைகளைக் கணக்கெடுத்து மொத்த விலைவாசி பற்றிய விவரம் கணக்கிடப்படுகிறது.
இதற்கு அடிப்படை ஆண்டு என 1993-94-ம் ஆண்டு கருதப்படுகிறது. அந்த ஆண்டு என்ன விலைவாசி நிலவரமோ அதை 100 என வைத்துக்கொண்டு, தற்போதைய விலைவாசி ஏற்ற, இறக்கம் கணக்கிடப்படுகிறது.
ஓராண்டு காலத்தில் ஏற்படும் விலைவாசி ஏற்றத்தை அந்த ஆண்டின் பணவீக்கத்தின் அளவுகோலாக வைக்கிறார்கள்.
தற்போது புதிய முறைப்படி, உணவுப் பண்டங்கள் மற்றும் எரிபொருள் ஆகியவற்றை இணைத்து அவற்றின் பணவீக்க விகிதத்தை மொத்த விலை அடிப்படையில் வாராவாரம் அறிவிக்கிறார்கள். தொழிற்கூடங்களில் தயாரிக்கப்படும் பொருள்கள் உள்ளிட்ட பணவீக்கத்தை, மொத்த விலைகளின் அடிப்படையில், மாதாமாதம் அறிவிக்கிறார்கள்.
உணவுப் பண்டங்களுக்கு தற்போது தரப்படும் 22 பங்குகள் (வெயிட்டேஜ்) மிகவும் குறைவு. இது கணிசமாக உயர்த்தப்பட வேண்டும். அப்போதுதான் உண்மைநிலை பிரதிபலிக்கும்.
அதேபோல், நாட்டின் பல்வேறு பகுதிகளில் வாழும் மக்களின் உணவுப் பழக்கவழக்கங்கள் வேகமாக மாறி உள்ளன. இதைக் கருத்தில்கொண்டு, தற்போதுள்ள 98 உணவுப் பொருள்களை மறு ஆய்வு செய்து, மாறியு ள்ள சூழலுக்கு ஏற்பத் திருத்தி அமைக்க வேண்டும்.
ஆக, மொத்த விலை அடிப்படையிலிருந்து சில்லறை விலைகள் அடிப்படைக்கு மாறுவது; உணவுப் பொருள்களுக்கு கூடுதல் "வெயிட்டேஜ்' வழங்குவது மற்றும் உணவுப் பொருள்களின் பட்டியலில் புதிய சூழலுக்கு ஏற்ப மாற்றங்கள் செய்வது ஆகிய மூன்று அம்சங்களிலும் ஒரே நேரத்தில் சீர்திருத்தம் மேற்கொண்டால்தான், பணவீக்க விகிதம் விலைவாசியின் நிலைக்கண்ணாடியாக அமையும்; அத்துடன் அரசின் புள்ளிவிவரங்களில் மக்களுக்கு நம்பிக்கை பிறக்கும்.
கட்டுரையாளர் : எஸ். கோபாலகிருஷ்ணன்
நன்றி : தினமணி