அக்டோபர் 6-ம் தேதியிலிருந்து 12-ம் தேதி வரை நாடு முழுவதும் தகவல் அறியும் சட்ட விழிப்புணர்வுக் கூட்டங்கள், கருத்தரங்குகள் நடைபெற்றன. அரசுத் துறை மற்றும் அரசு சார்ந்த நிறுவனங்கள்தான் இதை நடத்தின. இக்கூட்டங்களில் பேசிய அரசு அதிகாரிகள் இந்தச் சட்டத்தைப் பாராட்டிப் பேசினாலும், "மக்கள் தேவையற்ற கேள்விகளைக் கேட்கிறார்கள். இதைத் தடுக்க வழி காண வேண்டும்' என்ற கருத்தையும் முன்வைத்துள்ளனர்.
ஏதோ ஓரிரு கூட்டங்களில் இதுபோன்ற கருத்துகள் தலைகாட்டியிருந்தால் அதைச் சாதாரணமாக எடுத்துக் கொள்ளலாம். ஆனால் பெரும்பாலும் எல்லாக் கூட்டங்களிலும் இதுபற்றிப் பேசுகிறபோது, ஏன் இதை முன்வைக்கிறார்கள்? என்றே அச்சம் எழுகிறது.
இதற்கு சிகரம் வைத்தாற்போல அமைந்திருக்கிறது அக்டோபர் 12-ம் தேதி நடைபெற்ற தேசிய தகவல் ஆணையத்தின் ஆண்டு விழாவில் குடியரசுத் தலைவர் பிரதிபா பாட்டீல் பேசிய பேச்சு. அவரும் இதே கருத்தைச் சொல்கிறார்: "இந்தச் சட்டத்தின் கீழ் பலர் உபயோகமற்ற தகவல்களைக் கோருகின்றனர். இதனால் ஒவ்வொரு அரசு அலுவலகங்களிலும் பெருமளவில் விண்ணப்பங்கள் குவிந்துள்ளன. உபயோகமற்ற தகவல்கள் கோரும் விண்ணப்பங்களுக்குப் பதில் அளிக்கத் தேவையில்லை'
இந்தியாவின் முதல்குடிமகனே இத்தகைய கருத்தை வெளியிட்டால், அரசு அதிகாரிகளைப் பற்றிச் சொல்வதற்கு என்ன இருக்கிறது!
தகவல் அறியும் உரிமைச் சட்டம் அமலுக்கு வந்த பின்னர்தான் மெத்தனப்போக்கில் இருந்த பல அரசுத் திட்டங்கள் உயிர்பெற்றன. சில கேள்விகளுக்குக் கிடைத்த பதில் மூலம்தான், திட்டம் நடைபெறாமலேயே பணம் கையாடல் செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது. சில கேள்விகள் எழுப்பப்பட்டதாலேயே, கையூட்டுக்காக நிறுத்தி வைக்கப்பட்ட கோப்புகள் நகர்ந்தன. இத்தனை நல்ல விஷயங்கள் நடந்துகொண்டிருக்கும்போது, எதற்காக "உபயோகமற்ற கேள்விகள் கேட்கிறார்கள்' என்ற கருத்தும், "உபயோகமற்ற கேள்விகளுக்குப் பதில் அளிக்கத் தேவையில்லை' என்ற அறிவுரையும் எதற்காக? யாரைக் காப்பாற்ற?
ஒரு குடும்ப அட்டை வழங்கப்படவில்லை என்றாலோ, அல்லது ரத்து செய்யப்பட்டாலோகூட, இச்சட்டத்தின்கீழ் ஏன் மறுக்கப்பட்டது அல்லது வழங்கப்படவில்லை என்று கேட்கும் உரிமையை இந்தியக் குடிமகனுக்கு இந்தச் சட்டம் வழங்கியுள்ளது. பக்கத்துத் தெருவுக்கு கான்கிரீட் சாலை அமைத்துவிட்டு, தங்கள் தெருவுக்கு மட்டும் ஏன் கப்பிக்கல் சாலை போட்டீர்கள்? என்று பொதுவான விஷயத்தைக் கேட்கவும்கூட தனிநபருக்கு இந்தச் சட்டம் அனுமதி அளிக்கிறது. தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து எங்கள் தொகுதி எம்எல்ஏ, எம்பி செலவழித்த செலவினங்களின் பட்டியல் வேண்டும் என்றும் கேட்கலாம்.
ஆனால் இதை அரசு நிர்வாகம் விரும்பவில்லை. ரகசியங்களால் மட்டுமே ஊழலைப் பொத்தி வைக்க முடியும். ஆகவே அண்மைக் காலமாக, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் பிரிவுகளில் உங்கள் கேள்வி அமையவில்லை என்றும், உங்கள் மனக்குறை என்றும் சொல்லி, பதில் அளிப்பதைத் தவிர்க்கத் தொடங்கியுள்ளனர். அதனால்தான் 75 சதவீதம் பேர் மேல்முறையீடு செய்திருக்கிறார்கள்.
இந்தச் சூழலில் இத்தகைய விழிப்புணர்வு வாரத்தில் அரசு வலியுறுத்தியிருக்க வேண்டிய விஷயங்கள் இவையாகத்தான் இருந்திருக்க வேண்டும்: "மேல்முறையீடுகளைக் குறைக்கும் வகையில் பதில்களை வெளிப்படையாகச் சொல்லுங்கள். பதில் அளிப்பது வேண்டுமென்றே தவிர்க்கப்பட்டது தெரியவந்தால், அதிகாரிகள் மீது அதிகபட்ச அபராதமும், துறை நடவடிக்கையும் மேற்கொள்ளப்படும் என்று எச்சரிப்பதாக இந்தக் கூட்டங்கள், கருத்தரங்குகள் அமைந்திருக்க வேண்டும்.
ஆனால், இதை விட்டுவிட்டு, தேவையற்ற கேள்விகளைத் தடுக்க வழிகாண வேண்டும் என்றும், உபயோகமற்ற கேள்விகளுக்குப் பதில் அளிக்கத் தேவையில்லை என்றும் சொல்வது இந்தச் சட்டத்தை நீர்த்துப்போக அரசு நிர்வாகம் முயற்சி செய்கிறது என்றே சொல்ல வேண்டியிருக்கிறது.
இந்தச் சட்டத்தின் அடிப்படையான நோக்கமே, ""மக்களவையிலோ அல்லது சட்டப்பேரவையிலோ எந்தெந்தத் தகவல்கள், ஆவணங்கள், விவரங்களை வெளிப்படையாகப் பகிர்ந்துகொள்ள முடியுமோ, அத்தகைய தகவல்கள் அனைத்தையும் தெரிந்துகொள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் அடிப்படை உரிமை உள்ளது'' என்பதுதான்.
தேவையற்ற கேள்விகள் என்று தீர்மானிப்பது யார்? இது எப்படி இருக்கிறது என்றால், அனைவருக்கும் வாக்களிக்கும் உரிமை தேவையில்லை; யாருக்கு அரசியல் சார்பு இருக்கிறதோ அவர்கள் மட்டும் வாக்களித்தால் போதும் என்பதைப் போன்று இருக்கிறது.
கவிஞர் ஞானக்கூத்தனின் கவிதை ஒன்று: "உழைத்தால் உயரலாம் உழைத்தால் உயரலாம் என்கிறார்கள். யார் உழைத்தால் யார் உயரலாம்'. அதேபோன்றுதான் கேட்கத் தோன்றுகிறது: யாருக்குத் தேவையில்லாத கேள்வி?
மக்களுக்குத் தேவைப்படும் கேள்வி, அரசுக்குத் தேவையில்லாத கேள்வி!
ஊழல் மீதும், நிர்வாக மெத்தனத்தின் மீதும் வெளிச்சம்போடும் எல்லா கேள்விகளும் இவர்களுக்குத் தேவையில்லாத கேள்விகள்தானே!
நன்றி : தினமணி
Thursday, October 15, 2009
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment