Thursday, October 15, 2009

டாடா மோட்டார்ஸின் புதிய வகை கார் அறிமுகம்

டாடா மோட்டார்சின் புதிய ஹுடன் இண்டிகோ மான்ஷா புதிய வகை கார் அறிமுகப்படுத்தப் பட்டது. இதனை டாடா மோட்டார்ஸ் நிறுவன தலைவர் ரத்தன் டாடா அறிமுகம் செய்து வைத்தார். இதன் விலை ரூபாய் 4.90 லட்சம் முதல் 6.85 லட்சம் வரை உள்ளது. ஆக்குவா, அவ்ரா, அவ்ரா(ஏ.பி.எஸ்) மற்றும் அவ்ரா+., உள்ளிட்ட நான்கு வெர்சன்களில் இந்த கார் அறிமுகப் படுத்தப் பட்டுள்ளது. இதில் அமைக்கப் பட்டுள்ள டீசல் என்ஜின், ஒரு லிட்டருக்கு 21 கிலோ மீட்டர் வரை செல்லும். இதே பெட்ரோல் என்ஜின்னென்றால், ஒரு லிட்டருக்கு 14.5 கிலோ மீட்டர் வரையே செல்லும். இந்த கார் குறித்து அந்நிறுவனம் தெரிவிக்கும் போது, இண்டிகா மான்ஷா வகை கார் மிக சிறந்த கார் வகையாக நிச்சயம் வலம் வரும். இது கடந்த வருடம் அறிமுகப்படுத்தப் பட்ட இண்டிகா விஷ்டா வகையை சார்ந்தது. இந்த திட்டத்திற்காக 2 ஆயிரம் கோடி வரை முதலீடு செய்துள்ளோம் என தெரிவித்துள்ளது.
நன்றி : தினமலர்


ஒபாமா என்ன அமெரிக்காவின் அசோகரா?

அமெரிக்க அதிபர் பராக் ஹுசைன் ஒபாமாவுக்கு அமைதிக்கான நோபல் பரிசு கிடைத்துள்ளது. இதை விழாவாகக் கொண்டாட வேண்டிய அமெரிக்க நாட்டு மக்களுக்கு அதிர்ச்சியும் தர்மசங்கடமும் ஏற்பட்டுள்ளது. இதேபோல தங்கள் நாட்டு அதிபருக்கு நோபல் பரிசு கிடைத்துள்ளதைப் பாராட்டி எழுத வேண்டிய அமெரிக்கப் பத்திரிகைகள், இந்த விஷயத்தை எப்படிக் கையாள்வது என்பது புரியாமல் திகைப்பில் உள்ளன.

பதவிக்கு வந்து சில மாதங்களே ஆன, அவருடைய நிர்வாகத்திறன் எப்படி என்பது புரியாத நிலையில் எந்த அளவுகோலில் அவரை அமைதிக்கான நோபல் பரிசுக்குத் தேர்ந்தெடுத்தனர் என்று வியக்கின்றனர் பத்திரிகையாளர்கள்.

உலகில் அமைதிக்காக முன்முயற்சி மேற்கொண்டு அதன் பலனை அடைந்தவர்களுக்குத்தான் நோபல் பரிசு வழங்கப்படுவது வழக்கம். ஆனால், பதவியேற்று 9 மாதங்களே ஆன, அதிபரின் நோக்கங்கள் நிறைவேறாத நிலையில் அவரைப் பரிசுக்குத் தேர்ந்தெடுத்தது எப்படி என்கிறது "வாஷிங்டன் போஸ்ட்' பத்திரிகை.

""அமைதிக்கான நோபல் பரிசுக்கு ஒபாமா தகுதியானவரா, இல்லையா என்பது ஒருபுறம் இருக்கட்டும். அவருக்கு இந்தப் பரிசை அளித்து தர்மசங்கடத்தில் ஆழ்த்திவிட்டது நோபல் கமிட்டி. அதுமட்டுமல்ல; நோபல் பரிசுக்கான நம்பகத்தன்மைக்கும் சிறுமை ஏற்படுத்திவிட்டது'' என்று "தி லாஸ்ஏஞ்சலீஸ் டைம்ஸ்' தெரிவித்துள்ளது.

""ஒபாமா, அதிபராக ஆட்சிப் பொறுப்பேற்றதும் பல்வேறு உறுதிமொழிகளை அளித்துள்ளார். ஆனால், இதுவரை அவர் எதையும் சாதிக்கவில்லை. அவரது உறுதிமொழிக்குப் பரிசு கிடைத்துள்ளதுபோல் தெரிகிறது'' என்று "தி டைம்' பத்திரிகை தெரிவித்துள்ளது.

போலந்து நாட்டு முன்னாள் அதிபர் லெக் வலேசாவுக்கு நோபல் பரிசு கிடைத்ததைச் சுட்டிக்காட்டியுள்ள டைம் பத்திரிகை, ஒபாமாவுக்கு அவசரம் அவசரமாக நோபல் பரிசு கொடுப்பது ஏன் என்று கேள்வி எழுப்பியுள்ளது. அமைதிக்காக அவர் இதுவரை எதையும் உருப்படியாகச் செய்ததாகத் தெரியவில்லை என்றும் அது குறிப்பிட்டுள்ளது.

""ஒபாமாவே முன்வந்து இந்தப் பரிசு எனக்கு வேண்டாம் என்று அடக்கத்துடன் கூறிவிடுவார் என்று எதிர்பார்த்தோம். ஆனால், அதை அவர் ஏற்றுக்கொண்டுவிட்டார்போல் தெரிகிறது'' என்று அமெரிக்கர்கள் சிலர் கூறியுள்ளனர். நோபல் பரிசை வழங்கும் நாடு, அதற்கான கமிட்டி எப்படி இப்படி ஒரு முடிவை எடுத்தது? அதை ஏற்றுக்கொள்ள அமெரிக்க அதிபரும் எப்படி முடிவு செய்தார் என்று பலரும் வியப்புடன் கேள்வி எழுப்புகின்றனர்.

இதர துறைகளில் நோபல் பரிசுக்கானவர்களைத் தேர்ந்தெடுக்க தனி குழு உள்ளது. ஆனால், அமைதிக்கான விருது பெறுவதற்கான நபரை, நார்வே நாட்டு நாடாளுமன்றத்தைச் சேர்ந்த ஐவர் குழுதான் முடிவு செய்கிறது. தங்களது அரசியல் உத்தியின் ஒருபகுதியாக அவர்கள் அமெரிக்காவுக்குத்தான் இந்தப் பரிசு என்று ஏற்கெனவே முடிவு செய்துவிட்டார்களோ என்னவோ என்பது அமெரிக்கர்கள் சிலரின் கருத்தாகும். அமைதிக்கான நோபல் பரிசுக் கமிட்டியில் உள்ள ஐந்து பேரில் மூவர் இடதுசாரிகள், இருவர் வலதுசாரிகள். இடதுசாரிகள் அமெரிக்காவின் பக்கம் சாய்ந்துவிட்டார்களோ என்றுகூட எண்ணத்தோன்றுகிறது.

இந்தப் பரிசுக்கு ஒபாமாவை ஏகமனதாகத் தேர்ந்தெடுத்ததாகக் கூறினாலும், இதில் அரசியல் உள்நோக்கம் இருப்பதாகவும், ஒபாமாவுக்குத் தர்மசங்கடத்தை ஏற்படுத்தும் நோக்கிலேயே இவ்வாறு முடிவெடுத்திருக்கலாம் என்பதும் சிலரின் கருத்தாகும்.

அணு ஆயுதத் தயாரிப்பில் மும்முரம் காட்டிவரும் ஈரானையும், வடகொரியாவையும் தடுக்க ஒபாமா என்ன செய்துவிட்டார்? அமெரிக்காவின் பாதுகாப்பு கருதியோ அல்லது சர்வதேச நலன் கருதியோ இனி ஒபாமாவால் தெஹ்ரான் அல்லது பியோங்யாங்கில் உள்ள அணுசக்திக் கூடங்கள் மீது குண்டுவீச முடியுமா? அமெரிக்காவின் ஆதிக்கத்தை இனி ஆப்கானிஸ்தான், இராக்கில் தொடரமுடியுமா? தலிபான் தீவிரவாதிகளை ஒழிக்க பாகிஸ்தானில் பழங்குடியினர் வசிக்கும் பகுதியில் படையெடுக்க முடியுமா? ஒருவேளை அவர் இத்தகைய நடவடிக்கைகளில் ஈடுபட்டால் நோபல் பரிசு மீதான நம்பகத்தன்மை போய்விடும். அப்படிச் செய்யாவிடில் ஒபாமாவின் நம்பகத்தன்மை கேள்விக்குறியாகிவிடும்.

இப்போது நம்முன் எழுந்துள்ள கேள்வி என்னவெனில், நோபல் அமைதிப் பரிசுக்காக ஒபாமாவைத் தேர்ந்தெடுத்தது ஏன் என்பதுதான். அவர் அதிபராகப் பதவியேற்று ஒன்பது மாதங்கள்தான் ஆகின்றன. அமெரிக்கவிலும் வேறு சில நாடுகளிலும் மக்களைக் கவரும் விதத்தில் பேசியதைத் தவிர அவர் உருப்படியாகச் செய்தது என்ன?

2009-ம் ஆண்டு ஜனவரி 20-ம் தேதி ஒபாமா, அமெரிக்க அதிபராகப் பதவியேற்றார். அமைதிக்கான நோபல் பரிசு பெற பரிந்துரைகள் வந்துசேருவதற்கான கடைசித் தேதி பிப்ரவரி 1-ம் தேதியாகும். அதாவது பதவியேற்ற பத்து நாளில் ஒபாமாவின் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. அதாவது அவரது தேர்தல் பிரசாரத்தை அடிப்படையாக வைத்தே அவர் பரிந்துரைக்கப்பட்டிருக்க வேண்டும். நோபல் பரிசுக்காக அவரது பெயரைப் பரிந்துரைத்து யார்? நோபல் கமிட்டியின் விதிமுறைகள்படி பரிசு பெற பரிந்துரைத்தது யார் என்பது 50 ஆண்டுகள் ரகசியமாக வைத்திருக்கப்படும். அதாவது ஒபாமாவைப் பரிந்துரைத்தது யார் என்பதை 2059-ம் ஆண்டில்தான் நாம் தெரிந்துகொள்ள முடியும்.

ஆனால், ஒபாமாவைத் தேர்ந்தெடுத்தது குறித்து நார்வே நாட்டைச் சேர்ந்த நோபல் கமிட்டியினர் என்ன சொல்கிறார்கள்? சர்வதேச அளவில் ராஜீய உறவுகளைப் பலப்படுத்துவதற்கு ஒபாமா மேற்கொண்ட முயற்சி, அணு ஆயுதக் குறைப்பு நடவடிக்கை ஆகியவற்றில் குறிப்பிடத்தக்க வெற்றிகண்டதற்காக அவர் இந்த விருதுக்குத் தேர்வு செய்யப்பட்டதாகச் சொல்கின்றனர்.

வரலாற்றைத் திரும்பிப் பார்த்தால், ஆல்பிரட் நோபல் எதற்காக இந்தப் பரிசை ஏற்படுத்தினார். 1895-ம் ஆண்டு அவரால் உருவாக்கப்பட்ட உயில் கூறுவது என்ன? ""நாடுகளிடையே சகோதரத்துவம், நல்லிணக்கத்தைப் பேணி, அமைதி உடன்பாடுகளை ஏற்படுத்தி, படைபலத்தைக் குறைப்பதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு யார் வெற்றிகரமாகச் செயல்படுகிறார்களோ அவர்களுக்குத்தான் பரிசு தரப்படவேண்டும்'' என்பது ஆல்பிரட் நோபலின் விருப்பம். ஆனால், ஒபாமா இதில் எதைச் சாதித்தார்? அவரைத் தேர்ந்தெடுத்ததாகக் கூறுபவர்கள்கூட அவரது முயற்சிக்காகத்தான் பரிசு, அவர் எதையும் செய்யவில்லை என்கின்றனர்.

அதிபர் வேட்பாளராகப் போட்டியிட்ட ஒபாமா, தேர்தல் பிரசாரத்தின்போது இராக்கிலிருந்து படைகளை வாபஸ் பெறுவேன் என்று கூறினார். ஆனால், அதிபரானபின் அதைக்கூட அவரால் முழுமையாகச் செய்ய முடியவில்லை. அதற்கு மாறாக ஆப்கானிஸ்தானுக்கு அதிக அளவில் அமெரிக்கத் துருப்புகளை அனுப்புவதிலேயே அவர் கவனம் செலுத்தி வருகிறார். மத்திய கிழக்கில் அமைதியை ஏற்படுத்தவும் அவரால் முடியவில்லை. அமெரிக்கா, முஸ்லிம் நாடுகளுக்கு நண்பன் என்று கெய்ரோவில் பேசியதைத் தவிர அவரால் எதையும் உருப்படியாகச் செய்ய முடியவில்லை.

ஆல்பிரட் நோபலின் நோக்கத்துக்குச் சிறிதும் பொருந்தாத ஒருவரான ஒபாமாவை அமைதிப் பரிசுக்கு எப்படித் தேர்ந்தெடுத்தார்கள்? பரிசுக்கான நிபந்தனைகளுக்கு உள்படாத ஒருவரை நார்வே குழு தேர்ந்தெடுத்ததில் ஏதோ உள்நோக்கம் இருப்பதாகவே தெரிகிறது. அமைதியைவிட இங்கு அரசியல்தான் ஒபாமாவின் தேர்வுக்குக் காரணம் என்பதுபோல் தோன்றுகிறது.

வரலாற்றை நாம் ஆராய்ந்தால், போரைக் கைவிட்டு, அமைதியை வலியுறுத்தியவர் ஒருகாலத்தில் இந்தியாவில் ஆட்சிபுரிந்த மன்னர் அசோகர்தான் என்பது தெரியவரும். அவருக்கு முன்னரோ அல்லது அவருக்குப் பின்னரோ யாரும் அப்படி இருந்ததாகச் சரித்திரம் கிடையாது. கலிங்கப் போருக்குப் பிறகு அசோகர் இனி போரிடுவதில்லை என்று முடிவு எடுத்தார். அப்போது நடைபெற்ற சண்டைகளுடன் ஒப்பிட்டால் நவீன உலகில் நடைபெறும் சண்டை பன்மடங்கு மோசமான விளைவுகளை ஏற்படுத்தக்கூடியது தெரியவரும்.

அமைதிக்கான நோபல் பரிசு கொடுக்கும் விதிமுறைகள் அடங்கிய உயிலை ஆல்பிரட் நோபல் தயாரித்தபோது, மன்னர் அசோகரைத்தான் அவர் மனதில் கொண்டிருக்க வேண்டும். போரிடுவதையே நோக்கமாகக் கொண்ட அமெரிக்கா போன்ற நாடுகளின் தலைவர்களுக்கு அமைதிக்கான பரிசு எப்படிக் கிடைக்க முடியும்?

இன்னும் சொல்லப்போனால் அமைதியை ஏற்படுத்தவே சண்டை நடக்கிறது. அமெரிக்கா பத்தாயிரத்துக்கும் மேலான அணு ஏவுகணைகளை முக்கிய இடங்களில் நிலைநிறுத்தியுள்ளது. மேலும் 20 ஆயிரத்துக்கும் மேலான ஏவுகணைகளை அழிக்காமல் இருக்கிறது. உலகிலேயே ராணுவ வல்லமை படைத்த நாடு அமெரிக்காதான். அப்படிப்பட்ட ஒரு நாட்டில் அசோகர் ஒருவர் எப்படி உருவாக முடியும்? அப்படி ஒருவர் உருவானால் அமெரிக்கா, அமெரிக்காவாக இருக்காது. அப்படி இல்லையெனில் ஒபாமா அசோகராக இருக்க முடியாது.

எனவே அமெரிக்கா, அமெரிக்காவாக இல்லாமல் இருந்தாலொழிய ஒபாமா அசோகராக முடியாது. அதாவது அமெரிக்காவின் அசோகராக ஒபாமாவால் ஒருபோதும் இருக்க முடியாது. அதுதான் உண்மை.

கட்டுரையாளர் : எஸ் . குருமூர்த்தி
நன்றி : தினமணி

விப்ரோ தலைவர் அஜீம் பிரேம்ஜி பெயரில் தனியார் பல்கலைகழகம்

விப்ரோ தலைவர் அஜீம் பிரேம்ஜி பெயரில் பல்கலைகழகம் ஒன்று உருவாக உள்ளது. ‌கர்நாடகத்தின் முதல் தனியார் பல்கலைக் கழகம் என்ற பெருமையை இந்த பல்கலை கழகம் பெறுகிறது. அரசின் கட்டுப்பாடு இல்லாமல் எந்த பல்கலைக் கழகமும் அமைக்க முடியது என்ற நிலையில் நீண்ட முயற்சிக்கு பிறகு இந்த பல்கலைகழகம் உருவாகப் படுகிறது. தனியார் கல்வி அமைப்பு என்றாலும், அரசின் கட்டுப்பாட்டுன் தான் இந்த பல்கலைகழகம் இயக்கும் என தெரிவிக்கப் பட்டுள்ளது. அரசுப் பள்ளிகளின் ஆசிரியைகளுக்கு சிறப்பான பயிற்சி அளிப்பதை முக்கிய இலக்காகக் கொண்டு இயங்கும் இந்த பல்கலைக் கழகம், கல்வியியல் பட்டப் படிப்புகள், தொழில் நுடபத் துறைப் படிப்புகள் உள்ளிட்டவற்றை கற்று தர உள்ளது. அஜீம் பிரேம்ஜி பல்கலைகழக குறித்த அதிகாரப் பூர்வ தகவல்கள் விரைவில் வெளிவரும் என்றும் தெரிவிக்கப் பட்டுள்ளது.

நன்றி : தினமலர்


யாருக்குத் தேவையற்றது?

அக்டோபர் 6-ம் தேதியிலிருந்து 12-ம் தேதி வரை நாடு முழுவதும் தகவல் அறியும் சட்ட விழிப்புணர்வுக் கூட்டங்கள், கருத்தரங்குகள் நடைபெற்றன. அரசுத் துறை மற்றும் அரசு சார்ந்த நிறுவனங்கள்தான் இதை நடத்தின. இக்கூட்டங்களில் பேசிய அரசு அதிகாரிகள் இந்தச் சட்டத்தைப் பாராட்டிப் பேசினாலும், "மக்கள் தேவையற்ற கேள்விகளைக் கேட்கிறார்கள். இதைத் தடுக்க வழி காண வேண்டும்' என்ற கருத்தையும் முன்வைத்துள்ளனர்.

ஏதோ ஓரிரு கூட்டங்களில் இதுபோன்ற கருத்துகள் தலைகாட்டியிருந்தால் அதைச் சாதாரணமாக எடுத்துக் கொள்ளலாம். ஆனால் பெரும்பாலும் எல்லாக் கூட்டங்களிலும் இதுபற்றிப் பேசுகிறபோது, ஏன் இதை முன்வைக்கிறார்கள்? என்றே அச்சம் எழுகிறது.

இதற்கு சிகரம் வைத்தாற்போல அமைந்திருக்கிறது அக்டோபர் 12-ம் தேதி நடைபெற்ற தேசிய தகவல் ஆணையத்தின் ஆண்டு விழாவில் குடியரசுத் தலைவர் பிரதிபா பாட்டீல் பேசிய பேச்சு. அவரும் இதே கருத்தைச் சொல்கிறார்: "இந்தச் சட்டத்தின் கீழ் பலர் உபயோகமற்ற தகவல்களைக் கோருகின்றனர். இதனால் ஒவ்வொரு அரசு அலுவலகங்களிலும் பெருமளவில் விண்ணப்பங்கள் குவிந்துள்ளன. உபயோகமற்ற தகவல்கள் கோரும் விண்ணப்பங்களுக்குப் பதில் அளிக்கத் தேவையில்லை'

இந்தியாவின் முதல்குடிமகனே இத்தகைய கருத்தை வெளியிட்டால், அரசு அதிகாரிகளைப் பற்றிச் சொல்வதற்கு என்ன இருக்கிறது!

தகவல் அறியும் உரிமைச் சட்டம் அமலுக்கு வந்த பின்னர்தான் மெத்தனப்போக்கில் இருந்த பல அரசுத் திட்டங்கள் உயிர்பெற்றன. சில கேள்விகளுக்குக் கிடைத்த பதில் மூலம்தான், திட்டம் நடைபெறாமலேயே பணம் கையாடல் செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது. சில கேள்விகள் எழுப்பப்பட்டதாலேயே, கையூட்டுக்காக நிறுத்தி வைக்கப்பட்ட கோப்புகள் நகர்ந்தன. இத்தனை நல்ல விஷயங்கள் நடந்துகொண்டிருக்கும்போது, எதற்காக "உபயோகமற்ற கேள்விகள் கேட்கிறார்கள்' என்ற கருத்தும், "உபயோகமற்ற கேள்விகளுக்குப் பதில் அளிக்கத் தேவையில்லை' என்ற அறிவுரையும் எதற்காக? யாரைக் காப்பாற்ற?

ஒரு குடும்ப அட்டை வழங்கப்படவில்லை என்றாலோ, அல்லது ரத்து செய்யப்பட்டாலோகூட, இச்சட்டத்தின்கீழ் ஏன் மறுக்கப்பட்டது அல்லது வழங்கப்படவில்லை என்று கேட்கும் உரிமையை இந்தியக் குடிமகனுக்கு இந்தச் சட்டம் வழங்கியுள்ளது. பக்கத்துத் தெருவுக்கு கான்கிரீட் சாலை அமைத்துவிட்டு, தங்கள் தெருவுக்கு மட்டும் ஏன் கப்பிக்கல் சாலை போட்டீர்கள்? என்று பொதுவான விஷயத்தைக் கேட்கவும்கூட தனிநபருக்கு இந்தச் சட்டம் அனுமதி அளிக்கிறது. தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து எங்கள் தொகுதி எம்எல்ஏ, எம்பி செலவழித்த செலவினங்களின் பட்டியல் வேண்டும் என்றும் கேட்கலாம்.

ஆனால் இதை அரசு நிர்வாகம் விரும்பவில்லை. ரகசியங்களால் மட்டுமே ஊழலைப் பொத்தி வைக்க முடியும். ஆகவே அண்மைக் காலமாக, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் பிரிவுகளில் உங்கள் கேள்வி அமையவில்லை என்றும், உங்கள் மனக்குறை என்றும் சொல்லி, பதில் அளிப்பதைத் தவிர்க்கத் தொடங்கியுள்ளனர். அதனால்தான் 75 சதவீதம் பேர் மேல்முறையீடு செய்திருக்கிறார்கள்.

இந்தச் சூழலில் இத்தகைய விழிப்புணர்வு வாரத்தில் அரசு வலியுறுத்தியிருக்க வேண்டிய விஷயங்கள் இவையாகத்தான் இருந்திருக்க வேண்டும்: "மேல்முறையீடுகளைக் குறைக்கும் வகையில் பதில்களை வெளிப்படையாகச் சொல்லுங்கள். பதில் அளிப்பது வேண்டுமென்றே தவிர்க்கப்பட்டது தெரியவந்தால், அதிகாரிகள் மீது அதிகபட்ச அபராதமும், துறை நடவடிக்கையும் மேற்கொள்ளப்படும் என்று எச்சரிப்பதாக இந்தக் கூட்டங்கள், கருத்தரங்குகள் அமைந்திருக்க வேண்டும்.

ஆனால், இதை விட்டுவிட்டு, தேவையற்ற கேள்விகளைத் தடுக்க வழிகாண வேண்டும் என்றும், உபயோகமற்ற கேள்விகளுக்குப் பதில் அளிக்கத் தேவையில்லை என்றும் சொல்வது இந்தச் சட்டத்தை நீர்த்துப்போக அரசு நிர்வாகம் முயற்சி செய்கிறது என்றே சொல்ல வேண்டியிருக்கிறது.
இந்தச் சட்டத்தின் அடிப்படையான நோக்கமே, ""மக்களவையிலோ அல்லது சட்டப்பேரவையிலோ எந்தெந்தத் தகவல்கள், ஆவணங்கள், விவரங்களை வெளிப்படையாகப் பகிர்ந்துகொள்ள முடியுமோ, அத்தகைய தகவல்கள் அனைத்தையும் தெரிந்துகொள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் அடிப்படை உரிமை உள்ளது'' என்பதுதான்.

தேவையற்ற கேள்விகள் என்று தீர்மானிப்பது யார்? இது எப்படி இருக்கிறது என்றால், அனைவருக்கும் வாக்களிக்கும் உரிமை தேவையில்லை; யாருக்கு அரசியல் சார்பு இருக்கிறதோ அவர்கள் மட்டும் வாக்களித்தால் போதும் என்பதைப் போன்று இருக்கிறது.

கவிஞர் ஞானக்கூத்தனின் கவிதை ஒன்று: "உழைத்தால் உயரலாம் உழைத்தால் உயரலாம் என்கிறார்கள். யார் உழைத்தால் யார் உயரலாம்'. அதேபோன்றுதான் கேட்கத் தோன்றுகிறது: யாருக்குத் தேவையில்லாத கேள்வி?

மக்களுக்குத் தேவைப்படும் கேள்வி, அரசுக்குத் தேவையில்லாத கேள்வி!
ஊழல் மீதும், நிர்வாக மெத்தனத்தின் மீதும் வெளிச்சம்போடும் எல்லா கேள்விகளும் இவர்களுக்குத் தேவையில்லாத கேள்விகள்தானே!
நன்றி : தினமணி

பணவீக்கம் 0.9 சதவீதமாக அதிகரிப்பு

அக்டோபர் 3ம் தேதியுடன் முடிந்த வாரத்தில் பணவீக்கம் 0.92 சதவீதமாக அதிகரித்துள்ளது. இது கடைசியாக 0.7 சதவீதமாக இருந்தது. காய்கறிகள், பால், பழங்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருள்களில் விலை குறைந்து இருப்பதாகவும் தெரிவிக்கப் பட்டுள்ளது. கடந்த ஆண்டு, இதே காலகட்டத்தில் 13.34 சதவீதம் அதிகமாக இருந்த அத்தியாவசிய பொருட்களின் விலை, இந்தாண்டு இந்த வார கணக்கெடுப்பு படி 1.67 சதவீதம் குறைந்து இருப்பதாக கூறப்பட்டுள்ளது. பணவீக்கம் இந்த வாரம் அதிகரித்து இருந்தாலும் கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் இது 11.49 சதவீதமாக இருந்தது. இதனால் அக்டோபர் 3ம் தேதியுடன் முடிந்த பணவீக்கம் அதிகமான உயர்வு என்று கூறமுடியாது என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. இருப்பினும், பணவீக்கம் குறித்து கருத்து வெளியிட்டுள்ள பிரதமரின் பொருளாதார ஆலோசனை குழு(பி.எம்.இ.ஏ.சி.,) தலைவர் ரெங்கராஜன் இந்த நிதியாண்டில் பொருளாதார வளர்ச்சி 6.5 சதவீதம் இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.
நன்றி : தினமலர்


பொருளாதார வீழ்ச்சியில் இருந்து மீண்டது அமெரிக்கா: கருத்து கணிப்பு

அமெரிக்கா பொருளாதார வீழ்ச்சியில் இருந்து மீண்டு விட்டதாக கருத்து கணிப்பு ஒன்றில் தெரிவிக்கப் பட்டுள்ளது. இதுகுறித்து நேஷனல் அசோசியேசன் ஆப் பசினஸ் எகனாமிக்ஸ்(என்.ஏ.பி.ஈ.,) என்ற அமைப்பு வெளியிட்டுள்ள செய்தியில், 44 பிரபல அமெரிக்க நிறுவனங்கள் மற்றும் தொழில்துறை வல்லுநர்களிடம் கருத்து கணிப்பு நடத்தினோம். இதில் 80 சதவீதத்தினர் அமெரிக்க வரலாற்றில் கண்டிராத மோசமான பொருளாதார நெருக்கடி காலம் முடிவுக்கு வந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர் என கூறியுள்ளது.
நன்றி : தினமலர்


பலமாக ஒலிக்கிறது பங்குச் சந்தையில் தீபாவளி வெடிச்சத்தம்

சந்தையில் ஒரே தீபாவளி தான். வெடிச்சத்தத்தில் எவ்வளவு புள்ளிகள் மேலே சென்றிருக்கிறது சந்தை என்று தெரிந்து கொள்வதே கடினமாக இருக்கிறது. நேற்று முன்தினம் சந்தைக்கு விடுமுறையாக இருந் தாலும், திங்களும், நேற்றும் சந்தையை ராக்கெட் வேகத்தில் மேலே கொண்டு சென்றன. திங்களன்று சந்தை ஏன் இவ்வளவு கூடியது? இந்தியாவின் தொழில் வளர்ச்சி ஆகஸ்ட் மாதம் 10.4 சதவீதத்தை எட்டியிருந்தது. இது, கடந்த ஆண்டு இதே சமயத்தில் 1.6 சதவீதமாக இருந்தது. இந்த அளவு சிறப்பான வளர்ச்சி சதவீதம் இருந்ததால், சந்தை ஜிவ்வென ஏறியது. கடந்த 22 மாதத்தில் இது ஒரு சிறப்பான சதவீதம். மேலும், சின்ன அம்பானியின் பச்சைக் கொடியும் காரணம் எனலாம். தங்களுக்கு இடையே ஏற்பட்டுள்ள பிரச்னையை சரியான முறையில் தனது அண்ணன் முகேஷ் தீர்த்து வைப்பார் என்று நம்பிக்கை இருக்கிறது என்று கூறிய அறிக்கையை அடுத்து, சந்தையில் அதன் கம்பெனியின் பங்குகள் மேலே சென்றன.
குறிப்பாக ரிலையன்ஸ் கம்பெனியின் பங்குகள் 3 சதவீதம் அளவிற்கு மேலே சென்றது. இது தவிர, நல்ல காலாண்டு முடிவுகளும் சந்தையை மேலே கொண்டு சென்றன. மும்பை பங்குச் சந்தை 384 புள்ளிகள் அன்றைய தினம் மேலே சென்றது.
நேற்று ஏன் கூடியது? சிறப்பான இரண்டாவது காலாண்டு முடிவுகளும், இந்தியா புல்ஸ் பவர் புதிய வெளியீடு சிறப்பாக செலுத்தப்பட்டிருப்பதும், எச்.டி.எப்.சி., வீட்டுக் கடன் நிறுவனத்தின் காலாண்டு முடிவுகள் சிறப்பாக இருந்ததும் காரணம். நேற்று இறுதியாக மும்பை பங்குச் சந்தை 204 புள்ளிகள் கூடி 17,231 புள்ளிகளுடனும், தேசிய பங்குச் சந்தை 63 புள்ளிகள் கூடி 5,118 புள்ளிகளுடனும் முடிந்தது. மும்பை பங்குச் சந்தை, 17,000 புள்ளிகளை தாண்டியும், தேசிய பங்குச் சந்தை 5,000 புள்ளிகளை தாண்டியும் நிலைத்து நிற்பது சந்தைக்கும் மகிழ்ச்சி, முதலீட்டாளர்களுக்கும் மகிழ்ச்சி. கடந்த 17 மாதத்தில் இது தான் அதிகபட்ச உயர்வு.
சந்தையுடன் வளரும் தங்கம்: அமெரிக்க டாலர் உலகளவில் மற்ற கரன்சிகளுக்கு எதிராக வீக்காக இருப்பதால், தங்கம் விலை ஏறி வருகிறது. ஒரு அவுன்ஸ் தங்கம், 1,068 டாலர் என்ற அளவிற்கு வந்துள்ளது. சுத்த தங்கம் (24 காரட்) 16,000 ரூபாய்க்கு மேல் வந்து நிற்கிறது.
புதிய வெளியீடுகள்: இந்தியா புல்ஸ் பவர் லிமிடெட் தனது புதிய வெளியீட்டை கொண்டு வந்துள்ளது.
இது நேற்றைய இறுதி வரை ஒன்பது தடவை செலுத்தப் பட்டுள்ளது. சிறிய முதலீட்டாளர்கள் பகுதி 0.52 மடங்கு செலுத்தப்பட்டுள்ளது. 12ம் தேதி முதல் 15ம் தேதி (இன்று) வரை வெளியீடு இருக்கும். விலை, 40 முதல் 45 ரூபாய் வரை வைக்கப் பட்டுள்ளது. சமீப காலத்தில் வெளிவந்த புதிய வெளியீடுகள் எல்லாம் முதலீட்டாளர்களுக்கு நஷ்டத்தைத் தந்துள்ளது. ஆனால், இந்த வெளியீடு செலுத்தப்பட்டிருக்கும் விதத்தை பார்த்தால் ஒரு சிறிய பிரிமியத்தை பட்டியலிடப்படும் போது பார்க்கலாம் எனத் தோன்றுகிறது.
காலாண்டு முடிவுகள்: வந்து கொண்டிருக்கும் காலாண்டு முடிவுகள் நல்ல விதமாகவே இருக்கிறது. நல்ல காலாண்டு முடிவுகளை பார்த்து பங்குகளை குறுகிய கால லாபத்திற்கு வாங்குபவர்களுக்கு பயனிருக்கும்.
டாலரும் ரூபாயும்: டாலர் சிறிது வலுப்பெற்றது போல் தோன்றியது. ஆனால், நேற்றைய தினம் மறுபடி மிகவும் வலுவிழந்து 46.13 - 46.14 லெவலுக்கு வந்து விட்டது. சிறிது காலம் முன்பு பார்வர்ட் கான்ட்ராக்ட் போடுவது நல்லது என்று கூறியிருந்தோம்; போட்டீர்களா? போட்டிருந்தால் லாபப்பட்டிருக்கலாம்.
வரும் நாட்கள் எப்படி இருக்கும்? வந்த, வரப்போகும் நல்ல காலாண்டு முடிவுகளை முன்னமேயே கணக்கில் எடுத்துக்கொண்டு விட்டது பங்குச் சந்தை. ஆதலால், பெரிய ஏற்றங்கள் இல்லாவிடினும் சந்தை நிதானமாக பயணித்து இன்னும் சிறிது ஏறும்.
நன்றி : தினமலர்